மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 15ஆம் ஆண்டுவிழா கருத்தரங்கம் !
நாள் : 16.12.2018, ஞாயிறு மாலை 5.00 மனி
இடம் : நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம்(சோகோ அறக்கட்டளை)
14., ஏரிக்கரை சாலை, கே.கே. நகர், மதுரை-20. (அப்போலோ மருத்துவமனை அருகில்)
தலைமை :
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
வரவேற்புரை :
திரு. அ. சீநிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.
கருத்துரை :
சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்! என்றதலைப்பில் கருத்துரை:
வழக்கறிஞர் தி. லஜபதிராய், உயர்நீதிமன்றம், மதுரை.
சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும் – ஆய்வுரை:
தோழர் எஸ். பாலன், பெங்களூரு.
கலை அரங்கம் :
தோழர் கோவன் ம.க.இ.க. கலைக்குழு
நேருரை :
களப் போராளிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு.
நன்றியுரை :
திரு. ம. லயனல் அந்தோணி ராஜ், செயலாளர், ம.உ.பா. மையம் மதுரை
நூலரங்கம் :
கீழைக்காற்று வெளியீட்டகம் – சென்னை
முற்போக்கு நூல்களின் முகவரி
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை 384-(மாடி),
கிழக்கு 8வது தெரு, கே.கே. நகர், மதுரை-20.
அலைபேசி : 73393 26807
*****
VINAVU LIVE தொழில்நுட்ப பிரச்சினை இல்லாத பட்சத்தில் இந்த நிகழ்வு மதுரையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படும் – இணைந்திருங்கள்
இந்திய அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நமது அரசமைப்பு இறையாண்மையுடைய ஜனநாயகக் குடியரசு என்று வகுக்கப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார, சமூகநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாக அடைவதே நமது அரசமைப்புச் சட்டத்தின் இலக்கு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜனநாயகத்தின் மீது வெறுப்புக் கொண்ட பழமைவாத சனாதன சக்திகள் இந்து மதத்தின் பெயரால் மனுவின் தருமத்தை நமது அரசமைப்புச் சட்டத்தில் அங்கங்கே புகுத்துவதில் அன்றே வெற்றி பெற்று இருந்தனர்.
இந்திய ஜனநாயகம் என்பது அனைத்து மக்களுக்குமான ஜனநாயகமாக இல்லாவிட்டாலும் கூட முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் போராட்டத்தில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் அதிகாரத்தில் இருந்து வரும் சூழலில் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு பேரபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை என்ற அடிப்படையில் சங்கப் பரிவாரங்கள் நேரடியாக அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல் தொடுப்பதும் அதனை மோடி அரசு ஆதரித்து ஊக்கமளிப்பதும் வேகமாக வளர்ந்து வருகிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மோடியின் பாசிச அரசு தனது அனைத்து அரசியல் சமூகப் பொருளாதார நடவடிக்கைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் மதவெறியை ஆயுதமாகத் தரித்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்க வருகிறது.
வடக்கே அயோத்தியில் ராமனுக்குக் கோவில் தெற்கே சபரி மலையில் ஐயப்பன் கோவிலில் பெண்களுக்குத் தடை ஆகிய பிரச்சனைகளைக் கையிலெடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு – அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை முன்வைத்து மதக் கலவரத் தீயை வளர்க்கத் தொடங்கி விட்டனர். நவம்பர் 25-ல் அயோத்தியில் திரண்ட மதவெறியர்கள் ‘ராமனுக்கு முதலில் ஆலயம் அதன் பிறகே அரசு’ என்ற முழக்கத்தை முன்வைத்து தடையை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். ராமர் கோவில் கட்ட தனிச்சட்டம் தயார் என்று ஆர். எஸ். எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் அறிவிக்கிறார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்த பின்பும் இன்று வரை அதை அமல்படுத்தவிடாமல் ஆட்டம் போடுகிறது ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.
நீதிமன்றங்களை மிரட்டிப் பணியவைக்கும் போக்கில் மோடி அரசு முன்னேறி வரும் சூழலில் கூட மண வாழ்க்கையில் பெண்ணடிமைத்தனம், பெண்களுக்கான வழிபாட்டு உரிமை போன்றவற்றில் தனிநபர் உரிமை சார்ந்த முற்போக்கான தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆனால் மத நம்பிக்கை, மத உரிமை, மத நிறுவனங்களின் உரிமை என்ற போர்வையில் “தீட்டு, தீண்டாமை” என்ற மனுவின் நீதியை அமல்படுத்தக்கோரி போராடி வருகின்றனர் ஆர்.எஸ்.எஸ் – பாரதிய ஜனதா கட்சியினர்.
அரசமைப்புச் சட்டத்துக்கு மேலே சனாதனச் சட்டங்களை ஏற்றி வைக்கின்றனர். தனிநபர் சுதந்திரம், உரிமை, கண்ணியம், அந்தரங்கம், நம்பிக்கைகளை ஏற்க மறுக்கின்றனர்.
ஆர். எஸ் . எஸ் . இந்துமத ெவறியைத் தூண்டும் சதியை அம்பலப்படுத்திய அறிவுத்துறையினர் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களைத் சனாதன் சன்ஸ்தா என்ற மதவெறி அமைப்பு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
மோடியை விமர்சிக்கும் அல்லது அவர்களின் ஊழல் முறைகேடுகளை அம் பலப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ‘சொல் பேச்சைக் கேட்க மறுக்கும்’ லோயா போன்ற நீதிபதிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உ.பி.யில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாகப் புரளி செய்து அக்லக் என்ற இஸ்லாமியரைக் கொலை செய்த வழக்கை விசாரித்த நேர்மையான காவல் அதிகாரி சுபோத்குமார் சிங் சில நட்களுக்குமுன் பசு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன் என்று வாக்குறுதியளித்துள்ளார். அவ்வாறே உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறைகளும் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்றும் உறுதியளிக்கப்படலாம்.
பழங்குடி மக்கள், தலித்துகள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துச் சுற்றுச் சூழலை நாசமாக்கும் கார்ப்பரேட்களுக்கு அரணாக நிற்கும் மோடி அரசு அவற்றை எதிர்த்துப் போராடும் மக்களைக் காவல் படைகளை ஏவிப் படுகொலை செய்கிறது.
தமிழ்நாட்டில் மோடியின் பினாமியாக ஆட்சி நடத்தும் அதிமுக அரசு ஸ்டெர்லைட்டில் 14 உயிர்களைக் காவு வாங்கிய பின்பும் ஆலையைத் திறக்க அப்பட்டமாகத் துணை போகிறது. தமிழ் இனத்தின் மீது பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 8-வழிச்சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டம் அண்மையில் கஜா புயல் பேரிடர் நிவாரணம் மறுப்பு மூலம் தமிழக விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியும் புதிய சட்டங்களை இயற்றியும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலமாகவும் தீர்ப்புகள் முரண்படும் போது அவற்றை நடைமுறைப்படுத்த மறுத்து கலவரம் செய்தும் ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.
இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்று முடிவு செய்தாக வேண்டும்.
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.