
எனது நாத்திகப் பயணம் ஆரம்பத்தில் கடவுளின் இருப்பைக் கேள்வி கேட்பதில் தொடங்கவில்லை. ஏன் மதங்களை வலுவாகக் கடைப்பிடிக்கும் அநேகமான சமூகங்களில் பெண்களின் நிலை மிகக் கீழ்த்தரமாக இருக்கிறதென்ற தேடலே முதல் படியாக இருந்தது. பள்ளிக் காலத்தில் இராமாயணத்தில் சீதையைத் தீக்குளிக்கச் சொல்வது எந்த வகையில் நியாயம், வன்புணர்ந்த இந்திரனுக்கு எதுவும் தண்டனை கொடுக்காமல் அகலிகையின் மேல் ஒரு தவறும் இல்லாத போது, அவளை ஏன் கல்லாக்க வேண்டும் போன்ற கேள்விகள் இருந்தும் மதங்களையோ மதப் புத்தகங்களையோ பள்ளிக் காலங்களில் ஆழமாகப் படித்ததோ, சிந்தித்ததோ இல்லை, அதற்கு நேரமும் இருக்கவில்லை. அப்போது எனக்குப் பெரியாரைத் தெரிந்திருக்கவில்லை.

அவ்வாறான தேடலில் முதலில் வாசித்த புத்தகங்களில் ஒன்று Genocide of women in Hinduism (இந்துமதத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட பெண்கள்) என்ற சீதனத்திற்காகக் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரி எழுதிய புத்தகம். அதன் பின்னான தேடலிலேயே எனக்கு முதலில் Dawkins – டாவ்கின்ஸ் -ஜப் பற்றித் தெரிந்தது. 2011 வரை வந்த Dawkins இன் எல்லா புத்தகமும் என்னிடம் உண்டு. The God Delusion – டி காட் டிலியூசன் புத்தகமெல்லாம் ஒரு இரண்டு, மூன்று நாட்களிலேயே வாசித்து முடித்தது, அதன் பின் The Greatest Show On Earth – தி கிரேட்டஸ்ட் ஷோ ஆஃப் எர்த் – பிரசுரித்த பின் நடந்த book tour (புத்தக சுற்றுலா)இல் நியூசிலாந்து வந்த போது போய்ப் புத்தகத்தில் autograph (கையெழுத்து) வாங்கியது, பின் 8-12 வயதுச் சிறுவர்களுக்காக The Magic of Reality (தி மேஜிக் ஆஃப் ரியாலிட்டி) புத்தகம் வெளிவந்த போது என் மகனுக்கு மூன்றே வயதான போது, அவனுக்கு நானே வாசித்துக் காட்டலாம் என்று வாங்கியதும் நினைவில் உள்ளன. அந்தளவு பிடித்திருந்தது Dawkins இன் புத்தகங்கள்.
அதன் பின் 2011 ஆண்டே Dawkins இன் பால்வாத, இன வாதக் கருத்துகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியது. இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் எந்தளவுக்கு ஒடுக்கப்படுகிறார்கள் – இவர்கள் மேலைத்தேய நாடுகளில் சொகுசாக இருந்து கொண்டு தமது பாலியல் ஒடுக்குமுறையைக் கதைக்கிறார்கள் என்ற தொனியில் தொடங்கி, முஸ்லிம்களுக்கு நோபல் பரிசுகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கவில்லை, அதனால் வெள்ளையர்களே புத்திசாலிகள் என்ற தொனியில் கதைத்தது, சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் எல்லாம் பெரியதாக அவர்களைப் பாதிக்காது என்றது, பாலியல் வன்முறையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்ட தனது பிரபல நண்பர்களின் பக்கம் பேசியது என அடுக்கிக் கொண்டே போகலாம்.
படிக்க:
♦ கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !
♦ ஆரியபட்டரின் அறுபதாவது சீடர் ஸ்டீபன் ஹாக்கிங் !
முதலில் மிகுந்த அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. Oxford University (ஆக்ஸ்போர்டு பல்கலை) இல் Professor for public understanding of science (அறிவியலின் பொதுப்புரிதல் துறை பேராசிரியர்) ஆக இருந்து கொண்டு எப்படி இவ்வாறு சிந்திக்கலாம். ஒரு விஞ்ஞானிக்குத் தானும் மனிதன், தனக்கும் எத்தனையோ bias (பக்கச்சார்பு) இருக்கும். அதனால் கதைப்பதை, அதுவும் ஒரு பெரிய பதவியில் இருந்து கதைப்பதை சரியா எனச் சிந்தியாமல், கொஞ்சமும் பொறுப்பற்று நடப்பதை ஏற்றுக் கொள்ள கஷ்டமாகவே இருந்தது. Dawkins ஆல் தான் நாத்திகரானேன் என்று சொல்ல முடியாது. ஆனால் Dawkins இன் எழுத்துகள் எனது சிந்தனையை, மதவாதக் கருத்துகளுடன் விவாதிக்கும் திறனை விருத்தியாக்க மிகவும் உதவியது என்றால் மிகையில்லை.. ஆனால் 2011-க்குப் பின் Dawkins இன் புத்தகங்கள் எதுவும் வாங்கியதில்லை.

