த்திய அரசின் ’பிரதான் மந்திரி மாத்ரு வந்தன யோஜனா’ திட்டத்தை கேள்விப்பட்டிருக்கலாம். இத்திட்டத்தின்படி உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்குக்கூட உதவித் தொகை வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் பெற்றுள்ள தகவலில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசு அறிமுகம் செய்த இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் பிரசவத்தின் போது ரூ. 6000 உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.

இதற்கென கடந்த நிதியாண்டில் (2017-18) ரூ 2,049 கோடி ஒதுக்கப்பட்டது. 29 மாநிலங்களும் ஏழு யூனியன் பிரதேசங்களும் இந்தத் திட்டத்தால் பயன்பெறலாம் எனக் கூறப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, உத்தர பிரதேசத்துக்கு ரூ 336 கோடி ஒதுக்கப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி அதிக குழந்தை பிறப்பு விகிதம் உள்ள உ.பி.யில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட இலட்சணம் என்ன? 2017 ஜனவரி மாதத்திலிருந்து 2018 ஆகஸ்டு வரை 184 பேர்  மட்டுமே இந்தத் திட்டத்திலிருந்து பயன்பெற விண்ணப்பித்திருந்தனர்.  நாடு முழுவதும் 44  இலட்சம் பெண்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பித்திருந்த நிலையில், 34 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உதவித்தொகையைப் பெற்றனர்.

குறைந்த நபர்களே உத்தர பிரதேச மாநிலத்தில் விண்ணப்பித்திருந்த போதும்கூட, ஒருவருக்குக்கூட உதவித்தொகை அளிக்கப்படவில்லை என்கிறது ஆர்.டி.ஐ. தகவல். உத்தர பிரதேசத்துக்கு அடுத்து, பஞ்சாப் மாநிலம் இந்த திட்டத்தின் கீழ் குறைந்த பயனாளிகளைக் கொண்ட மாநிலம் என தெரிய வந்துள்ளது. ரூ 46.49 கோடி ஒதுக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தில் ஐவர் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.

படிக்க:
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
வானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018

மோடி அறிவித்த பகட்டான திட்டங்களின் நிலை என்ன ஆனது என்பதற்கு இது ஒரு சான்று. மத்தியில் ஆளும் அரசு, மாநிலத்தையும் ஆண்டால் நலத்திட்டங்கள் உடனடியாக மக்களை வந்து சேரும்  என்ற மோடியின் தேர்தல் நேர பிரச்சாரம், பா.ஜ.க. ஆளும் உத்தர பிரதேசத்திலேயே வெற்று சவடாலாகியிருக்கிறது. பட்டேல் சிலைக்கு 3000 கோடி,  ராமன் சிலைக்கு 4000 கோடி என மக்கள் பணத்தை விரயமாக்கும் காவிகளின் ஆட்சியில் கர்ப்பிணிகளுக்கு மட்டும் நலத்திட்டங்கள் கிடைத்து விடுமா என்ன?


கலைமதி
செய்தி ஆதாரம்: moneycontrol

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க