டி.சி.எஸ் ஊழியர்கள் ஈட்டுவது பெருமளவு லாபம்,
பெறுவது சொற்ப ஊதிய உயர்வு
எனக்கு டி.சி.எஸ் நிறுவனத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் வேலை அனுபவம் உள்ளது. அமெரிக்கா, கனடா என்று பல்வேறு நாடுகளின் வாடிக்கையாளர் உள்ள ப்ராஜெக்ட்களில் வேலை பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு வருமானம் பற்றிய செய்தி வெளியானது. டி.சி.எஸ் காலாண்டு முடிவுகள் குறித்து 2018 அக்டோபர் 10 வெளியான செய்தியில் நிகர லாபம் சென்ற ஆண்டை விட 22.57% அதிகரித்து ரூ 7901 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிகிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் மொத்த விற்பனை வருவாய் ரூ 30,541 என இருந்தது இந்த வருடம் ரூ 36,854 கோடியாக (20.67%) உயர்ந்துள்ளது.
இதைப் படிக்கும்போது நாம் வேலை செய்யும் கம்பெனி இவ்வளவு வருமானம் வந்துள்ளது என்று ஒருவிதத்தில் பெருமையாக நினைத்தாலும் பல வகையில் வெறுப்புதான் வந்தது. ஏனென்றால் கம்பெனிக்குள் ஊழியர்களுக்கு அவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது.
படிக்க :
♦ TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !
♦ தொழில் தகராறு சட்டம் ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா ? நீதி மன்றம் உத்தரவு !
வருடாந்திர மற்றும் காலாண்டு வருமானம் சிறப்பாக உள்ளதாக செய்தி சொல்கிறது. ஆனால் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நிறுவனம் சம்பளம் எப்படி வழங்குகிறது, அவர்களின் வேலை நிலைமைகள் எப்படியாக உள்ளன என்று வெளியே தெரிவதில்லை. கம்பெனியின் லாபத்தை மட்டுமே பார்த்துவிட்டு செல்லும் பலபேருக்கு உண்மையான அனுபவங்களை சொல்வதன் மூலம் இதை புரிய வைக்க உதவும் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு வருடமும் தொழிலாளர்களுக்கு அப்ரைசல் வைக்கப்படுகிறது. அதன் மூலம் ஊதிய உயர்வு கொடுக்கப்படுகிறது. கடந்த வருடமும் நல்ல வருமானம் இருந்தும் பெரும்பான்மையான ஊழியர்களுக்கு C பேண்ட் போட்டு அவர்களுக்கு 7-8% ஊதிய உயர்வு தருவதாக சொன்னார்கள். மீதியுள்ள மிகக் குறைந்த பேருக்கு A அல்லது B பேண்ட் கொடுத்து 10-11% ஊதிய உயர்வு தருவதாக சொன்னார்கள்.
இதை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள் என்றால் அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு மூன்று அல்லது நான்கு பேர் செய்யும் வேலையை செய்ய சொல்வது, அதனால் கண்டிப்பாக அவர்களால் செய்ய முடியாமல் போகும். அதனை காரணமாக காட்டி அவர்களுக்கு கடைசி பேண்ட் போடுவதன் மூலம் அவர்களின் ஊதிய உயர்வினை குறைத்து விடலாம்.
ஆனால் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு அதிக ஊதிய உயர்வும் கொடுக்கின்றனர். அதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்? அனுபவம் உள்ள தொழிலாளர்கள் வேலையை விட்டு நீங்களாகவே செல்ல வைப்பது ஏனென்றால் கம்பெனி ஊழியர்களை வெளியேற்றினால் சட்ட வரைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆதலால் அந்த நரித்தனமான போக்கை கம்பெனி கடைபிடிக்கிறது.
டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தால் அரசாங்க வேலை போல நினைத்துக் கொள்ளலாம் என்று பலர் கருதுகின்றனர். அதாவது ஊழியர்களின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், வெறும் லாப நோக்கம் மட்டுமே கிடையாது என்ற பொருள் உள்ளது ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லை. ஏனென்றால் ஊழியர்கள் மீதான அக்கறை கொண்ட ஒரு நிறுவனம் மேலே சொன்னபடி தொழிலாளர்களை வேண்டுமென்றே ஊதிய உயர்வை குறைத்து அவர்களை வெளியேற்ற நினைக்காது.
ஒருவரின் மீது இவ்வளவு கடுமையான வேலை சுமை செலுத்தி அவர்களை கஷ்ட நிலைக்கு உள்ளாக்காது. தவறுகளை எதிர்த்து கேட்கும் ஊழியர்களை குறிவைத்து மறைமுகமாக தாக்க மாட்டார்கள். குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. நிஜத்தில் கொத்தடிமைகளாவே ஐ.டி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். மேலும் எந்த பிரச்சனையை வைத்து ஊழியர்களை வெளியேற்றலாம் என்று திட்டம் போடுவது என்பதெல்லாம் எப்படி ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் நிறுவனமாக எடுத்துக் கொள்ள முடியும் நீங்களே சொல்லுங்கள்.
டாடாதான் முதன் முதலில் தொழிலாளர்களுக்கான அனைத்து சட்ட உரிமைகளும் வழங்கியது என்று சொல்லிக் கொண்டாலும், டி.சி.எஸ் 2015-ல் 25,000 தொழிலாளர்களை கம்பெனியை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றுகிறது என்ற செய்தி வெளியானது.
புதிதாக 10,000 மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்த்துள்ளதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு வருமானம் உள்ளபோது ஏற்கனவே வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை ஏன் குறைக்க வேண்டும். ஏற்கனவே வேலைபார்க்கும் ஊழியர்களால் உருவான கம்பெனி வருமானத்தை அவர்களுக்கு செலவு செய்யாமல் ஏமாற்றுவது தெளிவாக தெரிகிறது. புதிதாக இவ்வளவு பேரை வேலைக்கு எடுத்திருக்கிறோம் என்று சொல்வதன் மூலம் ஏற்கனவே உள்ள தொழிலாளர்களின் நிலையை மறைக்கிறார்கள்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிக வருமானம் வந்துள்ளது என்று சொல்லும் தலைமை அதிகாரி அதெல்லாம் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை படித்து புரிந்துகொண்டு கடுமையான உழைப்பில் ஈட்டியது என்பதை ஏன் மறைக்க வேண்டும். ஆனால் அதே தலைமை அதிகாரிதான் கம்பெனி இணையதளத்தில் “உங்களின் உழைப்பால் உங்களின் ஒத்துழைப்பால் இவ்வளவு பிரமாண்டமாக வருமானம் வந்துள்ளது மேலும் இதை தொடர்ச்சியாக எடுத்து செல்ல வாழ்த்துக்கள்” என்று ஒவ்வொரு காலாண்டு முடிவின் போதும் லாபத்தை பற்றிய கட்டுரை வெளியிடுகிறார்.
“கம்பெனிக்கு இவ்வளவு வருமானம் வந்துள்ளது ஆதலால் இந்தமுறை எல்லா வகைப்பட்ட ஊழியர்களுக்கும் இந்த அளவுக்கு ஊதியம் உயர்த்தி கொடுக்கிறோம்” என்கிற செய்தி வெளிப்படையாக வருவதில்லை. மாறாக அப்ரைசல் போட்டு அதன் மூலம் ஊதியம் உயர்த்துவதாக சொல்லி பெரும்பாண்மை ஊழியர்களுக்கு குறைவான ஊதிய உயர்வை அளிப்பதன் மூலம் தன்னுடைய லாபத்தை மேலும் அதிகப்படுத்திக் கொள்வதையே நோக்கமாக கொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இதை கேள்வி கேட்க முடியாமல் செய்திகளை படித்துவிட்டு மட்டும் செல்லும் ஒற்றுமை இல்லாமல் ஐ.டி ஊழியர்களுக்குள் போட்டிபோடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
டாடாதான் முதன் முதலில் தொழிலாளர்களுக்கான அனைத்து சட்ட உரிமைகளும் வழங்கியது என்று சொல்லிக் கொண்டாலும், டி.சி.எஸ் 2015-ல் 25,000 தொழிலாளர்களை கம்பெனியை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றுகிறது என்ற செய்தி வெளியானது. பிறகு சமூக அக்கறை உள்ள தொழிலாளர்கள் அதனை எதிர்த்து பலவிதமாக எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சங்கங்கள் குரல் கொடுத்தும் ஊழியர்களை சட்ட விரோதமாக வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த முயற்சித்தார்கள்.
ஆனால் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் எந்தவித பெரிய சலசலப்பும் இல்லாமல் இருந்தது போலவே காணப்பட்டது. அவர்கள் கூட்டாக இணைந்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குள்ளே ஒருவிதமான போட்டி மனப்பான்மையை கம்பெனி உருவாக்கி பராமரிக்கிறது. அதனால் தன் அருகில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல், அல்லது தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அவர்கள் கொடுத்த பேண்ட் பொருத்தமில்லை என்று சொன்னாலும் அவர்கள் போட்டதை ஏற்றுக் கொள்ளும்படி பேசி நம்மை நம்பவைத்து முட்டாள் ஆக்கும் நிலைதான் உள்ளது. ஆனால் ஐ.டி ஊழியர்கள் சங்கமாக ஒன்றிணைந்தால் ஊழியர்களின் ஊதிய உயர்வை பற்றி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். தொழிலாளர் விரோத போக்கு எதுவாக இருந்தாலும் யூனியன் மூலம் நிறுவனத்திற்கு கொண்டு செல்லலாம். செய்யவில்லை என்றால் நாம் தொழிலாளர் அலுவலகத்தில் முறையிட்டு நடைமுறைப்படுத்தலாம். அவ்வாறு செய்வதன் மூலம்தான் ஊழியர்களின் வேலை நிலைமைகள் மேம்படும்.
படிக்க :
♦ Log off your silence! Log into NDLF-IT Wing!!
♦ டாடா குழுமத்தின் கோரமுகம் -1
இல்லை என்றால் ஏற்கனவே இருப்பது போல அதிக லாபம் வந்தாலும் குறைவான ஊதிய உயர்வும், அனுபவம் உள்ளவர்களை வெளியேற்றும் நோக்கத்தோடு அவர்களின் சம்பள உயர்வை தடுப்பதும் கேள்வி கேட்டால் குறிவைத்து தாக்குவதும் சாதி-மதம் பார்த்து பிரிவினையாக செயல்படுவதும் என்று பலவற்றை சகித்துக் கொண்டு வாழும் கொத்தடிமைகளாக நாம் மாறிவிடுவோம், மாறிக்கொண்டிருக்கிறோம்.
வாருங்கள் நாம் சங்கமாக அணிதிரள்வோம் ஒற்றுமையாக தொழிலாளர்களின் பலத்தை காண்பிப்போம் !
இப்படிக்கு
ஒரு அனுபவமுள்ள ஐ.டி ஊழியர்
நன்றி : new-democrats
New Democratic IT/ITES Employees Circle (NDIEC) co-ordinates activities of employees in IT/ITES sector all over India. We will organize employees working in different companies in various locations so that they can synchronize their activities.
செயலாளர் – சுகேந்திரன்
முகவரி: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
110/63, மாநகராட்சி வணிக வளாகம், 2-ம் தளம்,
என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம்,
சென்னை – 600 024
தொலைபேசி 9003009641 மின்னஞ்சல் combatlayoff@gmail.com