ந்திய சுரங்க பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமம், ஆஸ்திரேலியாவின் கலிலீ படுகையில் உள்ள தனது சிறிய நிலக்கரிச் சுரங்கத்திற்கு தன் சொந்த நிதியையே பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள், கடன் தர மறுத்துள்ள சூழலில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கூட்டாட்சியின் வளங்கள் துறை அமைச்சர் ’மாட் கானவன்’, அதானி குழுமத்தை ஆஸ்திரேலியாவின் சிறிய போர்வீரன் என்று வர்ணித்திருக்கிறார். அக்குழுமத்தின் தற்போதைய சுருக்கப்பட்ட புதிய செயல்திட்டத்தின் பொருளாதார ஆதாயங்களையும் அவர் பாராட்டியிருக்கிறார்.

அதானி சுரங்க நிறுவனம் தனது செயல்திட்டத்தைச் சுருக்குவது என்பது முதன்மையாக நடந்துள்ளது. அதானி சுரங்க நிறுவனத்தின் தலைமைச் செயலர் ’லூகாஸ் டவ்’ கூறுகையில், “இந்த புதிய சுரங்கம் அமைக்க சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவு பிடிக்கும். துவக்கத்தில் இச்சுரங்கத்தில் இருந்து ஆண்டுக்கு 15 மில்லியன் டன் அனல் நிலக்கரி எடுக்கப்படும். பின்னர் திட்டம் படிப்படியாக ஆண்டுக்கு 27.5 மில்லியன் டன் எடுக்கும் அளவுக்கு விரிவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதானியுடனான மோடி

முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டில் இந்நிறுவனம், ஆண்டுக்கு 60 மில்லியன் டன் அனல் நிலக்கரி தோண்டி எடுக்கும் வகையில் திட்டமிட்டிருந்தது. அதற்காக சுமார் 16.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருந்தது. அதை ஒப்பிடும் போது தற்போதைய முதலீடு மிகவும் குறைவானது. எடுக்கப்படும் நிலக்கரியை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காகவே அதானியின் அப்பாட் நிலக்கரி துறைமுக முனையம் உருவாக்கப்பட்டது. துறைமுகத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் வகையில், சுமார் 388 கிமீ தூரத்திற்கு புதிய ரயில்பாதை அமைக்கப்படுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சுருக்கப்பட்ட திட்டத்தின் படி ஏற்கனவே இருக்கும் ரயில்வே உட்கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ள அதானி குழுமம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், இரண்டு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு கொண்டதாக இருந்தாலும், சுரங்க வேலைகள் கண்டிப்பாக முன்னேறும் என்பதற்கு இப்போது வரையிலும் எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஒரு புதிய நிலக்கரி சுரங்கத்தை திறப்பது என்பது சமூக அளவிலும், சுற்றுச் சூழல் அடிப்படையிலும் பொறுப்பற்ற தன்மையுடையதே ஆகும். ஏற்கனவே பருவநிலை மாறுபாடு குறித்த சர்வ அரசுகளின் குழு அளித்துள்ள அறிக்கையின்படி ஆஸ்திரேலியா தமது மாசுபாட்டு அளவைக் குறைக்கும் நடைமுறையில் எதிர்பார்த்த வகையில் முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்பது கண்கூடு. நடப்பு 2018-ம் ஆண்டு நான்காவது மிகச் சூடான ஆண்டாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம் எவ்விதத்திலும் மேலேறாத சூழலில், சமீபத்திய ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனத்தின் (IEEFA) அறிக்கை, நிலக்கரி பொருளாதாரம் மிகப்பெரும் சரிவை சந்தித்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. ஆசியச் சந்தைகள் மலிவான அதிக திறன்மிக்க மாற்று எரிசக்தியை நோக்கி மாறிக் கொண்டிருக்கின்றன என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் அனல் நிலக்கரி சக்தியின் உற்பத்திச் செலவு ஒரு மெகாவாட்டுக்கு 60-80 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. புதிய வகை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திச் செலவை விட நிலக்கரி சக்தி உற்பத்தி இருமடங்கு அதிக செலவு கொண்டதாகும். அதானி குழுமத்தின் நிலக்கரிகள் வாங்கப்படும் குஜராத்தில் உள்ள முந்திரா நிலக்கரி ஆற்றல் நிலையம், ஏற்கனவே குறைவான உற்பத்தி திறனோடு இயங்கிவருகிறது. கூடுதலாக குறிப்பிடத்தக்க காலகட்டத்திற்கு மூடப்பட்டிருந்தது.

அதானி குழுமம் ஆரம்பத்தில் போடப்பட்ட 388 கிமீ ரயில் பாதை இணைப்புத் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது. அதோடு ஏற்கனவே உள்ள ஆரிசோன் ரயில் கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். எனினும் சுரங்கத்திற்கும் ஆரிசோன் ரயில் கட்டமைப்பிற்கும் இடையில் இருக்கும் சுமார் 200 கிமீ இடைவெளியை இணைக்கச் செலவு செய்ய வேண்டியது வரும். ஆரிசோன் குழுமத்துக்கு, அதானி குழுமத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் கடப்பாடு இருந்தாலும், அதன் கோரிக்கை மனுவை பார்வையிடவோ, ஏற்றுக் கொள்ளவோ இல்லை.

சுற்றுச் சூழல் மற்றும் தனிச்சிறப்பான பிரச்சினைகள் :

அதானி குழுமத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பிரச்சினைகள் ஏற்கனவே நீடிக்கும் குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும். குறிப்பாக அப்பாட் பாயிண்ட் முனையத்துக்கு அருகில் உள்ள காலெய் பள்ளத்தாக்கின் சதுப்பு நிலங்களில் உள்ள நீர் கெடுதல் போன்ற பிரச்சினைகள் நீடிக்கின்றன. இந்த செயல்திட்டம் மாற்றப்பட்டதன் காரணமாக இவை எதுவும் இல்லாமல் போகப் போவதும் இல்லை.

எதிர்ப்பு தெரிவிக்கும் ஆஸ்திரேலிய மக்கள்.

பாரம்பரிய உடைமையாளர்களின் ஒப்புதலைப் பெறுவதும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. 12 பேர் கொண்ட பூர்வீகக் குழு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. ஏற்கனவே இருக்கும் அதானியின் தனிச்சிறப்பான நில உபயோக ஒப்பந்தத்தை எதிர்த்து வங்கன் மற்றும் ஜகலின்காவ் மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அங்கிருக்கும் குழுவினர் இந்த ஒப்பந்தத்திற்கு உண்மையில் ஒப்புதல் தராத நிலையில், பூர்வீக மக்களின் கருத்தை ஒதுக்கித் தள்ளி சுரங்கத்திற்கு அனுமதி பெறுவது என்பது சமூக ரீதியிலும், கலாச்சார ரீதியிலும் மோசமான நிலையையே ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தத்தை நீதிமன்றம் செல்லாததாக அறிவித்து விட்டால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது கடினம்.

படிக்க:
மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி!
மோடி – முதலாளிகளின் தலைவன் தொழிலாளிகளின் பகைவன்

ஆகவே, அதானி குழுமம் இந்த சுருக்கப்பட்ட குயின்ஸ்லாந்து நிலக்கரி சுரங்கத்தில், தானே முதலீடு செய்வது என்பது அவரது உறுதியைக் காட்டுகிறது. அதே நேரம், வேகமாக மாறிவரும் காலநிலை மாற்றம் மற்றும் மாறி வரும் ஆற்றல் துறை மற்றும் அவை கோரும் விரிந்த சமூக மற்றும் சுற்றுச் சூழல் பொறுப்புகளை புரிந்து கொள்ளாமல் அதனை எதிர்க்கவும் செய்கிறது என்பதையே காட்டுகிறது.

சமந்தா ஹெப்பர்ன், டீக்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டீக்கின் சட்டப் பயிலகத்தில், ஆற்றல் மற்றும் இயற்கை வளச்சட்டத்திற்கான மையத்தின் இயக்குனராக பணி புரிகிறார்.

அதானியின் ஆஸ்திரேலிய சுரங்கம் செயல்படுவதில் செய்யப்பட்டுள்ள சுற்றுச் சூழல் வரம்புமீறல்கள், சட்டரீதியான வரம்பு மீறல்கள் ஒருபுறமிருக்க, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும், குறைந்து வரும் நிலக்கரி சந்தையை கணக்கில் கொண்டும் பல வங்கிகளும் கடன் நிறுவனங்களும், நிதி வழங்க மறுத்துள்ளன. அதானி குழுமமும் தனது பணத்தைப் போடுவதாகக் கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் பணம் என்பது அதானியின் இந்திய நிறுவனங்களின் பெயரில் வாங்கியுள்ள இந்திய வங்கிகளிலிருந்து பெற்ற பணமாகவோ, அல்லது இந்திய வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய பணமாகவோதான் இருக்க முடியும். கேப்பையிலும் நெய் வடிக்கும் திறன் கொண்ட நிதிமூலதன நிறுவனங்களே அதானியின் நிலக்கரிச் சுரங்கத்திற்கு பணம் தர மறுத்துள்ளன என்றால், இந்திய வங்கிகளில் உள்ள நமது சேமிப்புப் பணத்தை வைத்தே ஆஸ்திரேலியாவில் அதானி சூதாட இருக்கிறார்.

சூதாட்டத்தில் ஜெயித்தால் லாபம் அதானிக்கு, தோற்றால் நாமம் நமக்கு !

தமிழாக்கம்: நந்தன்
மூலக்கட்டுரை: The Conversation

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க