“நன்மை, கருணை மற்றும் நான்” என்கிற பழைய பி.பி.சி நகைச்சுவை நாடகத்தில் ஒரு காட்சி நினவுக்கு வருகிறது. அந்த நாடகத்தில் ஒரு தந்தை தனது பிள்ளைகள் இயேசு மற்றும் சாண்டா கிளாசின் மேல் கொண்டிருக்கும் அளவுகடந்த உற்சாகத்தை இந்தியத்தன்மை என விளித்து இகழ்வார். இன்றைய காலகட்டத்தில் கூர்மையடைந்து வரும் மேலாதிக்க மனப்போக்கை வெளிப்படுத்திக் காட்டும் நுட்பமான பகடி அது.
என்றாலும் இன்றைய சூழலில் அந்த தந்தையே திகைத்துப் போகக் கூடிய கேள்வி ஒன்று உள்ளது; முகலாயர்களை என்னவென்பது? இத்தனைக்கும் அவர் பகடி செய்த இந்திய அரசியலின் ஒரு அங்கம் முகலாயர்கள். ஆனால், எந்தளவுக்கு உலகத்தில் உள்ள நல்லவைகள் மற்றும் மேன்மையானவைகளின் கருவறையாக இந்தியா கருதப்படுகின்றதோ அதே அளவுக்கு முகலாயர்கள் வெளிநாட்டினராகவே கருதப்படுகின்றனர்.
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பரந்து விரிந்து கிடக்கும் ஃபெர்கானா பள்ளத்தாக்கில் பாபர் பிறந்தார் என்பது உண்மை தான். அவரது வழித்தோன்றல்களால் நிறுவப்பட்ட பாபரின் ஓவியங்களிலும் கூட இடுங்கிய கண்களோடும், அரைகுறை தாடியோடும் தான் காட்சியளிக்கிறார். பின்னாட்களில் அவரால் கைப்பற்றப்படப் போகும் இந்திய சமவெளிக்குச் சொந்தமான எந்த அடையாளங்களும் அந்த ஓவியங்களில் தெரிவதில்லை.

பாபரும் சரி அவரது சகாக்களான பிரபுக்களும் சரி, ஹிந்துஸ்தானத்தில் வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் அல்ல.
தன்னுடைய மத்திய ஆசிய தளபதிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் அவர்களைக் கொண்டு மாற்று மத நம்பிக்கை கொண்ட நிலப்பரப்பை ஆள்வதற்காகவும் ஒருவிதமான ஒழுக்கவாத கட்டுப்பாட்டை நிறுவும் விதமாக பாபர் தனது குடிப்பழக்கத்தை நிறுத்திக் கொண்டார் என்பதும் தனது மதுக் கோப்பைகளை உடைத்துப் போட்டார் என்பதும் உண்மை. அதே போல் தனது சொந்த ஊரில் விளையும் ஒருவகையான தர்பூசணிப் பழங்கள் வண்டிகளில் வந்து இறங்கியதைக் கண்டு பாபர் கண்ணீர் வடித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை இந்தப் பழங்கள் கிடைக்காமல் போனது மதுவருந்த முடியாமல் போனதற்கு இணையான சோகம்.
தனது சுயசரிதையில், ”மற்றவர்கள் மனம் வருந்திய பின் மது குடிப்பதில்லை என சங்கல்பம் செய்கின்றனர்.. நானோ மது குடிப்பதில்லை என சங்கல்பம் செய்தபின் மனம் வருந்தினேன்” என எழுதியுள்ளார் பாபர். ஆனால், வெறுமனே குடிப்பதற்கோ உண்பதற்கோ மாத்திரம் பாபர் இந்தியாவுக்கு வரவில்லை; இங்கேயே தங்கும் முடிவில் வந்து சேர்ந்தார். இங்கே எப்படி வாழ்ந்தார் என்பது அவரின் வழித்தோன்றல்களின் கையில்தான் இருந்தது. பாபர் இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றிய ஐந்தாண்டுகளில் இறந்து போனார்; அவரது வாரிசுகளோ மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தினர்.
படிக்க :
♦ வரலாறு : ஷாஜகானை விஞ்சிய இந்து முஸ்லீம் காதலர்கள் !
♦ இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?
