ஞ்சை டெல்டா மாவட்டங்களில் விவசாயம் என்றதும் நமது நினைவுக்கு வருவது நெற்பயிற்தான். ஆனால் இந்த கஜா புயலின் தாண்டவத்துக்குப் பின்னர்தான் இங்கு நடக்கும் தென்னை விவசாயம் பலருக்கும் தெரிய வந்துள்ளது. நம்ப முடியாத காவிரி ஆற்று தண்ணீர், விளைவித்தாலும் விலை போகாத நெற்பயிர், காசு கிடைக்காத கரும்பு என இப்பகுதி விவசாயிகள் தென்னையை நோக்கி நெட்டித் தள்ளப்படுகின்றனர்.

இவர்களை ஏதோ ஒரு வகையில் விவசாயத்தில் இருத்து பிடித்து வைத்திருப்பதில் தென்னைக்கும், கடலைக்கும் ஒரு பங்கு உண்டு. அதேபோல கடந்த 20 ஆண்டுகளில் இப்பகுதி விவசாயிகள் மரவள்ளி கிழங்கையும் பரவலாக பயிரிட்டு வருகின்றனர்.

கருவக்குறிச்சி பகுதியைப் பொருத்தவரை இளைஞர்கள் பலரும் கடன் வாங்கி வெளிநாடுகளுக்குச் சென்று, அதிலும் குறிப்பாக சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடும் உழைப்பு கோரும் கட்டிட வேலை போன்ற வேலைகளுக்குச் சென்று சில ஆண்டுகள் உழைத்து இங்கு வந்து தென்னை விவசாயம் மேற்கொள்கின்றனர். தற்போது தென்னந்தோப்புகளும் விலையேறிப் போனதால், புதிதாக தலையெடுக்கும் விவசாயிகளால் அதையும் செய்ய முடிவதில்லை. இவர்களுக்கு தற்போதுள்ள மாற்றுப் பயிர் மரவள்ளியாகத் தான் உள்ளது.

தஞ்சை மாவட்டம் கருவாக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் மரவள்ளி பயிர் செய்யப்பட்டுள்ளது. இது பத்துமாத பயிர். நிலத்தை பண்படுத்துவது தொடங்கி மீண்டும் நிலத்தை அறுவடைக்குப் பின் சரி செய்வதுவரை, கிட்டத்தட்ட ஒருவருடம் இதில் உழைப்பு செலுத்த வேண்டியுள்ளது. இதனைப் பதியமிட்டு விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் வருமானம் இருக்காது. அச்செலவீனங்களை ஈடுகட்ட அதனுடன் ஊடுபயிராக வேர்கடலை பயிரிடுகின்றனர். இவ்வாறு ஏதோ ஒருவகையில் விவசாயத்தை இப்பகுதி மக்கள் விடாப்பிடியாக செய்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தின் சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் மரவள்ளி சாகுபடி அதிகம் என்பதால் இந்தக் கிழங்குகளை இப்பகுதிக்கு வந்து சேலம் மாவட்ட வியாபாரிகள் தான் வாங்கிச் செல்கின்றனர். தற்போது ஏதாவது கைகொடுக்கும் என பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களையும் கூட இந்த கஜா புயல் நிலைகுலைத்துப் போட்டுள்ளது.

இந்த நிலையில்தான் கருவாக்குறிச்சி பகுதியில் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ள ரவிச்சந்திரன் என்பவரைப் பார்த்தோம்.

அவரும் அப்பகுதி விவசாயிகளைப் போன்றே கடந்த இரு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு கடந்த ஆண்டுதான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பே அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை நான்கு இலட்சத்துக்கு ஒத்திக்கு (லீசுக்கு) விட்டுள்ளனர். தற்போது சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு அதில் சேமித்த பணத்தை வைத்து நிலத்தின் ஒருபகுதியை மீட்டு அதில் மரவள்ளி போட்டுள்ளார். அதிலிருந்து வரும் வருமானத்தில் வாங்கிய கடனை அடைத்து மீண்டும் சில காலம் வெளிநாடு சென்று சம்பாதித்து நிலத்தை முழுவதுமாக மீட்கலாம் என்ற கனவோடு வந்துள்ளார். தற்போது அவரின் கனவில் மண்ணை வாரி இறைத்துள்ளத்துள்ளது கஜா புயல்.

“தாய் தகப்பன விட்டு, பொண்டாட்டி புள்ளைகள பாக்காம சிங்கப்பூரு போயி கொஞ்ச நஞ்சம் சேத்து வெச்சி. இங்கே.. வந்து ஏதாவது பன்னலாமுன்னு பாத்தா இப்ப இந்த புயல் வந்து எல்லாத்தயும் கெடுத்துடுச்சி. இந்த வருசம் நல்லாவே கிழங்கு புடிச்சிது. ஆனா நமக்கு கட்டுபடியாகுற வெல கிடைக்கல. சரி கொஞ்சம் காத்திருந்து வெல கிடைக்கும்போது இத வித்துடலாமுன்னு பாத்தா எல்லாம் வீணாயிடும் போலருக்கு சார்…”

புயலால தென்னை போன்ற மரங்களுக்குதானே அதிக பாதிப்பு, மரவள்ளிக்கு எப்படி இழப்பு..?

“ஆமாங்க இங்கே.. தென்ன முழுசா போச்சி… ரொம்ப பெரிய பாதிப்புதான். அதே போல மரவள்ளியும் பாதிச்சி இருக்கு. இது மேலாப்புல.. வேர் வச்சி கொஞ்சத்துலேயே கெழங்கு புடிக்குங்க.. அதனால அடிச்ச காத்துக்கு அப்புடியே பெறட்டிகிட்டு கெழங்கெல்லாம் வெளிய வந்து நிக்குது. இது இப்புடி வெளிய வந்தா சீக்கிரமே கெட்டு போயிடும். பெறவு வெல கெடைக்காது.. எல்லாம் வீண்தான்.”

சரிங்க பொதுவா கிழங்கு கொஞ்சம் தாங்குமே… என வாயெடுத்த உடனே “கிழங்கு பொருத்தவரை தாக்குபுடிக்கும்தான் ஆனா இந்த வருசம் வெல சரியா இல்லாம முன்னாடியே புடுங்கி ஏத்தி இருக்க வேண்டியது தள்ளி போச்சி. இப்ப வெளிய நீட்டிட்டு இருக்கிற கெழங்க காவந்து பன்றதே ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஆடு, மாடு வந்தா மேஞ்சி நாசமாக்கிடும். ஏன்னா இது அதுகளுக்கு ரொம்ப புடிக்கும். நாங்களே கழிச்சி போடுற கெழங்குகள மாட்டுக்குத்தான் போடுரோம். நல்ல பால் சுரக்கும். அதே போல எலி, அணில்னு எல்லாம் சேந்துச்சுன்னா மொத்தமும் நட்டம் தான். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எப்புடியாவுது இத ஏத்தலன்னா எல்லாம் பாழ்தான்”

சரி இத எப்புடி நீங்க விக்குறீங்க.. இங்கயே பக்கத்துல சந்தைகள் உண்டா?

“இத பொருத்தவரைக்கும் இங்க எதும் எங்களால விக்க முடியாது. எதாவது சும்மா யாராச்சும் கேட்டா கொஞ்சங் குடுக்க முடியும். மத்தபடி இதுக்கு சேலம் ஆத்தூர் பக்கத்துல இருந்துதான் வியாபாரிங்க வருவாங்க. அங்கதான் கெழங்கு மாவு ஆலைங்க இருக்கு.. அது இல்லாம அங்க இருந்துதான் கேரளாவுக்கு சிப்ஸ் போட போகுது. அந்த சிப்ஸ் வெளிநாடுகளுக்கு போகும். அதுவும் கூட வியாபாரிங்க இங்க வந்து அவுங்களுக்கு கட்டுபடியாகுற வெலக்கிதான் வாங்கிட்டு போவாங்க.”

