மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 41
தாய் கூட்டத்தினிடையே நின்று, தன்னைச் சுற்றியுள்ள பரிச்சயமான முகங்களைக் கண்டு வருத்தத்தோடு நினைத்துக் கொண்டாள்.
”நீங்கள் ஒன்றும் அதிகம் பேர் வரவில்லை. தொழிலாளர்களே ரொம்ப ரொம்பக் குறைச்சல்……..”
கதவுகள் திறந்தன. சிவப்பு நாடாக்களால் கட்டப்பெற்ற மலர் வளையங்கள் சுற்றிய சவப்பெட்டியின் மேற்பகுதியைச் சிலபேர் வெளியே கொண்டுவந்தார்கள். குழுமி நின்ற ஜனங்கள் உடனே தங்கள் தொப்பிகளை அகற்றி அதற்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்கள் செய்த இந்தச் செய்கை ஒரு பறவைக் கூட்டம் திடீரென கணத்தில் சிறகை விரித்துப் பறக்கத் தொடங்குவது போலத் தோன்றியது. சிவந்த முகத்தில் கறுத்த பெரிய மீசை கொண்ட ஒரு நெட்டையான போலீஸ் அதிகாரி விறுவிறென்று கூட்டத்தினரை நோக்கி நடந்து வந்தான். அவனுக்குப் பின்னால் ஜனங்களைப் பிளந்து தள்ளிக்கொண்டும், தங்களது பூட்ஸ் கால்களை ஓங்கி மிதித்துக்கொண்டும் சிப்பாய்கள் சிலர் வந்தார்கள்.
“அந்த நாடாக்களைத் தூர எடு!” என்று கரகரத்த குரலில் உத்தரவிட்டான் அந்த அதிகாரி.
ஆணும் பெண்ணும் அவனைச் சுற்றி நெருங்கிச் சூழ்ந்தார்கள். ஆத்திரத்தோடு பேசினார்கள். தங்கள் கைகளை அசைத்து வீசி ஒருவரையொருவர் முண்டியடித்து முன்னேறினார்கள். தாயின் கண் முன்னால் உணர்ச்சி வசப்பட்டு வெளுத்துப்போன முகங்களும் துடிதுடிக்கும் உதடுகளும் பிரகாசித்தன. ஒரு பெண்ணின் கன்னங்களில் அவமானத்தால் ஏற்பட்ட கண்ணீர் பொங்கி வழிந்து உருண்டோடியது.
”அடக்குமுறை ஒழிக!” என்று ஒரு இளங்குரல் கோஷமிட்டது. எனினும் அந்தக் கோஷம் அங்கு நடந்துகொண்டிருந்த வாக்குவாதத்தில் அமிழ்ந்து அடங்கிவிட்டது.
தாயின் உள்ளத்தில் சுருக்கென்று வேதனை தோன்றியது. அவள் தனக்கு அடுத்தாற்போல் நின்றுகொண்டிருந்த எளிய உடைதரித்த இளைஞனைப் பார்த்தாள்.
”சவச் சடங்கைக்கூட தோழர்களின் இஷ்டம்போல் நடத்துவதற்கு விடமாட்டேனென்கிறார்கள்” என்று அவள் ஆக்ரோஷத்தோடு சொன்னாள். “இது ஓர் அவமானம்!”
வெறுப்புணர்ச்சி மேலோங்கியது, ஜனங்களது தலைகளுக்கு மேலாகச் சவப்பெட்டியின் மூடி அசைந்தது. அதிலுள்ள சிவப்பு நாடாக்கள் காற்றில் அசைந்தாடின. அந்தப் பட்டு நாடாக்கள் ஜனத்திரளுக்கு மேலாகப் படபடத்து ஒலித்தன.
போலீசாருக்கும் ஜனக்கூட்டத்துக்கும் கலவரம் ஏற்படக்கூடும் என்ற பயம் தாயின் மனத்தில் ஏற்பட்டது. எனவே அவள் ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டே அங்குமிங்கும் விறுவிறென நடந்து திரிந்தாள்.
படிக்க:
♦ கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?
♦ ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி
”அவர்கள் அப்படி விரும்பினால் அவர்கள் இஷ்டப்படியே நடந்து தொலையட்டுமே! வேண்டுமானால், அவர்கள் அந்த நாடாக்களை எடுத்துக்கொள்ளட்டுமே! நாம்தான் கொஞ்சம் விட்டுக்கொடுப்போமே!”
யாரோ ஒருவனின் கூர்மையும் பலமும் கொண்ட குரல் அங்கு நிலவிய சப்தத்தை விழுங்கி மேலோங்கி ஒலித்தது:
”எங்களது தோழனை, உங்களது சித்திரவதையால் உயிர் நீத்த எங்களது தோழனை கல்லறைக்கு வழியனுப்பி வைக்கும் எங்கள் உரிமையைத்தான் நாங்கள் கோருகிறோம்…”
ஓர் உரத்த பாட்டுக்குரல் ஒலிக்க ஆரம்பித்தது:
இணையும் ஈடும் இல்லாத
இந்தப் போரில் நீங்களெல்லாம்
பணயம் வைத்தே உம்முயிரைப்
பலியாய்க் கொடுத்தீர் கொடுத்தீரே!
