ரசியப் புரட்சியின் 101 வது ஆண்டையொட்டி “மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு – பாகம் 2
*****
நவம்பர் 7, ரசியப் புரட்சிநாளை முன்னிட்டு கரூரில் கொடியேற்றியதற்காக பு.மா.இ.மு. தோழர்கள் கைது !
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
கடந்த 07.11.2018 அன்று தமிழகம் முழுவதும் நவம்பர் விழா நிகழ்ச்சி கொடியேற்றி இனிப்பு கொடுத்து, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி தமிழகம் முழுவதும் பலராலும் கொண்டாடப்பட்டது.
கரூர் – தாந்தோன்றிமலை பகுதிகளில் பு.மா.இ.மு. அமைப்பு கடந்த 8 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 07.11.2018 அன்று நவம்பர் புரட்சி நாளன்று, தாந்தோன்றிமலை பேருந்து நிலையம் அருகில் பு.மா.இ.மு. அமைப்பின் சார்பில் கொடியேற்ற விழா நடத்தப்பட்டது.
அதையொட்டி பட்டாசு வெடித்தும், பறை இசை நிகழ்ச்சி நடத்தியும் “நவம்பர் புரட்சி வாழ்க!” என்றும், “முதலாளித்துவம் தோற்றுவிட்டது, இனி கம்யூனிசம்தான் மாற்று, காவி கார்ப்பரேட் ’ஹைபிரிட்’ பாஸிசத்தை முறியடிக்க நவம்பர் புரட்சி நாளில் சபதம் ஏற்போம்” என்றும் முழங்கி எமது அமைப்பின் கொடியை ஏற்றினோம்.
இந்நிலையில் ‘டைரக்டர் ஹரி படத்தில் வரும் போலீசு போல’ தயாராக வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேன் ஒன்று சர்..ரென வந்து தோழர்களுக்கு முன் நின்றது. சுமார் 20, 30 போலீசார் பரபரப்பாக இறங்கினார்கள். என்ன ஏது என அறியா நிலையில் அக்கம் பக்கம் இருந்த மக்களிடம் இனிப்புகள் வழங்கி கொண்டிருந்த தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அவர்களின் வேனில் ஏறும்படி பிடித்து இழுத்தனர்.
“என்ன காரணத்திற்காக வேனில் ஏறச் சொல்கிறீர்கள், ஜனநாயக உரிமை அடிப்படையில் எங்கள் அமைப்பின் கொடியை ஏற்றி மக்களுக்கு இனிப்புதானே வழங்குகிறோம். ரஷ்ய புரட்சி பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரச்சாரம்தான் செய்தோம்” என்று கூறியதற்கு, பசுபதிபாளையம் S.I. அழகுராமன், ”எதையும் பேசாதீர்கள், எதையும் சொல்லமுடியாது, வேனில் ஒழுங்கா ஏறுங்க” என்று கூறி அரைமணி நேரத்தில் தோழர்களை வேனில் ஏற்றிச்சென்று P.K.T.திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் 9 ஆண் தோழர்கள், 3 பெண் தோழர்கள் 4 குழந்தைகள் என 16 பேர் இருந்தனர்.
அதன்பிறகு நமக்கு ஆதரவாக வழக்கறிஞரை வைத்து பேசுகையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாகவும், அனுமதியின்றி கொடி ஏற்றியதற்காகத்தான் கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
“கோடி கோடியாக கொள்ளை அடித்த கார்ப்பரேட் முதலைகளை பிடிக்கவில்லை, நவம்பர் புரட்சி விழாவை கொண்டாடியதற்கு கைது செய்கிறீர்களா…?” என்று பெண் தோழர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு போலீசாரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.
மண்டபத்தில் தோழர்களுக்கு தேவையான தண்ணீர், உணவுகளைக் கூட உரிய நேரத்தில் வழங்கவில்லை. கட்டாய ரிமாண்ட் செய்ய வேண்டும் என பசுபதிபாளையம் போலீசார் முடிவோடு இருந்தனர். அதன்பிறகு சக அமைப்பு தோழர்களும், வழக்கறிஞர்களும் தொடர்ந்து போராடியதால் மாலை 6.30 மணியளவில் விடுவித்தனர்.
நாம் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பாகவே ஓரிரு போலீசார் அங்கு வந்துவிட்டனர். 10 நிமிடத்திற்குள்ளாகவே 20 – 30 போலீசார் வந்து கைதுசெய்துவிட்டனர். பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரிடம் மண்டபத்தில் இருந்த தோழர்கள், ”எதற்காக கைது செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, நாங்கள் எதுவும் பண்ண முடியாது, இது மேலிடத்து உத்தரவு” என்று கூறினார்.
காவல்துறையினர் கைது செய்ததற்கான நோக்கம் என்ன?
காவிரி பிரச்சனையிலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவை கைது செய்தபோதும், நீதிபதி குன்காவை இழிவுபடுத்திய போதும், உண்ணாமலை பகுதி டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி நீதிமன்றம் உத்திரவிட்ட போதும் அதை அகற்றாமலும் இருந்து நீதிமன்றத்தை அவமதித்தது இந்த அரசும் போலீசும்தான். ஆனால் ஜனநாயக நாட்டில் ஒரு கொடி ஏற்றக்கூட அனுமதி வழங்குவதில்லை.
15 நிமிடத்திற்குள் ஒரு போலீஸ் பட்டாளமே வந்து கைது செய்கிறது. அவ்வாறு கைது செய்ததற்கான உண்மையான நோக்கம், நவம்பர் புரட்சியை பற்றி மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதுதான். இதனால் இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், நவம்பர் புரட்சி பற்றி வினவு தளத்திலும், புதிய ஜனநாயம் போன்ற இதழ்களிலும் வெளியான கட்டுரைகளை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
புரட்சிகர அமைப்புகள் கொடியேற்றி, இனிப்பு கொடுப்பதற்குக் கூட ஜனநாயக உரிமை இல்லை என்பதுதான் பாசிசம்.
இனி நாம் முழங்க வேண்டியது இதைத்தான் “பாசிச பா.ஜ.க. ஒழிக!”
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு : 98941 66350.
*****
திருச்சியில்…
ரஷ்ய புரட்சியின் 101 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திருச்சியில் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. அமைப்புகளின் சார்பாக, பகுதிகளில் கொடியேற்றியும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும், மாலையில் அரங்கத்தில் சிறப்புரை மற்றும் கலைநிகழ்ச்சி நடத்தியும் விழாவாக கொண்டாடப்பட்டது.
காந்திபுரத்தில் காலை 10 மணி அளவில் பு.ஜ.தொ.மு. மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர ராஜ் தலைமையில் கொடிஏற்றி ”ரஷ்ய புரட்சி.. இன்றைய தேவை!” என்பதை வலியுறுத்திப் பேசினார். பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ம.க.இ.க. அலுவலகத்திற்கு முன்பு, இந்த வருடம் முதன் முதலாக மூவேந்தர் பகுதி மக்களுடன் இணைந்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ம.க.இ.க. தோழர் சத்யா கொடியை ஏற்றி வைத்தார்.
அந்தப் பகுதியில் சிறுவர்கள், மாணவர்களைத் திரட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
அன்று மாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ம.க.இ.க மாவட்ட செயலர். தோழர் ஜீவா தலைமை ஏற்றார்.
பு.ஜ.தொ.மு. – தோழர் தர்மராஜ், பு.மா.இ.மு. – தோழர் பிருத்திவ், மக்கள் அதிகாரம் – தோழர் ராஜா ஆகியோர் உரையாற்றினர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர்,
தோழர் காளியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதற்கிடையே தோழர்கள் கவிதைகளும் பாடல்களும் இசைச்சித்திரமும் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.
தோழர் கோவன் தலைமையில் ம.க.இ.க. சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இறுதியாக போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மாட்டுகறி விருந்து பரிமாறப்பட்டது.
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.
*****
விருத்தாச்சலத்தில்…
ரசியப் புரட்சி நாளான நவம்பர் 7 அன்று பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில், லெனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து வெடி வெடித்து ரசிய புரட்சியை தோழர்கள் கொண்டாடினர்.
அதன் பின்னர் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள உழவர் சந்தை, பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் நவம்பர் 7 ரசிய புரட்சி தினத்தை பற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.
*****
மதுரையில்…
மதுரையில் ம.க.இ.க. மற்றும் பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் சார்பில் ரசிய சோசலிச புரட்சி நாள் விழா நவம்பர் 7 அன்று கொண்டாடப்பட்டது.
தோழர்கள் குடும்பத்துடன் ஒன்றுகூடி பாடல்கள், கவிதை, நாடகம், பட்டாசுகள், புத்தாடை, விவாதங்கள், உரைவீச்சுகள், மாட்டுக்கறி விருந்து என ஒரு மாற்றுப் பண்பாட்டு நிகழ்வாக சோசலிசப் புரட்சியை கொண்டாடினார்கள்.
தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி விழா துவங்கியது.
காலை அமர்விற்கு பு.மா.இ.மு. தோழர் ஆனந்த் தலைமை தாங்கினார். அன்றைய ரசியாவின் நிலைமை, புரட்சியின் தேவை, புரட்சி உருவாக்கிய மாற்றங்கள், உலகெங்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சி உருவாக்கிய தாக்கம் ஆகியவற்றை விளக்கியும், ரசியப் புரட்சியை கொண்டாட வேண்டிய அவசியத்தையும் விளக்கி விழாவை துவக்கிவைத்தார்.
பின்னர் பறை இசையுடன் விழா துவங்கியது.
“நாம் கருப்பர், நமது மொழி தமிழ், நமது தாயகம் ஆப்பிரிக்கா” என்ற தா.கலையரசன் எழுதிய நூலை அறிமுகம் செய்து பேசினார் தோழர் அடைக்கலம். ‘உழைக்கும் வந்தேறி’களுக்கு எதிராக களமாடும் தமிழினவாதிகளுக்கு எதிரான ஆயுதமாக நூல் இருப்பதை விவரித்தார். தமிழனே தமிழ்நாட்டிற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்து ஏறியவன் தான் என்பதை நூலின் வழி நின்று விளக்கினார். தோழரின் உரை நூலை வாசிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக இருந்தது.
உசிலை பகுதியை சேர்ந்த தோழர் சோவியத், கடந்த காலங்களில் புரட்சிகர அமைப்புகள் தங்களது பகுதியில் நிகழ்த்திய போராட்டங்களையும், அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்கள், நம்பிக்கைகள் பற்றியும் பேசினார். டீசல் பதுக்கலுக்கு எதிராகப் போராடி, டீசலை பறிமுதல் செய்து மக்களிடையே விநியோகித்தது, யூரியா பதுக்கலை கைப்பற்றி விநியோகம் செய்தது, ஈழத்து கொலைகாரன் பாசிச ராஜீவ்காந்திக்கு கருப்புக்கொடி காட்டியது எனப் பல்வேறு போராட்ட அனுபவங்களை பகிர்ந்தார். அந்த நாளில் நாம் இல்லையே என்ற ஏக்கமும் பொறாமையும் பார்வையாளர்கள் முகங்களில் தெரிந்தது.
“மக்களுக்காக போராடும் நகர்ப்புற நக்சல்கள்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக மாநில செயலாளர் பேரா இரா.முரளி உரை நிகழ்த்தினார். பாசிச பா.ஜ.க., மோடி அரசு அறிவுத்துறையினர் மீது நடத்திவரும் அடக்குமுறைகள் பற்றியும், இத்தகைய அறிவுத்துறையினர் மீது பாசிசக் கும்பல் கொண்டுள்ள அச்சம் பற்றியும் விளக்கமாக எடுத்துக்கூறினார். மேலும், பாட்டாளி வர்க்க விடுதலைக்காக பாடுபடுவதுதான் அறிவுத்துறையினரின் லட்சியமாக இருக்க வேண்டும் எனபதையும் அழுத்தமாக எடுத்துரைத்தார்.
அடுத்ததாக தோழர் லயனல் அந்தோனிராஜ், புரட்சிகர போராட்டங்களில் ஈடுபடும்போது நம்மை பாதிக்கும் தயக்கம், அச்சம், ஊசலாட்டம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணங்கள் பற்றிய விவாதத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். விவாதம், தோழர்கள் மத்தியில் சுயபரிசீலனையை தூண்டியது என்றால் மிகையில்லை.
புரட்சிகர அரசியலும் புரட்சிகர அமைப்பும் என்ற தலைப்பில் பு.மா.இ.மு. தோழர் மருது, “மார்க்சியம் தான் சரியான விடுதலைத் தத்துவம் என்பதையும், அதனை எப்படி உள்வாங்கி அமல்படுத்துவது என்பது பற்றியும்” ஒரு சிறு வகுப்பு எடுத்தார்.
மதியம் மாட்டுக்கறி விருந்து, இளம் தோழர்களின் பட்டாசு கொண்டாட்டம் எல்லாம் முடிந்த பின், மதிய அமர்விற்கு தலைமை தாங்கிய ம.க.இ.க. மதுரை அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் முதலில் பறையிசை முழங்க தோழர்களை அழைத்தார். அது சுரண்டலுக்கெதிரான போர்ப் பறையாக ஓங்கி ஒலித்தது.
“மண உறவுக்கு வெளியே பெண்கள் பாலுறவு கொள்வது கிரிமினல் குற்றமல்ல என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும்” நடந்த விவாதத்தை தோழர் வாஞ்சிநாதன் ஒழுங்கமைத்தார். தோழர்கள் மத்தியில் நிலவும் பல்வேறு வகை ஆணாதிக்க கண்ணோட்டங்களை வெளிக்கொணர்ந்த விவாதம் சரியான புரிதலை நோக்கி இறுதி உரையில் பயணித்தது.
“லாபமே கடவுள்” என அணு முதல் அண்டம் வரை சூறையாடும் பன்னாட்டு கார்ப்பரேட் கொள்ளைக்காரர்களைப் பற்றியும் அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றியும், நமது கடமை என்ன என்பது பற்றியும் எளிமையாக விளக்கினார் ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன்.
நிகழ்வுகளுக்கு இடையிடையே, குழந்தைகளும், தோழர்களும் புரட்சிகர பாடல்களை பாடினர். தோழர் ரம்யா கவிதை வாசித்தார். பு.மா.இ.மு தோழர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த நாடகம் ஒன்று நிகழ்த்தினர்.
முழுக்கவும் வணிகம் நுகர்வு சார்ந்த ஆரிய தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மாற்றாக, புரட்சிகர உணர்வை ஊட்டுவதாக, சமூக அக்கறையை உருவாக்குவதாக எழுச்சியுடன் நவம்பர் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது.
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை.
*****
நெல்லையில்…
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஓரிரு வாரங்களுக்கு முன்னால், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரியும், வருகைக்குறைவு அபராதக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீசு புகுந்து தடியடி நடத்தி கலைத்தது.
இதனைத்தொடர்ந்து போலீசைக் கண்டித்து நெல்லை சட்டக் கல்லூரி, புனித சவேரியர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் பெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் “மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!” எனும் தலைப்பில், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் நவம்பர் புரட்சி தினம் பாளையங்கோட்டை ஏ.டி.எம்.எஸ் மஹாலில் கொண்டாடப்பட்டது.
விழாவை நெல்லை பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் சிவா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அவர் தன் தலைமையுரையில், இங்கு நமது நாட்டில் ஒரு நவம்பர் புரட்சியை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன என்பதை தனது பேச்சில் உணர்த்தினார்.
அடுத்து மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் அன்பு தன்னுடைய உரையில் நெல்லை பகுதியில் இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களில் மாணவர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு அந்த போராட்டத்தை வலிமையாக நடத்தியது என்பதை விளக்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த நாட்டில், கால்வயிற்றுக் கஞ்சிக் கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் வாடும் இந்த நாட்டில் 3000 கோடிக்கு சிலை வைக்கிறார்கள்.
தொழிலாளர்கள் எங்களை கழிப்பறை செல்லக் கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று போராடுகிறார்கள். ஆனால் சோவியத் யூனியனில் ஆறு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வது சட்ட விரோதம் என அறிவித்தார்கள் என்று ஒப்பிட்டு மாணவர்கள் பெருமளவில் இந்த சமூக சீர்கேடுகளை கண்டித்து போலீசுக்கு அஞ்சாமல் போராட முன்வர வேண்டும் என்று பேசினார்.
அடுத்து பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர் அமுதன், இன்றைய மாணவர்களின் நிலை எப்படி இருக்கிறது? பல்கலைக் கழகங்கள் எப்படி ஊழல் மலிந்ததாக இருக்கின்றன, சாதியக் கூடாரங்களாக இருக்கின்றன, சீரழிந்து போய் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இதற்கு மாறாக சோவியத் யூனியனில் உயர்கல்வி வரையில் இலவசக் கல்வி, அனைவருக்கும் வேலை போன்றவை மக்கள் உரிமை ஆக்கப்பட்டிருந்தன. எனவே, அது போன்ற நிலையை இங்கும் ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்
அடுத்ததாக இளந்தோழர் வைகுந்தன் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாடப்பட்ட பாடலான தமிழா, தமிழா பாடலை பாடியது அனைவருக்கும் உற்சாகமளிப்பதாக இருந்தது.
இதனையடுத்து, தோழர் நாகராஜன் சிறப்புரையாற்றினார். விவசாயத்தின் அழிவு தொடங்கி, ஒக்கி புயலின் போது அரசு நடந்து கொண்ட முறை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற அழிவுத் திட்டங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது உள்ளிட்ட பல அரசின் நாசகாரத் திட்டங்களையும் இவற்றின் பாதிப்புகளிலிருந்து விடுபட புரட்சி ஒன்றே மாற்று என்பதை எளிமையாக விளக்கி உரையாற்றினார்.
தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர் கிங்சன் நன்றியரை கூற விழா நிறைவுற்றது.
தீபாவளி விடுமுறைக்காக மாணவர்கள் சொந்த ஊர் சென்றிருந்தது, தேர்வு கால படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கடந்து மாணவர்கள் அதிகமாக கலந்து கொண்டது தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதாக இருந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் ரஷ்யப் புரட்சியின் வீச்சையும், சோவியத் யூனியன் எவ்வாறு மக்களின் வாழ்வை உறுதிப்படுத்தியது என்பதையும் உணர்த்தி உற்சாகப்படுத்தியது.
சோவியத் யூனியனின் சாதனைகளை விளக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிப் படங்கள் :
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெல்லை.
*****
கிருஷ்ணகிரி : போலீசின் தடையை உடைத்து வானில் பறந்த செங்கொடி !

இந்த ஆண்டும் நாட்றாம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றி, இனிப்பு வழங்குவதற்கான ஏற்பாட்டு வேலைகள் செய்துக் கொண்டு இருந்தோம். அப்போது அஞ்செட்டி போலீசு நிலையத்தில் இருந்து வந்த 10 -க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் உளவுப் பிரிவினர். கொடியேற்றக் கூடாது, இதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கொடியேற்றும் வேலையை தோழர்கள் செய்துக்கொண்டு இருக்க, என்ன முடிவு என்று ஆய்வாளர் தோழர்களை தொந்தரவு செய்தனர். மீண்டும் மீண்டும் வந்து எப்படியாவது தடுத்தே தீரவேண்டும், என்ற வகையில் போலீசார் செயல்பட்டனர். எவ்வளவு முயன்றும் பயனளிக்கவில்லை என்பதை உணர்ந்த போலீசார், ”சரி முழக்கம் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.
