மெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாஃப்ட். இந்நிறுவனத்தின் தலைமையை இதன் ஊழியர்கள் தற்போது கடுமையாக எதிர்த்து வருகின்றனர். காரணம் என்ன? அது ஊதிய உயர்வோ இல்லை பணிச்சுமையோ இதர பணி சார்ந்த பிரச்சினைகளோ அல்ல. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை அமெரிக்க இராணுவத்திற்கு அளிக்கும் முழு ஆதரவே மேற்கண்ட எதிர்ப்பிற்கு காரணம்.

“நாங்கள் உருவாக்கியிருக்கும் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் அமெரிக்க இராணுவம் இனி பயன்படுத்திக் கொள்ள முடியும்.”  என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரான பிராட் ஸ்மித் கூறியிருக்கிறார். இந்த ஒப்புதலை அவர் கலிபோர்னியாவில் இருக்கும் சிமி பள்ளத்தாக்கில் ரொனால்டு ரீகன் குடியரசு தலைவர் நூலகத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு கூட்டமொன்றில் கூறியிருக்கிறார்

பிராட் ஸ்மித்.

கூடுதலாக அவர் தனது முடிவை நியாயப்படுத்தியும் விளக்கியிருக்கிறார். “அமெரிக்க இராணுவம், கௌவரம் மற்றும் அறத்தோடு இயங்குவதை மரபாகக் கொண்டிருக்கிறது. இது எப்படி என்பதை சிலிக்கான் பள்ளத்தாக்கு அறிய வேண்டும்”. “செயற்கை நுண்ணறிவில் உலகளாவிய தொழில் நுட்ப முன்னேற்றங்கள் நடைபெறும் போது அவை அமெரிக்க இராணுவத்திற்கு கிடைக்காமல் போய்விடக் கூடாது” என்றும் அவர் வாதிடுகிறார். “இது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. மாறாக மேற்கு கடற்கரையில் வாழ வாய்ப்பு கிடைத்திருக்கும் சில இளைஞர்களின் பிரச்சனை அல்ல” என்கிறார் பிராட் ஸ்மித். இதன் பொருள் என்ன?

இராணுவத்தோடு தொழில் நுட்பக் கூட்டணி வைப்பதும் தமது கண்டுபிடிப்புகளை அளிப்பதும் தேசபக்தியோடு இணைந்த ஒன்று, இதை சில ஊழியர்கள் எதிர்ப்பது தவறு என்று கூறுகிறார் மைக்ரோசாஃப்ட் தலைவர்.

இருப்பினும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் இதைத் தொடர்ந்து எதிர்த்து வருவது குறித்து அவர் முற்றிலும் மௌனம் சாதிக்க முடியவில்லை. ஊழியர்கள் சிலர் கோபம் அடைந்திருப்பதை அவர் மறுக்கவில்லை. “புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் அறிவியல் பிரச்சினைகள் குறித்து நாங்கள் அவர்களிடம் (ஊழியர்களிடம்) பேசுகிறோம்” என்கிறார். அதேசமயம் ஊழியர்களின் எதிர்ப்பால் இராணுவத்திற்கு ஆதரவு அளிக்கும் இந்த கொள்கைகளை மாற்றிக் கொள்வதாகவும் அவர் கூறவில்லை.

ஆனால், மைக்ரோசாஃப்டின் ஊழியர்களைப் பொருத்தவரை அவர்கள் அமெரிக்க இராணுவத்திற்கு அளிக்கும் ஆதரவு குறித்து ஏதோ சிற்சில கருத்து வேறுபாடுகளை மேலோட்டமாக கூறவில்லை. உண்மையில் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அமெரிக்க இராணுவத்திற்கு இத்தகைய தொழில்நுட்ப ஆதரவு அளிக்கும் The Joint Enterprise Defense Infrastructure – JEDI எனும் திட்டத்தை அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்த ஜெடி திட்டம் கணினி மூலம் நடக்கும் அனைத்து பரிசோதனைகள், தொழில்நுட்ப மேம்பாடு அனைத்தையும்  பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை அமெரிக்க இராணுவத்திற்கு வழங்குகிறது.

மைக்ரோசாஃப்டின் ஊழியர்கள் கடந்த அக்டோபரில் அடையாளமில்லாமல் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவில் தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார்கள். “ “நாம் உருவாக்கிய தொழில்நுட்பம் எதுவும் மனித சமூகத்தை துன்புறுத்துவதாகவோ, பாதிப்பை உருவாக்குவதாகவோ இருக்கக் கூடாது என எதிர்பார்க்கிறோம்” என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தானே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு குறித்த கொள்கை முடிவுகளுக்கு துரோகம் விளைக்கிறது என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

அக்கொள்கையின்படி செயற்கை நுண்ணறிவு என்பது வெளிப்படையாக, தீங்கற்றதாக,  நம்பகமாக, பாதுகாப்பாக, தனிப்பட்டமுறையிலும், பொறுப்புணர்வோடும் இருக்க வேண்டும்; குறுகிய இலாப நோக்கத்திற்காக இருக்கக்கூடாது” என்பதையும்  நினைவுபடுத்துகிறார்கள்.

இதேபோன்று மற்றொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமான  கூகிள் இந்த ஜெடி திட்டத்திலிருந்து பின்வாங்கியிருக்கிறது. காரணம் அதன் ஊழியர்கள் இதற்கு முன்னர் இதே போன்றதொரு திட்டமான DoD – Project Maven  குறித்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

மாவென் திட்டத்தின் நோக்கம் என்ன? அதில் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கி ஆளில்லா சிறு விமானங்கள் நடத்தும் தாக்குதலை மேம்படுத்துவதாகும். இந்த ஆளில்லா விமானங்கள் தான் தெரிவு செய்து தாக்கும் இலக்குகளை தானே முடிவு செய்யும் என்பதால் சில விமர்சகர்கள் இத்திட்டம் குறித்து எச்சரித்திருக்கிறார்கள்.

எது எப்படியோ மைக்ரோசாப்டின் தலைவர் இதுபோன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் அமெரிக்க இராணுவத்திற்கு ஆதரிப்பது ஆதரவு அளிப்பதை நியாயப்படுத்தும் முதல் நபர் அல்ல.

ஏற்கனவே அமேசான் நிறுவனத்தின் ஜேஃப் பிசோஸ் Jeff Bezos கடந்த அக்டோபரில் இராணுவத்திற்கு வெளிப்படையாக வக்காலத்து வாங்கியிருக்கிறார். “பெரும் தொழில் நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு ஆதரவளிப்பதில் தயங்கினால் இந்த நாடு சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அமெரிக்கா ஒரு மாபெரும் நாடு அது பாதுகாக்கப்பட வேண்டும்”, என்று அவர் கூறியிருக்கிறார்.

ஜேஃப் பிசோஸ்

அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஏதோ சில தொழில் நுட்ப சேவைகளை அமெரிக்க இராணுவத்திற்கு வழங்குவதாக இதை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அமேஃசான் தனது வாடிக்கையாளர் குறித்து உருவாக்கும் செயற்கை நுண்ணறிவும், மைக்ரோசாஃப்ட்  நிறுவனம் தனது விண்டோஸ் மூலம் யாரையும் உளவு பார்க்கும் வல்லமை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து தமது தொழில்நுட்பங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள். இந்த மேம்படுத்தலுக்கு இந்நிறுவனங்களை பயன்படுத்தும் நாம் நம்மையறியாமல் பயன்படுகிறோம். இதை அப்படியே இராணுவத்திற்கு வழங்குகிறார்கள்.

இனி ஹாலிவுட் படங்களில் நாம் பார்ப்பது போன்று ஆளில்லா விமானங்கள், ஆளில்லா கொலைக் கருவிகள் அனைத்தும் அமெரிக்காவை எதிர்க்கும் நாடு – மக்களை நோக்கி வரும். நம்மிடம் என்ன வதந்தியை தோற்றுவிக்க வேண்டும், எப்படி கருத்து ரீதியாக சீர்குலைக்க வேண்டும், எப்படி உளவு பார்க்க வேண்டும் என அனைத்தும் அமெரிக்க இராணுவத்தின் வசம் இருக்கும். இப்போதைக்கு இதை எதிர்ப்பதற்கு அமெரிக்காவிலேயே சில மக்கள் இருப்பதால் இந்த விடயங்கள் நமக்கு தெரிய வருகிறது.

படிக்க:
அமெரிக்கா: சவப்பெட்டி தேவைப்படாத ரோபோ சிப்பாய்கள் !
அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை

ஸ்னோடன் போன்று உயிருக்கு அஞ்சாமல் சுதந்திரம், ஜனநாயகத்திற்காக பாடுபடும் மக்கள் இருக்கும் வரை அமெரிக்கா தனது மேலாதிக்க நோக்கத்திற்காக நடத்தும் தொழில் நுட்ப போர் அத்தனை சீக்கிரத்தில் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் நிச்சயம்.


– வேல்ராசன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க