காக்கிநாடாவின் பலுசுதிப்பா – பிரம்மசமேத்யம் கிராமம். பெரும்பாலும் மீனவர்கள் வாழும் பகுதி. புயலுக்கு முந்தைய நாள் வீசிய காற்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 22 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. வீட்டில் இருந்த எந்தப் பொருட்களும் மிஞ்சவில்லை.

தீப்பிடித்து எரிந்த குடிசையை அணைக்க பகுதி இளைஞர்கள் முயற்சி செய்தனர். ஆனால் சுழண்டு அடித்த காற்றில் தீ எங்கும் பரவியது. எரிந்து கொண்டிருந்த எல்லா வீட்டிலும் கேஸ் இருந்தது. எந்நேரமும் வெடித்து விடும் அபாயம் இருந்ததால் வீடு செல்வதை தவிர்த்துவிட்டு திரும்ப வந்து விட்டதாக கூறுகிறார்கள். அத்துடன் காலை வீசிய புயலும்-மழையும் அவர்களை உலுக்கி எடுத்து விட்டது.

இப்படி அடுத்தடுத்து இரட்டை தக்குதலுக்குள்ளான இந்த ஊர்தான் காக்கிநாடாவின் கடைக்கோடி கிராமம். கோதாவரி ஆற்றின் கடைமடைப் பகுதியும்கூட. கடற்பகுதியில் இருந்து வெறும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சரியாக சொன்னால் புயல் கரையை கடந்த முக்கியப் பகுதியாகும்.

இங்கு மொத்தம் 2,000 குடும்பங்கள் உள்ளன. அனைவரும் மீனவர்கள். அதில் 30 குடும்பங்கள் தலித் சாதியினையும் இருபது குடும்பங்கள் பிற்படுத்தபட்ட சாதியினைச் சார்ந்தவர்கள். மீனவர்களில் பாதிக்கும் மேல் மீன்பிடி தொழிலில் இல்லை. மீன் கடைகள், இதர தொழில்கள் செய்து பிழைத்து வருகிறார்கள்.

கடைமடை கால்வாயில் மீன் பிடித்தல்தான் இவர்களுக்கு வாழ்வளிக்கிறது

இக்கிராமத்தின் நடுவே செல்லும் கோதாவரி ஆற்றின் கிளைக்கால்வாயில்தான் ஃபைபர் மற்றும் கைத்துடுப்பு படகைக் கொண்டு பெரும்பாலனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

மேற்கே கால்வாயும், வட-தெற்கில் “மடாக் காடும்” உள்ளது. இம்மக்களுக்கு மீன்களை அள்ளிக் கொடுத்து வாழவைக்கும் இக்கால்வாயில், வெள்ளம் வந்தால் ஊருக்குள் சென்று அழிவையும் ஏற்படுத்தும்.

இந்த “மடாக் காடு” ஒவ்வொரு முறையும் வரும் பெரும் புயலின் பாதிப்பிலிருந்து மீனவ மக்களை காப்பாற்றுவதில் கணிசமான  பங்கும் வகிக்கிறது. இதுதான் இயற்கை இந்த கிராமத்திற்கு வழங்கியிருக்கும் விசித்திரமான சிறப்பு.

பலுசுதிப்பா ஊருக்குள் செல்ல ஒரே சாலைதான். அதுவும் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அதில் பயணம் செய்யும் எவரும் கடும் முதுகு வலியை சுமக்க நேரிடும். சாலைகளில் போதிய மின்விளக்குகள் இல்லாத பாதுகாப்பற்ற ஒரு பகுதியாக இருக்கிறது. இதன் பின்னணியில் இருந்து பார்த்தாலே புயல் பாதிப்பில் அரசின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது தெரிந்து விடும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கிறார்கள், “நாங்க சம்பாதிச்ச பணத்தை வங்கியில சேர்த்து வைப்பதோ, வேற செலவு செய்வதோ இல்லை. வரக்கூடிய பணத்தை வீட்டிலேயே வைத்துக் கொள்வோம்.  இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் பணம், நகை அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன. குறிப்பாக எரிந்த ஐந்து வீடுகளில் மட்டும் பணம், நகை என ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் மூன்று முதல் ஐந்து லட்சம் வரை மொத்தமும் பறிகொடுத்து விட்டோம்.

இனி எதையும் உபயோகிக்க முடியாத நிலையில் அனைத்து தீக்கிரையாகிவிட்ட்ன

இந்த இருபத்தி இரண்டு வீட்டில் இருந்து எந்த பொருளையும் எடுக்க முடியவில்லை. வெளியில் இருந்த பொருட்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ஓடினோம். அவ்வளவுதான்.  உடுத்த துணி கூட இல்லாமல் பத்து நட்களாக கட்டிய துணியோடும், உறவினர்களிடம் இருந்தும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

படிக்க:
புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்
கஜா புயல் : எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்

இங்கே ஓரளவிற்கு படித்தவர்கள் உண்டு. உயர்நிலைக் கல்வி மற்றும் கல்லூரி படிக்க ஆமலாபுரம் மற்றும் கட்ரேனிகோனா ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.  இந்த மாணவர்களின் கல்விச் சான்றிதழ் முதற்கொண்டு அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது” என்கிறார்கள்.