நீங்க எவ்வளவு ஏக்கர் இந்த மரவள்ளி போட்டு இருக்கீங்க?

“நம்மள்து 3 ½ ஏக்கர் போட்டு இருக்கோம்.”

அதுல இருந்து எவ்வளவு கிழங்கு கெடைக்கும்.. எவ்ளோ வருமானம் வரும்?

“சார் இந்த கெழங்கு போட சுமார் 70,000/- செலவு ஆகும். ஒருவருச வேல.. சுமாரா நம்ம நெலத்துல மட்டும் ஐம்பது டன்னுக்கு நெருக்கமா வரும். அதுக்கு ஏத்தமாதிரி ஒரு டன்னுக்கு 5,000 ரூபா வெல போச்சின்னா அது நல்ல வருமானம்னு சொல்லலாம்ங்க.. இப்ப 4,000-க்கு கூட யாரும் வியாவாரிங்க வரமாட்டேங்குறாங்க. இப்ப இந்த புயல் பாதிப்பால வியாபாரிங்க இன்னும் அடிமட்ட ரேட்டுக்கு கேப்பாங்க. சரி முழுக்க நட்டமா போறதுக்கு ஏதாவது வந்த வெலைக்கு தள்ளலாம்முன்னு பாத்தாகூட வியாபாரிங்க வரதுக்கு இன்னும் எத்தன நாளாகுமுன்னு தெரியலங்க.

நெலத்த உழுது பக்குவப்படுத்துறது, பதியம் போடுறது, பாத்தி கட்டுறது, மருந்தடிப்பது, அப்புறம் கெழங்கு புடுங்குறது, ஏத்துகூலி இதெல்லாம் இருக்கு அதுமட்டுமில்ல புடுங்கி போட்ட பின்ன இந்த குச்சியெல்லாம் ஏறகட்டனும் அதுக்கு ஆளு கூலி. இப்புடி ஒரு எழுபது எழுபத்தஞ்சு ரூபா (ரூ. 70,000 முதல் 75,000 வரை) செலவு வந்துடும். இப்புடி இருக்கும் போது டன் ஐயாயிரம் கெடச்சா 50 டன்னுக்கு ரெண்டரை லச்சம் வரும். அதுல செலவக் கழிச்சா எவ்வளவு வரும்முன்னு பாருங்க.

படிக்க:
சரிந்தது தென்னை மரங்கள் மட்டுமல்ல – ஒரு தலைமுறை உழைப்பும்தான் ! நேரடி ரிப்போர்ட் !
எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !

ஒரு ஒன்னு எண்பது (ரூ 1,80,000) வரும்.. அத மாசமுன்னு பிரிச்சா 15,000/- ரூபாதான் வரும் இதுக்கே எங்க அப்பா, சம்சாரம் எல்லாரும் வேல பாக்கணும். இதுலதான் ஒரு வருசத்துக்கு குடும்ப செலவ பாக்கணும் பொறவு நல்லது கெட்டது செய்யனும் இது எல்லாத்துக்கு கடன் வாங்கணும். அது எல்லாம் இத நம்பிதான் கணக்கு பண்ணி இருப்போம்.

இதுதான் வருசாவருசம் எங்க நெலமையா இருக்கு. வெளிநாட்டுக்கு போயி ஏதாவது கொஞ்சம் சேத்துட்டு வந்தாதா பரவால்லாம இருக்கு அதுவும் கடன குடுக்கறதுக்கு பத்தாம தான் இருந்துட்டு வந்தது ‘ஏதோ ஓங்கி அடிக்கிறத கொஞ்சம் தாங்கி புடிக்கிறதா’ இருந்துச்சி இந்த மரவள்ளி கிழங்கு. இந்தவருசம் அதுவும் போச்சி…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க