மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 42
அவர்கள் இந்தக் காயமுற்ற பையனை ஒரு சோபாவிலே படுக்கப் போட்டார்கள். பிறகு அவள் லாவகமாக அவனது கட்டை அவிழ்த்து சிகரெட் புகை கண்ணில் படியாதபடி கண்ணைச் சுருக்கி விழித்துக்கொண்டே உத்தரவிட்டுக்கொண்டிருந்தாள்:
“இவான் தனீலவிச்! அவனை இங்குக் கொண்டு வந்துவிட்டார்கள். நீலவ்னா, களைத்துப் போய்விட்டீர்களா? பயந்துவிட்டீர்களா? சரி, கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நிகலாய்! நீலவ்னாவுக்கு ஒரு கிளாஸ் ஒயின் கொடு.”
கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தான் அனுபவித்த சங்கடத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் தாயை வாட்டிக்கொண்டிருந்தது. அவளுக்கு மூச்சுவிடவே சிரமமாக இருந்தது. நெஞ்சில் குத்தலான வேதனை எடுத்தது.
”என்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிராதே” என்று அவள் முனகினாள். என்றாலும் அவளது உடல் முழுவதும் யாருடைய பணிவிடையையாவது எதிர்நோக்கித் தவித்தது. அன்பாதரவின் சுகத்தை நாடியது.
அடுத்த அறையிலிருந்து நிகலாய் கட்டுப்போட்ட கையோடு வந்து சேர்ந்தான். அவனோடு டாக்டர் இவான் தனீலவிச்சும் முள்ளம் பன்றியைப் போல் சிலிர்த்துக் கலைந்த தலைமயிரோடு வெளி வந்தார். விருட்டென்று இவானின் பக்கம் ஓடிச்சென்று அவனைக் குனிந்து பார்த்தார்.
”தண்ணீர்!” என்றான் அவன். ”நிறையத் தண்ணீர் கொண்டுவா. அத்துடன் கொஞ்சம் பஞ்சும், சுத்தமான துணியும் கொண்டுவா.”
தாய் சமையலறையை நோக்கி நடந்தாள். ஆனால் அதற்குள் நிகலாய் அவளது கையைப் பிடித்து அவளைச் சாப்பாட்டு அறைக்குள்ளே அழைத்துச் சென்றான். .
”அவன் சொன்னது சோபியாவிடம், உங்களிடமல்ல” என்று மெதுவாகக் கூறினான் அவன். “ரொம்பவும் நிலைகுலைந்து போய்விட்டீர்கள் என்று அஞ்சுகிறேன். அப்படியா, அம்மா?”
அவனது அன்பு ததும்பும் ஆர்வம் நிறைந்த கண்களைக் கண்டதும் தாயினால் தனது பொருமலை அடக்கி வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை.
“ஓ! என்னவெல்லாம் நடந்துவிட்டது” என்று அவள் கத்தினாள். ”அவர்கள் மக்களை அடித்தார்கள், வெட்டினார்கள்……..”
”நானும் பார்த்தேன்’ என்று கூறிக்கொண்டே, அவளுக்கு ஒரு கோப்பை ஒயினைக் கொடுத்தான் நிகலாய். “இருதரத்தாருமே தங்கள் மூளையைக் கொஞ்சம் பறிகொடுக்கத்தான் செய்தார்கள். ஆனால் நீங்கள் அதை எண்ணி அலட்டிக்கொள்ளாதீர்கள். அவர்கள் தங்கள் கத்திகளின் பின்புறத்தால்தான் தாக்கினார்கள். ஒரே ஒருவனுக்குத்தான் படுகாயம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அதையும் அவர்கள் என் கண்முன்னாலேயே செய்தார்கள். நான் அவனைக் கூட்டத்தைவிட்டு வெளியே இழுத்து வந்துவிட்டேன்.”
