பரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. பெரும்பாலானவர்களால் வரவேற்கப்பட்ட இந்த தீர்ப்பை இந்து சனாதானிகள் பல வகையான காரணங்களைக் கூறி எதிர்த்து வருகின்றனர்.  தங்களுடைய சனாதன வெறியை புனிதத்தின் பெயரால் தூக்கிப் பிடிக்க பெண்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது பார்ப்பனிய இந்துத்துவம். சிறுமிகளை பயன்படுத்தி ‘50 வயது வரை காத்திருக்கத் தயார்’ என எழுதிய பதாகைகளை உயர்த்திப் பிடித்து சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உச்சநீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு விழாவை நடத்த தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம்போல், கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என கேட்கிறது கேரள பாஜக.

பாஜகவும் அதன் பரிவாரங்களும் அனைத்து வயதினரையும் சபரிமலை கோவிலில் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆராய அக்டோபர் 8-ஆம் தேதி கொச்சியில் கூட இருக்கின்றன.  உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜக தலைமை தனது கருத்தை கூறாத நிலையில் (தலாக் விவகாரத்தில் தாங்கள் பேசிய முசுலீம் பெண்களின் சம உரிமை, சபரிமலை தீர்ப்பை எதிர்த்தால் காலியாகிவிடுமே), கேரள பாஜக இந்த விவகாரத்தில் சனாதனிகள் வாக்குகளை பெற நினைக்கிறது.

படிக்க:
உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !
பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

பாஜகவின் கேரள மாநில தலைவர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, அவசர அவசரமாக மாநில அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதாக பதட்டம் கொள்கிறார். சபரிமலை தலைமை தந்திரி குடும்பத்தினரிடமோ பக்தர்களின் அமைப்புகளிடமோ மாநில அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் பதறுகிறார்.

“திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் ஏ. பத்மகுமார், தன்னுடைய குடும்பத்து பெண்கள் எவரும் சபரிமலைக்குச் செல்ல மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். அவருடைய கருத்து மக்களின் எண்ணத்தைச் சொல்கிறது. கேரள பெண்களும் இதையே சொல்கிறார்கள். இடதுசாரிகள் நாத்திகர்களாக அறியப்பட்ட்வர்கள். அவர்கள் நீதிமன்றத்தின் பெயரால் மக்களின் உணர்வுகளை புண்படித்திக்கொண்டிருக்கிறார்கள். ஒருதலைப்பட்சமான இந்த முடிவால் அரசு எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும்” என சங்கி பாணியில் எச்சரிக்கிறார்.

அதுபோலவே காங்கிரசும் இடது முன்னணி அரசுக்கு மொத்த பெருமையும் சென்று சேர்ந்துவிடும் என்கிற பதட்டத்துடன் இருக்கிறது. தொடக்கத்தில் தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ், தேவசம் போர்டு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், நடைமுறை சாத்தியங்கள், சமூக தாக்கங்கள் குறித்தும் நாங்கள் சிந்திக்கிறோம். மாநில அரசு இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது” என பச்சையான ஓட்டரசியல் வசனம் பேசுகிறார். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மாநில அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என கோருகிறார்.  காங்கிரஸின் லிபரல் கொள்கைகள் கிட்டத்தட்ட இந்துத்துவ சனாதனத்துடன் இந்தப் புள்ளியில் ஒத்துப்போவதை இங்கே காணலாம்.

படிக்க:
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ?
சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

அதே நேரத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு பெண்கள் பாதுகாப்பான வழிபாடு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாகக் கூறுகிறது. மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுந்தரம், “பெண்கள் பாதுகாப்பான தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். பேருந்தில் தனி இருக்கையும் நீராடும் இடத்தில் தனி இடமும் வழங்கப்படவுள்ளது. மலை ஏற்றத்தின்போது, பெண்களின் பாதுகாப்புக்கு பெண் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என தெரிவித்துள்ளார். ஆனால், பெண்களுக்கு தனிவரிசை அமைப்பது முடியாத விசயம் என்கிறார் சுந்தரம்.

“அதிக இடம் தேவைப்படுவதால், பெண்களுக்கு தனிவரிசையை அமைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. கூட்டத்தில் முந்தியடித்து எவரால் செல்ல இயலுமோ அவர் சபரிமலை யாத்திரைக்கு வரலாம். பக்தர்கள் தரிசனம் முடிந்தவுடன் கோவில் வளாகத்தில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள்” எனவும் அவர் சொல்கிறார்.  பெண்களுக்கு தனி வரிசை அமைத்தால் குடும்பத்தினருடன் வருகிறவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்கிறார் தேவசம் அமைச்சர். இதன்படி பெண்கள் வந்தால் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும் ஆகையால் பார்த்து முடிவு செய்யுங்கள் என்று சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

முன்னதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, நெரிசலைக் கட்டுப்படுத்த திருப்பதியில் உள்ளதுபோல் ஆன்லைன் புக்கிங் முறையை அறிமுகப்படுத்துவது, தரிசன நாட்களை நீட்டிப்பது உள்ளிட்ட பல விசயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

படிக்க:
வினவு ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் !
லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு

அதேவேளையில், விஸ்வ ஹிந்து பரிசத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டதால் பிரவீன் தொகாடியா என்ற கும்பல் தலைவர் தொடங்கிய அந்தராஷ்டிர ஹிந்து பரிசத் என்ற அமைப்பு, கேரளத்தின் பல பகுதிகளில் மறியல் நடத்தியது. சிவ சேனா மாநில பந்துக்கு அழைப்பு விடுத்து ஆதரவு கிடைக்காததால் கைவிட்டது.  சனாதான கும்பல் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் வளர்க்க நினைப்பதை தென்னக மக்கள் நிச்சயம் ஊக்குவிக்கமாட்டார்கள்.   தாமதமாக கிடைத்திருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெண்களின் சம உரிமைக்கான போராட்டத்தில் ஒரு மைல்கல் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தற்போது சீராய்வு மனு போட மாட்டோம் என கேரள அரசு தெரிவித்திருந்தாலும் அதுவும் பல்வேறு தயக்கங்கள், மாறுபட்ட அறிவிப்புகளோடுதான் வருகிறது. முதலில் தீர்ப்பை வரவேற்பதாக மேலோட்டமாக அறிவித்த ஆர்.எஸ்.எஸ் தற்போது பக்தர்கள்தான் இதை முடிவு செய்ய வேண்டும் என நரித்தனமாக பேசுகிறது. உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதித்தாலும் பக்தர்களின் நடைமுறை, பழக்க வழக்கங்களை மதிக்க வேண்டும் என்று கூறுகிறது.

ஆக அம்பேத்கர் காலத்தில் இந்து குடும்ப திருமண சட்டத்தை எவ்வளவு தீவிரமாக சனாதனிகள் எதிர்த்தார்களோ தற்போதும் அதே தீவிரத்தோடு எதிர்க்கிறார்கள். காலங்கள் மாறினாலும் காவிகள் மாறுவதில்லை. ஆகவே சபரிமலையில் பெண்கள் நுழைவது எனும் போராட்டம் இன்னும் முடியவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க