மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 27

அவள் வெளியே வந்தபோது, எங்கு பார்த்தாலும் அவள் எதிர்பார்த்த இரைச்சல், உத்வேகமயமான ஜனங்களின் கூச்சல் நிறைந்து ஒலித்தது. வாசல் நடைகளிலும், ஜன்னல்களிலும் கூட்டம் கூட்டமாக நின்றவாறு பாவெலையும் அந்திரேயையும் ஜனங்கள் ஆவல் நிறைந்த கண்களுடன் பார்ப்பதைக் கண்டதும் அவளது கண்கள் இருண்டு, அந்த இருளில் ஏதோ ஒரு புது நிற ஒளி நிழலிட்டு ஆடுவது போல் அவளுக்குத் தோன்றியது.
ஜனங்கள் அவர்களோடு குசலம் விசாரித்துக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் அன்று சேமம் விசாரித்த பாவனையில் ஏதோ ஒரு புதிய அர்த்தம் பொதிந்திருப்பதாகத் தோன்றியது. அவர்கள் அமைதியோடு சொன்ன வார்த்தைகள் அவள் காதில் அரை குறையாக விழுந்தன.
“அதோ, தலைவர்கள் போகிறார்கள்.”
”நமக்குத் தலைவர்கள் யாரென்றே தெரியாது.”
“நான் ஒன்றும் தப்பாய்ச் சொல்லவில்லையே.”
வேறொரு வாசலிலிருந்து யாரோ உரக்கச் சத்தமிட்டுச் சொன்னார்கள்:
“போலீஸார் அவர்களைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்; அத்துடன் அவர்கள் தொலைந்தார்கள்”
“அவர்கள்தான் ஏற்கெனவே இவர்களைக் கொண்டு போனார்களே!’
ஒரு பெண்ணின் அழுகுரல் ஜன்னல் வழியாகப் பாய்ந்து வந்து தெருவில் எதிரொலித்தது.
”நீ செய்யப்போகிற காரியத்தை யோசித்துப்பார். நீ ஒன்றும் கல்யாணமாகாத தனிக்கட்டைப் பிரம்மச்சாரியில்லை!”
அவர்கள் அந்த நொண்டி ஜோசிமவ் வீட்டின் முன்பாகச் சென்றார்கள். ஜோசிமவ் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காலை முறித்துக் கொண்டுவிட்டான். அதிலிருந்து அவன் நொண்டியாய்ப் போனான்; தொழிற்சாலை மாதாமாதம் அவனுக்குக் கொடுக்கும் ஓய்வுச் சம்பளத்தில் காலம் தள்ளி வருபவன் அவன்.
”பாவெல்!” என்று தன் தலையை ஜன்னல் வழியாக வெளியே நீட்டிக்கொண்டு கத்தினான் அவன். “அடே போக்கிரி அவர்கள் உன் கழுத்தை முறித்து விடுவார்களடா. உனக்கு என்ன நேரப் போகிறது பார்!”
தாய் ஒரு கணம் நடுநடுங்கி, பிரமையடித்து நின்றாள். அவள் உள்ளத்தில் கூர்மையான கோப உணர்ச்சி ஒரு கணம் ஊடுருவிச் சென்றது. அவள் அந்த நொண்டியின் கொழுத்துத் தொள தொளத்த முகத்தைப் பார்த்தாள். அவன் ஏதோ திட்டிவிட்டு தலையை உள்ளே இழுத்துக்கொண்டான். அவள் வெகு வேகமாக நடந்து சென்று தன் மகனை எட்டிப் பிடித்தாள். அவனுக்குப் பின்னாலேயே நடந்தாள். கொஞ்சம் கூடப் பிந்தாமல் நடக்க முயன்றாள்.
பாவெலும் அந்திரேயும் எதைப்பற்றியும் கவலை கொண்டதாகவோ கவனித்ததாகவோ தெரியவில்லை. அவர்களைக் குறித்துச் சொல்லப்படும் பேச்சுக்கள் கூட அவர்கள் காதில் விழவில்லை. அவர்கள் அமைதியாகவும் அவசரமில்லாமலும் நடந்து சென்றார்கள். போகும் வழியில் அவர்களை மிரோனவ் நிறுத்தினான். அவன் ஒரு அடக்கமான மத்திம வயது ஆசாமி. அவனது நேர்மையும் நாணயமும் பொருந்திய வாழ்வினால் எல்லோரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்தான்.
”நீங்கள் கூட வேலைக்குப் போகவில்லையா. தனீலோ இவானவிச்?” என்று கேட்டான் பாவெல் .
“இல்லை. என் மனைவிக்கு இது பிரசவ நேரம். மேலும், எல்லோரும் இப்படி உற்சாகமாயிருக்கிற நாளிலே….” அவன் தனது தோழர்களை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டுத் தணிந்த குரலில் சொன்னான்.
”நீங்கள் இன்று தொழிற்சாலை மானேஜருக்கு ஏதோ தொந்தரவு கொடுக்கப் போவதாக, சில ஜன்னல்களை உடைத்தெறியப் போவதாக, பேச்சு நடமாடுகிறதே. உண்மைதானா?” என்று கேட்டான்.
”நாங்கள் ஒன்றும் குடிகாரர்களில்லையே” என்றான் பாவெல்.
”நாங்கள் வெறுமனே தெருவழியே அணிவகுத்துச் செல்லுவோம். கொடிகளைத் தாங்கிக் கொண்டும், பாட்டுக்களைப் பாடிக்கொண்டும் செல்லத்தான் உத்தேசம்” என்றான் ஹஹோல். ”நீங்கள் எங்கள் பாட்டுக்களைக் கேளுங்கள். அதுதான் எங்கள் நம்பிக்கையின், கொள்கையின் குரல்!”
“உங்கள் கொள்கையெல்லாம் எனக்குத் தெரியும் என்று ஏதோ சிந்தித்தவாறே சொன்னான் மிரோனவ். ”பிறகு நான்தான் எங்கள் பத்திரிகைகளைப் படிக்கிறேனே. ஆ! பெலகேயா நீலவ்னா! நீயுமா?’ என்று தாயைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு சத்தமிட்டான்; “நீயுமா இந்தப் புரட்சியில் கலந்துவிட்டாய்?”
“சாவதற்கு முன்னால் நான் ஒரு முறையேனும் சத்தியத்தோடு அணி வகுத்துச் செல்ல வேண்டும்!”
”அடி சக்கை! ஆனால், நீதான் தொழிற்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பிரசுரங்களைக் கொண்டு வந்தாய் என்று அவர்கள் சொல்லிக் கொள்வது உண்மை என்றுதான் தோன்றுகிறது.”
“யார் அப்படிச் சொன்னது?” என்று கேட்டான் பாவெல்.
“ஹம். அவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். சரி, நான் வருகிறேன். நீங்கள் கட்டுப்பாடோடு நடந்து கொள்ளுங்கள்.”
தாய் அமைதியோடு புன்னகை புரிந்தாள். அவர்கள் தன்னைப்பற்று அப்படிப் பேசிக் கொண்டார்கள் என்பதைக் கேட்பதற்கு அவளுக்கு ஆனந்தமாயிருந்தது.
“நீயும் கூடச் சிறைக்குப் போவாய், அம்மா!” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். பாவெல்.
சூரியன் மேலெழுந்தது. வசந்த பருவத்தின் புதுமையிலே தனது கதகதப்பைப் பொழியத் தொடங்கியது. மேகங்கள் கலைந்து போய்விட்டன. அவற்றின் நிழல்கள் தெளிவற்று உலைந்து போய்விட்டன. மேகங்கள் தெருவுக்கு மேலாக மெதுவாக நகர்ந்து. வீட்டுக் கூரைகள் மீதும், மனிதர்கள் மீதும் தவழ்ந்து. அந்தக் குடியிருப்பு முழுவதையுமே தூசி தும்பு இல்லாமல் துடைத்துச் சுத்தப்படுத்துவது போலவும், மக்களது முகங்களில் காணப்பட்ட சோர்வையும் களைப்பையும் நீக்கிக் களைத்துவிடுவது போலவும் தோன்றியது. எல்லாமே ஒரே குதூகலமயமாய்த் தோன்றியது. குரல்கள் பலத்து ஒலித்தன; ஆலையின் யந்திர ஒலத்தை மக்கள் ஆரவாரக் குரல்கள் அமுங்கடித்து விழுங்கிவிட்டன
மீண்டும் ஜன்னல்களிலிருந்தும் வாயிற் புறங்களிலிருந்தும் ஜனங்கள் பேசிக்கொள்ளும் பல்வேறு பேச்சுக்கள் தாயின் காதில் விழத்தொடங்கின. அந்தப் பேச்சுக்களில் சில விஷம் தோய்ந்ததாகவும், பயமுறுத்துவதாயும் இருந்தன. சில உற்சாகமும் சிந்தனையும் நிறைந்து ஒலித்தன. ஆனால் இந்தத் தடவை அவளுக்கு அந்தப் பேச்சுக்களை வெறுமனே கேட்டுக்கொண்டு மட்டும் போக முடியவில்லை. அந்தந்தப் பேச்சுக்குத் தக்கவாறு எதிருரை கூறவும் விளக்கவும், வந்தனம் கூறவும் விரும்பினாள் அவள். பொதுவாக அன்றைய தினத்தின் பல்வேறான வாழ்க்கை அம்சங்களிலேயும் அவள் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினாள்.
