எந்த நேரத்திலும், கேரள மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்திருப்பதாகக் கேரள அரசு, உள்நோக்கத்துடன், மக்கள் நம்பும் வகையில் கற்பனையாகப் பிரச்சனையை உருவாக்கியதோடு, தனக்குச் சாதகமானதும், தேசிய நலனுக்குப் பாதகமானதுமான ஒரு தவறான இடைக்காலத் தீர்வைப் பெற்றுச் செயலாக்கி வருவதால், நாட்டின் முக்கியமான நீர்வளம், வறட்சியான பகுதிகளுக்குக் கிடைக்காமல் தொடர்ந்து வீணாக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரச்சினையை இழுத்து, ஒப்புக்கொண்ட பேச்சுவார்த்தைகளின் முடிவுகளுக்கோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கோ, கேரள அரசு கட்டுப்படாமல் இருந்து வரும் நிலையில், பிரச்சனை மீண்டும் உச்சநீதிமன்றம், உயர்மட்டக்குழு என இழுபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் 27.02.2006 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் செயலாக்க முடியாதபடி, கேரள மாநில அரசு தனது 2003-ம் வருட கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்புச் சட்டத்தில், ஒரு முக்கிய திருத்தத்தை அனைத்துக் கட்சிகளின் முழு ஆதரவோடு கேரள சட்ட மன்றத்தில் கொண்டு வந்து இயற்கையான தர்ம நியாயம், மனித நேயம், அண்டை மாநிலத்துடனான இணக்கமான உறவு, தட்டுப்பாடான நீர்வளத்தை வீணாக்காமல் அதிகபட்சப் பலனைப் பெறும் வகையில் பயன்படுத்த வேண்டுமென்கிற தேசிய நலன் ஆகியவற்றை உதறித்தள்ளி விட்டது.
கிடைக்கக்கூடிய நீர்வளத்தை வீணாக விடாமல், திறம்படப் பயன்படுத்தும் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, நாட்டில் ஆங்காங்கே உள்ள உபரி நீர்வளத்தைத் தட்டுப்பாடுள்ள பகுதிகளுக்குப் பங்கிட்டு வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசும், அரசியல் நிர்வாகக் காரணங்களால், இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உரிய முனைப்புடன் செயல்படாமல் பார்வையாளராக இருந்துவரும் நிலை.
முறை வைத்தாற்போல, கடந்த 40 ஆண்டுகளாக மாறி மாறித் தமிழகத்தை ஆண்டு வரும் பிரதான மாநிலக்கட்சிகளும், மாநில அளவில் குறுகிய நோக்கங்களுடன் சுயநலத்தோடு செயல்பட்டு வந்ததாலும், நமக்குத் தெரியாத பிற காரணங்களாலும் அவர்கள் கேரள அரசின் குறுகிய மாநில நோக்கத்தை முறியடிக்கத் தேவையான உறுதியுடன் செயல்படவில்லை . முல்லைப் பெரியாறு நீர்வளப் பங்கீட்டில் தனது மாநில உரிமையைப் பெறுவதில் ஆரம்பம் முதல் மெத்தனமாக இருந்துவிட்டதாலும், அதனால் ஏற்பட்டு வரும் தொடர் இழப்பையும், தாக்கத்தையும் பொதுமக்கள் சரியாக உணரமுடியாதபடி, அவர்களது இலவசத் திட்டங்கள் அரணாக இருந்து வருகின்றன, இதனால் பிற தன்னார்வ அமைப்புகளின் முனைப்பும், சிறிய அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் எடுபடவில்லை . எனவே, பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சார்பாகக் குரல் கொடுக்க வேண்டிய மாநில அரசின் நடவடிக்கைகளில் உரிய அழுத்தமும் வேகமும் இல்லாத நிலை .
விவசாயம் ஒரு நம்பகத் தன்மையற்ற, கட்டுப்படியாகாத தொழிலாக மாறிவிட்டதோடு, சமுதாயப் பார்வையில் விவசாயிகளின் மதிப்பு குறைந்துவிட்டதாலும், அவர்கள் மாற்றுத் தொழிலைத் தேடிக் கொண்டிருக்கும் போக்கு பரவலாகியுள்ளதாலும், முல்லைப்பெரியாறு பிரச்சனையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள பாசன விவசாயிகள்கூட இழந்துள்ள தங்களது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதில் மந்தமாக இருந்துவரும் நிலை.
இப்பிரச்சனையால், நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை முன்னிறுத்திப் போராட்ட முனையும் தென் தமிழகத்தைச் சார்ந்த அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுக்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசின் கவனத்தைச் சுண்டி. ஈர்க்கும் அளவிற்கு ஒட்டுமொத்த விவசாயிகளின் ஒத்துழைப்போ, போராட்டங்களைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான பொருளாதார வசதியோ இல்லாத நிலை.
பத்திரிக்கைகள், அவ்வப்போது முல்லைப்பெரியாறு சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் வெளிப்படும் பரபரப்புக் கருத்துக்களை மட்டும் வெளியிட்டுத் தங்களது கடமையில் திருப்தி அடைந்துவரும் நிலை.

ஆக, சம்பந்தப்பட்ட முக்கியமானவர்கள் அனைவரும், முல்லைப் பெரியாறு பிரச்சனையின் தேசிய முக்கியத்துவத்தையும், அதன் பின்விளைவுகளையும் சரியாக உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. அதனால்தான், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதில் போதிய தீவிரம் காட்டாமல், மிகவும் மெத்தனமான முறையில் செயல்பட்டுப் பல வருடங்களாகத் தீர்வை எட்டமுடியாதபடி, முடக்கப்பட்டுள்ள பிரச்சனையாகி உள்ளது.
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இழப்பின் தாக்கத்தைப் பொதுமக்கள் தற்போது உணராவிட்டாலும், வரும் காலங்களில், அதன் பின்விளைவுகள் தேசிய அளவில் மிகவும் கடுமையாக இருக்கப் போவது உறுதி என்பதால், இப்பிரச்சனையில் மத்திய அரசு உறுதியான கொள்கை முடிவை எடுத்துக் காலம் கடத்தாமல் ஒரு தீர்வுக்கு வழி செய்தால்தான், நாட்டின் நீர்த்தட்டுப்பாடுள்ள பகுதிகளின் வருங்கால நீர்த் தேவைகளைச் சமாளிக்க முடியும். இதில் மேலும் காலம் கடத்துவது பல பிரச்சினைகளுக்கு வித்தாகிவிடும்.
உண்மைகளின் வெளிச்சத்தில் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாகப் பிரச்சனையை அணுகினால், இரண்டு மாநிலங்களும் பயன்பெறக்கூடிய தேசிய நோக்கிலான ஒரு நடுநிலையான தீர்விற்கு வழியுள்ளது. இப்படிப்பட்ட தீர்வைக் காண்பதற்கு அடிப்படையாக இந்நூலில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மத்திய நீர்வள ஆணையத்திற்கோ (Central Water Commission), கேரள அரசு மற்றும் மத்திய அரசின் நீரியல் வல்லுநர்களுக்கோ தெரியாதவையும் அல்ல. அவர்களால் மறுக்கக்கூடியவையும் அல்ல. அவற்றைப் பொதுமக்களும் தெரிந்துகொண்டால்தான் பிரச்சினைக்கான சரியான தீர்வை மத்திய அரசு, அரசியலைக் கடந்த உறுதியுடனும், காலம் கடத்தாமலும் செயல் படுத்துவதற்கான அழுத்தத்தைத் தரமுடியும்.
இதனைக் கருத்தில் கொண்டு, முல்லைப் பெரியாறு சம்பந்தப்பட்ட இன்றைய பிரச்சனைகள், அதற்காகச் சொல்லப்படும் சொல்லப்படாத காரணங்கள் மற்றும் அறிவுப்பூர்வ அணுகுமுறை கொண்ட நடுநிலையான தீர்வு ஆகியவற்றை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக்குவதுதான் இந்நூலின் நோக்கமாகும்.
படிக்க:
♦ முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை
♦ நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !
இதற்கு ஏதுவாக, முதலில், இந்தியா போன்ற பரந்த நாட்டின் நீர்வள வேறுபாடுகளையும் நீர்வளப் பங்கீட்டின் அவசியம் பற்றிய அடிப்படை விவரங்களையும் நூலின் நுழைவாயிலிலேயே தெரிந்து கொள்வது அவசியமாகும். இந்தியாவின் நீர்வள வேறுபாடுகளும் நீர்வளப் பங்கீட்டின் அவசியமும் உலகின் அனைத்து உயிரினங்களும் வாழ நீர் அத்தியாவசியமென்பதால், “நீரின்றி அமையாது உலகு எனப்பட்டது. நீருக்கான ஒரே ஆதாரம் மழை மட்டுமே ஆகும். மழைக்காலங்களில் ஏற்படும் நீரோட்டம் ஒடைகளாகி, பின்பு ஆறுகளாகி, அவை நிலச்சரிவின் போக்கிலேயே பாய்ந்து செல்கின்றன. எனவே, நீரின் ஓட்டம், நமது நிர்வாக எல்லைகளான வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்பவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து செல்கிறது. நீர் தேவைப்படும் இடங்கள். நீர் தேவைப்படாத இடங்கள் எனப் பாகுபாடின்றி நிலச்சரிவுகளே நீரின் ஓட்டத்திற்கு வழிசெய்கின்றன.
முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!
பன்னாட்டு நீர்வளப் பயன்பாட்டுக் கொள்கையின்படி, நீர்வளமானது மனித குலத்தின் பொதுச் சொத்தாகக் கருதப்படுவதால், நீரோட்டங்களின் மேல் பகுதியில் வாழும் மக்கள். கீழ்ப்பகுதியில் வாழும் மக்களின் நீர்த்தேவைகளையும் (அளவில் மட்டுமல்லாது தரத்திலும்) பூர்த்தி செய்ய வேண்டிய கடமையுடையவர்களாகிறார்கள்.
(நூலாசிரியரின் உரையிலிருந்து… பக்.6-8)
நூலாசிரியர் திரு.இரா. வெங்கடசாமி அவர்கள், தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி, கண்காணிப்புப் பொறியாளராக பணி நிறைவு பெற்றவர். அண்ணா பல்கலைக் கழகத்தின் நீர் வள மையத்தில் நான்காண்டு காலம் திட்டப் பொறியாளராகப் பணியாற்றிய போதும், பெரியாறு – வைகை பாசன மேம்பாடு திட்டப் பணிகளின் செயலாக்கத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தபோதும் பெரியாறு அணை பற்றிய பல விவரங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்.
நூல்: முல்லை பெரியாறு அணை (வரலாறும் தீர்வும்)
ஆசிரியர்கள்: இரா.வெங்கடசாமி
வெளியீடு: தமிழோசை பதிப்பகம்,
21, கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம்,
கணபதி, கோவை – 641006.
பேச:97884 59063
மின்னஞ்சல்:tamilosai_vijayakumar@yahoo.co.in
பக்கங்கள்: 88
விலை: ரூ.45.00 (இரண்டாம் பதிப்பு)
இணையத்தில் வாங்க: Marinabooks
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277