பிரதமர் நரேந்திர மோடி 2017-ம் ஆண்டில் தொடர்ச்சியாக கூறிய வரலாற்று சிறப்புமிக்க கூற்றுகள் பெரும்பாலும் முழு பொய்களாலும் – அரை உண்மைகளாலும் நிறைந்தவையே. அதற்கான சான்றுகள் இதோ..
1. இந்தியாவின் முதல் மெட்ரோவில் பயணம் செய்தவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி-யும் ஒருவர்:

டெல்லி மெஜந்தா மெட்ரோ வழித்தடத்தை டிசம்பர் 25-ம் தேதி துவக்கி வைத்த பிரதமர் மோடி, 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோ சேவையான டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி-யும் ஒருவர் என்று பேசினார். இது தவறு.
இந்தியாவின் முதல் மெட்ரோ சேவையாக அடிக்கல் நாட்டப்பட்ட கல்கத்தா மெட்ரோ 1972-ம் ஆண்டு இந்திராகாந்தியால் தொடங்கப்பட்டு 1984-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. டெல்லி மெட்ரோ இந்தியாவின் இரண்டாவது மெட்ரோ சேவை.
2. முன்னாள் பிரதமர் மன்மோகனும் பாகிஸ்தான் ஹை-கமிசனரும் மணி சங்கர் ஐயர் இல்லத்தில் சந்தித்ததையும், குஜராத் தேர்தலையும் இணைத்து பேசியது:
குஜராத் தேர்தலை முன்னிறுத்தி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி தீபக் கபூர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயரின் இல்லத்தில் பாகிஸ்தான் ஹை-கமிசனரிடம் சதியாலோசனை செய்ததாக மோடி கூறினார். அந்த சந்திப்பையும் குஜராத் தேர்தலையும் இணைத்து அவர் பேசியது ஒரு புயலையே கிளப்பி விட்டது.
குஜராத் தேர்தல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அந்த சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் இராணுவ தளபதி தீபக் கபூர் கூறியிருந்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் வி.பி.அமித் அன்சாரி ஆகியோரது அர்பணிப்பு உணர்வை பிரதமர் சந்தேகிக்கவில்லை என்று மேலவைத் தலைவரும் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி விளக்கம் கொடுத்தார்.
3. நேரடி மானிய பரிமாற்ற திட்டத்தை நாங்கள்தான் துவக்கினோம்:
நேரடி மானிய பரிமாற்ற திட்டத்தை தன்னுடைய அரசுதான் தொடங்கியதாக கர்நாடகாவில் நடத்திய ஒரு பேரணியில் பேசும்போது மோடி கூறினார். இதன் மூலம் இடைத்தரகர்களை அகற்றி 57,000 கோடி ரூபாய் வரை தன்னுடைய அரசு மிச்ச்சப்படுத்தியதாக கூறினார்.
ஆனால் இந்த கூற்றும் சறுக்கி விட்டது. நேரடி நன்மைகள் பரிமாற்ற திட்டமானது 2013-ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் அமலுக்கு வருவதாக அந்த ஆண்டு வரவு செலவு அறிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டது. மேலும் இத்திட்டமானது நடப்பாண்டு வரை வளர்ந்து வருவதை பிரதமர் அலுவலகம், 2017-ம் ஆண்டில் குறிப்பிட்டு இருந்தது.
4. காங்கிரசையும் முகலாயர்களையும் பற்றி மணி சங்கர் அய்யர் பேசியதை திரித்தது:
குஜராத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மற்றுமொரு பொய்யான கூற்று வெளிவந்தது. காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர், காங்கிரசு கட்சியை முகலாய வம்சத்துடன் ஒப்பிட்டதாக மோடி தவறாக கூறினார். புகழ் பெற்ற காங்கிரசு தலைவர்கள் கூட கட்சிதான் குடும்பம், குடும்பம்தான் கட்சி என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள் என்று மோடி தனக்கே உரிய சிறப்புடன் திரித்துக் கூறினார்.
ஆயினும், ஐயரின் கூற்று தவறாக திரிக்கப்பட்டது அம்பலமானது. மோடியும், சில வெகுஜன ஊடகங்களும் திரித்து கூறுவது போல காங்கிரசு தலைவராக இராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதை அவுரங்கசீப் அரசாட்சியுடன் அவர் ஒப்பீடு செய்யவில்லை. உண்மையில், முகலாயர்களின் வம்ச ஆட்சியையும் காங்கிரசு கட்சிக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தல் ஜனநாயக நடைமுறை ஆகியவற்றிற்கும் இடையேயான வேறுபாட்டையே அவர் கோடிட்டு காட்டியிருந்தார்.
5. உபியில் ஈகைத் திருநாளின் போது தீபாவளியை விட அதிகமான மின்சாரம் வழங்கப்பட்டது:
சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உபி அரசு தீபாவளிக்கு வழங்கியதை விட ஈகைத் திருநாளில் அதிக அளவு மின்சாரத்தை வழங்கியதாக உத்திரப்பிரதேச உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக நடந்த பேரணி ஒன்றில் மோடி கொளுத்தி போட்டார். ரமலானின் போது வழங்கப்படும் மின்சாரம் தீபாவளியின் போதும் வழங்கப்பட வேண்டும் அதில் பாகுபாடு எதுவும் காட்டக்கூடாது என்று கூறினார்.
ஆனால் அதிகாரபூர்வமான இணையதளத்திலுள்ள தகவல்கள் இந்த கூற்றை தவறாக்கி விட்டன. 2016, ஜூலை 6 –ம் தேதி ஈகைத்திருநாளின் போது 13,500 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டது . அதே நேரத்தில் 2016, நவம்பர், 28-ம் தேதி தீபாவளி பண்டிகையின் போது ஐந்து நாட்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் 15,400 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டது. தீபாவளி சமயத்தில் மின்சாரப் பற்றாக்குறை நிகழவில்லை. மேலும் ஈகைத் திருநாளை விட அதிக அளவு மின்சாரமும் வழங்கப்பட்டிருப்பதை புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.
6. கான்பூர் இரயில் விபத்தும் ஐ.எஸ்.ஐ தொடர்பும்
கான்பூரிலுள்ள புகார்யாவுக்கு (Pukhraya) அருகே 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தூர்-பாட்னா தொடர் வண்டி தடம் புரண்டதில் 14 பெட்டிகள் கவிழ்ந்து 150 பேர்கள் பலியானார்கள். உபி உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக நடைப்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய மோடி, தொடர்வண்டி தடம் புரண்டதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தான் காரணம் என்று அடித்துவிட்டார். பின்னர் உபி போலிஸ் டி.ஜி.பி ஜாவீத் அகமதாலும் இரயில்வே பொது மேலாளராலும் இந்த பலூன் உடைக்கப்பட்டது. ஐ.எஸ்.ஐ-க்கும் தொடர் வண்டி விபத்துக்கும் இடையேயான தொடர்புக்கு ஆதாரம் எதுவுமில்லை என்று உபி போலீசு பதிவு செய்தது.
7. உபி மாநிலம் குற்றங்களில் முதலிடம்:
ஒவ்வொரு நாளும் 24 பாலியல் வன்முறைகள், 21 முறை பாலியல் வன்முறை முயற்சிகள், 13 கொலைகள், 33 ஆட்கடத்தல்கள், 19 கலவரங்கள் மற்றும் 136 கொள்ளைகள் என உத்திரபிரதேசத்தில்தான் நாட்டிலேயே அதிக அளவு குற்றங்கள் நடந்ததாக அங்கு நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் மோடி கூறினார்.
ஆயினும் ஒரு சிறு உண்மையே மோடியின் பொய்யை அம்பலப்படுத்தி விடுகிறது. தேசிய குற்ற பதிவுகள் ஆணையத்தின் படி 100,000 நபர்களுக்கு எத்தனை குற்றங்கள் நடக்கின்றன என்று தான் பதிவு செய்யப்படுகிறதே தவிர நாள் அடிப்படையில் அல்ல. பெரிய மாநிலங்களில் அதிக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாலும் சிறிய மாநிலங்களை அதோடு ஒப்பிட இலட்சம் பேரில் எத்தனை குற்றங்கள் நடக்கின்றன என்று கணக்கிடுவதுதான் சிறந்தது. ஆணையத்தின் 2015-ம் ஆண்டு அறிக்கையின் படி மோடி கூறியது பொய் என்பது அம்பலமானது. ஆணையத்தின் கணக்கீட்டின் படி ஒருநாள் குற்றங்கள் என்று கணக்கிட்டாலும் உபியை விடவும் வேறு மாநிலங்களில் குற்ற எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. [அந்த மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது]
8. பருவ மழை பொய்த்ததால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க காப்பீடு திட்டத்தை தொடங்கியது:
இயற்கை காரணங்களுக்காக பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கும் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தை நாங்கள்தான் தொடங்கினோம். இது போன்ற காப்பீடு திட்டத்தை இதற்கு முன்பு யாரேனும் கண்டதுண்டா? என்று உத்திரபிரதேசத்தில் பாரபங்கியில் நடைபெற்ற ஒரு பேரணியில் மோடி பேசினார்.
மோடியின் கூற்று தவறாக இருந்தது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் படி அதற்கு முன்னரும் வானிலை அடிப்படையிலான காப்பீடுத் திட்டம் (Weather-Based Crop Insurance Scheme) இருந்தது. இந்த திட்டம் 2003-ம் ஆண்டு காரிஃப் (Kharif) பருவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகபடியான மழை, வறட்சி மற்றும் பனியால் ஏற்படும் பாதிப்புகளுக்காக இந்த காப்பீடு வழங்கப்பட்டது.
9. தலித்துகளுக்கு எதிராக உ.பியில் அதிகபடியான வன்முறைகள்:
இந்தியாவில் எங்கேனும் தலித்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகம் நிகழ்கிறது என்றால் அது உபிதான் என்று பாரபங்கியில் 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஒரு பேரணியில் மோடி கூறினார். ஹிந்துஸ்தான் டைம்ஸின் படி மோடியின் கூற்று தவறு. தேசிய குற்ற தகவல்கள் ஆணையத்தின் படி குற்றங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம் பேருக்கு எத்தனை என்றுதான் கணக்கிடப்படும். மாறாக எத்தனை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது என்ற அடிப்படையில் அல்ல.
உபியில் தலித்துகளுக்கு எதிராக ஒரு இலட்சத்திற்கு 20 குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் ஆணையத்தின் தகவலின் படி உபியை விட 11 மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக குற்றங்கள் மோசமாக நடக்கின்றன. ஒரு இலட்சத்திற்கு 57 குற்றங்கள் என பாஜக ஆளும் இராஜஸ்தான்தான் தலித்துக்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடத்தில் இருக்கிறது.
10. இளநீர் விற்பனை மற்றும் உருளைக்கிழங்கு தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாக இராகுல் காந்தி கூறினார்:
இளநீரை இலண்டனில் விற்பனை செய்ய மணிப்பூர் விவசாயிகளுக்கு உதவி செய்வதாக காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி கூறியதாக உ.பியில் 2017-ம் ஆண்டு மார்ச் மதத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் மோடி கூறினார். மேலும் விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் ஆலை அமைத்து கொடுப்பதாகவும் இராகுல் காந்தி கூறியதாக மோடி கூறினார்.
படிக்க:
♦ காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
♦ சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்
ஆனால் இராகுல் காந்தி இளநீரையோ அல்லது தேங்காயையோ குறிப்பிடவில்லை மாறாக அன்னாசி பழச்சாற்றைதான் குறிப்பிட்டார். அதே போல உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் ஆலை அமைப்பதாக கூறவில்லை மாறாக உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையைதான் இராகுல் காந்தி குறிப்பிட்டார்.
தமிழாக்கம்:
நன்றி: altnews