நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த 70% தொகுதிகளில் பாஜக தோல்வியை தழுவியிருக்கிறது. இந்தியா ஸ்பெண்ட் இணையதளம் செய்த பகுப்பாய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. மோடியின் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் சரிவைக் கண்டது. இப்போது காற்றுபோன பலூனாகி இருக்கிறது.
ஐந்து மாநிலங்களில் 80 தொகுதிகளை உள்ளடக்கும் விதமாக மோடி 30 இடங்களில் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசினார். இதில் பாஜக 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 57 இடங்களில் தோற்றது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார் மோடி. இதில் 54 இடங்களில் 22 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. வெற்றி சதவீதம் 41% மட்டுமே.
சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களில் 26 தொகுதிகளை உள்ளடக்கி 8 தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் மோடி பேசினார். ஆனால், தெலுங்கானாவில் மட்டும் ஒரே ஒரு தொகுதியில் பாஜக வென்றது. சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் தலா நான்கு இடங்களை முந்தைய தேர்தலில் பெற்றிருந்தது பாஜக. இப்போது ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை.
அள்ளிவிடுவதில் மோடியைவிட, ஆதித்யநாத் சிறந்தவரா?
ஐந்து மாநில தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளராகவும் மோடிக்கு அறிவிக்கப்படாத போட்டியாளராகவும் ஹிந்தி பேசும் மாநிலங்களிலும் தெலுங்கானாவிலும் களத்தில் இறக்கிவிடப்பட்டார் ஆதித்யநாத்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் 58 பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார் ஆதித்யநாத். இதில் 27 இடங்களில் பாஜக வென்றது; 42 இடங்களில் தோற்றது.
ம.பி., ராஜஸ்தானில் நடந்த 27 பொதுகூட்ட பிரச்சாரங்களில் இவர் பேசினார். 37 தொகுதிகளில் 21 தொகுதிகளில் பாஜக வென்றது. சத்தீஸ்கரில் 23 பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். பாஜக வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.
ஆனால், மோடியைவிட ஆதித்யநாத்தின் வெற்றி சதவீதம் அதிகம். ஒட்டுமொத்தமாக மோடி பேசியதில் வெற்றி வாய்ப்பு 28.75%-ஆகவும் ஆதித்யநாத்தின் வெற்றி சதவீதம் 39.13%-ஆகவும் உள்ளது.
படிக்க:
♦ ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
♦ ஸ்டெர்லைட்டை மூடு : சென்னையில் துவங்கியது மாணவர் போராட்டம் !
இந்த பகுப்பாய்வு இரண்டு விசயங்களை கோடிட்டு காட்டுகிறது. முதலாவது, பாஜகவின் செல்வாக்கு மிக மோசமான சரிவைக் கண்டுள்ளது. மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் 15 ஆண்டு கால ஆட்சியை இழந்திருக்கிறது. மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்கள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மாட்டிறைச்சி அரசியலும் இந்துத்துவ முழக்கமும் மக்களிடம் எடுபடவில்லை.
இரண்டாவது, மோடி பிம்பம் உடையும்பட்சத்தில் அடுத்து யாரை முன்னிறுத்துவது என்கிற சங் பரிவார் கும்பல் சோதனை முயற்சியில் ஆதித்யநாத் வெற்றி கண்டிருக்கிறார். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தோற்றாலும் அடுத்து வரும் தேர்தலில் பாஜகவின் முகமாக ஆதித்யநாத் என்னும் வெறுப்பரசியல் தலைவன் முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது.
2014 தேர்தலில் கூட ஆளும் வர்க்கங்களும் கார்ப்பரேட் ஊடகங்களும் திட்டமிட்டு மோடியை சந்தைப்படுத்தின. அதற்கு முன் மன்மோகன் சிங் வளர்ச்சியின் நாயகனாக முன்னிறுத்தப்பட்டு பின் அவரது பிம்பம் காலாவதியாகி மோடியை வளர்ச்சி நாயகனாக இறக்கினர். இப்போது மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதால் அவர்கள் மாற்று நாயகனைத் தேடுவார்களா, இல்லை இனி வளர்ச்சி தேவையில்லை வெறுப்பே போதுமென ஆதித்யநாத்தை தேடுவார்களா என்றெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். பாஜக பதவியில் இருந்தாலும் இல்லை என்றாலும் அதன் பாசிச மதவெறி திட்டங்களும், முன்னெடுப்புகளும் ஓயப்போவதில்லை. மக்களிடமிருந்து இவர்கள் தனிமைப்படுத்தப்படும் வரை இந்துத்துவம் இந்தியாவின் முன்னணி அபாயம் என்பதில் ஐயமில்லை.
கலைமதி
நன்றி: இந்தியா ஸ்பெண்ட்