இந்த நூலில் வலங்கை, இடங்கை சாதிகள் பற்றிய பார்வைகள் விளக்கப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியில் பெரும் நில உடைமை தோன்றிய 11ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுகள் வரை தமிழகத்தில் வலங்கை இடங்கை சாதிகளின் மோதல் தொடர்ந்தும், பரவலாகவும் நடைபெற்றது. வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை அவர்கள் இம்மோதல்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஆனால் இந்த இடங்கை, வலங்கை சாதிகளின் மோதல்கள் எப்படி உருப்பெற்றன, எப்படி மறைந்தன என்ற வியப்போடுதான் தனது எழுத்தை முடித்துள்ளார். ஆனால், பேரா. நா.வா. அவர்கள் இப்புத்தகத்தில் இம்மோதல்களின் காரணத்தையும், உருவாக்கத்தையும், உற்பத்தி முறைகளின் வளர்ச்சியோடு இணைந்து வெளிப்படுவதை விவரித்துள்ளார்.
சோழர்காலத்திய நில உடமைகளும், அதனைச் சார்ந்த கைவினைஞர்கள் உருவாக்கமும் தோன்றியது. மறுபுறத்தில் பெரு வணிகம் தோன்றியது. இந்த இரு பிரிவினர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. ஆளும் நிலப்பிரபுத்துவ அரசு இம்மோதல்களைப் பயன்படுத்தியது. வளர்த்தெடுத்தது. சோழர்கள் நிலத்தில் சாதி அடிப்படையிலேயே சலுகைகள் கொடுப்பதும், வரிகள் விதிப்பதும் நடைபெற்றது. பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலேயே நடைபெற்றது. மன்னர்கள், நிலப்பிரபுக்கள் தங்களது நலனைப் பாதுகாக்க, இந்தப் பிரிவினையை கெட்டிப்படுத்தினர். “உடன் கூட்டம் ரத்து” என்ற சட்டத்தின் மூலம் இவர்கள் ஒன்று சேர்வதை தடுத்தனர்.
எனவே, வலங்கை, இடங்கை சாதிய மோதல்கள் வெறுமனே சாதிக்கலவரங்கள் அல்ல. வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடுகள். நிலவுடைமை வர்க்கமும் வணிக வர்க்கமும் தங்களுக்கு ஆதரவான மக்களை இணைத்துக்கொண்ட நிகழ்வுகளாகும். இப்புத்தகம் தமிழகம் சாதிய கட்டமைப்பை ஊடுருவிப் பார்க்கவல்ல பேராயுதம். வரலாற்றியல் பொருள் முதல்வாத கண்ணோட்டங்களை உள்ளடக்கியது.
- நூலின் பதிப்புரையிலிருந்து…
தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்
தமிழ் நாட்டின் சமூக வளர்ச்சியில் தொழிற் பிரிவினையால் தொழிலடிப்படைச் சாதிகள் தோன்றின! அவை பரம்பரைத் தொழில் முறையால் சாதிகளாயின. இவற்றைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் முன்னரே வடநாட்டில் தோன்றிய வருணாச்சிரமப் பிரிவுகளுக்குள் அடக்க உயர்ந்த வர்க்கங்கள் முயன்றன. ஆனால் இதுவோர் மேற்பூச்சாக (super imposition) இருந்ததேயன்றிச் சாதிகள் தொழிலடிப்படையிலேயே இருந்தன. ஆனால் தொழில் புரியும் வர்க்கங்களிடையே சமத்துவமில்லை.
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
தொழில் செய்யாத சுரண்டல் வர்க்கத்தினர் இவர்களிடையே சாதி உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துத் தங்களை உயர்ந்தோரென்றும் உழைப்பாளிகளைத் தாழ்ந்தவரென்றும் கருதினர். தொழில் செய்வோர் ஒன்றுபடாமல் தடுத்து வைத்திருந்தனர். உயர்ந்த சாதியர்களின் நீதி நூல்களும் இதையே நிலை நாட்டின.

சாதிக் கொடுமைகளும் அநீதிகளும் சாதிக் கருவமும் மிகுந்திருந்த காலத்தில் அடக்கப்பட்டிருந்த சாதியினர் அவற்றை எதிர்த்துப் பல்வேறுவிதங்களில் போராடியுள்ளனர். இப்போராட்டங்களில் சாதி உயர்வு தாழ்வுகளை நிலை நாட்டப் பயன்படும் கருத்துக்களையும் தத்துவங்களையும் எதிர்த்துப் பல கருத்துக்களையும் தத்துவங்களையும் உருவாக்கினர்.
இக்கருத்துக்களில் சில பழமையான வேத நூல்களிலிருந்து எடுத்து மாற்றியமைக்கப்பட்டன. சில கருத்துக்கள் வரலாற்றின் மாறுதலுக்கேற்பப் புதுமையாகப் படைக்கப்பட்டன.
இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாதி சமத்துவத்தை விளக்கும் பல நூல்கள் தோன்றின. சாதி அமைப்பு முறையில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களைப் பற்றி இவை எழுதப்பட்டன.
