ல்வி முறையும், கல்வி நிலையங்களும் சமூக பொருளாதார – பண்பாட்டு அமைப்பின் வெளிப்பாடாக அமைகின்றன; அதே வேளையில் குறிப்பிட்ட சமூக – பொருளாதார – பண்பாட்டு அமைப்பினைக் காப்பாற்றுகின்றவையாகவோ அல்லது சிதைக்கின்றவையாகவோ இயங்குகின்றன. இந்த எடுகோளின் அடிப்படையில் நோக்கினால் பொது உடைமையாளர்கள் முன்மொழியும் புதிய சமூக – பொருளாதார – பண்பாட்டு அமைப்பு முற்றிலும் புதியதொரு கல்வி முறையைக் கோருகின்றது. எந்த புதியதொரு முறையும் தானாகவே தோன்றிவிடாது. குறிப்பிட்ட சமூக நடைமுறைத் தேவையினை உணரும் இயக்கங்களால், மனிதர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது.

இந்த வகையில் சோவியத் ஒன்றியத்தில் சோசலிச (சமூக உடைமை) முறையைக் கட்டியெழுப்புவதற்கு நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாகத் தொழிலாளர் – உழவர்களிடையே புதிய கல்வி இயக்கம் எழுந்தது. இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பியும், வளர்த்தும், மார்க்சிய – லெனினிய அடிப்படைகளைப் புதிய சூழல் தேவைக்கேற்ப கையாண்டும் படைப்பாற்றல் மிக்க தலைவராகக் குரூப்ஸ்காயா விளங்கினார். அவருடைய எழுத்துக்கள் பொது உடைமைக் கல்வி முறையை உருவாக்கும் நடைமுறையின் முதல் அனுபவங்கள் ஆகும். அவருடைய சில கட்டுரைகளைத் தொகுத்து நூலாக அளிக்கின்றோம். கற்றல் – கற்பித்தல் குறித்து மார்க்சிய – லெனினிய நோக்கில் ஆராயவும் ஒழுங்கமைத்து கொள்ள விரும்புவோருக்கு இவ்வெளியீடு மகிழ்ச்சி அளிக்கும். (நூலின் பதிப்புரையிலிருந்து)

நாடெழ்த கான்ஸ்தாந்தி நோவ்னா குரூப்ஸ்காயா (1869 – 1939) ரஷ்ய புரட்சியாளர்களுள் ஒருவர்; எழுத்தாளர்; கல்வியாளர். அவர் ரஷ்ய சமூக – ஜனநாயகக் கட்சியின் போல்சுவிக் குழு செயல்பாட்டுத் தலைவர்; சோவியத் ஒன்றிய போல்சுவிக் பொது உடைமைக் கட்சியின் மையக் குழு உறுப்பினர். குருப்ஸ்காயா புரட்சிக்கு முன் பல தொழிலாளர் குழுக்களுக்குக் கல்வி போதித்தார்; புரட்சிக்குப் பின் கம்சோல் என்றழைக்கப்பட்ட பொதுஉடைமை இளைஞர் சங்கத்தையும், இளம் தன்னார்வத் தொண்டர் படையினையும் கட்டியெழுப்பியவர். அவர் 1929 முதல் 1939 வரை சோவியத் ஒன்றியத்தின் இணை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். இவை எல்லாவற்றையும் விட குரூப்ஸ்காயா தோழர் லெனினின் ஆலோசகரும், இணையரும் என்பதால் உலகெங்கும் நன்கு அறியப்பட்டவர்.

புரட்சிக்கு முன்னும், புரட்சிக்குப் பின்னும் தொழிலாளர்களிடையேயும் உழவர்களிடையேயும் குரூப்ஸ்காயா கல்வி போதித்தார்; கல்வி இயக்கத்தை முன்னெடுத்தார். அவர் தொழிலாளர்களும், உழவர்களும் கல்வி பெறுதல் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நோக்கினார். அதனால் கல்வியின் உள்ளடக்கத்திலும், போதனை முறையிலும் தீவிரமான மாற்றத்தைக் கொண்டு வந்தார். மார்க்சிய அடிப்படைகளைப் புதிய கல்வி முறையை – பொதுஉடைமை கல்விமுறையை உருவாக்குவதற்கு வளமான முறையில் பயன்படுத்தியுள்ளார்.

படிக்க:
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !
வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி – நூல் அறிமுகம்

குரூப்ஸ்காயா 1917 முதல் 1936 வரை எழுதிய சில கட்டுரைகள், ஆற்றிய சில சொற்பொழிவுகள் ஆகியவற்றை கொண்டது ‘கம்யூனிஸ முறையில் இளைஞர்களைப் பயிற்றி வளர்த்தல்’ என்ற நூல். இந்நூலை மாஸ்கோ புரோகிரஸ் பதிப்பகம் 1960-களில் வெளியிட்டிருக்கலாம். வெளியிட்ட ஆண்டும், மொழிபெயர்ப்பாளர் பெயரும் நூலில் இல்லை. இந்நூலிலிருந்து எட்டுக் கட்டுரைகளைத் தொகுத்து ‘பொது உடைமைக் கல்வி முறை’ என்னும் நூலாக வெளியிடுகின்றோம்.

இத்தொகுப்பு நூலின் வாயிலாக மாக்சிய – லெனினியத்திற்கு குரூப்ஸ்காயா அளித்த சிறு பங்களிப்பையாவது நாம் அறிந்து கொள்ள முடியும்; அத்துடன் இந்நூல் மார்க்சிய லெனினிய நோக்கில் கற்றலையும் கற்பித்தலையும் முறைப்படுத்திக் கொள்ள சிறந்த வழிகாட்டுதலையும் வழங்குகிறது. (நூலின் அறிமுக உரையிலிருந்து, பக்.9-10)

புத்தகங்களிலிருந்து மட்டும்தான் அறிவு பெற முடியும் என்ற முடிவுக்கு நாம் எப்படியோ வந்துள்ளோம். வாழ்க்கையை எவ்வாறு பின்பற்றுவது, எவ்வாறு அதைக் கூர்ந்து நோக்கி ஆராய்வது, புதிய முறையில் வாழ்வது என்பது நமக்கோ, முன்னோடித் தலைவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ தெரிவதில்லை. ஆயினும் வாழ்க்கை என்றால் என்ன எனக் காட்டும் சுற்றுப்பயணங்களும் விளையாட்டுக்களும் உள்ளன. பள்ளிக்கு அப்பாற்பட்ட நமது வேலைகளில், வெளியிடங்களுக்குச் செல்லுவது போன்ற சமயங்களில் இயற்கை, மக்கள், வாழ்க்கை ஆகியவற்றை ஆராய வேண்டும். இதை நாம் கற்றுக் கொடுக்கவில்லை. நமது குழுக்கள் பெரும்பாலும் விளையாட்டு அல்லது நாடக மேடை சம்பந்தப்பட்ட செயல்களில் மட்டுமே ஈடுபடுகின்றன. (நூலிலிருந்து பக்கம் – 75)

பள்ளிக்கு அப்பால் செய்யும் வேலை மிகவும் முக்கியமானது. குழந்தைகளைச் சரியாக வளர்க்கவும், அவர்களின் சிறப்பான வளர்ச்சிக்குத் தேவையான வாய்ப்புகளை உண்டாக்கவும் அது உதவுகிறது. அவர்களது முன்முயற்சிக்கு நாம் ஆதரவு தர வேண்டும், அவர்கள் ஆக்க வேலைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகளைத் தரவேண்டும், அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். பெற்றோர் அடிக்கடி குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கிறார்கள்.

சினிமாக்களுக்கும் திரையரங்குகளுக்கும் அடிக்கடி செல்ல அவர்களை அனுமதிக்கிறார்கள். சினிமா குழந்தைகளைப் பதற்றப்படுத்துகிறது. அவர்களைக் கவனியுங்கள், ஒரு சினிமா படத்தைப் பார்த்தபிறகு அவர்கள் பெரும்பாலும் தம் தாயாருடன் முரட்டுத்தனமாகப் பேசுவதையும், தங்கள் வகுப்பு சகாக்களுடன் சண்டையிடுவதையும் நீங்கள் காணலாம். சிறுவர்கள் புரிந்து கொள்ளும், கண்டு மகிழும் சினிமாக்களை, அவர்களது கண்ணோட்டத்தை விரிவுபடுத்தும் சினிமாக்களை, அவர்களுக்குக் காட்ட வேண்டும். வயது வந்தோருக்கான படங்களைப் பார்க்கும் சிறுவர்கள் பெரும்பாலும் அவற்றைப் புரிந்து கொள்வதில்லை. ஆயினும் அவர்கள் நடிகர்களைப் பாவனை செய்ய முயலுகிறார்கள். சாப்ளின் நடித்த பட மொன்றில் மூக்கு திருகப்படுவதைக் கண்ட குழந்தைகள் திருப்புளியால் அவ்வாறு தாங்களும் செய்ய முயன்றதாகக் கேள்விப்பட்டேன். முக்கியமானது என்ன வென்றால் அவர்கள் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், நாம் அவர்கள் எண்ணங்களைச் சரியான பாதையில் திருப்பிவிட வேண்டும்.

சிறுவர்களின் தொழில் நுணுக்கக் குழுக்களைப் பரந்த முறையில் நாம் விரிவடையச் செய்ய வேண்டும், தொழிற்சாலைகள், மின்சார நிலையங்கள் போன்றவற்றுக்கு சென்று பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறுவர்கள் நாம் விரும்பியதைச் செய்வதற்கான வேலை அறைகள் ஒவ்வொரு கலாசார மாளிகையிலும் இருக்க வேண்டும்.

தங்களது பெற்றோர்கள் தொடக்கிய வேலைகளைத் தாங்கள் தொடர்ந்து செய்யும் வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும். தந்தையார் ஆரம்பித்தவற்றைக் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டுமென லெனின் விரும்பினார். மேலும் நன்கு போராட நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளுவார்கள், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என அவர் கூறுவது வழக்கம்.

குழந்தைகளுக்குத் தேவையான பயிற்சியை அளிப்பதிலும், அவர்கள் குணநலன்களை வளர்ப்பதிலும், உபயோகமாக இருக்க அவர்கள் கொண்டுள்ள விருப்பத்தை அதிகரிப்பதிலும், அவர்களைச் சமூக ஊழியர்களாயும் கூட்டத்தினராயும் கொண்டு வருவதிலும் மேலும் அதிக கவனம் செலுத்துங்கள். பலதிறன் பெற்றவர்களாக அவர்கள் வளர்ச்சியுற முயற்சி செய்யுங்கள்.- ‘வாஜாத்தீய்’ சஞ்சிகை, இதழ் 6,1937. (நூலிலிருந்து பக்கம் 77-78)

நூல்: பொது உடைமை கல்வி முறை
ஆசிரியர்: குரூப்ஸ்காயா

வெளியீடு: முகம் பதிப்பகம்,
20/37, 13-வது தெரு, அய்யர் மனைப்பிரிவு, சிங்காநல்லூர், கோவை – 643 005.
பேச: 0422 – 2593938
மின்னஞ்சல்:mugambooks@gmail.com

பக்கங்கள்: 112
விலை: ரூ.70.00

இதர மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க