மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 30

மாக்சிம் கார்க்கி
ந்த நாளின் குறைப்பொழுதும் மங்கிய நினைவுகளாலும், தனது உடலையும் உள்ளத்தையும் பற்றியிருந்த களைப்பு மிகுதியாலுமே தாய்க்குக் கழிந்தது. அவள் முன்னால், அந்தக் குட்டி அதிகாரியின் உருவம், பாவெலின் தாமிர நிறமுகம், புன்னகைப் பூக்கும் அந்திரேயின் கண்கள் எல்லாம் நிழலாடின.

அவள் அறைக்குள்ளே அலைந்தாள், ஜன்னலருகே உட்கார்ந்தாள், தெருவை எட்டிப் பார்த்தாள், மீண்டும் எழுந்தாள். புருவத்தை மேலேற்றி வியந்தவாறு, சிறு சப்தம் கேட்டாலும் விழிப்புற்று, எங்கும் பார்த்தவாறு நடந்தாள், அல்லது எதையோ அர்த்தமற்றுத் தேடுவதுபோல் பார்த்தாள். அவள் தண்ணீர் குடித்தாள். தண்ணீர் அவளது தாகத்தையும் தணிக்கவில்லை. அவளது நெஞ்சுக்குள் தவிக்கும் ஏக்கத்தையும் தணிக்கவில்லை; குமைந்து நின்ற துயரத்தையும் அணைக்கவில்லை. அன்றையப் பொழுதே அவளுக்கு இருகூறாகத் தோன்றியது. அதன் முதற் பகுதிக்கு அர்த்தம் இருந்தது; இரண்டாம் பகுதியிலே அந்த அர்த்தமெல்லாம் வற்றிச் சுவறி வறண்டு போய்விட்டது. வேதனை தரும் சூன்ய உணர்ச்சி அவள் மனத்தில் மேலோங்கியது. அவள் தனக்குத்தானே ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டாள்.

”இப்போது என்ன?”

மரியா கோர்கனவா அவளைப் பார்க்க வந்தாள். அவள் தன் கரங்களை ஆட்டிக்கொண்டு சத்தமிட்டாள், அழுதாள். உணர்ச்சிப் பரவசமானாள்; காலைத் தரையில் உதைத்தாள்; ஏதேதோ வாய்க்கு வந்தபடி திட்டினாள், சபதம் கூறினாள். யோசனை சொன்னாள். எதுவுமே தாயை அசைக்கவில்லை.

“ஆஹா! ஜனங்கள் எல்லோரும் போராடக் கிளம்பிவிட்டார்கள்! தொழிற்சாலை முழுவதுமே எழுச்சி பெற்றுவிட்டது. ஆமாம், தொழிற்சாலை முழுவதும்தான்!” என்று மரியாவின் கீச்சுக்குரல் கேட்டது.

“ஆமாம்” என்ற அமைதியோடு தலையை ஆட்டிக்கொண்டு சொன்னாள் தாய். ஆனால் அவளது கண்கள் கடந்த காலத்தை, பாவெலோடும் அந்திரேயோடும் மறைந்துபோன சகலவற்றையும் நினைத்து நிலைகுத்தி நின்றன. அவளால் அழ முடியவில்லை. அவளது இதயம் வற்றி மெலிந்து வறண்டு போயிற்று. அவளது உதடுகளும் வறண்டு போயின. அவளது வாயில் ஈரப்பசையே இல்லை. அவளது கரங்கள் நடுங்கின. முதுகெலும்புக் குருத்துக்கள் குளிர் உணர்ச்சி குளிர்ந்து பரவியது.

அன்று மாலை போலீஸ்காரர்கள் வந்தார்கள். அவள் அவர்களை வியப்பின்றிப் பயமின்றிச் சந்தித்தாள். அவர்கள் ஆரவாரமாக உள்ளே நுழைந்தார்கள். ஆத்ம திருப்தியும் ஆனந்தமும் கொண்டவர்களாக அவர்கள் தோன்றினார்கள். அந்த மஞ்சள் முக அதிகாரி தனது பல்லை இளித்துச் சிரித்துக்கொண்டே பேசினான்:

“சௌக்கியமா? நான் இப்போது சந்திப்பது மூன்றாவது முறை, இல்லையா?”