பிராமணர்கள் சாதி அமைப்பின் உச்சியிலிருந்ததாலும் அவர்கள் எல்லோரினும் மேம்பட்டவர்கள் என்ற கருத்துக் கொண்ட கதைகளும் புராணங்களும் மிகுந்திருந்ததாலும் ‘கீழ்ச் சாதியார்’ பிராமணர்களது சிறப்பைத் தாக்குவதன் மூலமும் அவர்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் என்பதை நிலை நாட்டிக்கொள்ள முயன்றனர்.’ (பக்-5)
தமிழ் மன்னரும் சாதிப் பிரிவினைகளும்
சோழ மன்னர்கள் காலத்தில் இரண்டு வகையான சாதிப் பிரிவினைகளைப் பற்றிக் கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். முதல் ராசராசன் காலத்தில் வலங்கை மேம்படைகளிலார், பெருந்தனத்து வலங்கைப் பெரும்படைகள், அழகிய சோழத் தெரிந்த வலங்கை வேளைக்காரர் படைகள், ராஜராஜன் தெரிந்த வலங்கை வேளைக்காரர் என்ற படைப் பிரிவுகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
ராசராசன் காலத்திற்குப் பிற்பட்ட கல்வெட்டுகளில் இடங்கை தொண்ணுாற்றாறு, இடங்கைத் தொண்ணுாற்று சமயத் தொடகை என்ற பெயர்கள் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர்கள் சிலரது கல்வெட்டுக்களில் மூன்று கை மகாசேனை, மூன்று கை திருவேளைக்காரர் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இம்மூன்று பிரிவினரும் சாதி அடிப்படையில் அமைந்த பிரிவினரா, அன்றி வர்க்க அமைப்பில் எழுந்த பிரிவினரா என்ற வினா எழுகிறது. இவ்வினாவிற்கு விடை கூற இம்மூன்று பிரிவுகளிலும் எந்தெந்தச் சாதியினர் அடங்கியிருந்தனர், அவர்கள் எத்தொழில்களைச் செய்து வந்தனர் என்பதையும் அவர்களிடையே நிலவிய உறவையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
படிக்க:
♦ அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
♦ சமபந்தி அரசியல் – நூல் அறிமுகம் : எச்சிலைக்குள்ளும் இருக்குதடா சாதி
வலங்கைப் பிரிவில் நிலம் உடையாரும் உழவர்களும் வண்ணான், நாவிதன் போன்ற தொழிலாளிகளும் பனை மரமேறும் தொழிலாளிகளும் வன்னியர் போன்ற தொழிலாளிகளும் இடையர் போன்ற கால்நடை பராமரிப்பவரும் அடங்கியிருந்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தெலுங்கும் கன்னடமும் வழங்கும் நாடுகளிலும் இப்பிரிவினர் உள்ளனர். இப்பிரிவிலுள்ள சாதிகளில் சிலவற்றை ஜார்ஜ் கோல்மன் என்னும் நீதிபதி 1809 ஆம் ஆண்டில் தாமளித்த தீர்ப்பொன்றில் குறிப்பிடுகிறார். அவையாவன: குசவன், மேளக்காரன், சாணான், அம்பட்டன், கன்னான், இடையன், வெள்ளாளன், பறையன், குறவன், ஒட்டன், இருளன், வேடன், வேட்டுவன் முதலியன.

கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டயங்களிலும் காணப்பட்ட சான்றுகளின் அடிப்படையிலேயே, சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் தமது தீர்ப்பால் இம்முடிவுக்கு வந்திருக்கிறார். இந்தச் சான்றுகளனைத்தும் நிலமுடையவர்களையும் நிலத்தில் பயிர் செய்யும் வகுப்பினரையும் அவர்களுக்கு ஊழியம் செய்யும் வகுப்பினரையும் குறிப்பிடுவதைக் காணலாம்.
இடங்கைப் பிரிவில் அடங்கியுள்ள சாதியில் தொண்ணுாற்றாறு என்றும் தொண்ணுாற்றெட்டு என்றும் நிகழ்ச்சிகள் குறிப்பிடுகின்றன. வீரராசேந்திர சோழனது திருவெண்காட்டுக் கல்வெட்டு ஒன்று இடங்கைச் சாதியினரிடமிருந்து, மன்னன் கொண்ட வரியைக் கோயிலுக்கு அளித்ததாகக் கூறுகிறது. அக்கல்வெட்டில் இடங்கைப் பிரிவில் அடங்கியுள்ள சாதிகள் சில வற்றின் பெயர் குறிப்பிடப்படுகின்றன. அவற்றைக் கவனிக்கும் பொழுது, அவை வணிகம் செய்வோரையும் தச்சன், கருமான் போன்ற தொழிலாளரையும் குறிப்பிடுகின்றன. தர்ஸ்டன் என்னும் ஆராய்ச்சியாளர் கீழ்வரும் சாதிகளை இடங்கை சாதிகளென்று குறிப்பிடுகிறார். அவைகளாவன: செட்டி, வாணியன், தேவாங்கன், கொத்தன், தட்டான் , கன்னனான் , கொல்லன் , சக்கிலியன் முதலானவையாகும்.
(பக்.43-44)
நூல்: தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்
ஆசிரியர்: பேரா.நா.வானமாமலை
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 24332424, 24332924
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com
பக்கங்கள்: 48
விலை: ரூ.25.00
இணையத்தில் வாங்க: noolulagam | panuval
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277