கூடியிருந்தவர்களில் புயல் மற்றும் தீ விபத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஒருவரான சங்காயினி தர்மராவ் கூறும்போது. “எனக்கு 48 வயசு ஆகிறது. நான் படிக்கவில்லை. மனைவி பார்வதி. இரண்டு மகன், இரண்டு பொண்ணு. என் மூத்தப் பொண்ணு டிகிரி படிக்கிறார். இன்னொரு பொண்ணு மற்றும் பசங்க பள்ளியில் படிக்கிறாங்க.… இவங்களுடையை படிப்பு சம்மந்தப்பட்ட எதுவும் இல்லை.

சங்காயினி தர்மராவ்

வீட்டில் இருந்த ரேசன் கார்டு, ஆதார் கார்டெல்லாம் போயிடுச்சி. இதுபோக வீட்ல வச்சிருந்த நகை, பணம் எல்லாம் சேர்த்து 3 லட்சம் மொத்தமும் போய் விட்டது. நகை இருந்தாலாவது அடமானம் வைத்து தேவையை சமாளித்து விடலாம்.  இப்ப என்ன செய்யிறதுன்னு தெரியல.

கைத்துடுப்பு போட்டு ஆற்றிலும், எப்போதாவது கடலுக்குள், அதுவும் குறைந்த ஆழத்திற்கு மட்டும் சென்று பிடித்து வந்த மீன்களை எல்லாம் உள்ளூரிலேயே விற்று விடுவேன்.  ஒருநாளைக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். என்னிடம் இருந்து வாங்கி சென்று நகரம் மற்றும் சிறு நகரங்களில் விற்பனை செய்வார்கள்.  இந்த சம்பவம் நடந்த பிறகு இன்று வரை நான் உட்பட யாரும் கடலுக்கு செல்லவில்லை. எல்லோரும் பாதிப்படைந்திருக்கிறார்கள்” என்று கலங்குகிறார்.

“அரசாங்கத்துல இருந்து யாராவது வந்து பார்த்தாங்களா..?”

“ம்…………. பிரபுத்துவத்துல (அரசாங்கத்தில்) இருந்து எம்.எல்.ஏ முதல் எல்லோரும் வந்து பார்த்துட்டு நிவாரணம் தருவதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை அதுக்கான அறிவிப்பு வந்த மாதிரி தெரியவில்லை” ஆனா, பள்ளிக்கூடத்துல புயல் பாதிப்பு நிவாரணப் பொருட்களை வச்சிருக்காங்க.

“சரி….தமிழ்நாட்ல ஒக்கிப் புயல், கஜா புயல் பாதிப்பு பத்தி தெரியுமா?”.

“ம்..ஹும்… செய்தி எதுவும் பாக்குறதில்ல. வயசான நாங்க பொழுதுபோக்கு மாதிரி தான் பார்ப்போம். வெளியூர்ல இருக்க மற்ற மீனவர்களுடன் எந்த தொடர்பும் இல்ல. ஏன்னா நாங்க ஆழ்கடலுக்கு போயிட்டு மீன் பிடிக்கிறதில்லை” என்கிறார் கவலையுடன்.

இறைந்து கிடக்கும் அரிசி

ஊரில் இருந்து சற்று தொலைவில் ஒதுக்குப்புறமாக இருந்த பள்ளிக்கு சென்று பார்த்தபோது, கன்னாபின்னாவென்று அரசி எங்கும் கொட்டிக்கிடந்தது. அந்த அரிசியும் மக்கள் சாப்பிடக்கூடிய அளவிற்கு இல்லை. இன்னொரு பக்கம் உருளைக்கிழங்கு அழுகிப்போயி இருந்தது. முறையான விநியோகம் இல்லை. பொருட்களும் போதுமானதாகவும் இல்லை, தரமாகவும் இல்லை.  அதனைப் பெறுவதற்கே மக்களுக்குள் ஒரு பெரும் போட்டி நிலவிக்கொண்டிருந்தது.

விளம்பரத்திற்கு எந்தக் குறைச்சலும் இல்லை

புயல் நிவாரணமாக, அரிசி 50 கிலோ, சர்க்கரை அரை கிலோ, ஆயில் 1 லிட்டர், வெங்காயம் ஒரு கிலோ, உருளை ஒரு கிலோ, பருப்பு ஒரு கிலோ என்றார்கள்.  அதேபோல் பொங்கல் மற்றும் கிறுஸ்துமஸ்-க்காக சமையல் எண்ணெய் அரை லிட்டர், வெல்லம் அரை கிலோ, கோதுமை ஒரு கிலோ, நெய் 100 கிராம், சிறுபருப்பு ஒரு கிலோ, உளுந்து ஒரு கிலோ என்று வழங்குவதற்கும் கொண்டு வந்திருக்கிறார்கள்.  அப்படி வழங்கும் பையில் மட்டும் சந்திரபாபுவின் படம் பெரிதாக சிரித்த முகத்துடன் பளிச்சென்று இருந்தது.

இதுதான் புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பதற்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச நடவடிக்கை. மொத்தத்தில் இவர்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பது பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தின் காவிரி டெல்டாவில் ஊருக்கே சோறு போட்ட விவசாயிகளையும், பல்வேறு புயல் மழை பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றிய மீனவர்களையும் எடப்பாடி அரசு எப்படி அலட்சியப்படுத்தியதோ, அதேமாதிரிதான் ஆந்திராவின் கோதாவரி டெல்டாவிலும் நடக்கிறது…! ஆந்திராவில் புயல் பாதிப்பு அதிகமில்லை என்பதால் இந்த அலட்சியம் பெரிய செய்தியாகவில்லை, அவ்வளவுதான்! எளிய மக்களை எந்த அரசும் கண் கொண்டு பார்ப்பதில்லை!

படம், செய்தி: வினவு செய்தியாளர்கள்,
ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க