நிகலாவின் குரலாலும் அந்த அறையின் வெதுவெதுப்பாலும் வெளிச்சத்தாலும் தாயின் உள்ளம் ஓரளவு அமைதி கண்டது. நன்றி உணர்வோடு அவனைப் பார்த்துக்கொண்டே அவள் கேட்டாள்.
”அவர்கள் உங்களையும் தாக்கினார்களா?”
”இது என்னால்தான் விளைந்தது. நான்தான் அஜாக்கிரதையாய் என் கையை எதன்மீதோ ஓங்கி மோதிவிட்டேன். அதனால், அந்த அடி என் கைச் சதையைப் பிய்த்தெறிந்துவிட்டது. சரி, கொஞ்சம் தேநீர் குடியுங்கள். வெளியே ஒரே குளிர். நீங்களும் மெல்லிய உடைகள்தான் அணிந்திருக்கிறீர்கள்.”
அவள் கோப்பையை எடுப்பதற்காகக் கையை நீட்டினாள். அப்போது தனது கைவிரல்களில் காய்ந்துபோன ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டாள். தன்னையறியாமலே அவள் கையை தன் மடிமீது தளரவிட்டாள். அவளது உடுப்பு ஒரே ஈரமாயிருந்தது. அவள் தன் புருவங்களை நெரித்து உயர்த்திக் கண்களை அகலத்திறந்து, தனது கை விரல்களையே பார்த்தாள். அவளது இதயம் படபடத்தது. கண்கள் இருண்டு மயக்க உணர்ச்சி ஏற்பட்டது.
“பாவெலுக்கு கூட – அவர்கள் அவனுக்கும் இப்படித்தான் செய்யக்கூடும்!”
இவான் தனீலவிச் தனது சட்டைக் கைகளைத் திரைத்துச் சுருட்டியவாறே அந்த அறைக்குள் வந்தார். வந்த விஷயத்தைக் கேட்பதற்காக வாய் பேசாமல் ஏறிட்டு நோக்கிய நிகலாயைப் பார்த்து உரத்த குரலில் பேசினார் அவர்:
”முகத்திலுள்ள காயம் ஒன்றும் மோசமாக இல்லை. ஆனால், அவனது மண்டையெலும்பு நொறுங்கியிருக்கிறது. படுமோசமாக இல்லை. இவன் ஒரு பலசாலியான பையன்; இருந்தாலும். நிறைய ரத்தத்தை இழந்துவிட்டான். நாம் இவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவோமா?”
“ஏன்? அவன் இங்கேயே இருக்கட்டுமே!” என்றான் நிகலாய்.
“இன்று இல்லாவிட்டால் நாளையாவது அவனை அனுப்பி வைத்தால்தான் நல்லது. ஆஸ்பத்திரியில் இருந்தானானால் என்னால் இன்னும் மிகுந்த செளகரியத்தோடு அவனைக் கவனித்துப் பார்க்க முடியும். அடிக்கடி வந்து கொண்டிருக்க எனக்கு நேரம் கிடையாது. நீ இந்த இடுகாட்டு சம்பவத்தைப் பற்றி ஒரு பிரசுரம் எழுதி வெளியிடுவாயல்லவா?”
“நிச்சயமாய்!” என்றான் நிகலாய்.
தாய் அமைதியுடன் எழுந்து சமையலறையை நோக்கிச் சென்றாள்.
”எங்கே போகிறீர்கள். நீலவ்னா?’ என்று ஒரு விசித்திரச் சிரிப்புடன் கூறினாள் அவள்.
