காதிபத்திய எதிர்ப்புப் போராளியான பகத்சிங் பிறந்த நாளை, கோவை அரசு கலைக்  கல்லூரியில்  கொண்டாடியதற்காக முதுகலை முதலாமாண்டு மாணவி மாலதி, கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைக் கண்டித்து, பகத்சிங்கின் பிறந்தநாளை மீண்டுமொருமுறை கொண்டாடியுள்ளனர் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள். முன்னரே இக்கல்லூரி மாணவர்கள் பகத்சிங் பிறந்தநாளை கடந்த செப்-28 அன்று பு.மா.இ.மு. சார்பாக கடைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

”கல்லூரி வளாகத்திற்குள் அரசியல் பேசுவதும், மாணவர்கள் ஒன்றுகூடுவதும் மாணவர்களின் ஜனநாயக உரிமை. என் வழியாக மாணவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்த பார்க்கிறது அரசு. நான் வரலாற்றுத்துறை மாணவி. பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடுவதில் நான் ஆர்வமாக இருந்தேன். நான் கல்லூரியில் பிறந்தநாள் விழா கொண்டாடியதற்கும் போலீஸ் ஸ்டேசனுக்கும் என்ன சம்பந்தம்? என்னை  இடைநீக்கம் செய்ததற்கான உத்தரவு நகல் ஒன்றை கோவை சி-2 போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். கல்லூரி வளாகங்களில் அரசியல் பேசுவதும், கூட்டம் நடத்துவதும் என்ன தவறு? மறைமுகமான ரௌலட் சட்டம் ஏதும் இருக்கிறதா? இல்லை 144 ஏதும் பிறப்பிச்சிருக்கீங்களா?’’ என தனியார் தொலைக்காட்சி பேட்டியொன்றில் கேள்வி எழுப்பியிருந்தார், இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி மாலதி.

“பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடினால் சஸ்பெண்ட் செய்வீர்கள் என்றால், பகத்சிங் வாரிசுகளான நாங்கள் பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்போம் எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள்” என்று பகிரங்கமாகவே சவால் விடுக்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர், பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

பிறந்தநாள் விழாவிற்கு தலைமையேற்று பேசிய பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் சுரேஷ் ”மாணவி மாலதியை சஸ்பெண்ட் செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். கண்டிக்கத்தக்கது என்பதைத் தாண்டி உச்சகட்ட பாசிசத்தின் வெளிப்பாடே’’ என்ற அவர் மேலும், ”கல்லூரியில் ரதயாத்திரை நடத்தலாம், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடலாம் ஆனால்  மக்களின் விடுதலைக்காக போராடிய பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடக் கூடாதா? இன்று மாலதியை சஸ்பெண்ட் செய்து ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பகத்சிங்கை கொண்டு சென்றுள்ளது அரசு. நாளை நம்மை சஸ்பெண்ட் செய்தால் அச்செய்தி இலட்சக்கணக்கான மாணவர்களிடம் பகத்சிங்கை கொண்டு செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ என்றார்.

படிக்க:
பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
♦ தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி

”பகத்சிங் சாகவில்லை. எங்களது ஒவ்வொருவரின் மனதிலும் வீரனாக வாழ்கிறான். நாங்கள் பகத்சிங்கின் வாரிசுகள்.’’ என்பதை தங்களது செயலின் வழியே அறிவித்திருக்கிறார்கள், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி.
திருச்சி. 9943176246.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க