மிழகத்தின் வேளாண் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வந்திருப்பவர்கள் இந்த செய்தியை அறிந்திருக்கலாம். தமிழகத்தின் காவிரி பாசன உழவர்கள் அணையிலிருந்து நீரை திறந்து விடுமாறு போராட்டம் நடத்த கர்நாடக காவிரிப் பாசன உழவர்களோ நீரை திறக்கக்கூடாது என்று போராடுவார்கள். ஓர் அணைக்கு மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையைத் திறக்கக்கூடாது என்றும் அவ்வணைக்கு கீழ்ப் பகுதியில் இருப்பவர்கள் திறக்க வேண்டும் என்றும் போராடுவது பொதுவாகவே உலகெங்கும் காணப்படும் வேளாண்மை அரசியல். இதற்கு முற்றிலும் முரணாக ஓர் அணை இருக்கிறது. அந்த அணைக்கு மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையிலிருந்து நீரை திறந்துவிட வேண்டும் என போராட்டம் நடத்த அந்த அணைக்கு கீழ் பகுதியில் இருப்பவர்களோ அணையைத் திறக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள். இந்த விநோத காட்சி நடைபெறும் இடம் நம் தமிழகம் தான். அந்த அணை திருப்பூர் நகருக்கு 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓரத்துப்பாளையம் அணை.

காவிரியின் துணை ஆறான நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் தான் திருப்பூரின் சாயப் பட்டறை கழிவுகள் மொத்தமும் தேங்குகிறது. இதனால் நீர் நஞ்சாகி அணைக்கு மேல் பகுதியில் உள்ள வேளாண் பயிர்கள் கால்நடைகள் மற்றும் குடிநீரும் பாழாகிவிட்டன. இதே நச்சு நீரை திறந்துவிட்டால் கீழ் பகுதி மக்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அணை நீரை திறக்கக்கூடாது என்கிறார்கள். இப்பிரச்சினையை தீர்க்க தெரியாமல் விழிக்கும் அரசோ காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் அணை நீரை திறந்து விடுவதன் மூலம் இப்பிரச்சனையை தொடர்ந்து சமாளித்து வருகிறது.

இதற்கு மூலக் காரணமான திருப்பூரின் பின்னலாடை தொழிலை இன்றைய தேதியில் வருடத்துக்கு 12,000 கோடி அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது என்பதற்காக அரசு சீராட்டி வருகிறது.

இது நியாயம்தானே என்று தோன்றலாம். ஆனால் நாம் இன்னும் சற்று ஆழமாக யோசித்தோமானால், சில உண்மைகளை எளிதாக புரிந்து கொள்ளலாம். பருத்தியை விளைவிக்க தெரிந்த மேல் நாட்டினருக்கு பின்னலாடை தொழில் நுட்பத்தை அறிந்திருக்கும் மேல் நாட்டினருக்கு அதற்கான எந்திரங்களை உற்பத்தி செய்து தரும் மேல் நாட்டினருக்கு இந்த பின்னலாடைகளை மட்டும் அங்கேயே தயாரிக்க தெரியாதா என்ன? பின் ஏன் அதை இங்கு உற்பத்தி செய்து வாங்கிக் கொள்கிறார்கள்?

தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் பாடல் !

இதே போல் உலக அளவில் காலணி தயாரிப்புக்கு புகழ்பெற்ற நாடு இத்தாலி. ஆனால் இந்த நாட்டுக்கு பதப்படுத்தப்பட்ட தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது நம் பாலாற்றங்கரையை நாசம் செய்த வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற ஊர்கள்தான். இந்த இத்தாலி நாடு கச்சாப் பொருளான பதப்படுத்தப்படாத தோல்களை அப்படியே இறக்குமதி செய்துகொண்டு அதை இத்தாலியில் பதப்படுத்திக் கொண்டு காலணிகளை தயாரித்தால் கூடுதலான அந்நிய செலவாணியை மிச்சப்படுத்தி கொள்ளலாம் அல்லவா? பின் ஏன் அவர்கள் அதை செய்வதில்லை?

ஆற்றில் கலக்கப்படும் சாயப்பட்டறை கழிவு நீர்.

இக்கேள்விக்கு வழமையான விடையாக முன்னிறுத்தப்படும் ‘மலிவான மனித வளம் இங்கு கிடைக்கிறது’ என்ற ஒற்றைப் பொருள் தன்மையை கொண்ட அரசியல் சொற்றொடரை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு வேறுசில வினாக்களை நாம் எழுப்பிப் பார்க்கலாம். கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு அதை ஏற்றுமதியும் செய்து வந்த நாடு சவுதி அரேபியா. தற்சமயம் அந்நாடு கோதுமையை இறக்குமதி செய்து கொள்கிறது. ஏன்?

சீனர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு பன்றி இறைச்சி. ஆனால் சீன அரசாங்கம் பன்றி இறைச்சி உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது. ஏன்? சிக்கன நீர் பாசன வேளாண்மைக்கு புகழ் பெற்ற இஸ்ரேல் பல வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்தாலும் ஆரஞ்சுப் பழங்களை அது ஏற்றுமதி செய்வதில்லை. ஏன்? இப்படியாக பல ஏன்?-களை எழுப்பிக் கொண்டே செல்ல முடியும். இத்தகைய வினாக்களுக்கான விடைகளில்தான் ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது. அதுதான் நீர் அரசியல். (நூலிலிருந்து பக். 5 – 7)

ஒரு நவீன உணவகத்தில் ஒரு குவளை பீரும், ஒரு பர்கரும் சுவைக்கும் இளைஞன் மறை நீராக ஒரு குவளை பீரில் 75 லிட்டரும், ஒரு பர்கரில் 2500 லிட்டர் நீருமாக சேர்த்து மொத்தம் 2575 லிட்டர் நீரை காலிசெய்கிறான். போன தலைமுறை வரை பசியாற ஒரு கோப்பை தேநீரும் ஒரு வடையும் சாப்பிட்டவர்கள்தான் இவர்கள். இவ்வளவுக்கும் பால் கலக்காத ஒரு கோப்பை தேநீரில் கூட 30 லி மறைநீர் இருந்தாலும் அந்த உணவு முறைக்கு தேநீர் எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. மேய்ச்சல் நிலத்தில் தானாக மேய்ந்து வீடு திரும்பும் பசுவிடமிருந்து பால் கறந்து குடிக்கும் போது நமது நீர் காணாமல் போகவில்லை. செயற்கை தீவனமிட்டு வளர்த்து, பால் கறந்து, பதப்படுத்தி, ஞெகிழியில் சிப்பமிட்டு வரும் ஒரு கோப்பை பால் 208 லிட்டர் மறை நீரை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

படிக்க:
முன்பு பயிருக்கு தண்ணீர் கேட்டோம் இன்று உயிருக்கு தண்ணீர் கேட்கிறோம்
நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !

நீரே தேவைப்படாத பனையிலிருந்து வெல்லத்தை எடுத்து தேநீரோ, காப்பியோ தயாரித்து குடித்து வந்த சமூகம் முழுக்க முழுக்க வெள்ளை சீனிக்கு மாற்றப்பட்டுவிட்ட பிறகு ஒரு குடும்பம் வாங்கும் ஒவ்வொரு கிலோ சீனியிலும் 1653 லிட்டர் நீர் மறைந்துள்ளது. அது போலவே பனை வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட கடலை மிட்டாய் சாப்பிட்டு வளர்ந்த தலைமுறை நவீன வாழ்க்கைக்கு மாறிய பிறகு தன் குழந்தைக்கு வாங்கி கொடுக்கும் சாக்லேட்டுகள் ஒரு கிலோவுக்கு 26,450 லிட்டர் நீரை உட்கொண்ட பிறகுதான் வெளிவருகிறது.

இன்று பிரட் ரொட்டி ஒரு நவீன, சிற்றுண்டி. ஒரு குடும்பம் ஒரு பாக்கெட் பிரட் வாங்கி சாண்ட்விச் தயாரித்து அத்துடன் ஒரு லிட்டர் கோக் வாங்கி அருந்துவதை நகர்ப்புறங்களில் சாதாரணமாகவே காணமுடிகிறது. ஒரே ஒரு துண்டு பிரட்டில் மட்டும் 40 லிட்டர் மறை நீர் உள்ளது. அப்படியானால் குறைந்தது 15 துண்டுகள் கொண்ட ஒரு உறையில் 600 லிட்டர் மறை நீர் இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு லிட்டர் கோக் தயாரிக்க 56 லிட்டர் நன்னீர் கழிவு நீராக மாற்றப்படுகிறது என்பதையும் சேர்த்துதான் நாம் கணக்கிட வேண்டும்.

தன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டியது ஒவ்வொரு நாட்டினுடைய கடமை. ஆனால் நமது நாட்டின் எந்த ஒரு அரசும் இதுவரை அதை நிறைவேற்றாமல் குடிநீரை வணிக பொருளாக்கி தனியார் முதலாளிகள் ‘பிழைக்க’ வழி செய்து கொடுத்துள்ளது. உரிமையோடு அரசை தட்டி கேட்டு குடிநீரை கேட்டு பெறவேண்டிய நாமோ நவீன வாழ்க்கை மோகத்தில் மயங்கி போத்தல் நீரை விலைக்கு வாங்கி குடித்து திரிகிறோம். அந்த ஒவ்வொரு லிட்டர் நீரும் கூட தலா 3 லிட்டர் நன்னீரை வீணாக்கித்தான் தயார் செய்யப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? (நூலிலிருந்து பக். 22 – 23)

நூல்: கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்
ஆசிரியர்: நக்கீரன்

வெளியீடு: இயல்வாகை பதிப்பகம்,
எண்:25, மாந்தோப்பு, ப.உ.ச. நகர், போளூர் சாலை, திருவண்ணாமலை – 1.
தொலைபேசி: 8056205053, 9659721222
மின்னஞ்சல்: kawthihills@gmail.com

பக்கங்கள்: 28
விலை: ரூ 15.00

இணையத்தில் வாங்க: marinabooks | udumalai

வினவு மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க