தமிழகத்தை மிரட்டிய கஜா புயலின் சீற்றம் தற்போது குறைந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் அதன் பாதை மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (13.11.2018) மாலை 2:14 மணிக்கு அவரது முகநூல் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதிவின் தமிழாக்கம்:
கஜா புயல் பாண்டிச்சேரி/கடலூர் – நாகை/வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே வலுவிழந்த புயலாக கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த நேரத்திலும் புயலின் வடமேற்கு நகர்வு நின்று, தென்மேற்கு நோக்கிய சரிவு விரைவில் தொடங்கும். புயலின் தடம் மாற்றும் உயர் காற்றழுத்த மண்டலத்தின் மாற்றத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் மேலும் நகர்ந்திருப்பதால், நவம்பர் 15 அன்று நண்பகலிலிருந்து இரவுக்குள் மணிக்கு 60 முதல் 80 கிமீ வேகத்தில் கடலூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கரை கடக்கும் என எதிர்பார்க்கலாம். ஆகவே இது வலுவான புயல் அல்ல என்பது தெளிவு. புயல் கரைகடக்கும் பகுதிகளில் கன மழையோ, வெகு கன மழையோ பொழியக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரையில் நவம்பர் 14 அன்று இரவு அல்லது நவம்பர் 15 காலையில் தொடங்கி நல்ல மழைப் பொழிவு இருக்கும். ஆனால் ”தொழில் தொடர்ச்சித் திட்டமிடல்” தேவைப்படும் அளவுக்கு அச்சுறுத்தக்கூடிய மழை அல்ல. புயல் அரபிக் கடலுக்கு நகர்ந்த பின்னர், புயலுக்குப் பிறகான மழைப்பொழிவு நவம்பர் 16-17 தேதிகளில் இருக்கும். அடுத்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வங்கக்கடலில் நவம்பர் 19-20 தேதிகளில் தொடங்கும்.
மேலும் தகவல்கள் வரவிருக்கின்றன.
******
இன்று (13-11-2018) காலை 09.00 மணியளவில் வெளியான பதிவிலிருந்து ஒரு சிறு பகுதி:
கஜா கடக்கும் பாதையில் உள்ள பகுதிகளில் வெகு கனமழை பொழியும். தமிழகத்தின் தென் மற்றும் உள் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளிலும் கடும் மழை பொழிய வாய்ப்பிருக்கிறது. காற்று மணிக்கு 60-80 கிமீ வேகத்தில் வீசும். வர்தா அல்லது தானே புயலைப் போல வலுவாக இருக்காது
காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் அடுத்த 15 நாட்கள் பரபரப்பான நாட்களாக இருக்கும்.
குறிப்பு: இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட பார்வைகளே – வழிப்பாதையும், கரை கடக்கும் பகுதியும் அதிகாரப்பூர்வ நிறுவனத்தின் விவரங்களிலுருந்து மாறுபட்டிருக்கின்றன. நிர்வாகக் காரணங்களுக்கு அதிகாரப்பூர்வ நிறுவனத்தைப் பின்தொடரவும்.
தமிழாக்கம்:

நன்றி: Tamil Nadu Weatherman