அவள் தன்னறைக்குள் சென்று உடை மாற்றிக்கொள்ளும்போது, இந்த மனிதர்களின் அமைதியைப் பற்றியும், இந்த மாதிரியான பயங்கர விஷயங்களைக்கூட அநாயாசமாக ஏற்றுத் தாங்கும் அவர்களது சக்தியைப் பற்றியும் எண்ணி எண்ணிப் பார்த்துத் தனக்குத்தானே வியந்து கொண்டாள். இந்தச் சிந்தனைகள் அவளுக்குத் தெளிவையுண்டாக்கி அவளது உள்ளத்தில் குடிகொண்டிருந்த பயத்தை விரட்டியடித்தன. அந்தப் பையன் படுத்திருந்த அறைக்குள் அவள் நுழைந்தபோது, சோபியா பையனுடைய படுக்கைக்கு மேலாகக் குனிந்து ஏதோ பேசுவதைக் கண்டாள்.
”அபத்தம், தோழா!” என்றாள் சோபியா.
“நான் போகிறேன், உங்களுக்குத்தான் தொந்தரவு” என்று பலவீனமான குரலில் அவன் எதிர்த்துப் பேசினான்.
”பேச்சை நிறுத்து. அதுவே உனக்கு ரொம்ப நல்லது…”
தாய், சோபியாவுக்குப் பின்னால் வந்து அவளது தோளில் கையைப் போட்டுக்கொண்டு நின்றாள். அந்தப் பையனின் வெளுத்த முகத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்; வண்டியில் வரும்போது அவன் முனகிய பயங்கரமான விஷயங்களை கேட்டு அவள் எப்படிப் பயந்து போனாள் என்பதையும் அவளிடம் சொன்னாள். இவானின் கண்கள் ஜூர வேகத்தோடு பிரகாசித்தன. அவன் தன் நாக்கைச் சப்புக் கொட்டிவிட்டு, வெட்கம் கவிந்த முகத்தோடு பேசினான்:
”நான் எவ்வளவு பெரிய முட்டாள்!”
“சரி. நாங்கள் போகிறோம்” என்று கூறிக்கொண்டே அவனது போர்வையைச் சரி செய்தாள் சோபியா, ”நீ தூங்கு.”
அவர்கள் சாப்பாட்டு அறைக்குள் வந்தார்கள். அங்கு உட்கார்ந்து அன்று நடந்த சம்பவங்களைப் பற்றி வெகுநேரம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய நிகழ்ச்சியை என்றோ வெகு காலத்துக்கு முன் நடந்த சம்பவத்தைப் போலக் கருதி அவர்கள் தங்களது எதிர்காலத்தை, வரப்போகும் நாட்களுக்குரிய வேலைத் திட்டத்தை வகுப்பது பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் விவாதித்துக்கொண்டார்கள். அவர்களது முகங்கள் களைத்துத் தோன்றின. எனினும் அவர்களது எண்ணங்கள் மட்டும் துணிவாற்றலோடு விளங்கின. தங்களது வேலைத் திட்டத்தைப் பற்றி அவர்கள் பேசும்போது தங்களுக்குள் எழுந்த அதிருப்தியுணர்ச்சிகளை அவர்கள் மூடி மறைக்கவில்லை. அந்த டாக்டர் நாற்காலியில் நிலைகொள்ளாமல் உட்கார்ந்து நெளிந்து கொடுத்துக்கொண்டிருந்தார்.
“பிரசாரம், பிரசாரம்தான் ஒரே வழி. அது இப்பொழுது குறைச்சல்” என்று அவன் தனது கூர்மையான மெல்லிய குரலைத் தணிக்க முயன்றவாறே கூறினான். “வாலிபத் தொழிலாளிகள் சரியாக இருக்கிறார்கள். நாம்தான் பிரசாரத்தை விரிவாக்க வேண்டும். தொழிலாளர்கள் சரியாகத்தானிருக்கிறார்கள். அதுமட்டும் எனக்குத் தெரியும்.”
நிகலாய் முகத்தைச் சுழித்தவாறே அந்த டாக்டர் பேசிய மாதிரியே பேசத் தொடங்கினான்.
“ஒவ்வொரு இடத்திலிருந்தும் போதுமான புத்தகங்கள் கிடைக்கவில்லையென்று நமக்குப் புகார்கள் வருகின்றன. நமக்கோ ஒரு நல்ல அச்சகம் வைப்பதற்குக்கூட வழியைக் காணோம். லுத்மீலாவோ நாளுக்குநாள் பலவீனப்பட்டு வருகிறாள். நாம் அவளுக்கு ஏதாவதொரு வகையில் உதவாவிட்டால், அவள் பாடு மோசமாகிவிடும்.”
”நிகலாய் வெஸோவ்ஷிகோவ் என்ன ஆனான்?” என்று கேட்டாள் சோபியா.
”அவனால் நகருக்குள் வாழமுடியாது. புதிய அச்சகம் வைத்தால்தான் அவன் அதில் வேலை செய்யத் தொடங்கலாம். ஆனால், அதற்கு முன்னால், நமக்குத் தற்சமயத்துக்கு இன்னொரு ஆள் தேவை.”
”நான் செய்யமாட்டேனோ?” என்று அமைதியாகக் கேட்டாள் தாய்.
அவர்கள் மூவரும் ஒன்றும் பேசாமல் தாயையே சில கணநேரம் பார்த்தார்கள்.
“அதுவும் ஒரு நல்ல யோசனைதான்!” என்றாள் சோபியா.
”அது உங்களுக்கு மிகுந்த சிரமமான காரியம், நீலவ்னா” என்றான் நிகலாய். ‘நீங்கள் நகருக்கு வெளியே வசிக்க நேரிடும். அதனால், பாவெலைப் பார்க்க முடியாது போகும். பொதுவாகச் சொன்னால்……..”
“பாவெலை இந்தப் பிரிவு ஒன்றுமே பாதிக்காது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் அவள். ”உண்மையைச் சொல்லப்போனால், எனக்குக் கூட அவனைச் சந்தித்துவிட்டு வருவது என் இதயத்தையே பிழிந்தெடுப்பது மாதிரி இருக்கிறது. அவர்கள் ஒன்றுமே பேசவிடுவதில்லை. சும்மா வெறுமனே போய் முட்டாள் மாதிரி மகனையே பார்த்துக் கொண்டிருப்பதும், நாம் அவனிடம் ஏதாவது பேசிவிடப் போகிறோமோ என்ற பயத்தில் அவர்கள் நம் வாயையே பார்த்துக்கொண்டிருப்பதும்………”
கடந்த சிலநாட்களில் நடந்துபோன சம்பவங்களால் அவள் மிகவும் சலித்துவிட்டாள். எனவே நகரத்தின் நாடகம் போன்ற வாழ்வைவிட்டு வெகுதூரம் ஒதுங்கிச் சென்று வாழ்வதற்கு இதுதான் சந்தர்ப்பம் என அவளுக்குத் தோன்றியது. எனவே அதைக் கேட்டவுடன் அவள் ஆசையோடு துள்ளியெழுந்தாள்.
ஆனால் நிகலாயோ பேச்சின் விஷயத்தையே மாற்றிவிட்டான்.
“இவான். நீ என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்?” என்று அந்த டாக்டரின் பக்கம் திரும்பிக் கேட்டான் அவன்.
அந்த டாக்டர் தனது குனிந்த தலையை நிமிர்த்தியவாறே சோகத்தோடு பதில் சொன்னார்:
“நம்மோடிருப்பவர்கள் எவ்வளவு குறைந்த தொகையினர் என்பதை நினைத்துப் பார்த்தேன். நாம் இன்னும் மிகுந்த உற்சாகத்தோடு உழைக்க வேண்டும். பாவெலும் அந்திரேயும் உள்ளிருந்து தப்பியோடி வரத்தான் வேண்டும். அதற்கு அவர்களைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும். அவர்களைப் போன்ற உழைப்பாளிகள் உள்ளே சும்மா முடங்கி உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது.”
நிகலாய் முகத்தைச் சுழித்தான். தாயைப் பார்த்தவாறே தலையை ஆட்டினான். தன் முன்னிலையிலேயே தன் மகனைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது அவர்களுக்குச் சிரமமாயிருக்கிறது என்பதைத் தாய் கண்டுகொண்டாள். எனவே அவள் எழுந்து அந்த அறையை விட்டுத் தன் அறைக்குச் சென்றாள். அவளது மனத்தில் அவர்கள் தன்னுடைய விருப்பத்தை நிராகரித்துத்தான் விட்டார்கள் என்ற வேதனையுணர்ச்சி ஏற்பட்டு அவளை வருத்தியது. அவள் படுக்கையில் படுத்தவாறே, அந்தக் குரல்களின் உள்ளடங்கிய முணுமுணுப்பைக் கேட்டாள்; தன்னை மறந்து ஒரு பயபீதி உணர்ச்சிக்கு அவள் அடிமையானாள்.
அன்றைய தினம் முழுவதுமே அவளுக்கு ஒரே புரியாத இருள் மண்டலமாகவும், தீய சொரூபமாகவும் தோன்றியது, ஆனால் அதைப்பற்றி அவள் சிந்திக்க விரும்பவில்லை. தனது மனத்தை அலைக்கழிக்கும் எண்ணங்களை உதறித் தள்ளிக்கொண்டே, அவள் தன் சிந்தனையையெல்லாம் பாவெலை நோக்கித் திருப்பினாள். அவன் விடுதலை பெற்று வருவதைப் பார்க்க அவள் ஆவல் கொண்டாள். ஆனால் அதேசமயத்தில் அவள் பயப்படவும் செய்தாள். தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களெல்லாம் ஓர் உச்சநிலைக்கு ஆரோகணித்துச் சென்று கொண்டிருப்பதாக அவள் உணர்ந்தாள். அந்த உச்சநிலையில் ஏதோ ஒரு பெரும் மோதல் ஏற்படும் என்ற பயமும் அவளுக்கு எழுந்தது. ஜனங்களின் மெளனம் நிறைந்த சகிப்புத்தன்மை எதற்காகவோ விழிப்போடு காத்து நிற்கும் பரபரப்புக்கு இடம் கொடுத்தது. அவர்களது உத்வேகம் நன்கு மேலோங்கியிருக்கிறது. ஒவ்வொருவரும் கூரிய வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டாள். எல்லாமே பொறுமையிழந்து புழுங்குவதாக உணர்ந்தாள்.
ஒவ்வொரு அறிக்கை வெளிவரும்போதும், சந்தையிலும், கடைகளிலும், வேலைக்காரர்களிடமும் தொழில் சிப்பந்திகளிடமும் உத்வேகமான வாதப்பிரதிவாதங்கள் கிளம்பி ஒலிப்பதைக் கேட்டாள். ஒவ்வொருவர் கைதியாகும் போதும், மக்களிடையே அந்தக் கைதுக்குரிய காரணத்தைப் பற்றிப் பயமும் வியப்பும் தன்னுணர்வற்ற அனுதாப வார்த்தைகளும் பரிமாறப்பட்டன. ஒருகாலத்தில் அவளை எவ்வளவோ பயமூட்டிய வார்த்தைகளை இன்று சாதாரண மக்கள் பிரயோகித்துப் பேசுவதையும் அவள் கேட்டாள். எழுச்சி, சோஷலிஸ்டுகள், அரசியல் முதலிய வார்த்தைகள். அவர்கள் அந்த வார்த்தைகளை ஏளனபாவத்தோடு சொன்னாலும், அந்த ஏளன பாவத்துக்குப் பின்னால் ஒரு தனி குறுகுறுப்புணர்ச்சியும் தொனித்தது; குரோத உணர்ச்சிக்குப் பின்னால் பய உணர்ச்சியும் தொனித்தது. அந்த வார்த்தைகளை அவர்கள் சிந்தனை வசப்பட்டவாறு பேசும்போது, அந்தச் சிந்தனையில் நம்பிக்கையும் பயமுறுத்தலும் நிறைந்து ஒலித்தன. அவர்களது அசைவற்ற கட்டுக்கிடையான இருண்ட வாழ்க்கைத் தடாகத்தில் வட்டவட்டமாக அலைகள் பெருகி விரிந்தன. தூங்கி விழுந்த சிந்தனைகள் துள்ளியெழுந்து விழிப்புற்றன. அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை வழக்கம்போல் ஏற்றுக்கொள்ளும் அமைதி கலகலத்துச் சிதற ஆரம்பித்தது. இந்த மாறுதல்களையெல்லாம் அவள் மற்றவர்களைவிடத் தெளிவாக உணர்ந்தறிந்தாள். ஏனெனில் மற்றவர்களைவிட வாழ்க்கையின் துயர முகத்தை அவள்தான் நன்கு அறிந்திருந்தாள். அம் முகத்தில் சுருக்கங்கள் விழுவதையும், சிந்தனையும், எழுச்சியார்வமும் ஏற்படுவதைக் கண்டு அவளுக்கு மகிழ்ச்சியும் பயபீதியும் கலந்து ஏற்பட்டன. அவற்றில் தன் மகனது சேவையைக் கண்டதால் அவள் ஆனந்தம் அடைந்தாள். அவன் சிறையிலிருந்து தப்பி வந்தால், இவர்களுக்கெல்லாம் தலைமை வகிக்கும் ஆபத்தான பொறுப்புக்கு அவன் ஆளாவான் என்று அவள் அறிந்திருந்ததால், அவள் பயபீதியும் அடைந்தாள். அதனால் அவன் அழிந்தே போவான் என்று அஞ்சினாள்.
படிக்க:
♦ கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?
♦ எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல்
சமயங்களில் தன் மகனது உருவம் ஒரு சரித்திர புருஷனின் உருவம்போல் வியாபகம் பெற்று விரிந்து அவளுக்குத் தோன்றும். தான் இதுவரை கேள்விப்பட்ட நேர்மையும் தைரியமும் நிறைந்த சகல வார்த்தைகளின் உருவமாக, தான் இதுவரை கண்டு வியந்து போற்றிய சகல மக்களின் கூட்டுத் தோற்றமாக, தான் இதுவரை அறிந்திருந்த வீரமும் பிரபலமும் நிறைந்த சகல விஷயங்களின் சம்மேளனமாக, அவன் அவளுக்குத் தோற்றமளித்தான். இம்மாதிரி சமயங்களில் அவளது உள்ளத்தில் பெருமையும் அன்பும் பெருகி வழியும். அவனைப் பற்றி ஆனந்தம் கொண்டு நம்பிக்கையோடு தனக்குத்தானே நினைத்துக் கொள்வாள்:
“எல்லாம் சரியாகிவிடும் – எல்லாம் சரியாகிவிடும்!” அவளது அன்பு அவளது தாய்மைப் பாசம் ஓங்கியெழுந்து அவளது இதயத்தை வேதனையோடு குன்றிக் குறுகச் செய்யும். தாயின் பாச உணர்ச்சி தனது தீப ஒளியால் மனித உணர்ச்சியின் வளர்ச்சியைத் தடை செய்து, அதனை ஆட்கொண்டு எரித்துச் சாம்பலாக்கும். அந்த மாபெரும் உணர்ச்சியின் இடத்திலே, அவளது பயவுணர்ச்சியின் சாம்பல் குவியலுக்கிடையே அவளது மனம் ஒரே ஒரு சிந்தனைக்கு ஆளாகி உள்ளூரப் போராடிக்கொண்டிருக்கும்:
“அவன் செத்துப் போவான்… அவன் அழிந்து போவான்.”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
முந்தைய பகுதிகள்: