தென்னை நார் தொழில் மட்டுமில்ல, தென்னந்தோப்புக்கும் சொந்தக்காரர் ரவீந்திரன். சுமார் முப்பத்தி ஐந்து வருடங்களாக தென்னை விவசாயம் செய்து வருகிறார். தோப்பிற்கு அருகிலேயே சிறு நார் தொழிற்சாலை வைத்திருக்கிறார்.

“டெல்டா மாவட்டம் இருபத்தி ஐந்து ஆண்டு பின்னோக்கி சென்று விட்டது. பட்டுக்கோட்டை வட்டாரம் முழுவதும் 75 சதவீதம் தென்னை அழிந்து விட்டது. பத்து ஆண்டு உழைப்புக்கு பிறகு உருவாக்கிய செல்வம், திரும்ப உருவாக்குவது சாமானியப்பட்டது கிடையாது. ஒரு மரத்துக்கு ஒரு லட்சம் கொடுத்தாலும் ஈடாகாது. என்னிடம் தினந்தோறும் முப்பது பேர் வேலை செய்யிறாங்க. அவர்களோட வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறிதான். இப்ப இருக்க மரத்தை அப்புறப்படுத்தவே ஒரு மரத்துக்கு 750 ரூபா கேக்குறாங்க. அதனால தோப்பையே போயிட்டு பாக்கல.

இந்த தென்னை மட்டும் என்னோட இன்னொரு ஆண் புள்ள மாதிரி.  முன்னூறு மரம் ஒரு ஆம்பளைக்கு சமம். அந்த அளவுக்கு வாழ்நாள் முழுக்க உழச்சி போட்டுகிட்டே இருக்கும். அதனை எந்த நிவாரணத்தாலும் ஈடுகட்ட முடியாது.

நான் இந்த தென்னை விவசாயத்துக்கு மாறினதே வேலைக்கு ஆளு கிடைக்காததால தான். இதனால இழப்பு எதுவும் இல்ல. இலாபம் மட்டும்தான்.  மத்தவங்க ஒவ்வொரு வெட்டுக்கும் செலவு பன்னுவாங்க. மருந்து போடுவாங்க. நான் அப்படி எதுவும் பன்ன மாட்டேன். முதல் வெட்டுக்கு மருந்து போடுவேன். அதோட சரி!  ஒரு விவசாயி, தேங்காயில் மட்டும்தான் இலட்சத்தை பார்ப்பான். வேற எந்த பயிர்லயும் இது சாத்தியமே இல்ல.

ஒரு ஏக்கருக்கு 2000 காய். அறுபது நாட்களுக்கு ஒரு முறைதான் வெட்டு. அப்படியே மேரிக்கோ கம்பனி வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. கொப்பரை எல்லாம் 70 சதவீதம் ஆயிலுக்கு வாங்கிப்பாங்க. 30 சதவீதம் விற்பனைக்கு போயிடும்.  பட்டுக்கோட்டையிலதான் தேங்காய் நல்ல வளர்ச்சி. ஆனா பேராவூரணி காய்தான் நல்ல வளர்ச்சின்னு சொல்லுவாங்க. இந்த காயை கொண்டு போயிட்டு தான் அங்கேயே விக்குறாங்க. ஆனா அந்த காயை இங்க கொண்டு வந்து வித்தா கம்மி விலைக்குதான் வாங்குவாங்க.

இந்த தேங்காயை உரிச்சதும், தோலை என்னோட பயன்பாட்டுக்கே வச்சிப்பேன். இருபத்தி அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி இந்த மில்ல தொடங்கினேன். இப்ப வரைக்கும் போயிட்டு தான் இருக்கு. இனிமே போகுமான்னு தெரியல. மட்டகிட்ட எதுவும் கிடைக்காது. இப்பவே ஒரு மட்டை 2 ரூபாய்க்கு எடுக்கிறேன்.

ஒரு நாளைக்கு 15,000 மட்டை அடிப்பார்கள். அதற்கு பத்து ஆட்கள் தேவைப்படும். அடித்து காய வைக்க வேண்டும்.  10,000 மட்டையை அடிச்சிங்கன்னா 18 கட்டு பைபர் வரும். ஒரு கட்டு 35 கிலோ. வெள்ளை பைபர் 800 ரூபாய்க்கு விக்குறேன். கருப்பு பைபர் வெறும் 600-க்குதான் போகும்.  மட்டை எங்க தோப்பு மட்டுமில்லாம வெளி தோப்புல காசாங்காடு, நாட்டுச்சாலை, அத்திக்கோட்டை போன்ற எடத்துல இருந்து வாங்கிட்டு வருவேன். ஒரு வாரத்துக்கு 2 இலட்சம் மட்டை வாங்குவேன்.

இப்படி ஒரு அழிவு ஏற்பட்டதால இனிமே இந்தத் தொழிலை நடத்த முடியாது.  இதனை நம்பி இருக்கும் தொழிலாளியின் வாழ்க்கை கேள்விக்குறிதான். முக்கியமா இதுக்கான மட்டை கிடைக்கவே கஷ்டமாகிடும். அப்படியே கெடச்சாலும் விலையும் அதிகமாகிடும். அப்புறம் நாறோட விலையும் அதிகமாகிடும். விலை அதிகமாச்சினா மக்கள் வாங்க மாட்டாங்க. இது அந்த அளவுக்கு முக்கியத்தும் இல்ல. இயற்கையான கயிறு அவ்ளோதான்.

படிக்க:
சரிந்தது தென்னை மரங்கள் மட்டுமல்ல – ஒரு தலைமுறை உழைப்பும்தான் ! நேரடி ரிப்போர்ட் !
தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !

எனக்கு 8 ஸ்பின்னிங் மிஷின் இருக்கு. இது வரைக்கும் இருபது குடும்பம் இந்த தொழிலை நம்பி வேலை பார்த்திட்டு இருக்கு.  என்னோடது  மட்டுமில்லாம அவர்களோட வாழ்வாதாரமும் சேர்ந்து போயிடுச்சேன்னுதான் வேதனையா இருக்கு. இதனை அரசிடம் எப்படி கேட்பது என்று தெரியவில்லை. இனிமே இந்த வாழ்க்கையை திரும்ப பூஜ்ஜியத்துல இருந்துதான் ஆரம்பிக்கனும்.

தஞ்சை பட்டுக்கோட்டை ஏரியாவில் மட்டும் நாற்பது கம்பனி உள்ளது. இந்த பெல்டில் உள்ள அனைவருக்குமே கடுமையான பாதிப்பு. அழிந்து விட்டார்கள். இவ்ளோ நாள் புள்ளைங்க பிரைவேட் பள்ளியில படிச்சாங்க. இனிமே அரசுப்பள்ளிக்கு மாத்திடனும். இல்லயா வெளிநாட்டுக்கு ஓடனும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க