சாக்கடைகளை தூர் வாரும் போது வெளிப்படும் விச வாயுக்களால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரும் எண்ணிக்கையிலான துப்புரவு தொழிலாளர்கள் கடந்த சில ஆண்டுகளில் மரணமடைந்துள்ளனர்.
மிகச் சமீபத்தில், டெல்லியின் மோதி நகரில் உள்ள டி.எல்.எஃப் ரியல் எஸ்டேட் குடியிருப்பு வளாகத்தில் ஐந்து தொழிலாளர்கள் மரணமடைந்தனர். அவர்களில் யாரும் முறைப்படி துப்புரவுத் தொழிலாளர்களாக பணி புரியவில்லை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது.
துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றியும் மேலும் அவர்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தங்களது இன்னுயிரை இழந்த தொழிலாளர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றியும் கூட பேசப்படுகிறது. இருப்பினும், சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது மரணமடைந்திருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
1993 – 2018 ஆண்டுகளுக்கிடையில், 666 துப்புரவுத் தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் (Ministry of Social Justice and Empowerment) அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணையம் (National Commission of Safai Karamcharis – NCSK) தெரிவித்துள்ளது.
படிக்க :
♦ கர்நாடகா : சாக்கடை குழியில் இறங்க நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளி !
♦ தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !
1993 -ம் ஆண்டுக்குப் பிறகு சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது மரணமடைந்த தொழிலாளர்களது குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ‘துப்புரவுத் தொழிலாளர் சங்கம்’ (Safai Karamchari Andolan) எதிர் ‘இந்திய ஒன்றியம்’ வழக்கொன்றில் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வழங்கிய தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. எனினும், இதற்குத் தேவையான தகவல்களை அனைத்து மாநிலங்களும் அளித்துவிடவில்லை. தகவல்கள் கிடைக்கப்பெற்ற மாநிலங்களிடமிருந்தும் கூட, மரணமடைந்தவர்களது எண்ணிக்கையை தாண்டி வேறு எதுவும் ஆணையத்திற்கு தெரியாது.

மரணமடைந்த தொழிலாளர்கள் யாவர், அவர்களது பெயர் என்ன, அவர்கள் எங்கிருந்து வந்தனர், அவர்களது குடும்பங்கள் என்ன, ஒருவேளை அவர்கள் இழப்பீடு பெற்றிருந்தால் எவ்வளவு பெற்றார்கள் என்பது உள்ளிட்ட – தொழிலாளர்களை அடையாளப்படுத்த தேவையான – எந்த தகவல்களும் ஆணையத்திற்கு தெரியவில்லை.
தொழிலாளர்களை அடையாளம் காண்பதும் இழப்பீடு பற்றிய தகவல்களை திரட்டும் பணியும் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாக NCSK -ன் துணை இயக்குனரான யாஸ்மின் சுல்தானா கூறுகிறார்.
“எத்தனை பேருக்கு இழப்பீடு கிடைத்தது என்ற தகவல்களை கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டிருகிறோம். இப்போதைக்கு சாக்கடைகள் தூய்மைப்படுத்தும் போது மூச்சுத்திணறி மரணமடைந்தவர்களது எண்ணிக்கையை மட்டுமே எங்களுக்கு அவர்கள் கொடுத்துள்ளார்கள்” என்று சுல்தானா கூறினார்.
ஆணையத்தின் தகவலின் படி, சாக்கடை தூய்மைப்படுத்தும் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதாவது 192 பேர் தமிழ்நாட்டில் தான் மரணமடைந்துள்ளனர். இரண்டாவதாக குஜராத்தில் 122 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும் அரியானாவில் 54 பேர், கர்நாடகாவில் 69 பேர், உத்திரப்பிரதேசத்தில் 61 பேர், டெல்லியில் 39 பேர், இராஜஸ்தானில் 39 பேர், பஞ்சாப்பில் 29 பேர் மற்றும் மேற்கு வங்கத்தில் 10 பேர் மரணமடைந்துளதாக ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 17 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இந்த தகவல்களை கொடுத்திருப்பதாக ஆணையம் கூறுகிறது. எண்ணிக்கை எப்படி கிடைத்தது என்று கேள்விக்கு, ஊடகங்களில் வெளி வந்த அறிக்கைகள் மற்றும் அந்தந்த மாநிலங்களுக்கு எழுதிய கடிதங்களில் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் எண்ணிகையை உறுதி செய்ததாக ஆணையம் கூறுகிறது.
எண்ணிக்கையை உறுதி செய்வதற்கு ஆணையத்தின் ஊழியர்கள் கள ஆய்வு ஏதேனும் நடத்தி இருக்கிறார்களா என்ற கேள்விக்கு, ஆய்வுகளை நடத்தவும், தகவல்களை பெறவும் மாநில அரசுகள், நகராட்சி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதங்களின் மூலம் ஆணை பிறப்பிப்பது மட்டுமே தங்களது வேலை என்று ஆணையம் பதிலளித்தது.
இறந்தவர்களது பெயர், முகவரி, முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் இழப்பீடு உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டபோது, அவர்களது எண்ணிக்கை மட்டுமே தங்களுக்கு தெரியும் என்று ஆணையம் தொடர்ந்து பதிலளித்தது. மற்ற தகவல்களையும் மெதுவாக சேகரித்து வருவதாக ஆணையம் மேலும் கூறியது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத்தொடர்ந்து மாநில அரசுகளிடமிருந்து தகவல்களை NCSK கேட்டிருக்கிறது. இதுவரையிலும், ஒட்டுமொத்தமாக நாட்டில் எத்தனை துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட இந்த கமிசனுக்கு தெரியவில்லை.
படிக்க :
♦ அது என்னா சார் எச்சி பாரத்து ?
♦ சாக்கடைக் கொலைகள்!
பணி நிலையின் (வழக்கமான, தற்காலிக, நிரந்தர, ஒப்பந்த சேவை) அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளர்களது எண்ணிக்கை பற்றிய தகவல்களை கேட்டு மாநில அரசுகளுக்கு கடிதங்கள் எழுதியிருப்பதாகவும் பதிலுக்கு காத்திருப்பதாகவும் ஆணையம் கூறியது.
பெரும்பாலான குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாக கமிசனின் புதிய தலைவராக கடந்த 2017, மார்ச் 16-ம் தேதி பதவியேற்ற மன்ஹார் வால்ஜிபாய் சாலா கூறுகிறார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது.
“மாநிலங்கள் முன்னெச்சரிக்கையாக நடக்கவில்லை. மரணமடைந்த துப்புரவுத் தொழிலாளர்களது எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். ஆனால் நமக்குத் தெரிந்தது இது மட்டும்தான். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் 10 இலட்சம் இழப்பீடு பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் கூறினார்.
கமிசனின் தகவலுக்கு முரணாக, 2000-ம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் 1,760 துப்புரவுத் தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக துப்புரவுத் தொழிலாளர்களுக்காகவும் கையால் மலமள்ளும் தொழிலாளர்களுக்காகவும் இயங்கி வரும் டெல்லியைச் சேர்ந்த “சபாய் கரம்சாரி அந்தோலன்” எனும் அமைப்பு கூறுகிறது.

ஆணையம் கூறும் எண்ணிக்கை முற்றிலும் தவறானது என்கிறார் சபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பின் நிறுவனரான பெசவாடா வில்சன். “இத்தகவல் தவறானது. இது அவர்களால் அவசரகதியில் எடுக்கப்பட்டது. தற்போது வரையில் 666 அல்ல 1,760 தொழிலாளர்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் உரிய இழப்பீடுகளை அவர்களுக்கு கொடுக்கவும் “சபாய் கரம்சாரி அந்தோலன்” போன்ற தொண்டு நிறுவனங்களிடம் ஆணையம் எப்போதாவது ஆலோசனை கேட்டதா என்று ஆணையத்தின் இயக்குனரிடம் கேட்டபோது, “ஆணையம் இனிமேல்தான் அதைச் செய்யும்” என்று மட்டுமே பதிலளித்தார்.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது 1993-ம் ஆண்டிற்குப் பிறகு சாக்கடை தூர்வாரும் பொது இறந்த தொழிலாளர்களை அடையாளம் காண எந்த மாநிலமும் அக்கறை கொள்ளவில்லை என்பது தெரிகிறது. இதற்கு மாறாக, உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, பெரும்பாலான மாநிலங்கள் 2013-ம் ஆண்டு முதல் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே அடையாளம் கண்டுள்ளன.
பெரும்பாலான குடும்பங்களுக்கு முழுமையான இழப்பீடான 10 இலட்சம் இன்னும் கிடைக்கவில்லை. 10 இலட்சத்திற்கு குறைவாக இழப்பீடு பெற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழுமையான இழப்பீட்டை தர வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று மன்ஹார் கூறினார்.
நடைமுறையில், வழிகாட்டுதல்கள் வழங்குவது மற்றும் அவற்றை கண்காணிப்பதைத் தாண்டி NCSK-வின் அதிகார வரம்பு இருக்கவில்லை. அந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த அதற்கு அதிகாரம் இல்லை. மாவட்ட அளவில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்த மட்டுமே அதிகாரி ஒருவருக்கு அதிகாரம் உள்ளது.
1994 -ம் ஆண்டு ஆகஸ்டு 12 -ம் தேதி சட்டபூர்வ அமைப்பாக உருவாக்கப்பட்ட NCSK தொடர்ந்து மூன்று ஆண்டுகள் காலம் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த அறிவிப்பில் திருத்தங்கள் செய்ததன் மூலம் இதன் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த ஆணையம் சட்டபூர்வமற்று இயங்கி வருகிறது.
கையால் மலமள்ளுதலை தடை செய்ய 2013 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி எந்த மனிதரையும் சாக்கடைக்குள் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. விரும்பத்தகாத இந்த செயலில் எவரையும் ஈடுபடுத்தும் முன்னர் 27 முன் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு பொறியாளர் ஒருவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏதாவது விபத்து நேர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர ஊர்தி ஒன்று அருகிலேயே இருக்க வேண்டும்.
ஆக்சிஜன் உருளை, பாதுகாப்பு முகமூடி மற்றும் முழங்கால் வரை காலணி என சாக்கடை தொட்டிகளை தூய்மைப்படுத்துவதற்கு தனிச்சிறப்பான அணிகலன்கள் தேவை என்று சட்டம் கட்டாயப்படுத்தியிருக்கிறது.
அவசரம் என்றால் வருவதற்கு மருத்துவ அவசர ஊர்திக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயினும், சமீபத்திய அறிக்கைகளின் படி, அரசு நிறுவனங்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.
நன்றி : The Wire – Centre Doesn’t Know How Many People Have Died Cleaning Sewers or Received Compensation
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு