சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இந்துத்துவ அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் சபரிமலைக்குச் சென்ற பிந்து (42), கனகதுர்கா (44) ஆகிய இரண்டு பெண்களும் ஐயப்பனை தரிசித்து விட்டு திரும்பியிருக்கின்றனர். கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்து, சிபிஐ (எம்.எல்) இயக்கத்தைச் சேர்ந்தவர். மலப்புரதைச் சேர்ந்த கனக துர்கா, அரசு பணியாளர்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின், இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒருமுறை சபரிமலைக்கு தங்களுடைய உரிமையை நிலைநாட்ட வந்தனர். சங்பரிவார் கும்பலின் வன்முறையின் காரணமாக, தரிசனம் செய்ய முடியாமல் அவர்கள் திரும்பினர். இந்த நிலையில், அதிகாலையில் போலீசின் துணையுடன் அவர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது சக பக்தர்களாக வந்த ஆண்கள் எவரும் போராட்டம் செய்யவில்லை; எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களிடம் பேசிய கனகதுர்கா, எந்தவித போலீசு பாதுகாப்பும் இன்றி நள்ளிரவில் பம்பைக்கு வந்ததாகத் தெரிவிக்கிறார். “சன்னிதானத்துக்கு வந்து புனிதப் படிகளில் ஏறினோம். அப்போது நாங்கள் எந்தவித எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. பக்தர்கள் இருந்தபோது எங்கள் வழிகளை மறித்து அவர்கள் போராட்டம் செய்யவில்லை” என்று பேசியிருக்கிறார்.
தரிசனம் செய்த வீடியோக்களையும் படங்களையும் வெளியிடப்பட்ட பின்னர், இந்த நிகழ்வை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி செய்துள்ளார். கடந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த மனிதி அமைப்பினர் சபரிமலைக்குச் சென்று, பரிவாரங்களின் விடாத துரத்தல் காரணமாக தரிசனம் செய்ய முடியாமல் கிளம்பினர். அப்போது தங்களுக்கு போலீசு தரப்பில் போதிய பாதுகாப்பு தரப்படவில்லை என சொல்லியிருந்தனர். பல்வேறு முற்போக்கு அமைப்பினர் கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்க தயங்குவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.
படிக்க:
♦ தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு !
♦ சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்
சபரிமலையில் பெண்களுக்குள்ள வழிபாட்டு உரிமை குறித்து பொதுக்கருத்தை உருவாக்கினால் போராட்டங்கள் குறையும் என விளக்கமளித்த கேரள இடது முன்னணி அரசு, அதற்கான ‘பெண்கள் மதில்’ நிகழ்வை ஒருங்கிணைத்தது. செவ்வாய்கிழமை நடந்த இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். தற்போது ஐம்பது வயதுக்குட்பட்ட இருபெண்கள் சபரிமலையில் தரிசனம் முடித்துள்ளனர்.
பந்தளம் அரச குடும்ப பெண்களும் விஐபி பெண்களும் சபரிமலை ஐயப்பனை, பெண்களுக்கு தடை இருந்த காலத்தில் தரிசனம் செய்திருக்கிறார்கள். என்றாலும், அனைவரும் செல்லலாம் என்ற தீர்ப்புக்குப் பின் சபரிமலை தரிசனம் செய்த பெண்கள் என்ற வரலாற்று முக்கியத்துவத்தை பிந்துவும் கனகதுர்காவும் பெற்றுள்ளனர்.
two women below the age of 50 years BINDU & KANAKA DURGA have finally managed to enter the #SabarimalaTemple shrine and performed darshan pic.twitter.com/jNPvSfaMqH
— SREEKANTH (@tweetsreekanth_) January 2, 2019
Visuals of two women (Bindu and Kanaga Durga) at Sabarimala shrine earlier this morning pic.twitter.com/347z3KWAwU
— Arvind Gunasekar (@arvindgunasekar) January 2, 2019
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்துவிட்டனர் என்ற செய்தியைக் கேட்டு, ஆர்.எஸ்.எஸ். -பாஜக சங்பரிவாரங்கள் வானமே இடிந்து கீழே விழுந்துவிட்டதாக குதிக்கின்றனர். பாஜக-வின் ஐடி துறை தலைவர் அமித் மால்வியா என்ற சங்கி, கம்யூனிஸ்டுகள் சபரிமலை கோயிலை நாசமாக்கிவிட்டதாக கதறுகிறார். “தடை செய்யப்பட்ட வயதுக்குள் இருக்கும் பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தது உண்மையென்றால், சர்வநாசம் நிச்சயம்” என சாபம் விடுகிறார் இவர். சங்பரிவாரங்களின் அச்சுறுத்தல் காரணமாக, பிந்து-கனகதுர்கா வீடுகளுக்கு போலீசு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சபரிமலை தலைமை பூசாரி, கண்டரரு ராஜீவரு, பெண்கள் சென்றதால் ஐயப்பன் சன்னிதானம் தீட்டு பட்டு விட்டதாகக் கூறி, சுத்திகரிக்கும் சடங்கு செய்ய காலை 11.30 மணி வரை கோயில் நடையை சாத்திவைக்க ஆணையிட்டிருக்கிறார். பந்தளம் அரசு குடும்பத்தைச் சேர்ந்த சாஷி வர்மா, “சன்னிதானத்துக்குள் பெண்கள் நுழைந்தது வரலாறு அல்ல, அது சபரிமலை சம்பிரதாயத்துக்கு எதிரானது. கோயில் சம்பிரதாயங்கள் காப்பாற்றப்பட வேண்டும். நாங்கள் சடங்குகளை மாற்ற மாட்டோம். அதனால்தான் சுத்திகரிப்பு பூஜை செய்கிறோம்” என்கிறார். அதன்படி ‘சுத்தி கலசம்’ என்ற சடங்கையும் நடத்தியிருக்கிறார்கள். தலித்துகள் கோயில் நுழைவின் போது, கோயிலை ஆக்கிரமித்திருந்த பார்ப்பனிய கும்பல் இதேபோன்ற வேலைகளைச் செய்தது என்ற வரலாறு இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.
ஜனவரி 22-ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களின் மீது விசாரணை நடைபெற இருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பளித்து மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையில், கேரள அரசு இப்போதுதான் பெண்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. ஆனால் உலகமறிய பெண்கள் அங்கே நுழைந்து வழிபடுவது என்பது இன்னமும் கேள்விக்குறியாக இருக்கிறது. அது நிறைவேறும்போது மட்டும்தான், பார்ப்பனியம் தோற்கடிக்கப்பட்டதாகப் பொருள். அதுவரை இடதுசாரி முற்போக்கு அமைப்புகள் தொடர்ந்து போராட வேண்டும்.
கலைமதி
செய்தி ஆதாரம்: Two Women Devotees under 50 pray at sabarimala temple in a first since sc verdict shocked priests shut shrine