ஒரு சின்னச் சந்து திரும்பும் மூலையில் சுமார் நூறு பேர்கள் கூடி நின்றார்கள். அவர்களுக்கு மத்தியிலிருந்து நிகலாய் வெஸோவ்ஷிகோவின் குரல் உரத்து ஓங்கி ஒலித்தது.
“அவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல், நம் ரத்தத்தைக் கசக்கிப் பிழிகிறார்கள்” என்று சொன்னான் அவன். அவனது வார்த்தைகள் ஜனங்களது மூளையை முரட்டுத்தனமாகத் தாக்கின.
”அது சரிதான் ஆமாம்!” என்று பல்வேறு குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.
”இந்தப் பயல் ஏதோ தன்னாலான மட்டும் முயல்கிறான். இரு. நான் போய் அவனுக்கு உதவுகிறேன்” என்று சொன்னான் ஹஹோல்.
பாவெல் அவனைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்னால் அவன் தனது நெடிய மெலிந்த உடலோடு, ஒரு கார்க்கைத் திருகித் துளைத்துச் செல்லும் திறப்பான் போல. அந்தக் கூட்டத்துக்குள் ஊடுருவி உள்ளே சென்றுவிட்டான்.
“தோழர்களே! இன்று நாம் யார் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதென்று முடிவு செய்திருக்கிறோம். இன்று நாம் நமது கொடியை உயர்த்துவோம். நமது கொடியை – அறிவு. நியாயம், சுதந்திரம் முதலியவற்றின் சின்னமான நமது கொடியை ஏந்திப்பிடிப்போம்!”
செழித்துக் கனத்த குரலில் அவன் சத்தமிட்டான்: “தோழர்களே! உலகில் பல்வேறு இன மக்கள் குடியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். யூதர்கள், ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள், தாத்தாரியர்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. உலகில் இனங்கள் இரண்டே இரண்டுதான் – ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாத இரண்டே மனித குலங்கள்தான் இருக்கின்றன. ஒன்று பணக்காரர் குலம்; மற்றொன்று பஞ்சை ஏழைகளின் குலம்! ஜனங்கள் வெவ்வேறு விதமாக உடை உடுத்தலாம்; வெவ்வேறு மாதிரியான மொழிகளில் பேசலாம். ஆனால் பிரஞ்சுக்காரராகட்டும். ஜெர்மானியராகட்டும். ஆங்கிலேயராகட்டும் – அவர்களில் பணக்காரராயிருப்பவர்கள் உழைக்கும் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால், அவர்களை அனைவருமே தொழிலாளர்களை ஒன்று போலவே நடத்துகிறார்கள், என்பதை அவர்கள் தான் தொழிலாளரை உறிஞ்சிக் குடிக்கும் கொள்ளை நோய் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்!”
கூட்டத்தில் யாரோ சிரிப்பது கேட்டது.
”ஆனால், அதே சமயத்தில் – தாத்தாரியனானாலும், பிரஞ்சுக் காரனானாலும் அல்லது துருக்கியனானாலும் – எந்த நாட்டுத் தொழிலாளியானாலும் சரி அவர்களையும் நீங்கள் பாருங்கள். அப்படிப் பார்த்தால், ருஷியாவிலுள்ள தொழிலாளர்கள் எப்படி நாயினும் கேடு கெட்டு வாழ்கிறார்களோ அதே வாழ்க்கையைத்தான் சகல நாட்டுத் தொழிலாளர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்?”
அந்தச் சந்துப் பாதையில் மேலும் மேலும் ஜனங்கள் கூடினார்கள். அவர்கள் தங்கள் கழுத்துக்களை எட்டி நீட்டிக்கொண்டும் குதிக்காலால் எழும்பி நின்று கொண்டும் ஒரு வார்த்தை கூடப் பேசாது அவன் பேசுவதைக் கேட்டார்கள்.
அந்திரேய் தன் குரலை மேலும் உயர்த்தினான்,
“வெளி நாடுகளிலுள்ள தொழிலாள மக்கள் இச்சாதாரண உண்மையை ஏற்கெனவே தெரிந்து கொண்டுவிட்டார்கள். இன்று, இந்த மே மாதப் பிறப்பன்று……”
“போலீஸ்!” என்று யாரோ கத்தினார்கள்.
நாலு குதிரைப் போலீஸ்காரர்கள் அந்தச் சந்துக்கள் நேராக வந்து குதிரைகளைக் கூட்டத்துக்குள் செலுத்தினார்கள். தங்களது கையிலிருந்த சவுக்குகளால் வீசி விளாசி அறைந்து கொண்டு சத்தமிட்டார்கள்.
”கலைந்து போங்கள்!”
மக்கள் தங்கள் முகங்களைச் சுழித்துக்கொண்டே அந்தக் குதிரைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்கள். சிலர் பக்கத்திலிருந்த வேலிப்புறத்தில் ஏறிக்கொண்டு விட்டார்கள்.
”அடடே! குதிரைகளின் முதுகிலே பன்றிகளைப் பாரு டோய்!” ‘வீராதி வீரருக்கு வழிவிடு’ என்று இவை கத்துவதைக் கேளுடோய்’!’ என்று எவனோ உரத்துக் கத்தினான்.
ஹஹோல் தெருவின் மத்தியில் அசையாது நின்று கொண்டிருந்தான். இரண்டு குதிரைகள் அவன் பக்கமாக தலையை அசைத்தாட்டிக்கொண்டே நெருங்கி வந்தன. அவன் ஒரு பக்கமாக ஒதுங்கினான். அந்த சமயத்தில் தாய் அவனது கையைப் பற்றி பிடித்து அவனைத் தன் பக்கமாக விருட்டென்று இழுத்தாள்.
“நீ பாவெல் பக்கமாக நிற்பதாய் எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாய். ஆனால், இங்கேயோ தன்னந்தனியாக எல்லாத் தொல்லைகளையும் நீயே ஏற்கிறாய்” என்று முணுமுணுத்தாள் அவள்.
”ஆயிரம் தடவை மன்னிப்புப் போதுமா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ஹஹோல்.
ஒரு கனமான, பயங்கரமான நடுக்கம் நிறைந்த ஆயாச உணர்ச்சி தாயின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து மேலெழும்பி அவளை ஆட்கொண்டது. அவளது தலை சுழன்றது. இன்பமும் துன்பமும் மாறிமாறி ஏதோ ஒரு மயக்கம் உண்டாயிற்று. மத்தியானச் சாப்பாட்டுக்கு எப்போதடா சங்கு அலறும் என்று ஆதங்கப்பட்டுத் தவித்தாள் அவள்.
அவர்கள் தேவாலயம் இருந்த சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள். தேவாலயச் சுற்றுப்புறத்தில் உற்சாகம் நிறைந்த இளைஞர்களும் குழந்தைகளுமாக சுமார் ஐநூறு பேர் கூடியிருந்தார்கள். கூட்டம் முன்னும் பின்னும் அலைமோதிக் கொண்டிருந்தது. மக்கள் பொறுமையற்று தங்கள் தலைகளை நிமிர்த்தி உயர்த்தித் தூரத்தையே ஏறிட்டுப் பார்த்து எதையோ எதிர்நோக்கித் தவித்துக்கொண்டு நின்றார்கள். ஒரே உத்வேக உணர்ச்சி எங்கும் பரிணமித்துப் பரந்தது. சிலர் செய்வது இன்னதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பிரமாதமான தைரியசாலிகள் போலப் பாவனை பண்ணிக் கொண்டிருந்தார்கள். பெண்களின் கசமுசப்புக்குரல் மங்கியொலித்தது. அவர்கள் பக்கத்திலிருந்து ஆண்கள் விலகிச் சென்றார்கள்; வைது திட்டும் வசவுக் குரல்கள் மங்கி ஒலித்தன. அந்தக் கும்பிக் குமைந்து நின்ற கும்பலில் ஒரு இனந்தெரியாத வெறுப்புணர்ச்சி சலசலத்தது.
படிக்க:
♦ சரிந்தது தென்னை மரங்கள் மட்டுமல்ல – ஒரு தலைமுறை உழைப்பும்தான் ! நேரடி ரிப்போர்ட் !
♦ பாசிசத்தை வீழ்த்த நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம் | கணேசன்
”மீத்யா!” என்று ஒரு ஒடுக்கக் குரல் கேட்டது. ‘உன்னைக் கவனித்துக் கொள்!”
”என்னைப் பற்றிக் கவலைப்படாதே” என்று ஒலித்தது பதில்.
