சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கம்; ரஃபேல் ஊழலை மூடிமறைக்கவா? லஞ்சம் வாங்கிய அஸ்தானாவை காப்பாற்றவா?

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது லஞ்ச புகார், பதவியை துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுவந்த நிலையில்,  அவர்  பெயர் லஞ்ச புகார் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக சி.பி.ஐ. அலுவலகத்திலேயே சி.பி.ஐ. ரெய்டு நடத்திய ‘வரலாறு’ம் நடந்தது. இந்த நிலையில், மோடி அரசு குற்றம்சாட்டப்பட்டவரையும் விடுவிப்பில் செல்ல உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டை விசாரித்தவரையும் பதவி நீக்கம் செய்திருக்கிறது. இதை சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் அஸ்தானா இடையேயான மோதலாக பெரும்பான்மையான மோடி ஆதரவு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இடைக்கால சி.பி.ஐ. இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அலோக் வர்மா.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவின் நீக்கம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசின் ரஃபேல் ஊழல் வழக்கை விசாரிக்க இருந்தநிலையில் அலோக் வர்மா நீக்கப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோல தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலினும் மோடி அரசின் நடவடிக்கை கண்டித்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பு இயக்குநர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான டி.எஸ்.பி.யை நீதிமன்றம் “7 நாட்கள் சி.பி.ஐ கஸ்டடிக்கு” அனுப்பி – அந்த கஸ்டடி விசாரணை துவங்கும் நேரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டிருப்பதில் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ள காலோஜியத்தால் தேர்வு செய்யப்பட்ட இயக்குநருக்கு பணிக்கால பாதுகாப்பு” இருக்கும் நிலையில், அவரை மாற்றியிருப்பது எதேச்சதிகாரச் செயல் மட்டுமின்றி பா.ஜ.க. அரசின் “நிர்வாக அராஜகமாகவே” பார்க்க முடிகிறது.” என குற்றம்சாட்டியிருந்தார்.

சி.பி.ஐ. இயக்குனரின் நீக்கம் சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். “சந்தேகித்ததைப் போல, பயந்ததைப் போல சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியிருக்கும் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானாவின் வழக்கை அவர் விசாரிக்கிறார். இந்தநிலையில் அவர் நீக்கப்பட்டிருப்பது முழுமையாக சட்டவிரோதமானது. வழக்கு தொடரத்தக்கது” என தன்னுடைய ட்விட்டர் பதிவில் பூஷண் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த பூஷன் முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி ஆகியோர் ரஃபேல் ஒப்பந்ததில் ’தவறான குற்றவியல் நடத்தை’யில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி மீது சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவிடன் புகார் அளித்திருந்தனர். இதனால் எரிச்சலுற்ற மோடி அரசு, வர்மாவை வஞ்சம் தீர்க்கும் நேரம் பார்த்துக்கொண்டிருந்தது. தற்போது தங்களால் நியமிக்கப்பட்ட அஸ்தானாவை காப்பாற்றும்பொருட்டும் ரஃபேல் ஊழலை மூடிமறைக்கவும் அலோக் வர்மாவை விடுப்பில் அனுப்பியிருக்கிறது மோடி அரசு.

இந்த நிலையில் அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் மோடி அரசின் முடிவை எதிர்த்து  தொடர்ந்திருக்கிறார்.  அவர் அளித்துள்ள மனுவில், 35 ஆண்டுகாலம் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் ஜனவரி 2017ல் சி.பி.ஐ. இயக்குனராக இரண்டாண்டு கால பதவியில் தான் நியமிக்கப்பட்டதாகவும் சில முக்கியமான வழக்குகளை விசாரித்த காரணத்தாலேயே தன்னை விடுப்பில் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சில முக்கியமான வழக்குகளை (வழக்கு விவரங்களை நீதிமன்றத்தில் அளிக்க முடியாது என தெரிவித்துள்ளார் வர்மா) விசாரிக்கும் முடிவில் அனைத்து சி.பி.ஐ. அதிகாரிகளும் ஒன்றுபட்ட முடிவு எடுக்கும்போதும் சி.பி.ஐ. இயக்குனர் அஸ்தானா மட்டும் அதற்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு வர்மாவின் மனுவை அவரச வழக்காக விசாரிக்கிறது. தற்போது இடைக்கால சி.பி.ஐ. இயக்குனர் நாகேஸ்வரராவின் நியமினத்தையும் எதிர்த்துள்ளார் வர்மா.

படிக்க:
சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா !
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

சி.பி.ஐ. இயக்குநரின் நியமனம் அல்லது நீக்கத்தை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியத்தின் ஒப்புதல் இல்லாமல் செய்யமுடியாது என்கிற நிலையில், வர்மாவை தன்னிச்சையாக நீக்க முடிவு செய்திருக்கிறது அரசு.  இயக்குனரின் மீது குற்றச்சாட்டு எழும்பட்சத்தில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என முன்னதாக அரசு தெரிவித்திருந்தது. வர்மா மீது அப்படி எந்தவொரு விசாரணைக்குழுவும் அமைக்கப்படவில்லை.  அடிப்படையாக எந்தவித குற்றச்சாட்டும் இல்லாதபோது எப்படி விசாரணைக்குழு அமைக்கமுடியும்?

வர்மாவால் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் மோடி அரசை நீதிமன்றம் துப்புவதற்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன. ஜனநாயகம் – சட்டதிட்டங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் மோடி ‘தர்பார்’ நடத்திக்கொண்டிருக்கிறார்.  நிர்வாகம், நீதிமன்றம், அரசியலமைப்பு என மூன்றையும் கேலிக்கூத்தாக்கும் மோடி கும்பலை தட்டிக்கேட்பதற்கு பதிலாக தட்டிக்கொடுத்து ‘அதிகாரப் போட்டியாக’ செய்தி வெளியிடுகிறது நான்காவது தூண்! ஆக மொத்தம், ஜனநாயகத்தின் நான்கு தூண்களுமே நாறிக்கொண்டிருக்கின்றன.

செய்தி ஆதாரம்:
♦ Why the Modi Government’s Ouster of Alok Verma Is Likely to Face Legal Challenge

♦ Rakesh Asthana Obstructed Crucial Cases, Ousted CBI Director Alok Verma Tells SC

♦ Modi Ousts CBI Chief Alok Verma as Asthana Case Reaches Breakpoint

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க