மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 38

மாக்சிம் கார்க்கி
ப்போதும் வேலையிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வீடு திரும்பி வரும் நிகலாய், ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக நேரம் கழித்துத் திரும்பி வந்தான். வந்தவன் தன்னுடைய உடுப்புகளைக்கூட களையாமல் கைகளைப் பதறிப்போய் பிசைந்து கொண்டே சொன்னான்:

“நீலவ்னா! நம்முடைய தோழர்களில் ஒருவன் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டானாம். யாராயிருக்கலாம்? என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை …..”

தாயின் உடம்பு ஆட்டம் கண்டு அசைந்தது.

”பாவெலாயிருக்குமோ?” என்று ஓர் ஆசனத்தில் உட்கார்ந்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள் அவள்.

”இருக்கும்!” என்று தோளை அசைத்துக் கொண்டே சொன்னான் நிகலாய்: “ஆனால் அவனை மறைத்து வைப்பதற்கு நாம் என்ன செய்வது? அவனை எங்கே கண்டுபிடிப்பது? அவனைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு நான் தெருத் தெருவாய்ச் சுற்றி அலைந்தாய்விட்டது. அலைந்தது முட்டாள்தனம்தான். ஆனால், நாம் ஏதாவது செய்தாக வேண்டுமே. நான் பழையபடியும் போகிறேன்……”

‘நானும் வருகிறேன்” என்று கத்தினாள் தாய்.

“பாவெல் நன்றாகத்தான் இருக்கிறான். சௌக்கியமாயிருக்கிறான். அவன்தான் எங்களுக்குத் தலைவன் மாதிரி இருக்கிறான்; அதிகாரிகளோடு பேசுகிறான்; பொதுவாக, அவன்தான் உத்தரவு போடுகிறான். எல்லோரும் அவனை மிகவும் மதிக்கிறார்கள்.”

“நீங்கள் இகோரிடம் போய், அவனுக்கு ஏதாவது விஷயம் தெரியுமா? என்று தெரிந்து கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, அவன் அவசர அவசரமாக வெளியேறினான்.

தாய் தன் தலைமீது ஒரு சவுக்கத்தை எடுத்துப் போர்த்திக்கொண்டு அவனைத் தொடர்ந்து தெருவுக்கு விரைந்து சென்றாள். அவள் மனத்தில் நம்பிக்கை நிறைந்திருந்தது. அவளது கண்கள் செவ்வரி படர்ந்து அசைந்தன; அவளது இதயம் படபடத்துத் துடித்து, ஓடுகின்ற மாதிரி அவளை வேகமாக விரட்டியடித்தது. அவள் தன் தலையைக் குனிந்தவாறே எதிரிலுள்ள எவற்றையுமே பார்க்காமல் நான் எதிர்பார்த்துச் செல்வதை எதிரே கண்டுவிடலாம் என்ற எண்ணத்தோடேயே சென்று கொண்டிருந்தாள்.

”நான் அங்கே அவனைக் கண்டுவிட்டேன் என்றால் — அவளது இந்த நம்பிக்கையே அவளை விரட்டி விரட்டி முன்னேறச் செய்தது.

பொழுது உஷ்ணமாயிருந்தது. அவளும் களைத்துப்போய் மூச்சுவிடத் திணறினாள். இகோரின் வீட்டுப் படிக்கட்டுக்குச் சென்றவுடன் அவளால் ஒரு அடிகூட முன்னே செல்ல முடியவில்லை. அவள் நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். திடீரென ஒரு கூச்சலிட்டுக் கண்களை மூடிக்கொண்டுவிட்டாள். அந்த வீட்டு வாசலில், தனது பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு நிகலாய் வெஸோவிஷிகோவ் நிற்பது போலத் தோன்றியது. அவள் மீண்டும் பார்த்தபோது அங்கு யாரையுமே காணோம்.

“இது என் மனப் பிராந்திதான்!” என்று நினைத்துக்கொண்டே படியேறினாள். காதுகளைத் தீட்டிக் கேட்டாள். வெளிமுற்றத்தில் யாரோ மெல்ல மெல்ல நடக்கும் காலடியோசை அவள் காதில் விழுந்தது. அவள் படியேறி மேலே சென்று கீழே பார்த்தாள். மீண்டும் அதே முகம். அதே அம்மைத் தழும்பு. விழுந்த முகம் தன்னைப் பார்த்ததும் புன்னகை புரிந்தவாறு நிற்பதைக் கண்டாள்.

“நிகலாய்! நிகலாய்!” என்று கத்திக்கொண்டே ஏமாற்றத்தால் வேதனையடைந்த இதயத்தோடு அவனை நோக்கி ஓடினாள். “நீ போ, போ” என்று தன் கையை ஆட்டிக்கொண்டே அமைதியாகச் சொன்னான் அவன்.

அவள் விடுவிடென்று மாடிப் படியேறி இகோரின் அறைக்கு வந்தாள். அங்கு அவன் ஒரு சோபாவில் படுத்திருப்பதைக் கண்டாள்.

“நிகலாய் ஓடி வந்துவிட்டான் – சிறையிலிருந்து” என்று அவள் திக்கித் திணறினாள்.

”எந்த நிகலாய்?” என்று கரகரத்த குரலில் கேட்டுக்கொண்டே தலையணையிலிருந்து தலையைத் தூக்கினான்; “இரண்டு நிகலாய் இருக்கிறார்களே”

“வெஸோவ்ஷிகோவ் அவன் இங்கே வந்து கொண்டிருக்கிறான்.

“சபாஷ்!”

இந்தச் சமயத்தில் நிகலாய் வெஸோவ்ஷிகோவே அறைக்குள் வந்து விட்டான். உள்ளே வந்ததும் அவன் கதவைத் தாழிட்டான்; தன் தொப்பியை எடுத்துவிட்டு, தலையைத் தடவிக் கொடுத்தான். லேசாகச் சிரித்துக்கொண்டே நின்றான். இகோர் முழங்கைகளை ஊன்றி எழுந்து கொண்டு, தலையை அசைத்தவாறு சொன்னான்.

”வருக வருக ……”

நிகலாய் பல்லைக் காட்டிப் புன்னகை புரிந்தவாறே தாயிடம் நெருங்கி அவள் கையைப் பற்றினான்.

‘நான் மட்டும் உன்னைச் சந்தித்திராவிட்டால், மீண்டும் சிறைக்கே திரும்பி போயிருப்பேன். எனக்கு நகரில் யாரையுமே தெரியாது. தொழிலாளர் குடியிருப்புக்குத் திரும்பிப் போயிருந்தாலோ ஒரே நிமிஷத்தில் அவர்கள் என்னைப் பிடித்திருப்பார்கள். ஏனடா முட்டாள்தனமாய் சிறையிலிருந்து தப்பியோடி வந்தோம் என்று நினைத்துக் கொண்டு அங்குமிங்கும் சுற்றித் திரிந்தேன். திடீரென்று நீலவ்னா தெரு வழியாக ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். உடனே அவளுக்குப் பின்னாலேயே நானும் ஓடி வந்தேன்.

”சரி, நீ எப்படி வெளியே வந்தாய்?” என்று கேட்டாள் தாய்.

அவன் அந்தச் சோபாவின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு தோளைக் குலுக்கிக் கொண்டு பேசத்தொடங்கினான்.

”சந்தர்ப்ப விசேஷம்தான்! கிரிமினல் கைதிகள், சிறையதிகாரியைப் பிடித்து உதைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் காற்று வாங்கியவாறு வெளியே உலாவிக் கொண்டிருந்தேன். அந்தச் சிறையதிகாரி ஒரு தடவை எதையோ திருடினான் என்பதற்காக, அவனுக்கு போலீஸ் படையிலிருந்து கல்தா கொடுத்தார்கள். இப்போதோ இந்தப் பயல் ஒவ்வொருத்தனையும் நோட்டம் பார்த்துத் திரிவதும், உளவு சொல்வதுமாகவே இருந்தான். இவனால் யாருக்குமே நிம்மதி கிடையாது. எனவேதான் அவர்கள் அவனைப் பிடித்து மொத்தினார்கள். ஒரே குழப்பமாக இருக்கவே, சிறையதிகாரிகள் விசில்களை ஊதிக்கொண்டு நாலாபக்கங்களிலிருந்தும் ஓடி வந்தார்கள். நான் சிறைக் கதவுகள் திறந்து கிடப்பதைப் பார்த்தேன். அதற்கு அப்பாலுள்ள மைதானச் சவுக்கத்தையும் ஊரையும் பார்த்தேன். மெதுவாக கனவில் நடப்பது மாதிரி நடந்து வெளியே வந்தேன். தெருவுக்குள் பாதி தூரத்துக்கு மேல் வந்த பிறகுதான் எனக்கே நினைவு தெரிந்தது. உடனே யோசித்தேன், எங்கே போவது? திரும்பிப் பார்த்தேன். அதற்குள் சிறைக் கதவுகள் மூடிவிட்டதைக் கண்டேன்…”

“ஹும் என்றான் இகோர். “ஏன் ஐயா நீங்கள் பேசாமல் திரும்பிப் போய்க் கதவைத் தட்டி, அவர்களைக் கூப்பிட்டு, “ஐயா. என்னை மன்னியுங்கள், கனவான்களே நான் ஏதோ சிறு பிழை செய்துவிட்டேன். பொறுத்தருளுங்கள்’ என்று சொல்லி பழையபடியும் உள்ளே போயிருக்கலாமே.”

“ஆமாம்” என்று கூறிச் சிரித்தான் நிகலாய். ”அது முட்டாள்தனம். யாரிடமும் எதுவும் சொல்லாமல் நான் இப்படி ஒடிவந்துவிட்டதானது, என்னுடைய தோழர்களுக்குச் சரியென்று பட்டிராது. சரி. அப்படியே போய்க்கொண்டிருந்தேன். எதிரே ஒரு சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. ஒரு குழந்தையைப் புதைப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களோடு நானும் சேர்ந்து, சவப்பெட்டிக்குப் பக்கமாகச் சென்று என் தலையைத் தொங்கவிட்டவாறு, யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல் நடந்துவந்தேன். இடுகாட்டில் நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து காற்று வாங்கினேன். அப்புறம் திடீரென எனக்கு ஒரு யோசனை வந்தது……”

“ஒரே ஒரு யோசனைதானே?” என்று கேட்டுவிட்டு, பெருமூச்செறிந்தான் இகோர். “உன் தலையிலே பல யோசனைகளுக்குத்தான் இடமிருக்காதே என்று நினைத்தேன்.”

வெஸோவ்ஷிகோவ் வாய் நிறைந்து சிரித்தான். தலையை அசைத்துக் கொண்டு பேசினாள்.

“ஓ! என் மூளை முன்னை மாதிரி காலியாய் இல்லை! என்ன இகோர் இவானவிச் உனக்கு இன்னும் சிக்குக் குணமாகவில்லையா?”

படிக்க:
ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !
இந்தியாவிலிருந்து 45 இலட்சம் கோடி டாலரை பிரிட்டன் திருடியது எப்படி ?

”ஒவ்வொருவரும் தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்” என்று ஈரமாய் இருமியவாறு பதிலளித்தான் இகோர்: சரி உன் கதையை ஆரம்பி.”

“அப்புறம் நான் இங்கே இருக்கிற பொதுஜனப் பொருட்காட்சி சாலைக்குள்ளே நுழைந்தேன். உள்ளே சென்று அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தவாறே யோசித்தேன். இனிமேல் எங்கே போவது என் மீது எனக்குக் கோபம்கூட வந்தது. அத்துடன் பசி வேறே, மீண்டும் தெருவுக்கு வந்தேன். மனமே கசந்துபோய், எரிச்சலோடு நடந்து வந்தேன். போலீசார் ஒவ்வொருவரையும் கூர்ந்து கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். “சரிதான், என்னை மாதிரி மண்ணுப் பிறவியாக இருந்தால்…! நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன் என்று நினைத்தேன். இந்தச் சமயத்தில் திடீரென்று என்னை நோக்கி நீலவ்னா ஓடிவருவது தெரிந்தது. நான் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றேன்; பிறகு அவளைப் பின் தொடர்ந்தேன். இவ்வளவுதான் விஷயம்.”

”நான் உன்னைப் பார்க்கவில்லையே” என்று குற்றம் செய்து விட்டவள் மாதிரிக் கூறினாள் தாய். அவள் நிகலாயைக் கூர்ந்து பார்த்தாள். அவள் முன்னைவிட மெலிந்துபோய் இருப்பதாக அவளுக்குப்பட்டது.

அங்குள்ள தோழர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று தலையைச் சொறிந்துக்கொண்டே சொன்னான் நிகலாய்.

“சரி. சிறை அதிகாரிகளைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா? அவர்கள் மீது உனக்கு அனுதாபம் கிடையாதா? அவர்களும்தான் கவலை பட்டுக்கொண்டிருப்பார்கள்” என்றான் இகோர். அவன் வாயைத் திறந்து உதடுகளை அசைத்தான். காற்றையே கடித்துச் சுவைத்துத் தின்பது மாதிரி இருந்தது அவனது வாயசைப்பு. ‘சரி, வேடிக்கைப் பேச்செல்லாம் இருக்கட்டும், முதலில் உன்னை எங்காவது ஒளித்து வைக்க வேண்டுமே. அது ரொம்ப நல்ல காரியம்தான். ஆனால் லேசில் நடக்கிற காரியமா? நான் மட்டும் எழுந்து நடக்க முடிந்தால் அவன் பெருமூச்சு விட்டவாறே தன் கைகளை மார்பின் மீது வைத்து, நெஞ்சைத் தடவிக் கொடுத்துக் கொண்டான்.

”நீ ரொம்பச் சீக்காயிருக்கிறாய், இகோர் இவானவிச்!” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டே கூறினான் நிகலாய். தாய் பெருமூச்சு விட்டாள். அந்த அடைசலான சிறு அறையை கவலையோடு பார்த்தாள்.

”அது என் சொந்த விஷயம்” என்றான் இகோர். “அம்மா, நீங்கள் அவனிடம் பாவெலைப் பற்றிக் கேளுங்கள். சும்மா இன்னும் பாசாங்கு செய்து கொண்டிராதீர்கள்.”

நிகலாய் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

“பாவெல் நன்றாகத்தான் இருக்கிறான். சௌக்கியமாயிருக்கிறான். அவன்தான் எங்களுக்குத் தலைவன் மாதிரி இருக்கிறான்; அதிகாரிகளோடு பேசுகிறான்; பொதுவாக, அவன்தான் உத்தரவு போடுகிறான். எல்லோரும் அவனை மிகவும் மதிக்கிறார்கள்.”

நிகலாய் வெஸோவ்ஷிகோவ் சொல்வதைக் கேட்டவாறே தலையை அசைத்துக்கொண்டாள் தாய். நீலம் பாரித்து உப்பியிருந்த இகோரின் முகத்தையும் கடைக்கண்ணால் பார்த்தாள். அந்த முகமே அசைவற்று, உணர்ச்சியற்றுத் தட்டையாயிருப்பது போலத் தோன்றியது அவளுக்கு. அவனது கண்கள் மட்டும்தான் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளி வீசிக்கொண்டிருந்தன.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க