சிஸோவின் அழுத்தமான குரல் அமைதியாகவும் ஆணித்தரமாகவும் ஒலித்தது: ”இல்லை. நாம் நமது பிள்ளைகளைப் புறக்கணித்து உதறித் தள்ளிவிடக்கூடாது. நம்மைவிட அவர்களுக்கு அதிகமாக அறிவு உண்டு. துணிச்சல் உண்டு. சாக்கடைக் காசு சம்பவத்தின்போது, அதைத் துணிந்து எதிர்த்து நின்றது யார்? அவர்கள் தான் அதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் அதற்காகச் சிறைக்குச் சென்றார்கள்; ஆனால் அதனால் பயன் அடைந்ததோ நாம் அனைவரும்தான்.”
ஜனங்களுடைய குரல்களையெல்லாம் விழுங்கியவாறு. ஆலைச் சங்கு தனது அழுமூஞ்சிக் குரலில் அலறியது. கூட்டத்தாரிடையே ஒரு சிறுநடுக்கம் குளிர்ந்தோடிப் பரவியது. உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்றார்கள். ஒரு கணநேரம் எல்லோரும் வாய்மூடி கம்மென்று இருந்தார்கள். எல்லோரும் விழிப்போடு நின்றார்கள். பலருடைய முகங்கள் வெளுத்துப் பசந்தன.
“தோழர்களே!’ பாவெலின் செழுமையான மணிக்குரல் கணீரென ஒலித்தது. தாயின் கண்களில் கதகதப்பான நீர்த்திரை உறுத்துவது போலிருந்தது. அவன் விசுக்கென்று தாவிச் சென்று தன் மகனருகே நின்று கொண்டாள். எல்லோரும் பாவெலின் பக்கமாகத் திரும்பினார்கள்; காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்புத் தூளைப் போல எல்லோரும் அவனைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள்.
தாய் அவனது முகத்தைப் பார்த்தாள். தைரியமும் கர்வமும் கனன்று பிரகாசிக்கும் அவனது கண்களை மட்டுமே கவனித்துப் பார்த்தாள்.
“தோழர்களே! இன்று நாம் யார் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதென்று முடிவு செய்திருக்கிறோம். இன்று நாம் நமது கொடியை உயர்த்துவோம். நமது கொடியை – அறிவு. நியாயம், சுதந்திரம் முதலியவற்றின் சின்னமான நமது கொடியை ஏந்திப்பிடிப்போம்!”
திடீரென்று ஒரு வெள்ளையான கொடிக்கம்பம் வானில் மேலோங்கி, மீண்டும் கூட்டத்திடையே தாழ்ந்து இறங்கியது. அந்தக் கொடிக்கம்புக்கு வழிவிட்டு மக்கள் விலகினர். ஒரு கணநேரம் கழித்துத் தொழிலாளர் வர்க்கத்தின் விசாலமான செங்கொடி, அண்ணாந்து நோக்கும் மக்களின் முகங்களுக்கு மேலாக நிமிர்ந்து உயர்ந்தது; ஒரு பெரும் செம்பறவையைப் போல் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது!
பாவெல் தன் கையை உயர்த்திக் கொடியை ஆட்டினான். பல பேருடைய கைகள் அந்த வெண்மையான கொடிக்கம்பைப் பற்றிப் பிடித்தன. அவற்றில் தாயின் கரமும் பங்கெடுத்துக் கொண்டிருந்தது.
”தொழிலாளர் வர்க்கம் நீடூழி வாழ்க!” என்று கோசமிட்டான் பாவெல்.
நூற்றுக் கணக்கான குரல்கள் அந்த கோஷத்தை எதிரொலித்தன.
”சோஷல் – டெமொக்ரடிக் தொழிலாளர் கட்சி நீடுழி வாழ்க! இதுதான் நமது கட்சி , தோழர்களே, நமது கருத்துக்களின் ஜீவ ஊற்று!”
ஜனக்கூட்டம் பொங்கியது; அந்தக் கொடியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் அதனை நோக்கி விரைந்து சென்றனர். எனவே மாசின், சமோய்லவ், கூஸெவ் சகோதரர்கள் முதலியோர் அனைவரும் பாவெலை அடுத்து வந்து நின்று கொண்டார்கள். நிகலாய் தன் தலையைக் குனிந்து, கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினான். தனக்கு இனந்தெரியாத வேறு சில உற்சாகம் நிறைந்த வாலிபர்கள் தன்னை நெருங்கித் தள்ளிக்கொண்டு முன்னேறுவதை தாய் உணர்ந்தாள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
முந்தைய பகுதிகள்: