இந்திய விவசாயிகளின் தலைவிதியை விட பூசாரிகளுக்கான ஊதியம் அதிக செய்தி மதிப்பு கொண்டது. ஏன்?
கடந்த நவம்பர் 29-ம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தத்தம் குடும்பங்களுடன் தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களை நோக்கி விரைந்தனர். இந்திய கிராமங்களில் வாழும் ஒட்டுமொத்த மக்களில் 70 விழுக்காடு அல்லது 90 கோடி பேர்களின் பிரதிநிதிகள் அவர்கள். சாதாரண நேரங்களில் ஊடகங்களுக்கு இதுவே அன்றைய முக்கியச் செய்தியாக இருந்திருக்கும்.
ஆனால் இன்றைய காலகட்டம் சாதாரண நேரங்கள் அல்ல. காங்கிரசு கட்சியின் தெலுங்கானா தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி விவாதிக்க ‘தேசியவாதிகளா’க அழைக்கப்படுபவர்கள் மற்றும் இந்திய அரசின் ஆதரவாளர்களை கொண்டு கடந்த நவம்பர் 29-ம் தேதி இந்திய ஊடகங்கள் பல மணிநேரம் செலவிட்டன. ரோகினி சிங் (தி வயர்) என்ற பத்திரிக்கையாளர் இது பற்றிய ஒரு தொகுப்பை டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி, கோவிலில் வழிபடுவது மற்றும் குல்லா அணிந்திருப்பது போன்ற புகைப்படங்களைக் காட்டிக்கொண்டே அவரை இராஜஸ்தானில் ஒரு பிராமணன், தெலுங்கானாவில் ஒரு முஸ்லிம் என்று ஜீ நியூஸ் அலறிக் கொண்டிருந்தது. முசுலீம்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் சிறப்பு கல்வி, இமாம்களுக்கு சிறப்பு ஊதியம், முசுலீம்களுக்கு தனி மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களுக்கு இலவச மின்சாரம் என்று சிறுபான்மையினருக்கு காங்கிரசு அளித்ததாக கூறப்படும் தேர்தல் வாக்குறுதிகளை மையமாக வைத்து ஏனைய மோடி ஆதரவு ஊடகங்கள் சதிராடி கொண்டிருந்தன.
காங்கிரசு இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் கொடுத்ததா?
உங்களுக்கு உகப்பில்லாத வார்த்தைகளை நீக்கிவிட்டால் காங்கிரசு கூறியது உண்மைதான். போலி செய்திகளை அம்பலப்படுத்தும் ஆல்ட்நியூஸின் படி இலவச மின்சாரம் கோவில்களுக்கும் கொடுப்பதாயும் அரசு அலுவலர் போல கோவில் பூசாரிகளுக்கும் சம்பளம் கொடுக்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதே போல இமாம்களுக்கும் பாதிரிகளுக்கும் ஊக்கத்தொகை கொடுப்பதாகவும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. “சிறுபான்மையினர் நிறைந்துள்ள இடங்கள்” என்ற சொற்களை எடுத்துவிட்டு “முசுலீம்களுக்கு-மட்டுமான மருத்துவமனைகள்” என்று சொற்களை திரித்தால் அப்படியான வாக்குறுதியை காங்கிரசு கொடுத்ததாக கூற முடியும்தான்.
இனி ஊடகங்கள் கண்காணிப்பாளராக இருக்காதா ?
தொலைக்காட்சி மற்றும் இணையம் இல்லாத காலந்தொட்டே நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பதுதான் ஊடகங்களின் பணியாக இருந்து வந்துள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பதில் அரிதாக மாற்றம் நிகழ்ந்தாலும் சமூக ஊடகங்களுடன் சேர்ந்து இன்னும் அந்த போக்கு அதிகமாகித்தான் இருக்கிறது. பெரும்பாலான போலி செய்தி மற்றும் தேசியவாத ஊடக அமைப்புகளில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றால் வெளிப்படையான போலி செய்தி இல்லையென்றாலும் திரிக்கப்பட்ட உண்மையை நிகழ்ச்சி நிரலுக்கு அவை கொண்டு வருகின்றன. இந்த திரிக்கப்பட்ட உண்மைகள் பக்க சார்பை உறுதிப்படுத்துவதாகவும், பக்கசார்பை வலுவாக்குவதற்கேற்ப தகவல்களை விளக்குவதற்கும் வழங்குவதற்கும் சேவை புரிகின்றன.
இது முற்றிலும் புதிய குற்றச்சாட்டு அல்ல. முதல் பத்திரிகை ஆணைக்குழு, சில ஊடகங்கள் தங்கள் கூட்டாளிகளின் பொருளாதார நலன்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் பாகுபாடு காட்டியதாக கடந்த 1955-ம் ஆண்டு குறிப்பிட்டது. ஒரு குறிப்பிட்ட அளவு அதிகாரத்தில் இருப்பவர்களை பற்றி புலனாய்வு செய்ய தயக்கம் காட்டியதாகவும், அவர்களது விருப்பங்கள், பொருளாதார நலன்கள் மற்றும் இன்ன பிறவற்றுக்கு எதிராக இருந்த உண்மைகளை நசுக்கும் போக்கை ஊடகங்கள் கொண்டது பற்றியும் அது குறிப்பிட்டது.
1950-களில் பெரும்பாலான செய்தித் தாள்களின் உரிமையாளர்களாக சணல் பெரு முதலாளிகள் இருந்ததால் அவை சணல் பத்திரிகைகள் என்றே அழைக்கப்பட்டன. எனவே இதற்கு மாற்றாக பெருமுதலாளிகளின் பொருளாதார நலன்களில் இருந்து ஊடகங்களை பிரித்து கண்காணிக்கவும், கண்டிக்கவுமான அமைப்பாக பத்திரிகை கவுன்சில் ஒன்று உருவாக்கப்பட இருந்தது. முதல் பத்திரிகை ஆணைக்குழுவும் நெருக்கடி நிலைக்கு ஓராண்டிற்கு பிறகு 1978-ம் ஆண்டின் இரண்டாவது பத்திரிகை ஆணைக்குழுவும் இதை முன்மொழிந்தன. பத்திரிகை கவுன்சிலும் உருவாக்கப்பட்டது.
ஆனால் நவீன இந்தியாவில் ஊடக தர்மத்தை இது உயர்த்தி பிடிக்கும் என்று எதிர்பார்ப்பது நிலவுக்கு சுற்றுலா செல்ல கேட்பது போல இருக்கிறது. பொருளாதார நலன்களில் இருந்து ஊடகங்களை பிரிப்பது தற்போது கற்பனையாகவே இருக்கிறது. இலாப நோக்கமற்ற ஊடகங்களும் இருக்கத்தான் (Disclaimer: நானும் அப்படியான பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியர்) செய்கின்றன. ஆனால் அவர்களிடம் சாத்தியமான மற்றும் நிலையான வணிக வடிவமைப்பு எதுவும் இல்லை.
படிக்க:
♦ ஊடகங்கள் – பத்திரிகையாளர்கள் : கருத்துப் படங்கள்
♦ மோடிக்காக தூதரின் வாயசைவுக்கு டப்பிங் கொடுக்கும் ஊடகங்கள் !
இதுவரை இல்லாத அளவுக்கு ஊடகங்களுக்கு இன்று சவால்கள் இருந்தாலும் அவற்றை சரியாக சந்திப்பதில்லை. மேற்குலகில் கூட இதே போல தேசியவாதிகள் மற்றும் போலி செய்தி அச்சுறுத்தல் இருந்தாலும் முதன்மையான ஊடகங்கள் அங்கே நிலையாக தொடர்ந்து உண்மையை கூறுகின்றன.
அவர்களது மையமான பத்திரிகை தர்மத்திற்கு சிக்கல் வருகிறது என்றால் ஒன்றுகொன்று ஆதரவாக அதை எதிர்கொள்கின்றன. சமீபத்தில் கூட அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து சி.என்.என் பத்திரிக்கையாளரை வெளியேற்றியது தவறு என்று டிரம்புக்கு பிடித்த பத்திரிக்கையான பாக்ஸ்நியூஸ் பத்திரிகையே கூறியது.
கேள்விக்குள்ளாகும் நம்பகத்தன்மை
இந்தியாவின் அதிகாரத்திலிருக்கும் கட்சியிலிருந்து ஊடக முதலாளிகளுக்கும், ஊடக ஆசிரியர்களுக்கும் இடையிலான அழைப்புகளும் சந்திப்புகளும் தற்போது வழக்கமாகி வருகிறது. இது இந்திய அளவில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இந்திய ஊடகங்கள், உண்மையை வெளிக்கொண்டு வர விருப்பமுள்ள பத்திரிகையாளர்களை அனுமதிக்க இயலாத அல்லது விருப்பமற்றதான பொருளாதார நலன்களோடு பிணைந்து இருக்கின்றன.
உண்மையை சொல்வதென்றால் எப்பொழுதும் ஒருவித அழுத்தம் இருந்து வருகிறது. என்னுடைய அனுபவத்தில் பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்த போது எப்போதாவது மறைமுகமாகவும் சில சமயங்களில் வெளிப்படையாகவும் குறிப்பிட்ட பிரச்சினைகள், நலன்கள் மற்றும் மனிதர்கள் குறித்த விவகாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு அழுத்தம் வந்துள்ளது.
பலமுறை வேலையை விட்டுள்ளேன். மேலும் பலமுறை அதிகார வர்க்கத்துடன் முரண்பட்டுள்ளேன். பல நேரங்களில் வேலையற்றும் இருந்துள்ளேன். ஆனால் இன்று ஊடக தர்மத்தை நிலைநாட்ட முடியாத அல்லது விரும்பாத முதலாளிகளிடம் இருந்து அடிக்கடி வெளிப்படையாகவும் கடுமையாகவும் ஊடக ஆசிரியர்களுக்கு அழுத்தம் வருகிறது.
ஊடகத்திற்கு தொடர்பில்லாத சாதாரண நபர்களின் கூட்டத்தில், ஊடக அறத்தைப் பற்றி பேசப் போகிறேன் என்று நீங்கள் சொன்னால் அவநம்பிக்கையைத்தான் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஊடகங்களை கோழையாக்குவதில் இந்தியாவின் ஆளுங்கட்சியான பா.ஜ.க கரைக்கண்டது. ஊடக முதலாளிகளிடம் பேசுவது, வணிக நலன்கள் பாதிக்கப்படும் என்று மிரட்டுவது, அவதூறு வழக்கு தொடுப்பது, விளம்பரங்களை நிறுத்துவது போன்றவை எவ்வளவு எளிதானது என்பதை இதன் மூலம் மாநில அரசுகளும் பெரு நிறுவனங்களும் கற்றுக்கொண்டு வருகிறார்கள். இங்கே அபாயம் என்னவெனில் ஒருமுறை சுதந்திரம் பறிப்போன பிறகு நம்பகத்தன்மையும் உடனே பறி போகிறது. இரண்டுமே மீண்டும் பெறுவது மிகவும் கடினம் அல்லது வாய்ப்பே கிடையாது.
இந்திய ஊடகங்களின் நம்பகத்தன்மை மிகக்குறைவாகவே உள்ளது. போலி செய்திகள் மற்றும் தேசியவாத பிரியர்கள் ’தாராளவாத’ ஊடகங்களை நம்பக்கூடாது என்று கூறலாம். ஆனால் உண்மை என்னவெனில் தங்களது குறிக்கோள்களிலும் ஒருபோதும் சுதந்திரமாக பிரகாசிக்கவில்லை என்றாலும் நாம் தற்போது பார்த்து கொண்டிருப்பது போல மத சார்பு, பொய்கள் மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவான பிரச்சாரத்தில் நேரடியாக முன்பு ஈடுபட்டதில்லை.
எனவே இந்திய நகரங்களில் குவியும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பற்றியும் அவர்களது கோரிக்கைகள் பற்றிய விவாதங்களையும் எதிர்பார்க்கிறேன். இந்த பெரும் அணிவகுப்பு, எழுத்தாளர் அமிதவ் கோஷ் குறிப்பிடுவது போல உலகின் தற்போது நடக்கும் மிக இன்றியமையாத நிகழ்ச்சியாகும். நற்பலனாக, அற்பமான மற்றும் போலியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே சமூக ஊடகங்கள் இது போன்ற இன்றியமையாத நிகழ்வுகளையும் கவனத்தில் கொள்கின்றன. இது நல்லது தான். ஆனால் பூசாரிகளுக்கு கொடுக்கும் ஊதியத்தை காட்டிலும் விவசாயத்தில் உள்ள நெருக்கடி அதிக மதிப்பு வாய்ந்தது என்று இந்தியாவிற்கு புரிய வைக்கும் அளவிற்கு போதுமானதாக இல்லை.
நன்றி: Samar Halarnkar, scroll.in
தமிழாக்கம்: சுகுமார்