வங்கிகளிடமிருந்து ரூ. 7000 கடன் பெற்று மோசடி செய்து இங்கிலாந்து தப்பி ஓடிய கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்க இலண்டன் வென்ஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வென்ஸ்மினிஸ்டர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்மா அர்புட்நாட் வழங்கிய தீர்ப்பில், விஜய் மல்லையாவை ‘கவர்ச்சியான, பிரபலமான, நகைகள் அணிந்த, பாதுகாவலர்களுடன் சுற்றும் பிளே பாய்’ என வர்ணித்ததோடு, மல்லையாவின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த வங்கிகள், புத்தியை புறந்தள்ளிவிட்டு, புதிய வழிகளை உருவாக்கி கடன் கொடுத்துள்ளன’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தச் செய்திப் பதிவை ஆடியோ வடிவில் கேட்க:
இந்த கேட்பொலியை MP3 வடிவில் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
நீதிபதி தனது தீர்ப்பில், மல்லையா தனது சொத்துக்களை மறைத்ததோடு, பயன்பெறும் நோக்கில் தனது பிள்ளைகளுக்கு அவற்றை மாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“மூன்றாம் நபருக்கு நிதியை மடைமாற்றியது இடைக்கால உத்தரவை அப்பட்டமாக மீறுதல் என உச்சநீதிமன்றம் கருதுகிறது. கடன் பெற்றதிலும் அதைப் பயன்படுத்தியதில் தவறு நடந்திருக்கிறது என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன. எனவே, மல்லையா நிதி முறைகேடு செய்ததற்கான முகாந்திரம் உள்ளதாக கருதுகிறேன்” என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் நீதிபதி எம்மா.
இந்த வழக்கில் முதன்மை புகார்தாரரான ஐ.டி.பி.ஐ. வங்கியைச் சார்ந்த அதிகாரிகள், மல்லையாவுக்கு உதவியதில் உள்நோக்கம் இருந்தது என்பதற்கு சாட்சிகள் இல்லை என தெரிவித்துள்ள நீதிபதி, மல்லையாவின் பகட்டான தோற்றத்தைப் பார்த்து, தங்கள் அறிவை மறந்து கடன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். உள்நோக்கம் இல்லையென்றாலும் மல்லையாவைப் பொறுத்தவரை வங்கி பல்வேறு நிலைகளில் தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டுகிறார் நீதிபதி.
“கவனமாக கண்காணித்திருந்தால் தான் அளித்த கடன் எங்கே போகிறது என ஐ.டி.பி.ஐ. வங்கி கண்டுபிடித்திருக்கும்” என தெரிவித்த அவர், மல்லையா வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை பார்முலா-1 கார் பந்தய குழுவுக்கும், ஃபோர்ஸ் 1 -க்கும் தன்னுடைய ஜெட்டுக்கும் திருப்பிக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.
படிக்க:
♦ அறிமுகம் : வினவு வானொலி ! இன்று 4 செய்தி அறிக்கைகள் !
♦ அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !
“நிதியை மடைமாற்றிக்கொண்ட நேரத்தை முக்கியமாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த 2009, 2010-ஆம் ஆண்டுகளில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திலிருந்து ஃபோர்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெற்ற கடன் தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கிக்கு மாற்றப்பட்டு, பிறகு இலண்டனில் உள்ள எச்.எஸ். பி.சி வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கிங் பிஷர் நிறுவனம், மல்லையாவின் பந்தயக் குழுவுக்கு நிதி அளித்ததுபோல தெரிகிறது” என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஐ.டி.பி.ஐ. கடனை திரும்ப வசூலிக்கும்பொருட்டு அனுப்பிய, ‘சார்… அந்த உங்க அக்கவுண்ட்ல பணம் இல்லையாம்’ என்ற தொனியிலான இமெயிலும் பிளே பாய் விஜய் மல்லையா அனுப்பிய விட்டேத்தியான பதிலை சுட்டிக்காட்டி, கடனுக்கு பொறுப்பேற்பதில்கூட அவரிடம் நேர்மையில்லை என்கிறார் நீதிபதி.
இந்தியாவிடம் மல்லையாவை ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கும் நிலையில், அவர் மேல் முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த வாரம் தனது ட்விட்டர் பதிவில், “நான் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை. கடன் பெற்றது கிங் ஃபிஷர் விமான நிறுவனம்தான். உண்மையில் தொழிலில் நட்டம் ஏற்பட்டது எதிர்பாராமல் நிகழ்ந்தது. கடனுக்கு உத்தரவாதம் வழங்குவது என்பதற்காக, நான் ஏமாற்றினேன் என்று கூறக்கூடாது” என தெரிவித்திருந்த திருட்டு மல்லையா, அதே ட்விட்டரில் “கடனை திருப்பி கொடுக்க உத்தரவாதம் கொடுத்திருந்தேன். அந்தவகையில் திரும்பச் செலுத்த தயாராக உள்ளேன்” என தெரிவித்திருக்கிறார். இதைத்தான் வெள்ளை காலர் கிரிமினல்தனம் என்பார்கள். இந்த வெள்ளை காலர் கிரிமினல் தனத்தை இலண்டன் நீதிமன்றம் புட்டு புட்டு வைத்திருந்தாலும், ஏதோ ஒரு ஓட்டையில் இவர்கள் தப்பியோடிக்கொண்டேதான் இருப்பார்கள். மல்லையா வந்தால் அவரை நட்சத்திர விடுதி அந்தஸ்தோடு கவனிக்க மும்பை ஆர்தர் சிறை தயாராக இருக்கிறதாம். மேலாக மேல்முறையீடு, ஐரோப்பிய நீதிமன்றம் என பல ஓட்டைகள் மல்லையாவிற்கு காத்திருக்கின்றன.
இந்த இலட்சணத்தில் மல்லையாவிற்கு எதிரான தீர்ப்பிற்கு காரணம், மோடியின் மகிமை என்று வெட்கம் கெட்ட முறையில் பாஜகவினர் சவுண்டு விடுகின்றனர். மல்லையா ராஜ்யசபா எம்.பியானதே பாஜக ஆதரவோடுதான். அதே ஆதரவோடுதான் அவர் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை முழுங்கி வெளிநாடு சென்றார். இப்படி முதலாளிகளுக்கு கடன் கொடுத்து விட்டு அவற்றை வராக் கடன் என்று கணக்கு முடிக்கிறது மத்திய அரசு. மோடி ஆட்சி இருக்கும் வரை மல்லையாக்களை அவ்வளவு சுலபமாக தண்டிக்க முடியுமா என்ன?
படிக்க:
♦ மக்களின் பணம் ! மல்லையாவின் அரசு !!
♦ கடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த சாராய மல்லையா!
#VijayMallya #IndiaGetsMallya
கலைமதி
நன்றி: Indian Express