நண்பர்களே….

1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி (தஞ்சை வரலாறு)
சரபோஜி மன்னரின் (1777-1832) நெருங்கிய தோழரும் சரபோஜியை உருவாக்கிய சுவாட்ர்ஸ் பாதிரியாரின் வளர்ப்புச் சீடரும் தமிழ்நாட்டு ப்ராட்ஸ்டன்டு கிறிஸ்தவர்கள், தேவாலயங்களில் துதிப் பாடல்களைப் பாடுவதற்கு தமிழில் முதல்முதலாக பாடல்களை இயற்றி தந்து புகழ்பெற்று இருந்தவரான தஞ்சை வேதநாயக சாஸ்திரியாரால் (1774-1864) தமிழறிஞர் ஜி.யூ.போப் தஞ்சையிலிருந்து விரட்டப்பட்டதாக வரலாறு உண்டு. இதைப் பற்றி வேதநாயக சாஸ்திரியாரே “ஜி.யூ.போப் உபத்ரா உபத்திரவம்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.
அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரிமார்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் சாதிவேறுபாடு காட்டக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர். ( அந்தத் தீர்மானத்தின் குறிப்பை பதிவின் படத்தில் தந்துள்ளேன்.) கூடுதலாக கிறிஸ்தவர்களான தாழ்த்தப்பட்டவர்களால் வழங்கப்படும் உணவையும் உண்ண வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்தி இருக்கின்றது.
படிக்க:
♦ கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
♦ இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!
கிறிஸ்தவ மதத்தில் சாதி வேறுபாடு பார்க்கக்கூடாது என்ற இந்தப் போக்கை வேதநாயக சாஸ்திரியார் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே ஜி.யூ.போப் பாதிரியாராகப் பணிபுரிந்த தேவாலயத்தில் வேதநாயக சாஸ்திரியாரின் பாடல்களைப் பாடக்கூடாது என்று தடைவிதித்து இருக்கின்றார் (தஞ்சையில் உள்ள அந்த தேவாலயம் வேதநாயக சாஸ்திரியாரின் வீட்டிற்கு எதிரில் இன்றும் உள்ளது. அந்தத் தெருவின் பெயர் மிஷன் தெரு). இந்தப் பிரச்சினை உண்டாக்கிய மனத்துயரினால் ஜி.யூ.போப் தஞ்சை செயிண்ட் பீட்டர் கல்லூரியின் (அந்தக் காலத்தில் இந்தப் பள்ளி கல்லூரி என்று அழைக்கப்பட்டது) தலைமைப் பொறுப்பில் இருந்தும் தேவாலயத்தின் பொறுப்பிலிருந்தும் விடுபட்டு தஞ்சையை விட்டே சென்று விடுகிறார்.
“தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான சரித்திரம்” என்ற இந்த நூலில் உள்ள ஒருசில சுவையான செய்திகளை இந்தப் பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். இவை போன்ற பல அரிய சுவையான வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது. அ.மாதவையாவின் புகழ்பெற்ற நாவலான “கிளாரிந்தா”வின் கதாநாயகியும் பிராமணராகப் பிறந்து கிறிஸ்தவராக மாறி முதல்முதலாக திருநெல்வேலியில் கிறிஸ்தவத் தொண்டு செய்த கிளாரிந்தா அம்மையாரைப் பற்றியும் அவருடைய கணவரைப் பற்றியும் அவருக்கு ஞானஸ்தானம் வழங்கிய சுவாட்ர்ஸ் பாதிரியாரைப் பற்றியும் பல சுவையான வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை நீங்கள் படிக்க விரும்புவீர்கள் என்ற எண்ணத்துடன் இந்நூலின் இணைப்பைத் தந்துள்ளேன்.
தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான சரித்திரம்
பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
- பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
- கோவில் நிலம் சாதி
- பொய்யும் வழுவும்