அந்த வெற்றியின் இரகசியத்தை அவர்களின் முகங்களில் இருந்தே கூட புரிந்து கொள்ளலாம். பாபரில் இருந்து அவுரங்கசீப் வரையிலான ஆறு முகலாய மன்னர்களின் படங்களை வரிசையாக வைத்துப் பாருங்கள்; நீங்கள் மிகத் தெளிவான வரலாற்று ரீதியிலான மாற்றங்களை அந்தப் படங்களில் பார்ப்பீர்கள். அவர்களுடைய பூர்வீக இடுங்கிய கண்களை மெல்ல மெல்ல இழந்து வாதுமைக் கொட்டை போன்ற கண்களைப் பெற்றனர். மூக்கு நீண்டு தனது வடிவத்தை மாற்றிக் கொண்டது. முகத்தில் வளரும் மயிர்கள் தடிமனாகவும் அடர்த்தியாகவும் ஆகின.
இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. முதலிரண்டு முகலாய மன்னர்களான பாபர் மற்றும் ஹுமாயுன் ஆகியோர் தான் மத்திய ஆசிய தாய்க்குப் பிறந்தவர்கள். அக்பர் மற்றும் அவுரங்கசீப் பெர்சிய பெண்களுக்குப் பிறந்தவர்கள். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகான் ஆகியோர் ராஜபுத்திர பெண்களுக்குப் பிறந்தனர். தலைமுறைகள் செல்லச் செல்ல அவர்களின் அங்க லட்சணங்கள் மட்டும் மாறவில்லை; அவர்களின் உணவுப் பழக்கமும் மொழியும் கூட மாறின.

உதாரணமாக பாபர் தனது சுயசரிதையை தற்போது அழிந்து போய் விட்ட சாகதாய் எனும் துருக்கிய மொழி ஒன்றில் எழுதியுள்ளார். அதில் அந்த ஊர் தர்பூசணியைப் பற்றி நிறைய குறிப்பிடுகிறார். அவரது எள்ளுப் பேரன் ஜஹாங்கிர் தனது சுயசரிதையில் மாம்பழங்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளார். ஜஹாங்கீரின் சுயசரிதையான ஜஹாங்கீர்நாமா-வை ஹிந்துஸ்தானி கலந்த பெர்சிய மொழியில் எழுதியுள்ளார். காபூலுக்கு ஒருமுறை சென்ற ஜஹாங்கீர், அங்கே பாபர்நாமாவின் சில பக்கங்களைப் புரட்டி விட்டு அதைப் படிக்க முடிந்ததற்காக பெருமிதப்பட்டுக் கொள்கிறார். “என்னதான் நான் ஹிந்துஸ்தானத்தில் வளர்ந்திருந்தாலும், துருக்கிய மொழியை எழுதுவதையும் படிப்பதையும் இன்னும் மறக்கவில்லை” எனக் குறிப்பிடுகிறார் ஜஹாங்கீர்.
ஜஹாங்கிரின் வாரிசுக்கோ தனது பூர்வீக மொழியைப் பற்றி எந்த அக்கறையோ ஆர்வமோ கிடையாது. அதே போல் கடைசி முகலாய மன்னனான பகதூர் ஷா ஜாபர் இந்த துணைக்கண்டத்திலேயே உருவான உருது மொழியில்தான் புலமை பெற்றிருந்தார். அதே போல் இந்தியாவின் பண்டிகைகளும் முகலாய நாட்காட்டியில் முக்கிய இடங்களைப் பிடித்தன. காஷ்மீரத்தைச் சேர்ந்த படகுகளையும், ஆற்றங்கரைகளையும், வீட்டுக் கூரைகளையும் தீபாவளிப் பண்டிகை நாளன்று விளக்குகளால் அலங்கரிக்க அக்பர் உத்தரவிட்டதைக் குறித்து அக்பர்நாமாவில் குறிப்புகள் உள்ளன.
அதேபோல் ஜஹாங்கிரின் ஓவியம் ஒன்றில் அவர் “ஏழ்மையை” ஒழிப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதில் ஏழ்மையின் குறியீடாக ஒரு வயதான மனிதர் வருகிறார் – அவரது பெயர் “தாலிதார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாலிதார் என்பது இந்துக்கள் நம்பும் தரித்திராதேவி என்பதில் இருந்து உருவகம் செய்யபப்ட்டது. அதாவது தீபாவளி சமயத்தில் சிறீதேவியான லட்சுமியை வீட்டுக்கு அழைப்பதும், தரித்திரத்தை விரட்டுவது என்பதும் ஒரு நம்பிக்கை.
மற்றொரு ஓவியம் முகலாய பேரரசர் எந்தளவுக்கு இந்து நடைமுறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை தெளிவாக விளக்குகிறது. அந்த ஓவியத்தில் பேரரசர் ஜஹாங்கீர் மேல்சட்டை அணியாமல், வெறும் கோவணம் போல் ஒன்றைக் கட்டிக் கொண்டு பத்மாசனத்தில் ஒரு இந்து துறவியைப் போல் அமர்ந்துள்ளார். இதைப் பற்றி சொல்லும் போது வரலாற்றாசிரியர் எப்பா கோச், “ஒரு இசுலாமிய மன்னனைக் குறித்த கற்பனை எந்தளவுக்கு இந்தியத்தன்மையோடு (தீவிரமானதும் கூட) இருக்க முடியும் என்பதற்கு இந்த ஓவியமே உச்சபட்ச அடையாளம்” என்கிறார்.

எனினும், கோச்சின் சொந்த வார்த்தைகளிலேயே ஏன் ஜஹாங்கீரின் அரசு அடிப்படையிலேயே வெளியாருடையது எனக் கருதப்பட்டது என்பதற்கான சிறிய குறிப்பு உள்ளது. அவர் “இந்திய” என்கிற வார்த்தைக்கு எதிராக “அந்நிய” என்கிற வார்த்தையை வைக்கவில்லை; மாறாக “இசுலாமிய” என்கிற வார்த்தையை வைக்கிறார். முகலாயர்கள் மாம்பழங்களை இரசித்திருக்கலாம்; தீபாவளி, தசரா, சிவராத்திரி, ராக்கி போன்ற படிகைகளைக் கொண்டாடி இருக்கலாம்; அவர்களின் உடலில் மத்திய ஆசிய இரத்தத்தை விட ராஜபுத்திர ரத்தமே அதிகம் ஓடியிருக்கலாம் – ஆனால் அவர்கள் ஒருநாளும் இந்துக்கள் ஆகிவிடமாட்டார்கள்.
படிக்க:
♦ ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !
♦ அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !
“நன்மை, கருணை மற்றும் நான்” நாடகத்தில் வரும் தந்தையைப் போல் சொல்வதானால்… “இதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாரேன்”: தாஜ்மகாலை உடைத்து நொறுக்க வேண்டும் என்கிற அரசியலுக்கு ஃபெர்கானாவின் மேல் எந்த ஆத்திரமோ துவேஷமோ கிடையாது. சொல்லப் போனால், வெகு சில இந்தியர்களுக்குத் தான் அப்படி ஒரு நகரம் இருப்பதே தெரிந்திருக்கும். எனவே முகலாயர்களின் பூர்வீக நாட்டின் மீது எந்த வெறுப்பும் இல்லை; மாறாக அவர்களின் மதம்தான் சிக்கல் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அவர்கள் தங்களுக்குப் பின் இந்தியாவின் அடையாளமாக கலை, கலாச்சாரம், கட்டிடங்கள், உணவு என நிறைய விட்டுச் சென்றிருக்கலாம்; ஆனால், அவர்களது “இந்தியத்தன்மை” எப்போதும் சந்தேகிக்கப்பட்டு விவாதிக்கப்படும்; பல்வேறு நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, கட்டிடங்கள் இடிக்கப்படுவதன் மூலம் முகலாயர்களுக்குப் பாடம் புகட்டுப்படுவதற்குக் காரணம் அவர்களின் “இசுலாமியத்தன்மை”.
நவீன இந்தியாவின் மாபெரும் துயரம் என்பது நமது கடந்த காலத்திற்கு நிகழ்கால அரசியலின் மேல் இருக்கும் பிடிமானம் தான். ஆனால், இது போன்ற சின்னத்தனங்கள்தான் இந்தியனாக இருப்பதற்கான அடையாளமோ?
தமிழாக்கம்:
கட்டுரையாளர் : பார்வதி சர்மா
நன்றி : scroll.in