பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த இரயில் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் விலகவில்லை. பெண்களும் குழந்தைகளுமாய் சுமார் 59 பேர் அந்த விபத்தில் கொல்லப்பட்டனர். கடந்த 19-ம் தேதி (அக்டோபர்) அமிர்தசரஸில் நடந்த தசரா விழா நிறைவின் போது கொண்டாடப்படும் ராம் லீலாவைக் காண பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். நிகழ்வின் இறுதியில் பிரம்மாண்டமான ராவணன் பொம்மை கொளுத்தப்படுவதற்கு முன் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இதைக் கண்டுகளிக்க பெரும் மக்கள் திரள் கூடியிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைதானத்தையும் தாண்டி அருகில் ஓடிக் கொண்டிருந்த ரயில் பாதையின் மேல் பலர் நின்று கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் இரயில் தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்த கூட்டத்தின் மீது பாய்ந்துள்ளது. இதில் 59 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர் – மேலும் சுமார் 50 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் போது இராவணன் வேடமிட்ட தல்பீர் சிங் என்பவர், சம்பவ இடத்தில் இருந்து ஓடிப் போகாமல் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயற்சித்து அந்த முயற்சியிலேயே பலியாகியும் இருக்கிறார் என்கின்றன பத்திரிகைச் செய்திகள்.
இதற்கிடையே நடந்த துயரச் சம்பவத்திலும் தனது வழக்கமான கழிசடை அரசியலைத் திணிக்க முயன்றனர் சமூகவலைத்தளங்களில் செயல்படும் பா.ஜ.க.வினர். முதலில் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான காங்கிரசு பிரமுகர் நவ்ஜோத் சிங் சித்துவும் (முன்னாள் கிரிக்கெட் வீரர்) அவரது மனைவியும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்தை விட்டு ஓடி விட்டனர் என்கிற தகவலைப் பரப்பினர். ஆனால், மருத்துவரான சித்துவின் மனைவி சம்பவத்திற்கு முன்பே அங்கிருந்து சென்று விட்டதாகவும், பின் விபத்தைக் கேள்விப்பட்டு அங்கே வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்ததாகவும் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகின. அதன் பின் ரயிலின் ஓட்டுநர் இசுலாமியர் என்கிற வதந்தியைக் கிளப்பி விட்டனர் – எனினும், அந்த ஓட்டுநர் ஒரு இந்து என்பதும் பின்னர் செய்தியாக வெளியானது.
அமிர்தசரஸ் இரயில் விபத்து குறித்த விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனினும், முதற்கட்டமாக இதில் பா.ஜ.க. ஆர்வலர்கள் ஆசைப்படும் அளவுக்கு “சதிச் செயல்” ஏதும் இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. விழா ஏற்பாட்டாளர்கள் இரயில்வே துறையிடம் நிகழ்ச்சியின் நேரத்தை அறிவித்து அந்த சமயத்தில் செல்லும் இரயில்களின் வேகத்தைக் குறைத்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்பட வில்லை என்றும் சில பத்திரிகைச் செய்திகளின் மூலம் தெரியவருகின்றது. போலீசு விசாரணையின் போது விபத்து நடந்த இடம் ஒரு திருப்பத்திற்கு அப்பால் இருந்ததாகவும், திடீரென பெருந்திரளான மக்கள் கூடி நிற்பார்கள் என எதிர்பார்க்கவில்லை எனவும், இரயிலின் ஹாரனை அடித்தும் மக்கள் விலகவில்லை எனவும், குறைந்த தூரத்தில் பிரேக் பிடித்தும் பலனின்றிப் போய் விட்டதாகவும் இரயிலின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 2015-17 ஆகிய இரண்டு ஆண்டு காலத்தில் நடந்த மொத்த இரயில் விபத்துக்களில் பலியானவர்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்திய இரயில்வேதுறை வெளியிட்டுள்ள விவரங்களின் படி, குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 49,790 பேர் இரயில் விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். 2018ம் ஆண்டுக்கான தரவுகள் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க:
♦ இரயில்வே பட்ஜெட் : மோடி பிராண்டு ஓட்டை வாளி !
