ணமதிப்பு நீக்க நடவடிக்கை, மிகப் பெரிய, கடுமையான பொருளாதார அதிர்ச்சி என தெரிவித்துள்ளார் மோடி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்தன் சுப்ரமணியன்.  மோடி சர்வாதிகாரத்தன்மையுடன் ஓர் இரவில் அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக சரிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் சுப்ரமணியன்.

அரவிந்த் சுப்ரமணியன் எழுதி, வெளிவரவிருக்கும் ‘மோடி- ஜெட்லி பொருளாதாரத்தின் சவால்கள்’ என்ற நூலில், பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய மோசமான பாதிப்பை முறைசாரா தொழிற்துறை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்ததெனக் கூறினார்.

மோடி தலைமையிலான அரசில், தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய அரவிந்த் சுப்ரமணியன், கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மோடி அரசின் தவறான பொருளாதார முடிவுகளே இவருடைய பதவி விலகலுக்குக் காரணம் என பேசப்பட்டது.

தனது நூலில், ‘பணமதிப்பு நீக்கத்தின் இரண்டு புதிர்கள் – அரசியல், பொருளாதாரம்’ என்ற அத்தியாயத்தில், “86% மேலான பணத்தாள்கள் திரும்பப் பெற்ற, பணமதிப்பு நீக்க அறிவிப்பு மிகப் பெரிய, கடுமையான வருவாய் இழப்பை ஏற்படுத்திய அதிர்ச்சியாகும். இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் முன்பைக் காட்டிலும் குறைந்தது. பணமதிப்பு நீக்கத்துக்கு ஆறு காலாண்டுகளுக்கு முன்பு வளர்ச்சி சராசரி 8 %-ஆக இருந்தது. பணமதிப்பு நீக்கத்துக்கு ஏழு காலாண்டுகளுக்குப் பின் வளர்ச்சி சராசரி 6.8 %-ஆனது”.

பணமதிப்பு நீக்கம் மட்டுமல்லாது, மற்ற விசயங்களும்… அதிகப்படியான மெய் வட்டி விகிதம், ஜி.எஸ்.டி அமலாக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் வளர்ச்சியை குறைத்தன என சுப்ரமணியன் தெரிவிக்கிறார்.

பணமதிப்பு நீக்கம் முறைசாரா தொழில்துறையையே அதிகம் பாதித்ததாக எழுதியுள்ளார்.  முறைசாரா துறையில் ஏற்பட்ட இழப்பு, முறை சார்ந்த துறையில் சந்தை தேவையைக் குறைத்து விடும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட இந்த தாக்கம் கணிசமானதாக இருந்திருக்க வேண்டும்’ என்கிறார்.

எந்தவொரு நாடும், சாதாரண காலங்களில் இப்படிப்பட்ட ‘முன்னெப்போதும் இல்லாத’ பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்ததில்லை என்கிறார். கடுமையான நெருக்கடிகளில், போர் சமயத்தில், பணவீக்கம் அதிக அளவில் உள்ள போதுதான் இப்படியான நடவடிக்கைகளை மற்ற நாடுகள் எடுத்துள்ளன.

பணமதிப்பு நீக்கம் ஏழைகள் மீது ஏற்படுத்திய பாதகமான விளைவுகளை ‘தவிர்க்கமுடியாத கூடுதல் சேதார’மாக பார்த்திருக்கலாம்.  மேலும்,  பணக்காரர்கள் தங்களைவிட அதிகமாக இழந்தார்கள் என ஏழைகள் இந்த சுமையை கடந்தவர பார்த்தார்கள். ஆனாலும் இந்த ‘கூடுதல் சேதாரம்’ தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்கிறார் சுப்ரமணியன்.

படிக்க:
தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்

இரண்டு ஆண்டுகால பணமதிப்பு நீக்கத்தின் அதிர்வை இந்திய பொருளாதாரம் இன்னமும் அனுபவித்துவரும் நிலையில்,  அதுகுறித்த பேச வக்கற்ற அரசு, முந்தைய ஆட்சியின் பொருளாதார வளர்ச்சி  குப்பையை கிளறிக்கொண்டிருக்கிறது.  தானே மக்களின் எதிரி என்பதை  ஜீரணிக்க முடியாமல், முந்தைய காங்கிரஸ் அரசை எதிரியாக்குவதில் முனைப்பாக இருக்கிறது மோடி அரசு. அதற்காகத்தானே வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தோம் என்கிற எளிய கேள்வியை மக்கள் கேட்டால், என்ன பதில் சொல்லும் இந்த அரசு?

நூற்றுக்கணக்கானோரை சாக வைத்து இலட்சக்கணக்கான சிறு தொழில்கள், தொழிலாளிகளை வேலையிழக்க வைத்த மோடியின் பணமதிப்பிழப்பு குற்றச் செயலுக்கு தண்டனை எப்போது?

– கலைமதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க