அவள் பேசவில்லை. வெறுமனே தனது வறண்ட நாக்கை உதடுகளின் மீது ஒட்டினான். அந்த அதிகாரி அவளுக்கு ஏதேதோ உபதேச வார்த்தைகளைச் சொன்னான். பேசுவதில் அவன் ஆனந்தம் காண்பதாக அவள் உணர்ந்தாள். ஆனால் அவனது பேச்சு அவளைப் பீதியுறச் செய்யவில்லை. அந்த வார்த்தைகள் அவளைப் பாதிக்கவே இல்லை. ஆனால் அவன், ”கடவுளுக்கும் ஜாருக்கும் உன் மகன் சரியான மரியாதை காட்டாது போனதற்கு, அதை நீ அவனுக்குக் கற்றுக் கொடுக்காமல் போனதற்கு, உன்னைத்தான் குற்றம் சொல்ல வேண்டும், அம்மா” என்று சொன்ன பிறகு மட்டும் அவள் கதவருகே தான் இருந்த இடத்தில் நின்றவாறே கம்மிய குரலில் பதில் சொன்னாள்.

படிக்க:
அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !

”எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள். அவர்கள் அந்தக் கரடுமுரடான மார்க்கத்தில் செல்லும்போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி அவர்கள் தண்டிப்பார்கள்.”

“என்ன?” என்று கத்தினான் அதிகாரி. “உரக்கப் பேசு.”

“நான் எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள் என்று சொன்னேன்” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய்.

அவன் ஏதேதோ கோபத்தோடும் விறுவிறுப்போடும் முணுமுணுத்துக் கொண்டான். ஆனால் அவனது வார்த்தைகள் அவளுக்குக் கேட்கவில்லை. மரியர் கோர்சுனவா அன்று நடந்த சோதனைக்கு ஒரு காட்சியாக அழைத்து வரப்பட்டாள். அவள் தாய்க்கு அடுத்தாற்போல் நின்றாள், எனினும் அவள் தாயைப் பார்க்கவில்லை. எப்போதாவது அந்த அதிகாரி அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டான். உடனே அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டு அந்த ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னாள்:

”எனக்குத் தெரியாது. எசமான்! நான் ஒன்றுமே தெரியாதவள். ஏதோ வியாபாரம் செய்து பிழைக்கிறேன். எதைப் பற்றியும் தெரியாத முட்டாள் ஜென்மம் நான்!”

”நாவை அடக்கு!” என்று மீசையைத் திருகிக்கொண்டே உத்தரவிட்டான் அந்த அதிகாரி. மீண்டும் அவள் தலைவணங்கினாள். ஆனால் குனிந்து வணங்கும்போது அவள் தன் மூக்கை மட்டும் அவனுக்கு நேராக நிமிர்த்திக் காட்டி, ”இவனுக்கு வேணும்” என்று அவள் தாயிடம் மெதுவாகச் சொன்னாள்.

பிறகு பெலகேயாவைச் சோதனை போடும்படி அவன் அவளுக்கு உத்தரவிட்டான். அந்த உத்தரவைக் கேட்டு அவள் விழித்தாள்; அதிகாரியை வெறித்துப் பார்த்தாள். பிறகு பயந்துபோன குரலில் சொன்னாள்:

“ஐயோ! எனக்கு இந்த விவகாரமெல்லாம் எப்படியென்று தெரியாதே, எசமான்!”

அவன் தரையை ஓங்கி மிதித்துக் கொண்டு அவளை நோக்கிச் சத்தமிட்டான். மரியா, தன் கண்களைத் தாழ்த்தினாள்; தாயிடம் மெதுவாகக் கூறினாள்,

“சரி அம்மா, நீ உன் பொத்தான்களைக் கழற்று. பெலகேயா நீலவ்னா?”

தாயின் ஆடையணிகளைத் தடவிச் சோதனை போட்டபோது, குருதியேறிச் சிவந்த அவளது முகத்தில் அவமான உணர்ச்சி பிரதிபலித்தது.

“பூ! நாய்ப்பிறவிகள்” என்று அவள் முணுமுணுத்துக் கொண்டாள்.

“நீ என்ன சொல்லுகிறாய்?” என்று அந்த அதிகாரி சோதனை நடந்த இடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டான்.

“இந்தப் பெண் பிள்ளைகள் விஷயம், எசமான்!” என்று பயந்த குரலில் முனகினாள் மரியா.

கடைசியாக அந்த அதிகாரி தான் காட்டிய தஸ்தாவேஜுகளில் தாயைக் கையெழுத்திடச் சொன்னான். அவளது அனுபவமற்ற கை பெரிய பெரிய மொத்தை எழுத்துக்களில் கையெழுத்திட்டது.

“பெலகேயா விலாசவா, ஒரு தொழிலாளியின் விதவை மனைவி.”

“நீ என்ன எழுதித் தொலைத்திருக்கிறாய்? இதை ஏன் எழுதினாய்?” என்று அந்த அதிகாரி பல்லை இளித்துக் கொண்டு கத்தினான். பிறகு சிறு சிரிப்புடன் சொன்னான்:

“காட்டுமிராண்டி ஜனங்கள்.”

அவர்கள் போய்விட்டார்கள். தாய் ஜன்னலருகேயே நின்றாள்; அவளது கைகள் மார்பின் மீது குறுக்காகப் படிந்து பற்றியிருந்தன. அவள் தன் கண்களை இமை தட்டாமல், எதையுமே காணாமல், வெறுமனே விழித்துக்கொண்டு நின்றாள். அவளது புருவங்கள் உயர்ந்திருந்தன. உதடுகள் இறுகியிருந்தன. கடைவாய்த் தாடைகள் இறுகி ஒன்றோடொன்று அழுத்திக் கடித்துக்கொண்டிருந்தன. அந்தக் கடியின் வேதனையையும் அவள் உணர்ந்தாள். மண்ணெண்ணெய் விளக்கில் எண்ணெய் வற்றி வறண்டது; திரி படபடத்துப் பொரிந்தது; சுடர் துடி துடித்தது. அவள் அதை ஊதியணைத்துவிட்டு, இருளிலேயே இருந்தாள். அவளது இதயத்தில் நிரம்பியிருந்த சூன்யமயமான ஏக்க உணர்ச்சியால், அவளது இருதயத் துடிப்புக் கூடத் தடைப்பட்டது. அப்படியே அவள் வெகுநேரம் நின்று கொண்டிருந்தாள். கண்களும் கால்களும் வலியெடுக்கும் வரை நின்றாள். மரியா ஜன்னலருகே வந்து போதை மிகுந்த குரலில் கூப்பிடுவதை அவள் கேட்டாள்.

”பெலகேயா, தூங்கிவிட்டாயா? பாவம், உனக்கு இப்படித் துன்பம் வரக்கூடாது. சரி, தூங்கு!”

தாய் தன் உடைகளை மாற்றாமலேயே போய்ப் படுத்துக்கொண்டாள். படுத்த மாத்திரத்திலேயே ஆழமான குளத்துக்குள் அமிழ்ந்து போவது போன்ற ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆளானாள்.

அவள் கனவு கண்டாள். நகருக்குச் செல்லும் ரஸ்தாக்கரையில், சேற்றுப் பிரதேசத்துக்கு அப்பால் தெரியும் ஒரு மஞ்சள் நிறமான மணற் குன்றிற்கருகே அவள் நடந்து சென்று கொண்டிருந்தாள். தொழிலாளர்கள் மண்வெட்டி எடுக்கும் ஒரு செங்குத்தான குன்றின் ஓரத்தில் பாவெல் நின்றுகொண்டிருந்தான். அவன் அந்திரேயின் அமைதியும் இனிமையும் நிறைந்த குரலில் பாடிக்கொண்டிருந்தான்,

துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

அவள் தன் நெற்றியை அழுத்திப் பிடித்தவாறு, தன் மகனைப் பார்த்துக்கொண்டே அந்தக் குன்றைக் கடந்து சென்றாள். நீலவானின் பகைப்புலத்தில் அவனது உருவம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் தோன்றியது. அவள் அவனருகே செல்ல நாணிக் கூசினாள். ஏனெனில் அவள் கர்ப்பமுற்றிருந்தாள்; அவளது கைகளில் இன்னொரு குழந்தை இருந்தது. அவள் மேலும் நடந்தாள், நடந்து கொண்டே வந்து, கடைசியில் குழந்தைகள் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்துக்கு வந்து சேர்ந்தாள். அங்கு எத்தனையோ குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் வைத்து விளையாடிய பந்து சிவப்பு நிறமாயிருந்தது. அவளது கையிலிருந்த சிசு அவள் கையை விட்டுத் தாவிக் குதித்து அந்தப் பந்தைப் பிடிக்க எண்ணியது. அழத் தொடங்கியது. அவள் அதற்குப் பால் கொடுத்தாள். திரும்பிப் பார்த்தாள். இப்போதோ அந்தக் குன்றின் மீது துப்பாக்கிச் சனியன்களை அவளது மார்புக்கு நேராக நீட்டியவாறு சிப்பாய்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவள் உடனே விடுவிடென்று அந்த மைதானத்தின் மத்தியிலிருந்த தேவாலயத்துக்கு ஓடி வந்தாள். அந்தத் தேவாலயம் வெண்மை நிறமாகவும், மேகங்களால் செய்யப்பட்டது போல் அளவிறந்த உயரத்துக்கு மேல் நிமிர்ந்து நிற்பதாகவும் இருந்தது. அங்கு யாரையோ சவ அடக்கம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தச் சவப்பெட்டி நீளமாகவும் கறுப்பாகவும் இறுக மூடியதாகவும் இருந்தது; மதகுருவும், பாதிரியாரும் வெள்ளைநிற அங்கிகளைத் தரித்தவாறு அங்குமிங்கும் உலவினார்கள். பாடினார்கள்:

உயிர்த்தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார்
உயிரிழந்த கிறிஸ்து நாதர்……

பாதிரியார் பரிமள கள்பங்களைத் தூவியபோது, அவளைப் பார்த்துத் தலைவணங்கிப் புன்னகை செய்தார். அவரது தலைமயிர் செக்கச் சிவந்து பிரகாசித்தது. அவரது உற்சாகக் களைபொருந்திய முகம் சமோய்லவின் முகம் போலிருந்தது. அந்தத் தேவாலயத்தின் கோபுரக் கலசங்களிலிருந்து சூரிய கிரணங்கள் விழுந்தன. அந்தக் கிரணங்கள் வெள்ளை வெளேரெனக் கீழ்நோக்கி கம்பளம்போல் விழுந்தன.

தேவாலயத்தின் இருபுறத்துப் பீடங்களிலிருந்தும் பையன்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்:

உயிர்த்தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார்!
உயிரிழந்த கிறிஸ்து நாதர்……

மண்ணெண்ணெய் விளக்கில் எண்ணெய் வற்றி வறண்டது; திரி படபடத்துப் பொரிந்தது; சுடர் துடி துடித்தது. அவள் அதை ஊதியணைத்துவிட்டு, இருளிலேயே இருந்தாள். அவளது இதயத்தில் நிரம்பியிருந்த சூன்யமயமான ஏக்க உணர்ச்சியால், அவளது இருதயத் துடிப்புக் கூடத் தடைப்பட்டது.

தேவாலயத்தின் மத்தியில் வந்து சட்டென்று நின்றவாறு அந்த மதகுரு திடீரெனக் கத்தினார்.

”அவர்களைக் கைது செய்!” மதகுருவின் வெள்ளை நிற அங்கிகள் மறைந்துவிட்டன. அவரது மேலுதட்டில் வெள்ளி நிற மீசை தோன்றியது. எல்லோரும் ஓடத் தொடங்கினார்கள், பாதிரியாரும் கூட பரிமளப் பொடியை ஒரு மூலையிலே எறிந்துவிட்டு, தன் தலையை ஹஹோல் பற்றிப் பிடித்துக் கொள்வது மாதிரி தமது தலையைப் பிடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தார். ஓடிச் செல்லும் ஜனங்களின் காலடியில் தன் கையிலிருந்த குழந்தையை நழுவ விட்டுவிட்டாள் தாய். அவர்களோ அதை மிதித்து நசுக்காது விலகி விலகி ஓடினார்கள். அந்தக் குழந்தையின் திகம்பரக் கோலத்தையே பயபீதி நிறைந்த கண்களோடு அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு முழங்காலிட்டு, அவர்களை நோக்கிக் கத்தினாள்:

“குழந்தையை உதறிச் செல்லாதீர்கள்! இவனையும் உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்!”

உயிர்த்தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார்!
உயிரிழந்த கிறிஸ்து நாதர் …….

என்று சிரித்துக் கொண்டும், கைகளைப் பின்புறமாகக் கோத்தவாறும் பாடத் தொடங்கினான் ஹஹோல்.

அவள் குனிந்து குழந்தையை எடுத்தாள். மரக்கட்டைகளைப் பாரம் ஏற்றிய ஒரு வண்டியில் அந்தக் குழந்தையை வைத்தாள். அந்த வண்டிக்கு அருகே சிரித்துக் கொண்டே மெதுவாக நடந்து வந்தான் நிகலாய்.

“அப்படியானால் அவர்கள் எனக்குக் கொஞ்சம் கடினமான வேலையைத்தான் கொடுத்துவிட்டார்கள்” என்றான் அவன்.

தெருக்கள் எல்லாம் அசுத்தமாயிருந்தன. வீட்டு ஜன்னல்களிலிருந்து ஜனங்கள் எட்டிப்பார்த்தார்கள், கூச்சலிட்டார்கள். சீட்டியடித்தார்கள், கைகளை வீசினார்கள். வானம் நிர்மலமாயிருந்தது. சூரியன் பிரகாசமாகக் காய்ந்தது; எங்குமே நிழலைக் காணோம்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க