கஜா புயல் கரையைக் கடந்த கிராமங்களில் ஒன்று சல்லிக்குளம். நாகைக்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் உள்ள கடற்கரை கிராமம். புயல் ஓய்ந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. கான்கிரீட் வீடுகள் கூட திருகிய நிலையில் கிடக்கிறது. இது புளியா, மாவா, முந்திரியா என அடையாளமில்லாமல் உருக்குலைந்து கிடக்கின்றன மரங்கள். குளம் குட்டைகளில் அழுகிக் கிடக்கும் இலைதழைகளோடு இறந்து போன ஆடு, கோழிகளின் துர்நாற்றமும் நெஞ்சை குமட்டுகிறது.
“இந்த தண்ணிய கொஞ்சம் குடிச்சுப் பாருங்க” என்று பக்கத்தில் உள்ள குட்டையிலிருந்து உள்ளங்கையில் மொண்டு வருகிறார் ஒரு விவசாயி. உப்பு நீர். ஆம், கடலிலிருந்து 2 கி.மீ. தூரம் வரை ஊருக்குள் சேற்றை வாரி இரைத்திருக்கிறது. அந்த நள்ளிரவு கொடூரக் காட்சியை தனது விளைநிலங்களை சுற்றிக் காட்டிக்கொண்டே விவரிக்கிறார் 33 வயதான அழகப்பன்.

“நைட்டு 12 மணியிருக்கும். உஸ்… உஸ்ஸூன்னு ஒரு காத்து ஊதிக்கிட்டு வந்துச்சு. படபடன்னு அடிச்சு என்னென்னமோ நொறுங்கி விழுந்துச்சு. என் மனைவி உள்ளே இருக்கு. என்னோட 6 வயசு புள்ளைய தூக்கிக்கிட்டு கதவ கெட்டினமா புடிச்சுகிட்டேன். காத்து சுத்தி சுத்தி அடிக்குது. கடல் தண்ணி ஊருக்குள்ளே வர ஆரம்பிச்சிடுச்சு. பயம்… மரண பயம் கவ்விருச்சு. முழங்கால் வரைக்கும் இருந்த தண்ணி திடீருனு மாரளவு வந்துருச்சி.
புள்ளய ஒரு கையில ஏந்திகிட்டு கதவ ஒரு கையில புடிச்சி மேலே எகிரி நிக்கிறேன். இனி பொழைக்க மாட்டோமுன்னு நெனச்சி, உள்ளே நிக்கிற மனைவிய கூப்பிட்டேன். இனி என்னம்மா செய்யப் போறோம், மொத்தமா சாவுறத தவிர வேற வழியில்லன்னு சொல்லிட்டு கதவோடவே சாஞ்சியிருந்தோம். மளமளன்னு கொஞ்ச நேரத்திலேயே தண்ணி இறங்கிடுச்சு. அப்பாடா உயிரு பொழச்சோமுன்னு நிம்மதி பெருமூச்சு விட்டேன். சுனாமிக்குக்கூட இந்தளவு தண்ணிய பாத்ததில்லே. சுனாமி மாதிரி ரெண்டு மடங்கு தண்ணி ஊரைக் கவ்விருச்சு.”

நடுக்கத்தோடு மூச்சிறைக்கப் பேசிய அழகப்பன் மீண்டும் தொடர்ந்தார்.
“ஆனா, பொழச்சும் புண்ணியமில்லேயே. இப்ப எதக்கொண்டு நாங்க வாழுறது…? எங்க வீட்டுல மொத்தம் 6 பேரு. ஒன்னரை ஏக்கர்ல நெல்லு, 4 ஏக்கர்ல தென்னை, ½ ஏக்கர்ல முந்திரி போட்டிருந்தேன். உப்புத் தண்ணி பூந்து அத்தனையும் நாசமாப் போச்சு. இப்பவே பாருங்க இந்த மரமெல்லாம் எரிஞ்சி (பட்டு) போயிருச்சு. இனி ஒரு புல்லு பூண்டுகூட மொளைக்காது. கதவுல தொத்திகிட்டிருக்கும்போதே கடலோட போயிருக்கலாம்; இப்ப உயிரோட செத்துகிட்டிருக்கோம்.”
– தொண்டையை கணைத்துக்கொண்டு மேலும் பேச முயலுகிறார், முடியவில்லை. கண்கள் மட்டுமே பேசுகிறது, நீரைச் சுரந்து.
*****
“இதுவரைக்கும் யாருமே வரல, நீங்களாவது வந்தீங்களே…” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார், ராஜேந்திரன்.
“எனக்கு சொந்தமுன்னு சொல்ல இந்த வீடு, நாலு தென்னமரம், 80 ஆடுங்க… அவ்வளவுதான்.

புயல் அடிச்ச அன்னைக்கு ராத்திரி கடல் தண்ணி வீட்டுக்குள்ளே வந்துருச்சி. அப்ப என் குடும்பமே தண்ணில அடிச்சிகிட்டு போகவேண்டியது. திடீர்னு ஒரு பெரும் காத்து. ஆண்டவன் புண்ணியத்துல தென்னங்கொல (மேல்பாகம்) முறிஞ்சி, வீட்டு மேல விழுந்துச்சு. அத புடிச்சுகிட்டுத்தான் நாங்க நாலு பேரும் பொழச்சோம். இந்த தென்னை இல்லன்னா செத்தே போயிருப்போம்.
விடிஞ்சதும் கொஞ்சம் தூரத்துல இருக்குற எங்கண்ணன், அவரு வீட்டுலேருந்து கத்திய எடுத்துகிட்டு ஒவ்வொரு மரமா கழிச்சிகிட்டு என் வீடு வந்து சேர்ந்தாரு. வந்ததும் என்னோட வீட்டு மேல சாஞ்சிருக்கிற தென்னைய வெட்டப் போனார். இதமட்டும் வெட்டாதே அண்ணா, இந்த மரம்தான் தன்னை அழிச்சிட்டு நம்ம குடும்பத்த காப்பாத்துச்சுன்னு சொல்லி அத வெட்டாம விட்டுட்டோம்.” என்று கூறி நெகிழ்ந்தார்.
கடலிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் அரசுக்கு சொந்தமான மரங்கள். விவசாயிகளுக்குச் சொந்தமான அடர்த்தியான சவுக்குத் தோப்புகள். இடையிடையே சீர்செய்யப்பட்ட பொட்டல் திடல்கள். கொஞ்சம் பனை மரங்கள். உயிரோடு நிற்கும் மரங்களில் கடல் நீர் வந்ததற்கான சுவடுகள் தெரிகின்றன. கிட்டத்தட்ட 15 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் வந்திருக்கின்றன.
“இந்த மணல் மேடுதான் எங்க ஊருக்கே பாதுகாப்பு. எவ்வளவு மழ பேஞ்சாலும், அலை வந்தாலும், புயலே அடிச்சாலும் இதத் தாண்டி தண்ணி வந்ததே கெடயாது. இப்ப கிட்டத்தட்ட 10 அடி உயரமுள்ள அந்த மணல் திட்டயே அரிச்சி மட்டமாக்கிருச்சி.”

கூறிக்கொண்டே வந்தவர், கொஞ்சம் தடுமாறினார். கால்கள் பின்னியது. ஆட்டுக் கொட்டகைச் செல்ல இன்னும் 100 மீட்டர்தான் உள்ளது. அதை மீண்டும் பார்க்கும் மன தைரியம் அவருக்கு இல்லை.
“இப்ப ஒரு ஆடுகூட உயிரோட இல்ல. பாதி கடல் கொண்டு போயிருச்சு, அஞ்சாறு மணல்லேயே பொதஞ்சிடுச்சி. மீதி அந்த சவுக்குத் தோப்புல சிக்கிக் கெடக்குறதா சொல்றாங்க
தம்பி… இவங்கள அழைச்சி போயி ஆட்டுக் கொட்டகைய காமிச்சிட்டு வாப்பா… மனசு கொஞ்சம் பாரமாயிருக்கு.”
என்று தனது அண்ணன் மகனிடம் கூறிவிட்டு, புயலில் இடிந்துகிடக்கும் சுனாமியில் இறந்தோருக்கான கல்லறையில் உட்கார்ந்து கொண்டார். கன்னத்தில் ஒரு கையை குத்திட்டு ஆட்டுக் கொட்டகை இருந்த இடத்தையும் சவுக்குத் தோப்பையும் மாறி மாறி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
கொட்டகையை நோக்கினோம். அடையாளங்கள் தென்பட்டன. ஒரு கைப்பம்பு, சில கருங்கல் தூண்கள், தூண்களில் கட்டப்பட்ட நிலையில் சில ஆடுகளின் எலும்புக்கூடுகள், கொஞ்சம் ஆட்டு ரோமங்கள்.
வந்த திசையை நோக்கினோம். தூரத்தில் ராஜேந்திரன் இடிந்த கல்லறையில் எந்த அசைவுமின்றி உட்கார்ந்திருக்கிறார்.
*****
அருகாமை தார்ச்சாலைகளிலோ ஆம்புலன்ஸ் மற்றும் புயல் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கிடையே போலீசு வேன்களின் காதைப் பிளக்கும் இரைச்சல். டெல்டா மாவட்டங்களே ஒரு போர்க்களம்போல் காட்சியளிக்கின்றன.
ஏன் இவ்வளவு போலீசை குவித்திருக்கிறார்கள்? ஒரு சப்பையான காரணத்தைச் சொல்கிறார்கள்:
“விழுந்தமாவடியில் ஓ.எஸ். மணியை அடித்துத் துரத்தினார்கள், வேட்டைக்காரனிருப்பில் ஏன் நிவாரணம் வரவில்லை என்று அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்கள். அதனால்தான் போலீசு பாதுகாப்பு” என்கிறார்கள். சல்லிக்குளத்தில் மட்டுமல்ல பெரும்பான்மையான கிராமங்களிலும் இதுதான் நிலைமை.
சாலைகள் – வீடுகளில் விழுந்து கிடக்கும் மரத்தை மட்டுமல்ல, அதன் நுனிக்கிளையைக்கூட எந்த அதிகாரியும் பிடுங்கவில்லை. அங்குமிங்கும் வெறுமனே அலைந்து கொண்டிருக்கும் இந்த போலீசை அனுப்பியிருந்தாலே முக்கால்வாசி மரங்களையாவது அகற்றியிருக்க முடியும் என்கிறார்கள் கிராமத்து மக்கள்.