நாளுக்கு ஒரு விலை விற்றாலும் கேஸ் தீர்ந்து போனா வாங்கித்தான் ஆக வேண்டும்; ஏனென்றால் விறகுக்கு மாற முடியாதே. அதுவும் ஒரு சிலிண்டருக்கான இணைப்பு மட்டுமே வைத்திருப்பவர்களின் நிலை சொல்லில் அடங்காதது. பாதியில் வெந்த பருப்பை அப்படியே பக்கத்து வீட்டாரிடம் வேகவைத்து வாங்குவதிலிருந்து, அக்கா உங்க வீட்ல ஃபுல் இருக்கா… னு கெஞ்சி கூத்தாடி எதிர் வீட்டில் சிலிண்டர் வாங்குவது வரையில் குடும்பப் பெண்களின் சிரமம் சொல்லி மாளாது.
கேஸ் கம்பெனிக்கு புக் பண்ணி சிலிண்டர் எப்போ வரும்னு காத்திருந்து… ”அண்ணே பக்கத்துவீட்ல ரெண்டு நாள்ல திரும்பத் தர்றேனு சொல்லி வாங்கிட்டேன். இன்னிக்கே கிடைக்கிறமாதிரி கொண்டுவர்றீங்களானு’’ நடுத்தர வர்க்கத்தின் குடும்பப் பெண்கள் உரிமையோடு அணுகுவது சிலிண்டர் சப்ளை செய்யும் கேஸ் கம்பெனி ஊழியர்களைத்தான்.
வெயிலோ, மழையோ எதையும் பொருட்படுத்தாமல், மூன்று மாடியானாலும் தோள் சுமையாகவே சுமந்துச் சென்று விநியோகம் செய்யும் தினக்கூலிகளை கோடம்பாக்கத்தில் சந்தித்தோம்.
ஆம்! அவர்கள் தினக்கூலிகள்தான். கம்பெனி முத்திரையோடு, அவரவர் பெயர் பதித்த சீருடை அணிந்திருந்தாலும், கம்பெனி வண்டியை மிதித்து வந்திருந்தாலும் அவர்கள் காஸ் சப்ளை செய்யும் நிறுவனத்தில் மாதச்சம்பளம் வாங்கும் தொழிலாளிகள் அல்ல அவர்கள். சிலிண்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூலி பெறும் கூலித் தொழிலாளர்கள்.

“இவனுங்கெல்லாம் எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறானுங்க. பதினஞ்சு வருசமா வேலை பார்க்குறவனுக்கு கூட தீபாவளி காசு 500; நேத்துக்கு வேலைக்கு சேர்ந்தவனுக்கும் அதே 500… வெக்கமில்லாம ஏண்டா வாங்குனீங்கனு கேட்கிறேன்…’’ வெடிக்கிறார், விநாயகம். சிலிண்டரை சுமந்து வரும் வாகனத்தின் டிரைவர்.” இவங்களுக்கு கம்பெனில எந்த உரிமையும் கிடையாது. மாச சம்பளம் இல்லை. இ.எஸ்.ஐ., பி.எஃப். இல்லை. எதுவுமில்லை. சிலிண்டருக்கு பத்து ரூபா கூட இப்பதான் உயர்த்தினாங்க…’’ என்றவர், “கேளுங்க, கதை கதையா சொல்வாங்க பசங்க’’ என்று தொடங்கி வைத்துவிட்டு, லோடு வண்டியிலிருந்து தள்ளு வண்டிக்கு சிலிண்டரை இறக்கிக் கொடுக்க சென்றுவிட்டார், விநாயகம்.

வயதில் மூத்தவரும் துடுக்காக பேசிக்கொண்டிருந்தவருமான கணேசனை கை காட்டினார்கள் தொழிலாளர்கள். 59 வயதாகும் கணேசன் கடந்த பத்து வருடங்களாக வீடுகளுக்கு சிலிண்டர் போடுகிறார். இதற்கு முன்னர் வெல்டிங் வேலை செய்து வந்திருக்கிறார். “அட எங்கதைய ஏன் கேட்கிற… வீட்ல சிலிண்டர் போட்டா பத்துரூபா. மூனு மாடி ஏறிப்போயி போட்டாலும் அதே பத்துரூபாதான். வீட்டுக்காரங்க அவங்களா விருப்பப்பட்டு கொடுக்கறத வாங்கிக்கனும். இவ்ளோ தொலைவு உனக்காகத்தான் வந்துருக்கேன்… பத்து ரூபா சேத்துக் கொடுங்கனு கேட்டுட்டா போச்சு… கம்பெனிக்கு உடனே போன போட்ருவாங்க. இன்னிக்கு சிலிண்டரு 896 ரூபா விக்கிது. 900 ரூபா கொடுப்பாங்க. அதுக்கு மேல தரமாட்டாங்க. இதோ பாரு நா வச்சிருக்க பில்லுல இதெல்லாம் டிப்ஸ் 4 தான் தேரும். இவுங்க 5 ரூபா தருவாங்க…’’ என்று பட்டியலிடுகிறார், கணேசன்.

