“இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தரும் வகையில் அரசாங்கத்துடன் இயைந்து வேலைபார்க்க வேண்டும். முடியவில்லை எனில் பதவியை இராஜினாமா செய்துவிட்டுப் போகவேண்டும்” என ஆர்.எஸ்.எஸ்.-ன் பொருளாதாரப் பிரிவான சுதேசி ஜக்ரன் மன்ச்-ன் தலைவர் அஸ்வனி மஹாஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 31, அன்று அளித்த நேர்காணலில் அஸ்வனி மஹாஜன், “ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், தனது அதிகாரிகள் பொது இடத்தில் கருத்து வேறுபாடுகளை தெரிவிப்பதைத் தடுக்க வேண்டும். அத்தகைய ஒழுக்கத்தை அவரால் பின்பற்ற முடியாவிட்டால், அவர் பதவியை இராஜினாமா செய்து விடுவது நல்லது” என்றார்.
மோடியின் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.-லிருந்து உருவானது. அஸ்வனி மஹாஜன் ஆர்.எஸ்.எஸ்.-ன் பொருளாதாரப் பிரிவான, ஸ்வதேசி ஜக்ரன் மன்ச்-இன் தலைவராக இருக்கிறார். மேலும், ஆர்.எஸ்.எஸ்.-ன் உறுப்பினர்கள், பா.ஜ.க. வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சில உள்ளூர் தொலைக்காட்சிகள், உர்ஜித் படேல் பணம் மற்றும் பத்திரங்கள் விற்பனை குறித்த விவகாரத்தில் அரசுடனான உறவு முறிவைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடும் என செய்திகள் வெளியிட்டன.
கடந்த அக்டோபர் 26 அன்று இரவு ரிசர்வ் வங்கியின் இணை ஆளுநர் விரல் ஆச்சாரியா ஒரு கூட்டத்தில், “ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை தடுப்பது, பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்” எனப் பேசிய பின்னரே அரசாங்கத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பிரச்சினை அதிகரித்தது
மே மாதம் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை தளர்த்தவும், அதன் அதிகாரத்தை மட்டுப்படுத்தவும், அரசாங்கத் தரப்பிலிருந்து தரப்படும் அழுத்தத்தை ரிசர்வ் வங்கி எதிர்கொண்டிருப்பதை ஆச்சாரியாவின் கருத்து வெளிப்படுத்தியது.
கடந்த அக்டோபர் 31 அன்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் அவசியமானது மற்றும் ஆளுகையின் தேவையுமாகும். அரசாங்கம் பிரச்சினைகளை ஒட்டி, ரிசர்வ் வங்கிக்கு தனது மதிப்பீடுகளையும், சாத்தியமான தீர்வுகளையும் பரிந்துரைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து ஆர்.பி.ஐ சட்டத்தின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தப் போவதாக அரசாங்கத் தரப்பிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அரசாங்க அதிகாரிகள் பதிலளிக்க மறுத்து விட்டனர். ஆனால் அரசாங்கத் தரப்பிலிருந்து உர்ஜித் படேலுக்கு சமீபத்திய வாரங்களில் ஆர்.பி.ஐ. சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி கடிதங்கள் அனுபப்பட்டதாக எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
“ஆர்.பி.ஐ. சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்த அரசாங்கத்திற்கு அனைத்து உரிமையும் உண்டு” என்கிறார் மஹாஜன்.
ஆர்.எஸ்.எஸ்-ன் சுதேசி ஜக்ரன் மன்ச், ரிசர்வ் வங்கியின் நெளிவு சுளிவற்ற நிதி நிலைப்பாட்டை விமர்சித்துள்ளது. மேலும் ரகுராம் ராஜன், முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் போன்ற வெளிநாட்டில் பயிற்சி பெற்ற பொருளாதாரவாதிகளை பணியிலமர்த்தியிருப்பது குறித்து விமர்சனம் செய்துள்ளது.
குறைவான பணவீக்கத்தோடு, பெரும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்ட மத்திய ரிசர்வ் வங்கியும் இந்த அரசாங்கமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சுதேசி ஜக்ரன் மன்ச் தலைவர் மஹாஜன்.
மேலும் “உர்ஜித் படேல் ராஜினாமா செய்தால், அவருக்குப் பதிலாக பதவியேற்க தேசியவாதப் பார்வைகொண்ட ”திறமையான நபர்களுக்கு” ரிசர்வ் வங்கியின் குழுவில் பற்றாக்குறை இல்லை” என்கிறார்.
அதிக வட்டிவிகிதம் சிறு வணிகங்களை கடுமையாக பாதிப்பதாகவும், லட்சக்கணக்கான வேலைகளைக் காக்க நிவாரணம் வழங்கவேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறினார். ”ரிசர்வ் வங்கி இந்தியாவின் எதார்த்ததைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், விடாப்பிடியாக நிற்கிறது” என்கிறார் மகாஜன்.
படிக்க:
♦ நல்ல நோட்டு அடிக்க முடியாதவன் கள்ள நோட்ட எப்படி பிடிப்பான் ?
♦ மோடியின் பணமதிப்பழிப்பு : எஸ்கேப் ஆகிறார் குருமூர்த்தி !
கிட்டத்தட்ட ரூ. 3,52,784 கோடி மதிப்பிலான ரிசர்வ் வங்கியின் கருவூலப் பணத்தின் உபரியை அரசாங்கம் எடுத்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பணம் முதலீடு செய்யப்பட்டு பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கமுடியும் என்று கூறுகிறார் மஹாஜன்.
முன்னதாக, நிதித்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், ரிசர்வ் வங்கியில் கையிருப்புப் பணத்தின் அளவைக் கணக்கில் கொண்டு அதிக பங்கை அரசாங்கத்திற்குத் தரவேண்டும் எனக் கேட்டுள்ளதாக கூறினார்.
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததைப் போல இந்தியப் பொருளாதாரம் தேங்கி விடும் என்று சங்கிகள் கூட்டம் கூக்குரலிடுகின்றன. வளர்ச்சிக்கு முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியின் வைப்பு நிதியைத் திருப்பிவிட வேண்டும் என பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் ரிசர்வ் வங்கியை மிரட்டி வருகிறது. ஏற்கனவே கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய மோடி அரசு, இந்திய வளங்களையும், மக்களின் வங்கி சேமிப்புகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளி வழங்கியிருக்கிறது. ஆட்சி முடிவடையும் சூழலிலும் ஒட்டுமொத்த கஜானாவையும் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளையர்களின் கால்களில் சேர்ப்பிக்க துடித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
தமிழாக்கம்:
நன்றி: The Wire