Dawkins இன் பின் அந்த லிஸ்டில் இப்ப பல விஞ்ஞானிகள் வந்தாயிற்று. தீவிர Dawkins ரசிகையாக இருந்த காலத்தில் தெரிய வந்த மற்ற ஒருவர் Lawrence Krauss (லாரன்ஸ் கிராஸ்). Krauss இன் A Universe from Nothing book tour க்கும் போயுள்ளேன். எத்தனையோ பாலியல் குற்றச்சாடுகளுக்குப் பின் இப்போ அண்மையிலேயே Krauss ஜப் பதவி நீக்கம் செய்துள்ளார்கள். பிரபல விஞ்ஞானிகளில் முதலில் தனது செய்கைகளுக்கு கொஞ்சமாவது விளைவுகளைச் சந்தித்தது Krauss தான் என நினைக்கிறேன்.
Richard Feynman (ரிச்சர்டு ஃபெய்ன்மென்) மற்றொரு பெண் வெறுப்புக் கருத்துகளை, பழக்க வழக்கங்களைக் கொண்ட பிரபலமான இயற்பியலாளர். இப்போது உயிருடன் இல்லை. Feynman இன் கருத்துகளையும் பல தளங்களில் பகிர்ந்துள்ளேன். எனது வலைத்தளத்தில் இப்பவும் Feynman இன் Quotes (மேற்கோள்கள்) இருக்கிறதென்று நினைக்கிறேன். நீக்க வேண்டும்.

நான் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்யும் காலங்களில் எனக்குப் மிகப் பிடித்த பொழுது போக்கு, மதவாதிகளுடன் அறிவியல் விவாதிப்பது. என் வலைப்பக்கத்திலேயே பல பதிவுகள் எழுதியுள்ளேன். In fact, பல சமயங்களில் அவர்களின் பக்கங்களில் எனது எதிர்க்கருத்துகளை வெளியிட மாட்டார்கள் என்பதால்தான் வலைப்பக்கமே தொடங்கினேன் என்று கூடச் சொல்லலாம். அப்பெல்லாம் இவர்களின் எழுத்துகள் எனது விவாத முறையை நெறிப்படுத்தி இருக்கின்றன. இவர்கள் இவ்வாறு பெண் வெறுப்பாளர்களாக, இனவாதிகளாக, பாலியல் வன்முறை செய்பவர்களாக இருப்பார்கள் எனத் துளி கூட எண்ணவில்லை.
அறிவு கொஞ்சம் முதிர்ச்சி அடையத் தான் விளங்கியது மதங்களைக் கடுமையாகப் பின்பற்றும் சமூகங்கள் மட்டுமல்ல எல்லா சமூகங்களிலும் எல்லா மனிதர்களிடையேயும் பால் ஒடுக்குமுறையாளர்களும் இனவாதிகளும் இருக்கிறார்கள் என்று. Charles Dawkin, Albert Einstein உட்படவிஞ்ஞானிகள் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.
படிக்க:
♦ அறிவியலா? இறையியலா? புதிய கலாச்சாரம் செப்டம்பர் வெளியீடு
♦ சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்
சமுதாயத்தில் நாம் காணும் பல இன, பால், சாதி சமத்துவமின்மைகளுக்கு முக்கியக் காரணம் வரலாற்று ரீதியாக, ஆண்டாண்டு காலமாகத் தொடரும் பாகுபாடுகள் தானே ஒழிய, உயிரியல் அல்ல.
அன்னா
(கட்டுரையாளர் குறிப்பு : மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்)