சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் :

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை கண்டித்து போராடிய மாணவர்களை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 21-12-2018 அன்று காலை புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை கண்டித்தும், மாணவர்களை விடுவிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர் மணியரசன் “ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 14 பேருக்கு கிடைக்கும் உரிய நீதி ஆகும். அதனைப் பெற ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது பகத்சிங் எப்படி போராட முன்வந்தாரோ, அதுபோல் இன்று இளைஞர்கள் முன் வரவேண்டும். மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறைகூவல் விடுத்தார்

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

****

மாநிலக் கல்லூரி, சென்னை :

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தை நடத்தினார்கள். இப்போராட்டத்தை மாணவர்கள் நடத்திக் கொண்டிருக்கையிலேயே போலீசு ஜீப் அங்கு வந்து நிறுத்தப்பட்டது. கூடுதலாக மாணவர்கள் வந்து சேராமல் தடுப்பதற்காகவே, மிரட்டும் வகையில் போலீசு வாகனம் போராட்டம் நடந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

தகவல்: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்

****

திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி :

ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் சார்பாக “தமிழன்னா வெயிட்டு – ஸ்டெர்லைட்டை விரட்டு – எடப்பாடிய மிரட்டு – தனிச்சட்டம் இயற்று” என்கிற முழக்கத்தின் கீழ் மாணவர்கள் திரளாக ஸ்டெர்லெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.  ஆசிரியர்கள் , போலீசு, உளவு போலீசு ஆகியோரைத் தாண்டி மாணவர்கள் உறுதியாக நின்று இப்போராட்டம் நடத்தப்பட்டது.

கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் பேரணியாக சென்று கல்லூரி அதிர முழக்கமிட்டனர். ஸ்டெர்லெட்டை விரட்டும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும், “நாங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்” என்றும் உறுதிபட தெரிவித்தனர்.

தகவல் : ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு,
திருச்சி.
99431 76246

****

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க