திருவல்லிக்கேணியிலிருந்து வரும் தாமரைச்செல்வன், இத்தொழிலுக்கு வந்து 8 வருடமாகிறது. ‘’ எங்க கம்பெனி தேனாம்பேட்டையில இருக்கு. குடோனு சிட்டிக்கு வெளிய இருக்கு. அவ்ளோ தூரம் நாங்க போயி லோடு எடுக்க முடியாதுனு இந்த மாதிரி சிட்டிக்குள்ள அங்கங்க ஜம்பிங் பாயிண்ட்னு போடுவாங்க. லோடு வண்டில சிலிண்டர் வந்துரும். பில்லுக்கு ஏத்த மாதிரி ஆளுங்கள ஒதுக்குவாங்க. இங்கயிருந்து நாங்க சப்ளை பன்னுவோம். சைக்கிள் பஞ்சர் ஆனா கூட எங்க செலவுலதான் பஞ்சர் ஒட்டிக்கனும். டயர் வெடிச்சா 500 ஆயிடும். அதுவும் நாங்கதான் பாத்துக்கனும்’’ என்கிறார், அவர்.

கையில் எல்லோரும் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு போனை வைத்திருந்தார்கள். அதுகுறித்து கேட்டபோது, ” இந்த போன கம்பெனிலதான் கொடுத்தாங்க… ஆனா, காசு நாங்கதான் கொடுத்தோம். ஏழாயிரம் ரூபாய். ஏன்னா, எங்களுக்கு போனு வாங்கத் தெரியாது பாரு’’ என்றார், குமார். ” இப்ப வர்ற பில்லு எல்லாம் கோடோடதான் வருது. எவ்ளோ டெலிவரி பன்னிருக்கோம்னு இந்த போன்லதான் ஏத்திவிடனும்னு சொல்லி கொடுத்துருக்காங்க’’ என்றார்.

கஷ்டமாயில்லியா வேலை…? டெய்லி தண்ணி அடிப்பீங்களா? என்றோம் குமாரே தொடர்ந்தார்… “ என்ன பன்றது. நான் டெய்லி தாம்பரத்திலேர்ந்து வந்துட்டு போறேன். இங்க இருக்க 18 பேர்ல பத்து பேர் தண்ணியடிப்பாங்கதான். வேற என்ன பன்றது? எங்களுக்கு வெயில்கூட பழகிருச்சி. மழைதான் பேஜாரு.’’
“இதுகூட பரவால்ல. நாய்க்கடிலாம் படவேண்டியிருக்கும். இந்தா இவருக்குக்கூட இப்ப கொஞ்ச நாளக்கி முன்னதான் நாய்கடிச்சிச்சி’’னு முரளியை அறிமுகப்படுத்திவைத்தார், தாமரைச்செல்வன்.

” நாப்பத்தைஞ்சு வயசாகுது. நான் ஒரு அஞ்சு வருசமா இந்த வேலை பாக்குறேன். திருவள்ளூர் கடம்பத்தூர்ல இருந்து டெய்லி வர்றேன். காலைல 4, 4.30க்கா எழுந்திருச்சாதான் வண்டிய ஸ்டேசன்ல போட்டு டிரெயின் புடிச்சி சென்ட்ரல் வந்து அப்புறம் தேனாம்பேட்டை ஆபிஸ்க்கு போயி… அங்கேர்ந்து இன்னிக்கு பாயிண்ட் எங்கனு கேட்டு வந்து சேர்றதுக்குள்ள ஏழு ஆயிடும்.’’ … “வேறென்ன வேனும் கேளு…’’ படபடவென பொரிந்து தள்ளினார் முரளி.
நாய்க்கடி பற்றி கேட்டதற்கு, “வீட்டு நாயிதான். கட்டிதான் போட்டுருந்தாங்க. அது கொறச்சப்பவே தயங்கி நின்னேன். கடிக்காது வாங்கனு கூப்டாங்க. போறப்ப ஒன்னும் பன்னல. அந்த தைரியத்துல காலி சிலிண்டரோட திரும்பி வர்றப்ப… என்ன நெனச்சிச்சோ தெரில… வள்ளுனு பிடுங்கிருச்சி. அப்புறம் அந்த வீட்டுகாரங்களே கூட்டிட்டு போயி டி.டி. இன்ஜெக்சன் போட்டுவிட்டு, கைல இருநூறு ரூபா கொடுத்தாங்க..’’ என்று நாய்க்கடியின் தடத்தைக் காண்பித்தார்.

“நாய்க்கடிலாம் சகஜம். நாலஞ்சி பேரு கடி வாங்கியிருக்காங்க.’’ என்றபடியே கூட்டத்தில் சங்கமித்தார், குமரேசன். சைதாப்பேட்டையிலிருந்து வரும் இவர், கடந்த நான்கு வருடங்களாக இந்த வேலை செய்கிறார். ஒரு லோடு முடித்துவிட்டு வந்தக் களைப்பையும் தாண்டி, ரொம்பவும் அமைதியாகவே இருந்த குமரேசனிடம் இதற்கு முன்ன என்ன வேலை செஞ்சீங்க? என்று கேட்டோம். “மார்க்கெட்டிங் லைனில் இருந்தேன். பத்து வருசத்துக்கு மேல செஞ்சேன். டார்கெட், டார்கெட்னு ஒரே டார்ச்சர் கொடுப்பாங்க. அதனாலயே அந்த வேலையே வேனானு வந்துட்டேன். கடைசியா ரெனால்ட்ஸ் கம்பெனியில வேலை பார்த்தேன்’’ என்றார்.
என்ன படிச்சிருக்கீங்க?
பி.ஏ. எக்கனாமிக்ஸ்… பிரசிடென்ஸி காலேஜ்ல…

‘’இந்த வேலைக்கு எழுதப்படிக்க தெரிஞ்சா போதும்… டிகிரி முடிச்சவங்களும் நிறைய இருக்காங்க’’ என்ற சுரேஷ் கடந்த ஒருவருடமாக குடோன் கீப்பராக இருக்கிறார். இவரும் இதற்குமுன், இருபது வருடங்களாக டெலிவரிபாயாக வேலை பார்த்தவர்தான். குடோன் கீப்பரான பிறகு, இவரது மாதச்சம்பளம் 20,000.

“ஒரு லோடுல 306 சிலிண்டர் வரும். இந்த ஏரியாவுல எவ்ளோ பில் இருக்குனு பார்த்து இத்தன பேர் இங்க போங்கனு சொல்லிருவாங்க. தி.நகர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர்னு பாயிண்ட்க்கு ஏத்தமாதிரி கம்பெனியிலிருந்து ட்ரை சைக்கிள ஓட்டி வந்துடுவாங்க. அவங்களுக்கு இருக்கிற லோடு, பில்ல பொறுத்து தலைக்கு இவ்ளோனு பிரிச்சி கொடுப்பேன். அதான் என்வேலை. சராசரியா ஒரு நாளைக்கு குறஞ்சது தலைக்கு 20 – 30 சிலிண்டர் வரும். தீபாவளி மாதிரி சீசன் டைம்ல 40 வரைக்கும் போகும்.’’
‘’எங்க கதையெல்லாம்… நிறைய இருக்கு…’’ என்று கோரஸாக தொடர்ந்தனர், முருகனும் தாமரைச்செல்வனும்.
“சிலிண்டரு நாலுநாளுக்கு முன்ன ஒரு விலை விக்கும். அந்த விலைக்கு காசு எடுத்து வச்சிருப்பாங்க. நாங்க போயி நின்னா அம்பது குறையிது நூறு குறையிதுனு பக்கத்து வூட்ல வாங்கியாந்து கொடுப்பாங்க. காசே இல்லாம, கண்ணெதிருல சேட்டு கடையில நகையை அடமானம் வச்சில்லாம் தந்திருக்காங்க…’’ இது முருகனின் அனுபவம் மட்டுமல்ல; எல்லோரும் இதேபோல பல சம்பவங்களை அடுக்குகின்றனர்.
“இந்த மாதிரி கஷ்டபடுற ஜனங்கதான் மனசு வந்து எங்களுக்கு 30, 40 ரூபா கூட டிப்ஸா தருவாங்க. அபார்ட்மெண்ட்ல இருக்கிறதுங்க, கணக்கு பாக்குங்க. மூனு மாடி ஏறி வந்திருக்கேனு கேட்டா, நான் ஏன் உனக்கு தரனும். அதான் கம்பெனில சம்பளம் தர்றாங்களேனு சொல்றதோட இல்லாம போன போட்டு வேற சொல்லிடுவாங்க. மேனேஜர் கூப்டு கத்துவாரு.’’ என்கிறார், தாமரைச் செல்வன்.

“இவனுங்க டெய்லி ஒரு விலை வக்கிறானுங்க. ஏதோ, நாங்கதான் விலையை ஏத்துறாமாதிரி மாசா மாசா விலையை ஏத்துவியானு எங்ககிட்ட சண்டைக்கு வருவாங்க.’’ என்றார், ஜான்சன்.
“ஒரு சில அபார்ட்மென்ட்ல லிப்ட் யூஸ் பண்ணவே கூடாதுனு சொல்லிடுவாங்க. சில அபார்ட்மென்ட்ல போறப்ப யூஸ் பன்னிக்க சொல்வாங்க. வர்றப்ப காலி சிலிண்டரோட படியில இறங்கிடுனுருவாங்க. இதுஒரு பிரச்சினை எங்களுக்கு’’ என தொடர்ந்த தாமரைச்செல்வன், “கம்பெனி மீட்டிங் கொடுமையை சொல்லியே ஆகனும். நிக்க வச்சியே பேசுவாங்க. எப்போ மீட்டிங் போட்டாலும், ஒரே பல்லவிதான். டிப்ஸ் வாங்காதே, லீக்கேஜ் சிலிண்டர் போடாதே. இதுதான். ஒரு லோடுக்கு எப்டி பாத்தாலும் 40 – 50 லீக்கேஜ் வந்துரும். சிலதுல வாசர் இருக்காது. அதுக்கு நாங்க என்ன பன்ன முடியும்? சரி மீட்டிங் வந்துருக்கோம், டீ வாங்கிக்கொடுங்கன்னா, வெளியில போயி குடிச்சிட்டுவானு சொல்வாரு மேனேஜர். சரி சம்பளமாவது ஏத்திக்கொடுங்க… சிலிண்டருக்கு பத்துரூபா பத்தாதுனு கேட்டா… கட்டுபடியாகலனா வேலையை வுட்டு நின்னிரு..னு கூலா சொல்வாரு’’ என்கிறார், அவர்.

பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று கூறி பேசிய தொழிலாளிகள் சிலர், ” பிளாக்ல டீக்கடைக்கு ஹோட்டலுக்கு சிலிண்டர் போடுறீங்களேனு கேட்கிறீங்களே? நாங்க மட்டும் அப்படி போட்டு சம்பாரிச்சிற முடியுமா? ஏஜென்சில இருக்கிற மானேஜரே, தலைக்கு இவ்ளோனு எக்ஸ்ட்ரா சிலிண்டர கொடுத்துருவாரு. நானூறு ரூபா இருந்தப்ப எழுநூறு ரூபாய்க்கு கொடுப்போம். இதுல நானூறு சிலிண்டர் காசு போக இருக்கிற முன்னூறுல இருநூறு மேனேஜருக்கு. சிலிண்டர் ஒன்னுக்கு நூறுதான் எங்களுக்குக் கிடைக்கும். அந்த இருநூற மேனேஜர் மட்டும் எடுத்துக்கிடுவாரா? இல்ல, ஓனருக்கும் போகுமானு தெரியாது. அதுவும், இப்ப ஆதாரோட, செல்போன் நம்பரெல்லாம் இணைச்சதுக்கப்புறம் நாங்களா எதுவும் செய்ய முடியாது. ஒரு சில நல்ல கஷ்டமருங்க, வருசத்துக்கு எட்டு சிலிண்டர் நான் யூஸ் பன்ன போறதில்ல… நீ ரெண்டு எடுத்துக்கோனு அவங்களே புக் பண்ணி கொடுத்திருவாங்க. அததான் நாங்க மாத்திவிடுவோம். மத்தபடி, டிப்ஸ் கிடைக்கிற காச வச்சிதான் எங்க பொழப்பு ஓடுது. நாளொன்னுக்கு 30 சிலிண்டர் போட்டாலும் முன்னூறு கூலி. டிப்ஸா ஒரு முன்னூறு நானூறு தேரும். டெய்லி 30 சிலிண்டரும் போட முடியாது. சராசரியா 20-லேர்ந்து 30 அவ்ளோதான்.’’ என்றார், அவர்.
பேட்டியை தொடங்கி வைத்த விநாயகம், மூனு வண்டிக்கு லோடு ஏற்றிவிட்ட களைப்போடு வியர்த்து விறுவிறுக்க வந்து சேர்ந்தார். ‘’இந்த லோடு வண்டிய ஓட்ற டிரைவர். நான்தான் இந்த லோடு எல்லாத்தையும் இறக்கி வச்சாகனும்னு கட்டாயப்படுத்துறாங்க… இங்க பாரு சிலிண்டர இறக்கிறப்ப கால்ல பட்டு ரத்தம் வருது. இதையும் எழுதுங்க..’’ என்ற விநாயகம், 16 வருடங்களாக டிரைவராக இருக்கிறார். குடோனிலிருந்து லோடு ஏற்றி, இதுபோன்ற ஜம்பிங் பாயிண்டுகளில் நாள் முழுக்க காத்திருந்து சிலிண்டரை இறக்கி கொடுத்து, காலி சிலிண்டரை ஏற்றிச் செல்வது வரையிலான வேலைக்கு இவரது ஒருநாள் கூலி 930.
‘’ஏஜென்சிகாரனுங்க நல்லா கொள்ளையடிக்கிறானுங்க. கஷ்டபடுற தொழிலாளிங்களுக்கு எதுவும் செய்ய மாட்டாங்க. வருசத்துக்கு ரெண்டு யூனிபார்ம் கொடுக்கனும். ஷூ கொடுக்கனும். ரெயின்கோட், தொப்பி கொடுக்கனும். ஆனா, எதுவும் கிடையாது. சிலிண்டர் விலை ஏர்றப்ப முன்கூட்டியே, 900 சிலிண்டர் வரைக்கும் குடோன்ல ஸ்டாக் ஏத்திருவாங்க. பழைய ரேட்டில் போட்ட பில்லை எல்லாம் திரும்ப வாங்கி, கேன்சல் செஞ்சிருவாங்க. புது விலைக்கு புதுசா பில்ல போட்டு கொடுத்துருவாங்க. சிலிண்டருக்கு 50 வச்சிகிட்டா கூட, ஒரே நாள்ல சுளையா 45000 அடிச்சிருவாங்க. சி.பி.சி.எல். கம்பெனியும் இத கண்டுக்க மாட்டான். ஆனா, கஷ்டபட்ற இவங்களுக்கு கொடுக்கறதுக்கு அவ்ளோ யோசிப்பான். நாங்களும் சி.ஐ.டி.யு. மூலமா சங்கம் வச்சில்லாம் பார்த்துட்டோம். எல்லா வேலையும் பண்ணி, கலைச்சி விட்டுட்டானுங்க.

இந்த ஏஜென்சினு இல்ல. எல்லா ஏஜென்சியிலயும் இதான் நிலமை. ஒரு எடத்துல பத்துரூபாய்க்கு மேல கமிசன் தந்தான்னா கூட, அத சொல்லி அங்க அவ்ளோ கொடுக்கிறாங்க., நீயும் சேர்த்துக் கொடுனு கேட்கலானு பார்த்தா. எல்லாரும் சொல்லி வச்சா மாதிரி பத்து ரூபாய்க்கு மேல தரமாட்டேன்கிறானுங்க. இதுவே பர்ஸ்ட் தப்பு. சி.பி.சி.எல்.ட்ட இருந்து சிலிண்டர் ஒன்ன டெலிவரி பன்றதுக்குனு முப்பதுரூபாய்க்கு மேல பில்போட்டு வாங்குறாங்க. அந்த காச அப்படியே தொழிலாளிங்ககிட்ட கொடுக்காம அதுலயும் கமிசன் அடிக்கிறானுங்க…’’ வண்டியிலிருந்து சிலிண்டரை இறக்கிப்போடுவதைப் போல… ஆதங்கங்களை கொட்டிவிட்டு அடுத்த வண்டிக்கு லோடு ஏற்றிவிட கிளம்பினார் விநாயகம்.