♦ அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!
நடந்த விபத்துக்களில் அதிகபட்சமாக வடக்கு இரயில்வே மண்டலத்தில் மட்டும் சுமார் 7,908 பேரும் தென்னக இரயில்வே மண்டலத்தில் சுமார் 6,149 பேரும் கிழக்கு இரயில்வே மண்டலத்தில் 5,670 பேரும் இறந்துள்ளனர். பெரும்பாலான விபத்துக்கள் தண்டவாளங்களைத் தாண்டிச் செல்லும் போதும், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தாலும் நடந்திருப்பதாக இரயில்வேதுறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக இந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் சுமார் 1,20,923 பேர் இரயில்வே சட்டப்பிரிவு(1989) 147-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 2.94 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கும், சர்தார் பட்டேல் சிலை போன்ற சில்லறை சமாச்சாரங்களுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயை அள்ளித் தெளித்து வருகிறார் பிரதமர். இப்படி ஆடம்பரங்களுக்காக வீணடிக்கப்படும் நிதியை இரயில்வே துறையின் பாதுகாப்புக் கட்டுமானங்களுக்காக செலவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் பல பத்தாயிரம் உயிர்கள் வீணாய் மடிந்து போவதைத் தவிர்க்க முடியும்.
இந்த மரணங்களுக்கான காரணங்களாக இரயில்வே துறை அதிகாரிகள் சொல்வதை அப்படியே ஏற்பதற்கில்லை. ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் வெறுமனே “அஜாக்கிரதையினால்” மட்டும் கொல்லப்பட்டிருப்பதும் சாத்தியமில்லை. கடந்த ஆண்டு (2017) டிசம்பர் மாத கணக்கின் படி இந்தியா முழுவதும் சுமார் 30,000 த்திற்கும் மேலான இருப்புப் பாதை சந்திக்கடவுகள் (Railway Level crossings) இருப்பதாகவும் இதில் சுமார் 11,000 சந்திக்கடவுகள் ஆளில்லாதவைகள் எனவும் தெரியவருகின்றது. இந்தியாவில் நடக்கும் இரயில் விபத்து – மரணங்களில் சுமார் 40 சதவீதம் ஆளில்லா சந்திக் கடவுகளினாலேயே நடப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சுமார் 1.1 லட்சம் கோடி செலவழித்து மும்பைக்கும் குஜராத்துக்கும் இடையே புல்லட் இரயில் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் மோடி. தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கும், சர்தார் பட்டேல் சிலை போன்ற சில்லறை சமாச்சாரங்களுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயை அள்ளித் தெளித்து வருகிறார் பிரதமர். இப்படி ஆடம்பரங்களுக்காக வீணடிக்கப்படும் நிதியை இரயில்வே துறையின் பாதுகாப்புக் கட்டுமானங்களுக்காக செலவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் பல பத்தாயிரம் உயிர்கள் வீணாய் மடிந்து போவதைத் தவிர்க்க முடியும்.
ஆனால் வெட்டி விளம்பரப் பிரியர்களாய் ஆட்சி நடத்தும் இந்தக் கும்பல் மக்களின் உயிர்களை மலிவானதாய்க் கருதுவதாலேயே ஆடம்பரங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகின்றனர். நாமும், அமிர்தசரஸ் போன்ற பெரும் எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழும் போது ஓரிரு நாட்கள் துணுக்குற்று விட்டு மறந்து போய் விடுகிறோம். மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த அவர்களின் சொக்காயைப் பிடித்து கேள்வி கேட்கும் மக்களால்தான் முடியும்.
செய்வீர்களா?
செய்தி ஆதாரம்: