Saturday, April 19, 2025
முகப்புதலைப்புச் செய்திஓசூர் மைக்ரோ லேப் : ஊதிய உயர்வு கேட்ட 23 தொழிலாளிகள் பணி நீக்கம்

ஓசூர் மைக்ரோ லேப் : ஊதிய உயர்வு கேட்ட 23 தொழிலாளிகள் பணி நீக்கம்

பணி நிரந்தரம், சம்பள உயர்வு, சட்டப்படியான சங்கம் அமைக்கும் உரிமை என தொழிலாளிகள் எந்த உரிமையைக் கேட்டாலும், அவர்களை வேலையைவிட்டு நீக்குகிறார்கள் முதலாளிகள்.

-

சங்கம் கேட்டால் டிஸ்மிஸ் ! ஓசூர் மைக்ரோ லேப் நிர்வாகம் அட்டகாசம் !

சூர், சிப்காட் – 1, பகுதியில் அமைந்துள்ள மைக்ரோ லேப்ஸ் micro labs ஆலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் கோடிவரை வர்த்தகம் நடக்கின்ற இந்த ஆலையில் நிரந்தர தொழிலாளர்கள் மட்டும் 300 பேர் உள்ளனர். உயிர் காக்கும் மருந்து உற்பத்தி என்பதால் தங்கள் உயிரை பணயம் வைத்து பலவிதமான கெமிக்கல்களை கையாண்டு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

கடந்த 35 ஆண்டுகளாக இயங்கும் இவ்வாலையில் தொழிற்சங்க உரிமைகள் மற்றும் ஊதிய உயர்வு கேட்டவுடன் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட், விசாரனை, சம்பள வெட்டு என வாழ்வுரிமையைப் பறித்து வருகிறது ஆலை நிர்வாகம்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, சங்கம் அமைக்கும் உரிமை கோறியதற்காக 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது நிர்வாகம். அப்போது சென்னை தொழிலாளர் ஆணையர் தலையிட்டு பிரச்சனையை தற்காலிகமாக பேசித் தீர்த்து வைத்தார்.

படிக்க :
ஓசூர் : மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் !
ஓசூர் விவசாயி சேகர் தற்கொலை !

2011-இல் தொழிற்சங்கத்தை இரண்டாக உடைந்தது நிர்வாகம். நிர்வாகத்தின் சூழ்ச்சிக்கு பலியான 21 தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில், தற்போது 2017 – ல் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு சங்கம் கோரியவுடன் 23 தொழிலாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 12 பெண் தொழிலாளர்கள் மீது விசாரணை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கடந்த 13 ஆண்டுகளாக வேலை செய்யும் 56 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் சட்டபூர்வ உரிமைகளை மறுத்து செப்டம்பர் மாத சம்பளத்தில் இருபது நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்து கொண்டு வேலைநிறுத்தத்தை தூண்டுகிறது நிர்வாகம்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு சட்டபூர்வ உரிமைகளை கோரினாலே தொழிலாளர் வாழ்வுரிமை பறிப்பது என்றால் நிர்வாகம் என்ன நினைக்கிறது? சட்ட விரோதமாக செயல்பட தைரியம் கொடுப்பது யார்? நிர்வாகத்தின் சட்ட விரோதமான செயல்களை அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது நியாயம் இல்லை, ஆகையால் நிர்வாகத்தின் மேற்கண்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், கோட்டாட்சியர் இதில் தலையிட்டு நிர்வாகத்திற்கும் சங்கத்திற்குமான பிரச்சினையை தீர்த்துவைக்கக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 22.10.2018 திங்கள் மாலை 5 மணி அளவில் ஒசூர் ராம்நகரில் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தலைவர் திரு. நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் திரு. சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர். திரளான அளவில் எமது சங்க உறுப்பினர்கள் மற்றும் பிற ஆலைத்தொழிலாளர்கள் பெண்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்துக்கொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவுச் செய்துள்ளனர்.

தகவல் :
திரு சீனிவாசன், சங்க செயலாளர்,
micro labs பிரவுன் & பர்க் தொழிலாளர்கள் சங்கம்,
ஓசூர். பதிவு எண்: 503/DRP.