கட்டுரையின் நோக்கம்

Artificial intelligence அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இயந்திரங்களில் பயன்படுத்துவதன் மூலமாக தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

தொழிலாளர்களுடைய வேலையை இயந்திரத்தின் செயலியே பார்த்துக்கொள்ளும் என்பதை செய்தித்தாளில் அல்லது நண்பர்கள் சொல்ல கேட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால், உண்மையில் நம்முடைய கண்முன்னே இதன் ஆபத்துகளை பார்க்கப் போகிறோம் என்பதை உணர்த்தும் விதமாகவும் அதற்கு நாம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்வது என்பதை எடுத்துரைக்கும் விதமாகவும் இந்தக் கட்டுரை அமையும் என்று நம்புகிறேன்.

*****

ஐ.டி தொழிலாளி புதிய ப்ராஜெக்ட்-ல் சேர்வது

ழக்கமாக ஐ.டி நிறுவனங்களில் ஒரு தொழிலாளர் ப்ராஜெக்ட்-லிருந்து ரிலீஸ் ஆனதும் பென்ச்-க்கு அனுப்பப்படுவார். பிறகு அவர் மனிதவள அலுவலரிடம் “எனக்கு இந்தத் தொழில் நுட்பம் தெரியும்” என்று முறையிட வேண்டும். பிறகு அதற்கு ஒப்பான ப்ராஜெக்ட் கிடைக்கும்வரை அந்த தொழிலாளி பென்ச்-ல் இருந்து கொண்டு தினமும் மனிதவள அலுவலரிடம் வருகையை பதிவு செய்வார். ஒரு குறிப்பிட்ட நாட்களை தாண்டியதும் மனிதவள அலுவலர் ஏதாவது ப்ராஜெக்ட் எடுத்துக்கொண்டு வேலைக்குள் செல்லும்படி தொழிலாளியை நிர்பந்தம் செய்வார்.

தானியக்கமாகும் வேலைகள்

இதுபோன்ற சூழ்நிலைகளில் குறைந்த அனுபவம் உள்ள தொழிலாளர்களை மனிதவள அலுவலர் பலவகையில் மிரட்டுவதை கண்முன்னே பார்த்திருக்கிறேன். அதனால் வேறுவழியில்லை என்று தொழிலாளர்களும் அந்த ப்ராஜெக்ட்-ல் சேர்ந்து தெரியாத தொழில்நுட்பம் அல்லது புதிய வகையான செயலியை கற்றுக்கொண்டு வேலை பார்க்க வேண்டும். அதற்கு அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். ஒருசில தொழிலாளர்கள் தங்களுடைய நண்பர்கள் வட்டத்தை பயன்படுத்தி ப்ராஜெக்ட்-ல் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

தொழிலாளர் பென்ச்-ல் இருக்கும் காலத்தில் தான் அறிந்த தொழில்நுட்பத்தில் புதியவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது அல்லது ஆங்கில புலமையை வளர்ப்பது என்று மற்ற குறைகளை சரிசெய்வதற்கு அந்த நாட்கள் உதவியாக இருக்கும். ஆனால் ஒருசிலர் பென்ச்-ஐ சாதமாக பயன்படுத்தி எந்த வேலையிலும் ஈடுபடுவதில்லை, சும்மா இருந்துவிடுகிறார்கள். ஆனால், இந்த சதவீதம் மிக மிகக் குறைவு.

இந்த நடைமுறை அவஸ்தையாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் இனிமேல் வரப் போவது இதை விட பயங்கரமானதாக இருக்கப் போகிறது.

Artificial intelligence (செயற்கை நுண்ணறிவு) தாக்கம்

ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ப்ராஜெக்ட்-ல் இருந்து ரிலீஸ் ஆனதும் மேலே சொன்னபடி மனிதவள அலுவலரிடம் தனக்கு தெரிந்த அல்லது வேலை பார்த்த தொழில்நுட்பத்தை சொல்லி ப்ராஜெக்ட் தேடுவது வழக்கம். ஆனால், இப்போது மனிதவள அலுவலரின் வேலை இல்லாமல் தானாக இயந்திரமே செயற்கை நுண்ணறிவு மூலமாக தொழிலாளர்களுக்கு ப்ராஜெக்ட்-ல் சேர்வதற்கு இப்போது செயலி உருவாக்கி உள்ளார்கள்.

அதாவது தொழிலாளர்கள் அறிந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு சில ப்ராஜெக்ட்களை தொழிலாளருக்கு அந்த செயலி காட்டும். அதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் இந்தச் செயலி இந்தியாவில் எந்த பகுதியில் அந்த ப்ராஜெக்ட்களை இருந்தாலும் காட்டும். அதில் சேர்ந்து வேலை செய்வதற்கு பல நடைமுறை பிரச்சனைகள் நமக்கு இருக்கலாம். அதாவது தான் ஏற்கனவே சென்னையில் குடும்பத்தோடு இருக்கிறேன், வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது அல்லது சென்னையில் வேலை பார்க்கத்தான் தகுந்த சூழ்நிலைகள் உள்ளது என்று பல்வேறு  ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இருக்கலாம். புராஜக்டை ஏற்றுக் கொள்ள முடியாததற்கு காரணமாக அதை பதிவு செய்யலாம். இதை என்னதான் வில்லன் போல நடந்து கொண்டாலும் எச்.ஆர் என்ற மனிதருடன் பேசி போராடி வேறு புராஜக்ட் பெற முயற்சிக்கலாம்.

மனிதர்களின் வேலையை செயலியே பார்த்துக் கொள்ளும் நிலைமை உருவாகி வருகிறது.

புதிய தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவின் அபரீதமான வளர்ச்சியால் மனிதர்களின் வேலையை செயலியே பார்த்துக் கொள்ளும் நிலைமை உருவாகி வருகிறது. அதனை பல்வேறு துறைகளில் அமல்படுத்தி முதலாளிகள் லாபம் சம்பாதித்து வருகிறார்கள். செயற்கை நுண்ணறிவுக்கு முக்கிய புள்ளியாக இருந்து செயலாற்றும் ஐ.டி துறையில்  இதை வேகமாக செயல்படுத்தி வருகிறார்கள். அது முதலாளிகளின் அதாவது கம்பெனியின் லாபத்துக்காக பெரிதும் உதவுவதால் அந்தத் தொழில்நுட்பத்தை மேலும் வலுவாக வளர்த்தெடுக்க பணத்தைக் கொட்டி செய்கிறார்கள் அதனால்தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படித்த தொழிலாளர்களை வலைபோட்டு தேடுகிறார்கள். அந்த ஊழியர்களின் உழைப்பில் உருவாகும் செயலிகளை பயன்படுத்தி ஆட்குறைப்பை அமல்படுத்துகிறார்கள்.

தொழிலாளர்கள் மனிதவள அலுவலரிடம் தன்னுடைய விஷயங்கள் சொல்லி புரியவைத்து தகுந்த ப்ராஜெக்ட்- ல் சேர்ந்து வேலை செய்யலாம். ஆனால் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலியில் நம்முடைய விஷயங்களை கேட்டு அதற்கேற்றவாறு பொருத்தமான ப்ராஜெக்ட்-ல் சேர்வது என்பது சாத்தியம் மிக குறைவு.

ஆனால் செயற்கை நுண்ணறிவு புராஜக்ட்டை ஒதுக்கும் முறையில் இரண்டு மூன்று புராஜெக்ட்களை இதுபோன்று நிராகரித்தால், கொடுக்கப்பட்ட வேலைகளை அதாவது புராஜெக்ட்களை தொழிலாளர் நிராகரித்து விட்டார் என்று கணினியில் தானாக பதிவு செய்துகொண்டு தொழிலாளியை நிறுவனத்தை விட்டு வெளியேற்ற சாதகமாக அமைத்துக்கொள்ள அதிகப்படியான வாய்ப்புகள் நிறுவனத்துக்கு உள்ளது என்பதே இங்கு முக்கியமான விஷயம்.

படிக்க :
♦ செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் நோக்கமும் வளர்ச்சியும்
♦ தானியங்கல் தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம் வேலையிழப்பு மட்டுமல்ல !

மேலும், செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் இந்த செயலி மனிதவள அதிகாரியின் வேலையை செய்வதால் அவர்களின் வேலை பறிபோகும் நிலைமை உருவாகும். எல்லோரையும் வேலையை விட்டு போகச் சொல்லி மிரட்டிய எச்.ஆர் அலுவலர்களுக்கும் இப்போது நெருக்கடி ஆரம்பிக்கும். மனிதவள அதிகாரியை நிறுவனத்தை விட்டு வெளியேற்றிவிட்டு அதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு செயலியை பொருத்துவதால் கோடிக்கணக்கில் வருமானம் முதலாளிக்கு கிட்டும். அதன்படி நிறுவனத்துக்கு லாபம் அதிகரிக்கும் நடவடிக்கையாக இதை பார்க்க வேண்டும்.

ஆனால் ஒருபக்கம் தொழிலாளியை திறமையாக வெளியேற்றுவதற்கு மற்றொரு புறம் மனிதவள அதிகாரிகள் எண்ணிக்கையை குறைப்பது என்ற இரண்டும் உடனடியாகவோ அல்லது குறைந்த கால இலக்குடனோ செயல்பட்டு முடித்துவைப்பார்கள் என்பதுதான் உண்மை.

அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பம் நமக்கு வேண்டாமா?

அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித குல முன்னேற்றத்துக்கு அவசியமானவை. அவற்றை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், அது மனிதர்களின் பொதுவான வாழ்நிலையை உயர்த்துவதாகவும் சமூகத்துக்கு சமத்துவமாக பயன்படவும் வேண்டும்.

ஆனால் தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது? அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் யாரோ ஒரு சிலரின் லாபத்துக்காக பணத்தை குவித்துக் கொள்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ இன்னும் சில ஐ.டி நிறுவனங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை புதிய தொழில்நுட்பத்தை, தொழிலாளர்கள் நலன், மக்களின் நலன் என்றெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமது லாபத்தை உயர்த்திக் கொள்வதற்காகத்தான் அவற்றை பயன்படுத்துகிறார்கள்.

நம்முடைய விஷயங்களை கேட்டு அதற்கேற்றவாறு பொருத்தமான ப்ராஜெக்ட்-ல் சேர்வது என்பது சாத்தியம் மிக குறைவு.

“இப்போது பணம்தான் முக்கியம், பணமிருந்தால் தேவையானவற்றை பெற்றுக்கொள்ளலாம்” என்று ஒரு தொழிலாளி நினைப்பது ‘அனைத்தையும் வியாபாரமாக்கி அனைத்தும் காசுக்காக விற்கப்படும்’ என்று மாற்றப்பட்ட இந்த முதலாளித்துவ பணக்காரர்களுக்கான உலகில் ஒன்றும் அதிர்ச்சியான விஷயமல்ல.

சக மனிதர்களை பாதிக்கும் அதாவது லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு நடக்கும் என்று நினைத்தாலும் அதைத் தடுக்க முடியாத சூழ்நிலையிலும் தொழில்நுட்பத்தை சரியான விஷயத்திற்காக பயன்படுத்தச் சொல்ல முடியாத சூழ்நிலையிலும் தொழிலாளிகள் முதலாளிகளால் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் போன்ற தொழிலாளர்களால் உருவாக்கப்பட்டு நிறுவனத்திற்குள் நுழைகிறது. தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கு ஆப்பு வைக்கிறது.

இதை எப்படி எதிர்கொள்வது? தற்போதைய தீர்வு என்ன?

செயற்கை நுண்ணறிவு அல்லது எந்த தொழில்நுட்பம் நிறுவனத்திற்குள் வந்தாலும் தொழிலாளர்களாகிய நம்மால் அதைத் தடுக்க முடியாது அல்லது அந்த தொழில்நுட்பத்தை சரியான விசயத்துக்கு பயன்படுத்துங்கள் என்றும் சொல்லவும் முடியாது. ஏனென்றால் அந்த அதிகாரம் நம்மிடம் இல்லை.

ஆனால் தொழிலாளர்களாய் நாம் ஒன்று கூட முடியும். ஐ.டி தொழிலாளர்கள் தனித்தனியாக அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நடக்கும் குற்றங்களை கேள்வி கேட்பது கடினம். அவ்வாறு கேட்டாலும் நிறுவனமும் பதில் சொல்லாது, பதில் சொன்னாலும் பேச்சுக்காக நடிக்குமே தவிர லாபம் மட்டுமே நோக்கமாகவே நிறுவனங்கள் இயங்கும். தொழிலாளர்கள் ஒருவேளை கேள்விகேட்க ஆரம்பித்தால் அவர்களை குறிவைத்து தாக்கும் கீழ்த்தரமான நடவடிக்கையில் நிறுவனங்கள் ஈடுபடும்.

எந்த ஒரு நிறுவனத்தில் சாதிமத பேதமற்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்ட யூனியன் நன்றாக செயல்படுகிறதோ அதில் தொழிலாளர்கள் தங்களை முழுமனதுடன் இணைத்துக் கொள்கிறார்களோ அங்குதான் தொழிலாளர்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்படும். அப்படி குறைகள் இருப்பினும் தொழிலாளர்களின் பாதிப்பில்லாமல் அதை சரிசெய்து கொள்ள வழிவகுக்கும். அந்த நிறுவனத்தில்தான் சிறப்பான உற்பத்தியும் நடக்கும்.

ஆதலால் நண்பர்களே தொழிலாளர்கள் நாமெல்லாம் ஒன்றாக இனைந்து யூனியனாய் சேர்ந்து அதன் மூலம் எந்த பிரச்சினையை வேண்டுமானாலும் நிறுவனத்துக்கு கொண்டு செல்லலாம், கேள்விகேட்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதன் மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நிறுவனம் லாப நோக்கத்தில் செயல்படுத்தி தொழிலாளர்களை வேலையை விட்டு வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த முடியும்.

வேலை போன பிறகு சங்கத்தில் இணைந்து வேலையை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது எவ்வளவு சுயநலமோ அந்த அளவுக்கு கம்பெனிகளும் சுயநலமாக செயல்படும் தொழிலாளர்களாகிய நம்மை குப்பை போல வீசியெறிவதை தடுக்க முடியாது. ஆதலால் உடனே பு.ஜ.தொ.மு – ஐ.டி பிரிவு யூனியனில் இணையும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.

– அனுபவமுள்ள ஐ.டி ஊழியர்

நன்றி : new-democrats இணையதளத்தில் வெளியான கட்டுரை.

பு.ஜ.தொ.மு – ஐ.டி பிரிவு யூனியனை தொடர்பு கொள்ள:
தொலைபேசி :9003009641
மின்னஞ்சல்: combatlayoff@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க