டந்த டிசம்பர் 17-ம்தேதி (2018) ஆந்திரா – காக்கிநாடாவை  பெய்ட்டி புயல் தாக்கியது. தமிழகத்தில் வந்த கஜாவின் அளவிற்கு இந்த புயல் பாதிப்போ, பரபரப்போ  ஏற்படுத்தவில்லை என்பதால் ஓரிரு நாட்கள் மட்டுமே செய்தியாக வந்து மறைந்து விட்டது.

இயற்கைப் பேரிடரில் புயலோ, மழையோ எதுவாகினும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் வறிய மக்கள்தான். இந்த விதிக்கு காக்கிநாடாவின் பர்லோபேட்டை மக்களும் தப்பவில்லை. புயல் ஓய்ந்து பத்து நாட்களுக்கு மேல் ஆனாலும் அவர்களின் துயரம் நீங்கிவிடவில்லை.

பர்லோபேட்டை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசிக்கின்றன. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மதவேறுபாடின்றி ஒன்றாய் வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் அனைவரும் நகர்ப்புறத்தில் கூலிவேலை செய்பவர்கள். பட்டறை  தொழில்,  வீட்டு வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்தி வரக்கூடியவர்கள்.

பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர்கள் என்பதால்  காக்கிநாடா ஒரு தொழிற்பேட்டை பகுதி என்றாலும்கூட ஒரு ஒப்பந்த தொழிலாளியாகக் கூட இவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. இவர்களுக்கு சொந்த வீடு என்பது நிறைவேறாத பெருங்கனவுதான்.

இவர்கள் குடியிருக்கும் இந்தப்பகுதி இவர்களுக்கு சொந்தமானது இல்லை. காங்கிரசு அரசால் இரண்டு முறையும், சந்திரபாபு நாயுடுவின் அரசால் ஒரு முறையும் விரட்டியடிக்கப்பட்ட ஆந்திர வாழ் குடியுரிமை பெற்ற நாடோடிகள்.

தற்போது இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தார்கள். அந்த இடம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம்.  முன்னதாக ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு “இந்த இடத்தில் குடிசை மாற்று வாரியம் வரப்போகிறது. இடத்தை காலி செய்யுங்கள். உங்களுக்கும் வீடு கொடுக்கிறோம்” என்று சொல்லி அவர்களை அருகிலேயே குடியமர்த்தினார்கள்.

முதல் குடியிருப்பு.

மாற்று குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சி மற்றும் அதிகாரிகளின் உறவினர்களுக்கு அதனை கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை.  பிறகு சில ஆண்டுகள் கழித்து இந்த இடத்திலும் வீடு வருகிறது என்று சொல்லி அம்மக்களை விரட்டி விட்டார்கள்.

அந்தசமயம் ஆளும் வர்க்கத்தின் ஆசை வார்த்தையை நம்பி எப்படியும் இந்த முறை வீடு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் மூன்றாவதாக மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்தார்கள். அந்த குடியிருப்பு கட்டி முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு வீடு ஒதுக்குவது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

இரண்டாவது குடியிருப்பு.

இந்த சூழலில் மேலும் இடம் வேண்டும் என்று சொல்லி கிட்டதட்ட எட்டு ஆண்டுகளாக வாழ்ந்த இடத்தையும் காலி செய்ய சொல்லி விரட்டி விட்டார்கள். அப்படி விரட்டப்பட்டு நான்காவதாக இந்த இடத்திற்கு வந்து 6 மாதம் ஆகிறது. மூன்றாம் கட்ட விரிவாக்கத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் இம்மக்கள் எதிர்கொண்ட இயற்கை பேரிடர்களின் ஆபத்துகள் ஏராளம்.

சந்திரபாபு நாயுடுவின் அரசு அம்மக்களுக்கு எந்த  அடிப்படை வசதியும் ஏற்படுத்திக் கொடுக்காமல் வெறுமனே ஒரு இடத்தை மட்டும் ஒதுக்கி அதில் குடிசை போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டதோடு அவர்கள் கடமை முடிந்து விட்டது. அந்த மக்களில் பலர் குடிசை அமைத்து குடியேறி விட்டார்கள். சிலர் இப்பொழுதுதான் குடிசை போட்டு வருகிறார்கள். அதற்குள் இந்த பெய்ட்டி புயல் அனைத்தையும் காலி செய்து விட்டது என்று கதறும் மக்களுக்கு ஆதரவாக இதுவரை யாரும் இல்லை.

சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு 5 புயல்கள் – மழை, இரண்டு முறை  தீ விபத்தை சந்தித்து இருக்கிறார்கள். “ஒவ்வொரு முறையும் மொத்தமும் அழிஞ்சி போயிடும். அதுல மிஞ்சின பாத்திரம், துணிமணி… எது எடுத்து வச்சாலும் அடுத்த புயலுக்கு அதுவும் போயிடுது. அழிவுன்னு எத சொல்லுறது?” என்கிறார்கள் விரக்தியாக.

“எங்களைப் பொருத்த வரைக்கும் புயல் – மழை என்பது நாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையில் கொஞ்சம் கூடுதல் அவ்வளவுதான்” என்கிறார்கள்.  சில ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். தற்போதுதான் அங்கு இருக்கக்கூடிய நியூ டெமாக்ரசி எனும் இடதுசாரி கட்சி அமைப்பின் உதவியோடு போராடி பெற்றிருக்கிறார்கள்.

தற்போதுதான் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாட்டின் குடிமக்கள் எனும் உரிமையை வழங்கும் ரேசன் கார்டு முதல் ஆதார் கார்டு வரை அனைத்தும் இருந்தும் இவர்கள் அகதியைவிட மிகமோசமான முறையில் நடத்தப்படுகிறார்கள்.

இந்த பகுதிக்கு செல்ல இருப்பதோ ஒரேயொரு மண் ரோடு. அந்த சாலையிலும் கட்டிடம் கட்ட தேவையான பொருட்களை கொண்டு வரும் லாரிகள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வருவதால் மழைக்காலத்தில் சேறும் சகதியுமாகவும், வெயிலில் புழுதிக் காடாகவும் ஆகி விடுகிறது.

இந்த தாய்மார்களின் அவலம் நம் காதுகளை வண்டாக குடைந்தெடுக்கிறது. “குடிசைக்கு அருகாமையில் பொட்டல் காடு இருப்பதால் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். பாம்பு தொல்லை, காட்டு எலி, சிறு நரி என்று எப்பொழுதும் பயத்தோடு வாழ வேண்டி உள்ளது. இதை விட்டு ஒழியலாம்னா எங்க போறது?  அரசும் வீடு தரதில்ல. அப்படியே தருவதாக இருந்தால் ரூ 50,000 பணம் கேக்குது.  நாங்க இந்த நிலையில இருக்கும்போது எப்படி தர முடியும் சொல்லுங்க?

“ஆண்கள் வேலைக்கு போறதுன்னா பல கிலோ மீட்டர் போக வேண்டி இருக்கு. விடிய விடிய எழுந்து ஓடினாதான் உண்டு. பேருந்து வசதியும் இல்லை.  இந்த பகுதியில 2, 3 பேரிடம் பைக்கு இருந்தாலே பெரிய விஷயம்”

இங்க எங்கயும் பக்கத்துல ஆஸ்பித்திரி இல்ல. திடீர்னு உடம்பு முடியலனா, அரசு ஆஸ்பித்திரிக்கு போயிடுவோம். ரொம்ப அவசரம்னா தோள்ல தூக்கிட்டு போயி ஆட்டோ புடிச்சிப்போம். சாதாரண காய்ச்சல்னா மாத்திர வாங்கி போட்டுக்குவோம்.

எங்க பசங்கள அரசு பள்ளிகூடத்துல சேர்த்திருக்கோம். எல்லாரையும்போல பிள்ளைகள தனியார் பள்ளிகூடத்துல சேர்க்க எங்களுக்கும் ஆசதான்.. ஆனா சோத்துக்கே வழி இல்லாத போது எப்படி தனியார் பள்ளிகூடம் போக முடியும்? என்ற தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார்கள்.

நரசிம்மசாமி (நடுவில் இருப்பவர்.)

இப்பகுதியில் வாழும் நரசிம்மசாமி  சொல்கிறார், “எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. கவர்மெண்ட் பள்ளி கூடத்துல படிக்கிறாங்க. நான் நாலாவது வரைக்கும் படிச்சிருக்கேன். மண் தோண்டுற கூலி வேலைக்கு போறேன்.  எனக்கு 500 ரூபா ஒரு நாள் கூலி. அதுல 50 ரூபா மேஸ்திரி புடிப்பாரு. 450 ரூபாதான். அதுல150 ரூபாய் சரக்கு அடிச்சிடுவேன். இல்லனா அடுத்த நாள் வேலைக்கு போக முடியாது.

என்னோட மனைவி வீட்டு வேலைக்கு போயிட்டு வாறாங்க.. ஒரு வீட்டுக்கு பத்து பாத்திரம் தேய்க்க மாசம் 300 ரூபா. ஒரு வீட்டுக்குத்தான் போவா. இன்னும் ஒரு சிலர் இரண்டு வீட்டுக்கு வேலைக்கு போறாங்க. அதுலதான் இங்க இருக்கவங்களோட வாழ்க்கையே  இருக்கு.

படிக்க:
வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்கள் விருப்பம் !
கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !

இங்க வயசான பெண்கள் அதிகம். அவங்களுக்கு மாசம் 1000 ரூபா பென்சன் பணம் வருது. அதுவும் சரியா வரதில்லை. புதுப்பிக்கனும். அதுக்கு 50,100 ன்னு  செலவாகும். போறது தொலைவு, போனாலும் காத்து கிடக்கனும். அதெல்லாம் இந்த வயசான காலத்துல முடியுமா? வீட்டுலயே இருந்துடுறாங்க. அதை கேன்சல் பண்ணிடுறானுங்க.

இந்த நெலமையில வேற வாடகை வீட்டுக்கு போகலாம்னா இந்த வருமானத்த வச்சி என்ன பண்ண முடியும். அதான் எந்த புயல் மழை வெள்ளம் வந்தாலும் இங்கயே இருந்துக்கிறோம்.

நியூ டெமாக்ரசி கட்சியின் AIKMS -அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கொடியோடு பகுதி வாழ் மக்கள்!

இதுவரைக்கு எங்கள ஆண்ட காங்கிரசும், டி.எஸ்.ஆரும் எதுவும் பண்ணிடல. மோடி வந்த பிறகு மேல நல்லா இருக்கதா சொல்றாங்க. ஆனா எங்களுக்குத்தான் எதுவும் வந்த சேரல. எதுனாலும் போராட வேண்டி இருக்கு.

பக்கத்துலதான் இருக்கு காக்கிநாடா துறைமுகம்.  அதை தனியார்கிட்ட கொடுத்துட்டாங்க. அவனுங்களும் அடிக்கடி இங்க வந்து இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. நீங்க கெளம்புங்கன்னு சொல்லி மிரட்டுறான். நாங்க அதுக்கு எதிரா போராடுனதால இப்ப அமைதியா இருக்கானுங்க.

“ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது?

படம், செய்தி: வினவு செய்தியாளர்கள்,
ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க