அஸ்ஸாமின் தின்சுகியா (Tinsukia) மாவட்டத்தில் 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஐந்து மாணவர் செயற்பாட்டாளர்களை போலி மோதலில் படுகொலை செய்த மேஜர் ஜெனரல் உள்ளிட்ட ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டைனையை இராணுவ நீதிமன்றம் விதித்திருக்கிறது.
இது குறித்த இராணுவ நீதிமன்ற விசாரணை லாய்புலி (Laipuli) இராணுவ முகாமில் ஜூலை மாதம் 16-ம் தேதி தொடங்கி 11 நாட்களுக்குப் பிறகு முடிவடைந்தது. கடந்த அக்டோபர் 13 அன்று இவ்வழக்கில் இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்கள் 9 பேரைக் கைது செய்தது. தின்சுகியா மாவட்டத்தில் உள்ள டூம்டூமா (Doomdooma) வட்டத்தின் பல்வேறு இடங்களில் 1994-ம் ஆண்டு பிப்ரவரி 17 மற்றும் 19-ம் நாட்களுக்கிடையில் இம்மாணவர் சங்க பிரதிநிதிகளை இராணுவத்தின் 18-வது பஞ்சாப் படைப்பிரிவு கைது செய்தது. தேயிலைத்தோட்ட முதலாளி ஒருவரின் கொலையின் பின்னணியில் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் பிரபின் சோனோவால், பிரதிப் தத்தா, தேபஜித் பிஸ்வாஸ், அகில் சோனோவால் மற்றும் பாபன் மோரன் ஆகிய ஐவரை இராணுவத்தினர் தனியே கடத்திச்சென்று டங்காரி (Dangari) ஆற்றின் அருகே வைத்து போலி மோதலில் சுட்டுக் கொன்றனர். பின்னர் மாணவர் அமைப்புத்தலைவர் ஒருவரால் தொடுக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றை விசாரித்த கவுகாத்தி உயர்நீதிமன்றம் கைது செய்யப்பட செயற்பாட்டாளர்கள் ஒன்பது பேர்களையும் அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் ஐந்து பேர்களின் உயிரற்ற உடல்களையே இராணுவம் ஒப்படைத்தது. இது மாநிலம் முழுவதும் கடுமையான போராட்டங்களை முடுக்கிவிட்டது.
பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு சி.பி.ஐ-யும் வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஏ.கே. லால், கர்னல் தோமஸ் மேத்யூ, கர்னல் ஆர்.எஸ். சிபிரியன், கேப்டன் திலிப் சிங், கேப்டன் ஜாக்தோவ் சிங், நயிக் அல்பிந்தர் சிங் மற்றும் நயிக் ஷிவேந்தர் சிங் ஆகிய ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
படிக்க :
♦ காவி மயமாகும் வடகிழக்கு இந்தியா ! சிறப்புக் கட்டுரை
♦ என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை!
தி இந்து நாளிதழின் செய்தியின் படி, கொல்லப்பட்ட 5 பேரும் கொல்லப்படுவதற்கு முன்னர் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை பிரேதப் பரிசோதனை அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.
சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், இராணுவம் இந்த வழக்கை இராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியது. இராணுவ நீதிமன்ற விசாரணை இந்த ஆண்டு (2018) ஜூலையில் தொடங்கியது. தண்டனை கடந்த அக்டோபர் 13 அன்று அறிவிக்கப்பட்டது.
இராணுவ நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தகுதியான ஆணையம் ஒன்றினால் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தியாவில், இராணுவ அத்துமீறல்களுக்கு தண்டனை வழங்கிய ஒரு ‘தகுதியான’ ஆணையம் எதுவும் நம் கண்களுக்குப் புலப்படவில்லை. அந்த வகையில் தண்டனை வழங்கப்பட்ட இந்த 7 அதிகாரிகள் மீதான மேல்முறையீட்டு விசாரணை அவர்கள் இயற்கையாக மரணிக்கும் வரை இழுத்தடிக்கப்படும் என்று நம்புவோமாக !
இவை ஏதோ ஒரு சண்டையில் நடந்த கொலை அல்ல. குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் கொலை செய்யும் நோக்கிலேயே அவர்களைப் பிடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் மட்டுமல்லாமல், இராணுவம் போலீசு உள்ளிட்ட அனைத்து அதிகாரவர்க்க அடியாள் பிரிவுகளும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய போலி மோதல் கொலைகளை அரங்கேற்றி வருகின்றன.
படிக்க :
♦ மணிப்பூர் பிணங்களின் முறையீடு : பீதியில் இந்திய இராணுவம்
♦ அப்பா நீ ஒரு கொலைகாரனா ? சிறப்புக் கட்டுரை
இவை போதாது என, சுமார் 700-க்கும் மேற்பட்ட இராணுத்தினர், ”மோதல் கொலைகள்” குறித்து இராணுவத்தினரை விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்கீழ் இராணுவத்தினரின் உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துவிடும் என்றும் குறிபிட்டுள்ளனர். எனவே இராணுவத்தினருக்கு எதிராக இத்தகைய விசாரணைகள் நடத்தி அவர்களை துன்புறுத்தக் கூடாது என்றும் கேட்டுள்ளனர்.
அதாவது கொலை செய்வதற்கான தங்களது உரிமையை நிலைநாட்டும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றனர். வட கிழக்கு இந்தியாவில் இராணுவம் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இவர்கள் நடத்தாத கொலை இல்லை, பாலியல் வன்முறை இல்லை.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய இந்தியாவில், கார்ப்பரேட் கொள்ளையை உறுதி செய்ய பழங்குடி இன மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என தேர்ந்தெடுத்த கிரிமினல்தனத்தை மக்களை விரட்டுவதற்கு அமல்படுத்திவருகிறது இந்திய இராணுவம்.

சட்ட அமைப்பின் பெயரளவிலான கண்கானிப்பு இருக்கும்போதே இவ்வளவு ஆட்டம் போடும் இராணுவம், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ள கோரிக்கையின் படி சட்ட விசாரணைக்கு அப்பாலான அமைப்பாக மாறிவிட்டால், அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சியே இங்கு நிலவும். முதலாளித்துவமும் பார்ப்பனியமும் தங்களது இருப்பை நிலைநாட்ட அந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.
செய்தி ஆதாரம் :
♦ Assam: Army court recommends life term for seven personnel in 1994 fake encounter case