“நாடாக்களை எடு! அவற்றை வெட்டித்தள்ளு, யாகவ்லெவ்!”
உருவிய வாள்வீச்சு ஒலித்து இரைந்தது. கூச்சல்களை எதிர்பார்த்து தாய் தன் கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் ஜனங்களோ முணுமுணுக்கத்தான் செய்தார்கள். சீற்றங்கொண்ட ஓநாய்களைப்போல் உறுமினார்கள். பிறகு அவர்கள் மெளனமாகத் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டவாறே விலகி நடந்தார்கள். அவர்களது காலடியோசை தெரு முழுதும் நிரம்பி ஒலித்தது.
அலங்கோலமாக்கப்பட்ட சவப்பெட்டியின் மேலிருந்து கசங்கிப்போன பூமாலைகள் ஜனக்கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக உதிர்ந்து மிதந்தன. அவர்களுக்குப் பக்கத்தில் குதிரைப் போலீஸ்காரர்கள் பாராக் கொடுத்து உலாவிக் கொண்டிருந்தார்கள். தாய் நடைபாதை வழியாக நடந்து வந்தாள். அவளால் இப்போது சவப்பெட்டியைக்கூடக் காண முடியவில்லை. அந்தச் சவப்பெட்டியைச் சுற்றிலும் தெரு முழுவதுமே முன்னும் பின்னும் ஜனத்திரள் பெருகி வந்தது. சாம்பல் நிறம் படைத்த குதிரைப் போலீஸ்காரர்கள் பின்புறத்திலும் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அதே சமயம் இருமருங்கும் போலீஸ்காரர்கள் தங்களது உடைவாளின் கைப்பிடியில் கைகளைப் போட்டவாறே நடந்து வந்துகொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் துப்பறிபவர்களின் கூரிய கண்கள் ஜனங்களின் முகங்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே வருவதைத் தாய் கண்டாள்.
சென்று வாராய், தோழனே!
சென்று வாராய். தோழனே!
என்று இரு சோகக் குரல்கள் பாடின.
”பாட்டில்லாமலே போகலாம்” என்று யாரோ கத்தினார்கள். “பெரியோர்களே, நாம் மௌனமாகவே செல்வோம்.”
அந்தக் குரலில் ஏதோ ஓர் உறுதியும் அழுத்தமும் இருந்தது. அந்தச் சோக கீதம் திடீரென்று நின்றது. பேச்சுக்குரல் அடங்கியது. சரளைக் கற்கள் பாவிய தெருவில் ஒரே கதியில் செல்லும் மங்கிய காலடியோசை மட்டுமே கேட்டது. இந்த ஓசை ஜனங்களுக்கு மேலாக எழுந்து நிர்மலமான வானமண்டலத்தில் மிதந்து, எங்கோ தூரத் தொலைவில் பெய்யும் புயல் மழையின் இடியோசையைப் போல், காற்றை நடுக்கி உலுக்கியது. ஒரு பலத்த குளிர்காற்று உரத்து வீசி, தெருப்புழுதியையும் குப்பை கூளங்களையும் வாரியள்ளி ஜனங்களின் மீது எரிச்சலோடு வீசியெறிந்தது. அவர்களது தலைமீதும், சட்டை துணிமணிகள் மீதும் வீசியடித்து கண்களை இறுக மூடச் செய்தது. மார்பில் ஓங்கியறைந்தது, காலைச்சுற்றி வளைத்து வீசியது…….
அந்த மெளன ஊர்வலம் பாதிரிகள் யாருமின்றி, இதயத்தைக் கவ்வும் இனிய கீதம் எதுவுமின்றிச் சென்றது. அந்த ஊர்வலமும், ஊர்வலத்தில் தோன்றிய சிந்தனை தோய்ந்த முகங்களும், நெரிந்த நெற்றிகளும் தாயின் உள்ளத்தில் பயங்கர உணர்ச்சியை நிரப்பின. மெது மெதுவாகப் பல சிந்தனைகள் அவள் மனத்தில் வட்டமிட்டான். அந்தச் சிந்தனைகளை அவள் சோகம் தோய்ந்த வார்த்தைகளால் பொதிந்து தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
“உங்களில் அநேகர் சத்தியத்துக்காகப் போராடவே இல்லை…”
அவள் குனிந்த தலையோடு நடந்து சென்றாள். அவர்கள் இகோரைப் புதைக்கச் செல்வதாகவே அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் தனக்கு மிகவும் அத்தியாவசியமான அருமையான நெருங்கிய ஏதோ ஒன்றைத்தான் அவர்கள் புதைக்கப் போவதாக அவளுக்குப்பட்டது. அவள் நிராதரவான உணர்ச்சிக்கு ஆளானாள். அந்தக் காரியத்துக்கு, தான் அன்னியமாகப் போனது மாதிரி உணர்ந்தாள். இகோரை வழியனுப்பும் இந்த மனிதர்களுடன் ஒத்துப்போகாத ஒரு சமனமற்ற கவலையுணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.
“உண்மைதான். இகோர் கடவுள் இருப்பதாக நம்பியதில்லை. இந்த மனிதர்களும்தான் நம்பவில்லை……..” என்று அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.
அந்த எண்ணத்தையே மேலும் மேலும் தொடர விரும்பவில்லை. தனது இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பெரும் பார உணர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு முயன்றவாறே அவள் பெருமூச்செறிந்தாள்.
‘கடவுளே! அருமை ஏசுநாதரே! நானும் கூடவா இப்படி இருப்பேன்……”
அவர்கள் இடுகாட்டை அடைந்தார்கள். சமாதிகளுக்கு மத்தியில் செல்லும் ஒடுங்கிய நடைபாதைகளைச் சுற்றி வளைத்து நடந்து, கடைசியாக, சிறு வெள்ளைநிறச் சிலுவைகளாகக் காணப்படும் ஒரு பரந்த வெட்டவெளிக்கு வந்து சேர்ந்தார்கள். சவக்குழியைச் சுற்றி அவர்கள் மெளனமாகவே குழுமினார்கள். சமாதிகளுக்கு மத்தியில் வந்து சேர்ந்த அந்த உயிருள்ள மனிதர்களின் ஆழ்ந்த மெளனம். வெகு பயங்கரமாக தோன்றியது. இந்தப் பயங்கரச் சூழ்நிலை தாயின் இதயத்தை நடுக்கியது. அந்தச் சிலுவைகளுக்கு ஊடாகக் காற்று ஊளையிட்டு, இரைந்து வீசிற்று: சவப்பெட்டியின் மீது கிடந்த கசங்கிய மலர்களை உலைத்தெறிந்தது.
போலீஸ்காரர்கள் அணிவகுத்து நின்று தங்கள் தலைவனையே பார்த்தவாறு நின்றார்கள். கரிய புருவங்களும், நீளமான தலைமயிரும், நெடிய தோற்றமும் கொண்ட ஒரு வெளிறிய வாலிபன் சவக்குழியின் தலைமாட்டருகே போய் நின்றான். அதே சமயத்தில் அந்தப் போலீஸ் அதிகாரியின் முரட்டுக் குரல் சத்தமிட்டது:
”பெரியோர்களே…..”
“தோழர்களே!” என்று அந்தக் கரிய புருவமுடைய இளைஞன் தெளிந்த உரத்த குரலில் பேசத் தொடங்கினான்.
“ஒரு நிமிஷம்” என்றான் அதிகாரி: ”இங்கு நீங்கள் எந்தவிதமான பிரசங்கமும் செய்ய நான் அனுமதிக்க முடியாது. எனவே உங்களை எச்சரிக்கிறேன்.”
“நான் ஒரு சில வார்த்தைகள் மாத்திரம் கூறி முடித்துவிடுகிறேன்” என்று அந்த இளைஞன் அமைதியாகச் சொன்னான். பிறகு பேசத் தொடங்கினான். “தோழர்களே! நம்முடைய நண்பனும் நல்லாசிரியனுமாக விளங்கிய இந்தத் தோழனின் சமாதியருகே நாம் ஒரு பிரதிக்ஞை செய்வோம். அவனது கொள்கைகளை நாம் என்றும் மறக்கமாட்டோம். நாம் அனைவரும் நம்மில் ஒவ்வொருவரும் நமது தாய்நாட்டின் சீர்கேட்டுக்கெல்லாம் மூலகாரணமான இந்தத் தீமையை, இந்த அடக்குமுறை ஆட்சியை, ஏதேச்சதிகார ஆட்சியை சவக்குழி தோண்டிப் புதைப்பதற்கே நமது ஆயுட்காலம் முழுவதும் என்றென்றும் இடையறாது, போராடிப் பாடுபடுவோம்”
“அவனைக் கைது செய்” என்று அதிகாரி கத்தினான். ஆனால் அவனது குரல் அப்போது எழுந்த கோஷப் பேரொலியில் முங்கி முழுகிவிட்டது.
“ஏதேச்சதிகாரம் அடியோடு ஒழிக”
போலீஸ்காரர்கள் ஜனக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு அந்தப் பிரசங்கியை நோக்கிச் சென்றார்கள். அவனோ தன்னைச் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி நின்று தனக்குப் பாதுகாப்பளித்துக்கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்துக்கு மத்தியிலிருந்து கைகளை வீசி ஆட்டிக் கோஷமிட்டான்.
‘சுதந்திரம் நீடூழி வாழ்க!
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
முந்தைய பகுதிகள்: