பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் வரும் துன்பங்களை வேறு எந்த நாட்டையும் விட இந்திய மக்கள் நன்கு அறிவார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வில் தொடங்கி போக்குவரத்து தொழில் நலிவு மற்றும் சிறு தொழில்களின் முடக்கம் வரை எரிபொருள் விலை உயர்வு தோற்றுவிக்கும் துன்ப துயரங்கள் அதிகம். ஆனால், நம்மால் இந்த விலை உயர்வை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.

பிரான்ஸ் நாட்டு மக்கள் இதை சாதித்திருக்கிறார்கள். இந்த சாதனை என்பது ஏதோ வார இறுதியில் ஓரிரு மணி நேரங்கள் மட்டும் கலந்து கொண்டு நடத்தப்படும் போராட்டங்களினாலும் அறிக்கைகள் மற்றும் கூட்டங்களினாலும் நடந்துவிடவில்லை ஒட்டுமொத்த தேசமும் எழுச்சியுடன் பிரான்ஸ் அரசை வீழ்த்தியதுதான், இந்த போராட்டம்.

மக்களின் வீறுகொண்ட போராட்டத்தை அடுத்து எரிபொருளுக்கான வரிவிதிப்பை வரும் 2019-ம் ஆண்டின் வரவு செலவு அறிக்கையிலிருந்து கைவிடுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு முன்னர் இந்த கட்டண உயர்வை ஆறு மாத காலம் மட்டும் இடைநிறுத்துவதாக கூறியிருந்த பிரான்ஸ் அரசு தற்போது முற்றிலும் அதை கைவிடுவதாக கூறியிருக்கிறது. இதை அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார்

மாணவர்களும் பங்கு பெற்ற பிரான்ஸ் போராட்டம்

பிரான்ஸ் மக்களின் போராட்டம் காரணமாக பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரியை 6 மாதங்கள் நிறுத்தி வைப்பதாக முதலில் அறிவித்தது அரசு. ஆனால் ”இதுவெல்லாம் வேலைக்கு ஆகாது; இந்த வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்” என மக்கள் தீவிரமாகப் போராடினர். அதில் பள்ளி மாணவ மாணவிகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக தமிழகத்தில் ஏதாவது ஒரு மக்கள் போராட்டத்தில் மாணவர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டால் எதற்கு அபாயகரமான சூழலில் குழந்தைகளை கொண்டு வருகிறீர்கள் என சில ’நல்லுள்ளம்’ படைத்த கனவான்கள் கேட்பார்கள்.

அவர்களால் இந்த எரிபொருள் விலை உயர்வு தோற்றுவிக்கும் வாழ்க்கை சிரமத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. முற்றிலும் நூற்றுக்கு நூறு கல்வியறிவு பெற்ற பிரான்ஸ் நாட்டில் இப்படி பள்ளி மாணவர்களே வீதிக்கு வந்து போராடுகிறார்கள்; அப்படி போராடி வெற்றியை சாதித்திருக்கிறார்கள் என்பதை அந்த கனவான்கள் புரிந்து கொள்வார்களா?

பிரான்ஸ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்ற ”மஞ்சள் சட்டை” என்று அறியப்படும் இந்தப் போராட்டங்கள் முக்கிய நகரங்களை முடக்கின. ஓரளவு சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இவை அனைத்தும் விலையை உயர்த்திய அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக்காட்டியது. ஒருவேளை அரசு இந்த வரி உயர்வை ரத்து செய்யவில்லை என்றால் இந்த வார இறுதியில் இன்னும் அதிகமான போராட்டங்கள் நடந்திருக்கும் என ஊடகங்கள் கூறுகின்றன. இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், இந்த தியாகம் வீண் போகவில்லை.

படிக்க:
♦ பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்ஸ் மக்கள் போராட்டம்
♦ முதலாளித்துவத்தைக் கொல்வோம் – பிரான்ஸ் மாணவர்கள் – படங்கள்

அதனால்தான் புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் 2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலிருந்து வரி உயர்வு கைவிடப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இம்மானுவேல் மேக்ரோன் பிரான்ஸின் அதிபராக போட்டியிடும்போது, தான் தெரிவு செய்யப்பட்டால் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால் சமீபத்திய மாதங்களில் அவரது சீர்திருத்தத்தின் லட்சணம் என்ன என்பதை மஞ்சள் சட்டை போராட்டமே தெளிவுபடுத்துகிறது

போலீசு வீசிய கண்ணீர் புகை குண்டை போலீசின் மீது வீசி எறியும் போராட்டக்காரர் ஒருவர்

பிரான்ஸ் மக்களின் போராட்டத்தில் வன்முறை எப்படி வெடித்தது? போராடுகின்ற மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீர் பாய்ச்சியும் அவர்களை விரட்டியது போலீசு. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திருப்பித் தாக்கினர். ஆனால் பிரான்ஸ் அதிபர் இதை மட்டும்  கடுமையாகக் கண்டிக்கிறார். “போலீசு அதிகாரிகளைத் தாக்கியவர்களைக் கண்டு நான் அவமானப்படுகிறேன். குடியரசில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை” என்று அவர் தெரிவித்திருக்கிறார். என்ன இருந்தாலும் ஒரு நாட்டின் அதிபர் தனது காவற்படையை விட்டுக் கொடுக்கமாட்டார் அல்லவா? பிரெஞ்சுக் குடியரசில், இத்தகைய ஜனநாயகப் போராட்டங்கள் மக்களின் தற்காப்பு வன்முறையினால்தான் உருவானது என்பது வரலாறு.

அது பிரெஞ்சு புரட்சியில் துவங்கி இன்றுவரை தொடர்கிறது. ஆகவே இந்த வன்முறைக்கு காரணம், மக்கள் அல்ல அரசுதான். கடந்த சனிக்கிழமை அன்று (1-12-2018) மட்டும் 1200-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்தன. அதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த போராட்டத்திற்கு பாரீஸ் நகரில் மட்டும் 5000 போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். போலீசு வன்முறையை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், மக்கள் திருப்பித் தாக்கி இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

“நாங்கள் வீட்டிலிருந்து போலீசோடு சண்டை போடுவதற்கு வரவில்லை. எங்கள் குறைகளை அரசு கேட்க வேண்டும் என்பதே நோக்கம்”என்கிறார்கள் போராட்டக்காரர்கள். சில பொருட்களை தீயிட்டுக் கொளுத்தியது, அரசுக்கு எதிராக முழங்கியது, காவல்துறையின் மீது சிலர் கற்களை வீசியது இவையெல்லாம் வன்முறை என்றால், இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களது வாழ்க்கையை பல மடங்கு வன்முறைக்குள்ளாகியிருப்பதை எங்கு சென்று முறையிடுவது எனத் தெரியவில்லை.

படிக்க :
♦ டெல்லியின் கொம்பைப் பிடி : தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு !
♦ எதிர்த்து நில் ! புதிய கலாச்சாரம் மார்ச் 2017

மக்களின் வன்முறை என்பது அரச வன்முறைக்கு எதிரான ஒரு சிறிய எதிர் வன்முறையே. இதையே பிரான்ஸ் அரசால் தாங்க முடியவில்லை என்றால் பிரெஞ்சு புரட்சியின் போது  நடந்த பல்வேறு போராட்டங்களும் இப்போது நடந்தால் இவர்கள் என்ன செய்வார்கள் ? மதசார்பற்ற ஜனநாயக உரிமைகளை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் தேசத்தில் அவையெல்லாம் வன்முறை இல்லாமல் நடந்துவிட்டதா என்ன ? வன்முறைக் குறித்து பிரெஞ்சு வரலாறு என்ன சொல்கிறது என்பது அதன் அதிபருக்குத் தெரியாது போலும். இரத்தம் சிந்தாமல் புரட்சி நடப்பதில்ல என்ற வாசகத்தின் பொருள் மக்கள் தமது உரிமைகளை போராடி இன்னுயிர் இழந்து பெறுகிறார்கள் என்பதே.

பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் 4 பேர் காவல்துறையின் அடக்குமுறையால் கொல்லப்பட்டனர். காவல் அதிகாரிகள் 4 பேர் காயமடைந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வளவு பெரிய போராட்டம் ஏதோ பொழுது போகாமல் நடைபெறவில்லை. டீசலின் விலை லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோவிலிருந்து 1.54 யூரோ வரை உயர்ந்தது. கடந்த 12 மாதங்களில் 23% வரை விலை உயர்ந்ததே இப்போராட்டத்திற்குக் காரணம்.

வன்முறை எங்கள் நோக்கம் அல்ல

இந்த போராட்டத்திற்கு மஞ்சள் சட்டை போராட்டம் என்ற பெயர் எப்படி வந்தது? பிரான்ஸில் வாகனங்கள் பழுதடைந்தால் பாதுகாப்பு கருவிகளுடன், ஓட்டுனர்கள் மஞ்சள் ஜாக்கெட்டுகளையும் வைத்திருக்க வேண்டும். சாலையில் பழுதடைந்த வண்டி நிற்கும் போது ஓட்டுனர்கள், மஞ்சள் சட்டை அணிந்திருக்க வேண்டும். அது தொலைதூரத்தில் வருபவர்களுக்கும் தெளிவாகத் தெரியக் கூடியதாக உதவி செய்யும். இதனால் மஞ்சள் சட்டை அணியத் தவறினால் அபராதம் என்ற சட்டத்தை 2008-ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது பிரான்ஸ் அரசு. இதை ஒட்டியே ஓட்டுநர்கள் பயன்படுத்தும் மஞ்சள் சட்டையை வைத்து இந்தப் போராட்டம், மஞ்சள் சட்டை போராட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதை தொழிலாளர்களின் போராட்டம் என்றும் அழைக்கலாம்.

இந்தப் போராட்டத்திற்கு தனியொரு கட்சியோ இயக்கங்களோ தலைமை வகிக்கவில்லை என்றாலும் தொழிலாளி வர்க்கம் முன்னணியில் இருந்தது உண்மை. இத்தொழிலாளிகள் அமைக்காக்கப்பட்டு போராடும் போது அதன் வெற்றி இன்னும் பெரியதாக இருக்கும். பிரான்ஸ் மக்களின் வெற்றியில் இருந்து இந்திய மக்கள் பாடம் கற்க வேண்டும். மாருதி ஆலை முதல் திருப்பெரும்புதூர் யமஹா ஆலை வரை உள்ள தொழிலாளிகளும் உற்சாகம் பெற வேண்டும். போராடாமல் வாழ்க்கை இல்லை. போராடினால் தோல்வியும் இல்லை!


வேல்ராசன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க