மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 46
வீட்டுச் சொந்தக்காரனான அந்த முஜீக் மேஜையருகே உட்கார்ந்து தனது கை விரல்களால் மேஜை மீது தாளம் போட்டுக் கொண்டிருந்தான். தாயின் கண்களையே அவன் வெறித்துப் பார்த்தான்.
“உள்ளே வாருங்கள்” என்று சிறிது நேரம் கழித்துச் சொன்னான் அவன். “தத்யானா, போய் பியோத்தரை வரச் சொல்லு. சீக்கிரம் போ.”
அந்தப் பெண் தாயை ஏறிட்டுப் பார்க்காமல் வெளியே சென்றாள். தாய் அந்த முஜீக்குக்கு எதிராக ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சுற்றுமுற்றும் கண்ணைத் திருப்பினாள். அவளது டிரங்குப் பெட்டியை அங்கு எங்கும் காணவில்லை. அந்த அறை முழுவதிலும் ஒரு பயங்கர அமைதி நிலவியது. இடையிடையே விளக்குத் திரி பொரிந்து விழுவதைத் தவிர வேறு சத்தமே இல்லை. ஒருவித அக்கறையோடு நெரித்து நோக்கும் அந்த முஜீக்கின் முகம் தாயின் கண் முன்னால் மங்கலாக நிழலாடியது. அவளது மனத்தில் அதே கணத்தில் ஒரு பெருங் குழப்பவுணர்ச்சி லேசாக முளைவிட்டது.
”என் பெட்டி எங்கே?’ என்று திடீரென்று உரத்த குரலில் கேட்டாள். அந்தக் கேள்வி அவளுக்கே திடுமென்று ஒலித்தது.
அந்த முஜீக் தன் தோள்களைக் குலுக்கினான்.
”அது ஒன்றும் தொலைந்து போகாது” என்று அவன் கூறினான். பிறகு தணிந்த குரலில் பேசினான்: “கடையிலேயேதான் அது காலியாயிருக்கிறது என்று அந்தப் பெண்ணின் காதில் விழும்படி நான் வேண்டுமென்றுதான் சொன்னேன். அது காலியாய் ஒன்றுமில்லை. ரொம்பக் கனமாக இருக்கிறது.”
”சரி, அதனால் என்ன?’’ என்று கேட்டாள் தாய்.
அவன் எழுந்து தாயிடம் வந்து குனிந்து நின்று ரகசியமாகக் கேட்டான்.
”அந்த மனிதனை உங்களுக்குத் தெரியுமா, இல்லையா?”
”ஆமாம்” அந்தக் கேள்வி அவளை வியப்புறச் செய்தது. எனினும் அவள் உறுதியான குரலில்தான் பதில் சொன்னாள். அந்தச் சிறு வார்த்தை அவளுக்கு எல்லாவற்றையும் விளக்கி, இதயத்தில் மூண்டிருந்த இருளையும் போக்கியது. பெஞ்சின் மீது அசையாது உறுதியோடு உட்கார்ந்தாள்.
அந்த முஜீக் பல்லைக் காட்டிப் புன்னகை புரிந்தான்.
”நீங்கள் அங்கே இருந்து அவனுக்குச் சைகை காட்டியதைப் பார்த்ததுமே நான் ஊகித்துக்கொண்டேன். அவனும் பதிலுக்குச் சைகை காட்டினான். அவனிடம் நான் ரகசியமாகக் கேட்டேன். ‘அதோ வாசல் முகப்பில் நிற்கிறாளே, அவளை உனக்குத் தெரியுமா’ என்று கேட்டேன்.’’
“அதற்கு அவன் என்ன பதில் சொன்னான்?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள் தாய்.
‘’அவனா? ‘எங்கள் கோஷ்டியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்’ என்றான் அவன்.”
அந்த முஜீக் எதையோ கேட்கும் பாவனையில் அவளது கண்களையே கூர்ந்து நோக்கினான். மீண்டும் புன்னகை புரிந்துவிட்டுப் பேசத்தொடங்கினான்:
”ஒரு பலசாலியான தைரியமான ஆசாமி கிடைத்திருக்கிறான். ‘நான்தான்’ என்று அவன் எவ்வளவு தைரியமாகச் சொல்கிறான். அவர்கள் அவனை எவ்வளவுதான் அடிக்கட்டுமே தான் சொல்ல விரும்பியதை அவன் சொல்லியே தீர்க்கிறான்.”
அவனது குரலைக் கேட்டுத் தாய்க்கு வரவர மனப்பாரம் குறைந்து வந்தது. அவனது குரல் பலமற்றும் நிச்சயமற்றும் அவனது கள்ளமற்ற கண்களின் பார்வையால் அவளுக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது. அவளது பயபீதியும் கலக்கமும் மறைந்து அவளது மனத்தில் ரீபினின் மீது ஓர் ஆழ்ந்த பரிவுணர்ச்சி இடம் பெற்றது.
“மோசக்காரர்கள்! மிருகங்கள்!’’ என்று கசப்பு நிறைந்த ஆக்ரோஷத்தோடு கத்தினாள், உடனே அழ ஆரம்பித்துவிட்டாள்.
அந்த முஜீக் வருத்தத்தோடு தலையை அசைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்று சென்றான்.
“இதோ, அதிகாரிகள், தமக்கு நல்ல நண்பர்களைத் தயாரித்துக்கொண்டார்கள்!”
அவன் மீண்டும் தாயை நோக்கித் திரும்பி அமைதியாகச் சொன்னான்.
“அந்த டிரங்குப் பெட்டியிலே பத்திரிகைகள்தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. என் ஊகம் சரிதானே?”
“ஆமாம்” என்று தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னாள் தாய். “நான்தான் அவனுக்குக் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்தேன்.”
அந்த முஜீக் தன் முகத்தைச் சுழித்தான். தாடியைக் கையில் இறுகப் பற்றிப் பிடித்தவாறு ஒரு மூலையையே வெறித்து நோக்கினான். கடைசியாகப் பேசத் தொடங்கினான்.
”அவை எங்களுக்கும் கிடைத்து வந்தன. புத்தகங்களும் கிடைத்து வந்தன. அந்த மனிதனை எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவனைப் பார்த்திருக்கிறோம்.”
அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஒரு கணம் சிந்தித்தான்.
“அதை வைத்துக் கொண்டு – அந்த டிரங்குப் பெட்டியை வைத்துக்கொண்டு இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான்.
”உங்கள் வசம் ஒப்புவித்துவிட்டுப் போகிறேன்” என்று அவனை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னாள் தாய்.
அவன் மறுதலிக்கவில்லை; வியப்புணர்ச்சியையும் காட்டவில்லை.
”எங்களிடம்?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.
சொன்னதை ஏற்றுக்கொண்ட பாவனையில் அவன் தலையை அசைத்தான். மேஜையருகே உட்கார்ந்து, தனது தாடியைக் கைவிரல்களால் சிக்கெடுக்க ஆரம்பித்தான்.
படிக்க:
♦ சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் !
♦ இந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா ?
ரீபினுக்கு இழைக்கப்பட்ட மிருகத்தனமான கொடுமையைக் கண்ட காட்சி தாயின் மனத்தில் அழுத்தம் திருத்தமாகப் பதிந்து நினைவிலெழுந்து அவளைப் பயமுறுத்தியது. அந்த உருவம் அவளது மனத்தில் குடிகொண்டிருந்த எண்ணங்கள் யாவற்றையும் விரட்டியோட்டியது. அந்த மனிதனுக்காக வேதனையும் மனத்தாங்கலும் அவள் இதயத்தை நிரப்பின. எனவே அவள் டிரங்குப் பெட்டியைப் பற்றியோ வேறு எதையும் பற்றியோ சிந்திக்கச் சக்தியற்றுப் போனாள். அவளது கண்ணீர் தாரை தாரையாகத் தங்கு தடையற்று வழிந்திறங்கியது. அவளது முகம் சுண்டிக் கறுத்தது. ஆனால் தடுமாறாத குரலிலேயே அவள் பேசினாள்:
”மனிதப் பிறவிகளை இப்படி மண்ணோடு மண்ணாய் இழுத்து உதைத்துக் கொள்ளையிடும் பாவத்துக்கு அவர்கள் என்றென்றும் நாசமாய்ப் போகட்டும்!”
”அவர்கள் பலசாலிகளாயிற்றே’’ என்று அமைதியாகச் சொன்னான் அந்த முஜீக். “அவர்கள் மிகுந்த பலசாலிகள்!”
“அவர்களுக்கு அந்தப் பலம் எங்கிருந்து வருகிறது?” என்று கலங்கிய குரலில் சொன்னாள் தாய். “நம்மிடமிருந்துதான், பொதுமக்களிடமிருந்துதான் அவர்கள் பலத்தைப் பெறுகிறார்கள். பலத்தை மட்டுமல்ல, எல்லாவற்றையுமே நம்மிடமிருந்துதான் பெறுகிறார்கள்!”
”அந்த முஜீக்கின் பிரகாசமான, ஆனால் புதிர்போடும் முகத்தைக் கண்டு, தாய்க்கு எரிச்சல் வந்தது.
“ஆமாம்” என்று இழுத்தான் அவன்: ”இது ஒரு சக்கரம்தான்…”
திடீரென அவன் உஷாராகி நிமிர்ந்து, வாசல் பக்கமாகச் செவியைச் சாய்த்துக் கேட்டான். அவர்கள் வருகிறார்கள்” என்றான்.
‘யார்?”
”நண்பர்கள்…”
அவனது மனைவி உள்ளே வந்தாள். அவளுக்குப் பின்னால் இன்னொரு முஜீக் வந்தான். அந்த முஜீக் தன்னுடைய தொப்பியை ஒரு மூலையில் விசிறியெறிந்துவிட்டு அந்த வீட்டுக்காரனிடம் அவசர அவசரமாக வந்து நின்றான்.
“சரிதானே?” என்று கேட்டான் அவன்.
வீட்டுக்காரன் தலையை அசைத்தான்.
”ஸ்திபான்!” என்ற அடுப்பு முன்னாலிருந்தவாறே கூப்பிட்டாள் அவன் மனைவி. ”விருந்தாளிக்குச் சாப்பிட ஏதாவது வேண்டுமா?”
“ஒன்றும் வேண்டாம். மிகுந்த நன்றி, அம்மா” என்றாள் தாய்.
இரண்டாவதாக வந்த முஜீக் தாயிடம் வந்து உடைந்த குரலில் பரபரப்போடு பேசினான்.
“என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். என் பெயர் பியோத்தர் இகோரவிச் ரியபீனின். பட்டப் பெயர் ‘தமர் உளி.’ உங்கள் வேலையைப் பற்றி எனக்கும் ஒன்றிரண்டு விஷயங்கள் தெரியும். எனக்கு எழுதப்படிக்கத் தெரியும். சொல்லப்போனால் நான் முட்டாளல்ல……..”
தாய் அவனை நோக்கி நீட்டிய கரத்தை அவன் பற்றிப் பிடித்துக்கொண்டே வீட்டுக்காரன் பக்கம் திரும்பிப் பேசினான்:
”நீயே பார்த்துக்கொள், ஸ்திபான்” என்றான் அவன். “வர்வாரா நிகலாயவ்னா ஓரளவுக்கு நல்லவள்தான். இருந்தாலும், இந்தக் காரியத்தை முட்டாள்தனமென்றும் ஆபத்தானதென்றும் அவள் கருதுகிறாள். என்னவோ இளைஞர்கள், மாணவர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு, மக்களது மூளையில் முட்டாள்தனத்தையே புகுத்தி வருவதாக அவள் கருதுகிறாள். ஆனால், நீயும் நானும் இன்று கைதான அந்த முஜீக்கை அறிவோம். அவன் முழுக்க முழுக்க நல்லவன். முஜீக்குக்கே அவன்தான் சரியான உதாரணம். ஆனால், இதோ பார், இந்த அம்மாள் ஒன்றும் இளவயதானவள் இல்லை; மத்திம வயதுதான். எப்படிப் பார்த்தாலும் இவள் அந்தச் சீமாட்டி வர்க்கத்தவரைச் சேர்ந்தவளல்ல. நான் கேட்கிறேன் என்று வித்தியாசமாய் நினைக்காதீர்கள். நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியுமா?”
அவன் விரைவாகவும் தெளிவாகவும் மூச்சுவிடவே அவகாசம் பெறாமலும் பேசினான். அவனது தாடி நடுங்கியது. கண்கள் தாயின் முகத்தையும் உருவத்தையும் கண்டு கொண்டிருந்தன. அவனது துணிமணிகள் கிழிந்து கந்தலாய்ப் போயிருந்தன. தலைமயிர் உலைந்து போயிருந்தது. அவன் இப்போதுதான் ஏதோ கைச் சண்டையில் கலந்து, தன் எதிரியை மண்ணைக் கவ்வச் செய்த உற்சாகத்தோடு திரும்பி வந்து நிற்கிற மாதிரி இருந்தான். அவனது ஆர்வத்தைக் கண்டவுடனேயே தாய்க்கு அவனைப் பிடித்துப்போய்விட்டது. மேலும் அவன் கள்ளங் கபடமற்று எளிமையோடு பேசினான். அவனது கேள்விக்குப் பதில் சொல்லும்போது அவள் அவனை நோக்கிப் புன்னகை புரிந்தாள். அதன் பின்னர் அவன் மீண்டும் ஒருமுறை அவளது கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டுக் கலகலவென்று சிரித்தான்.
”இது ஒரு புனித காரியம் ஸ்திபான்!” என்றான் அவன். “இது ஓர் அருமையான காரியம். இந்தக் காரியம் மக்களிடமிருந்தேதான் தோன்றுகிறது என்று நான் சொல்லவில்லையா? ஆனால் அந்தச் சீமாட்டி – அவள் உனக்கு உண்மையைச் சொல்லவில்லை. அவள் உண்மையை உன்னிடம் சொல்லிவிட்டால், தனக்கே தீங்கு செய்து கொள்வாள், அவளை நான் மதிக்கத்தான் செய்கிறேன். அது உனக்கு நான் சொல்லாமலே தெரியும். அவள் நல்லவள். நமக்கெல்லாம் உதவி செய்ய எண்ணுகிறாள். ஆனால் தன்னுடைய நிலைமைக்குக் குந்தகம் விளையாமல் உதவி செய்ய நினைக்கிறாள். ஆனால், சாதாரணமான பொதுமக்களோ? அவர்கள் நேராகச் செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் ஆபத்தையோ கொடுமையையோ எண்ணி அஞ்சி ஒதுங்கவில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்ததா? அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதுமே துன்பத்தைத்தான் பெறுகிறார்கள். என்ன செய்தாலும், அவர்கள் மனம் புண்படத்தான் செய்கிறது. அவர்களுக்கு திரும்பிச் செல்லுவதற்கு வேறு மார்க்கமே இல்லை. எந்தெந்தத் திசையிலே திரும்பினாலும் ‘நில்!’ என்ற குரல்தான் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது.”
“எனக்குத் தெரிகிறது” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் ஸ்திபான். உடனேயே, “இவள் தனது டிரங்குப் பெட்டியை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறாள்” என்றான்.
பியோத்தர் தாயை நோக்கி எதையோ புரிந்துகொண்ட பாவனையில் கண்ணைக் காட்டினான்.
”கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதலான குரலில் சொன்னான் அவன். “எல்லாம் நல்லபடி நடக்கும், அம்மா. டிரங்குப் பெட்டி என் வீட்டில்தான் இருக்கிறது. நீங்களும் இந்த இயக்கத்தில் பங்கெடுக்கிறவள்தான் என்றும், அந்த அடிபட்ட மனிதனை உங்களுக்குத் தெரியும் என்றும் இன்று இவன் வந்து என்னிடம் சொன்னபோது நான் சொன்னேன்: ‘ஸ்திபான், நன்றாகக் கவனி’ என்றேன். இந்த மாதிரி விஷயங்களில் தவறிவிடக்கூடாது பார்.’ நாங்கள் இருவரும் உங்கள் பக்கத்திலே நின்று கொண்டிருந்தபோது நீங்களும் எங்களைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தீர்கள். நேர்மை குணமுள்ளவர்களை எந்தக் கூட்டத்திலும் அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையில் சொல்லப்போனால், அப்படிப்பட்டவர்கள் அநேகம் பேர் உலகில் இருக்க முடியாதல்லவா? சரி, நீங்கள் டிரங்குப் பெட்டியைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்………”
படிக்க:
♣ இந்தோனேசியா : 2012-ம் ஆண்டிலிருந்து செயல்படாத சுனாமி எச்சரிக்கைக் கருவிகள்
♣ சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் புத்தாண்டு நேர்காணல் !
அவன் அவளுக்கு அருகில் உட்கார்ந்து கேட்கும் குறியுடன் அவளையே பார்த்தான். பிறகு கேட்டான்:
“அதற்குள் உள்ள பொருள்களை யாரிடமாவது தள்ளிவிட்டால் நல்லது என்று தோன்றினால், அந்த விஷயத்தில் நாங்கள் மனமகிழ்ச்சியோடு ஒத்துழைக்கத் தயார். அந்தப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே.”
”அவள் எல்லாவற்றையுமே நம்மிடம்தான் விட்டுச் செல்ல விரும்புகிறாள்” என்றான் ஸ்திபான்.
”அம்மா, அப்படியா? ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. நாங்கள் அதற்கு ஒரு சரியான இடம் பார்க்கிறோம்.”
அவன் ஒரு சிரிப்போடு தன்னிடத்தை விட்டுத் துள்ளியெழுந்து அங்கும் இங்கும் அவசர அவசரமாக உலாவினான்.
“சாதாரணமானதென்றாலும் இது ஓர் அபூர்வமான விஷயம். எனினும் ஒருபுறத்திலே தொடர்பு அற்றுப்போகும்போது, இன்னொரு புறத்திலே தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. அது ரொம்ப சரி. அந்தப் பத்திரிகை ரொம்ப நல்ல பத்திரிகை, அம்மா. அது நல்ல சேவை செய்கிறது. மக்களின் கண்களைத் திறக்கிறது. அதைப் பற்றிச் சீமான்கள் ஒன்றும் பிரமாதமாக எண்ணவில்லை. இங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சீமாட்டியிடம் தச்சு வேலை பார்த்து வருகிறேன். அவள் கண்ணியமானவள்தான். அவள் எனக்கு எத்தனையோ தடவை தன் புத்தகங்களைத் தந்து உதவியிருக்கிறாள். சமயத்தில் ஏதாவதொன்றைப் படிக்கும்போது திடீரென்று நமது அறியாமையை அது நீக்கிவிடுகிறது. பொதுவாகச் சொன்னால் அவளுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள். ஒரு தடவை அவளிடம் நான் இந்தப் பத்திரிகையைக் கொண்டு கொடுத்தேன். உடனே அவளது மனம் புண்பட்டுப்போயிற்று. ‘பியோத்தர்’ இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் படிக்காதே. ஏதோ சில உதவாக்கரை பள்ளிக்கூடத்துப் பையன்கள்தான் இப்படி எழுதித் தள்ளுகிறார்கள். இதைப் படிப்பதால் உனக்குத் தொல்லைகள்தான் மிஞ்சும். சைபீரியாவுக்கோ, சிறைக்கோ உன்னை இவை அனுப்பிவைத்துவிடும்!” என்றாள் அவள்……..
மீண்டும் அவன் ஒரு கணநேரம் மௌனமாயிருந்தான். பிறகு கேட்டான்.
“அம்மா. அந்த அடிபட்ட மனிதன் இருக்கிறானே – அவன் உங்கள் சொந்தக்காரனா?”
“இல்லை” என்றாள் தாய்.
பியோத்தர் சத்தமின்றி சிரித்தான். எதையோ கேட்டுத் திருப்தியுற்றவன்போல தலையை அசைத்துக்கொண்டான். ஆனால் மறு நிமிஷத்திலேயே ரீபினுக்கும் தனக்கும் சொந்தமில்லை என்று கூறிய வார்த்தையால், ரீபினையே புண்படுத்திவிட்டதாகத் தாய் உணர்ந்து கொண்டாள். எனவே உடனே சொன்னாள்:
“அவன் எனக்குச் சொந்தக்காரனில்லைதான். இருந்தாலும் அவனை நான் வெகு காலமாக அறிவேன். அவனை என் சகோதரனாகவே — அண்ணன் போலவே மதிக்கிறேன்.”
அவளது உணர்ச்சியை வெளியிட அவளுக்குச் சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை. இதைக் கண்டதும் அவளுக்கு ஆற்றொணாத் துயரம் நெஞ்சில் பெருகியது. மீண்டும் அவள் அமைதியாகக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள். அழுத்தமும் ஆர்வமும் நிறைந்த அமைதி அந்தக் குடிசையில் நிலவியது. பியோத்தர் எதையோ கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் குனிந்து நின்றான். ஸ்திபான் தன் முழங்கைகளை மேஜை மீது ஊன்றியவாறே உட்கார்ந்து மேஜையைப் படபடவென்று கொட்டிக்கொண்டிருந்தான். அவனுடைய மனைவி அடுப்பின் முன்னால் சாய்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் பார்வை தன் முகத்தின் மீதே நடமாடுகிறது என்பதைத் தாய் உணர்ந்துதானிருந்தாள். தாயும் சமயங்களில் அவளை ஒரு பார்வை பார்த்தாள். அவளது நீள் வட்டக் கரிய முகத்தின் நேரிய மூக்கும், கூர்மையான மோவாயும் அவள் கண்ணில் பதிந்தன. அவளது பசிய கண்களில் கூர்மையும் கவனமும் மிகுந்திருந்தன.
“அப்படியானால் அவன் உங்கள் நண்பன்தான்” என்று மெதுவாகச் சொன்னான் பியோத்தர். “அவன் தனக்கென ஒரு தனிக்குணம் படைத்த ஆசாமி. தன்னைப் பற்றி மிகவும் சரியாகவும் உயர்வாகவும் நினைக்கிறான். ஏ, தத்யானா, எப்படிப்பட்டவன் அவன்?”
“அவனுக்குக் கல்யாணமாகியிருக்கிறதா?” என்று தனது சிறிய வாயின் உதடுகளை இறுக மூடியவாறே குறுக்கிட்டுக் கேட்டாள் தத்யானா.
“அவன் மனைவி இறந்துவிட்டாள்” என்று துக்கத்தோடு சொன்னாள் தாய்.
”அதனால்தான் அவன் அத்தனை தைரியமாயிருக்கிறான்” என்று செழுமை நிறைந்த ஆழ்ந்த குரலில் சொன்னாள் தத்யானா: ”குடும்பஸ்தன் என்றால் இந்த மாதிரி மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கவே மாட்டான், பயப்படுவான்.”
“ஏன், நானில்லையா?” என்று கத்தினான் பியோத்தர்: ‘நான் கிரகஸ்தன் இல்லையா?”
”அடடா…” என்று அவனது கண்களைப் பார்க்காமலே உதட்டைக் கோணிச் சிரித்துக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். “நீ என்ன செய்கிறாய்? என்னவோ பேசுகிறாய். சமயங்களில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கிறாய். நீயும் ஸ்திபானும் ஓர் இருண்ட மூலையில் இருந்து கொண்டு ரகசியமாக வாசிப்பதும் போவதும் ஜனங்களுக்கு என்ன நன்மையை உண்டாக்கிவிடப் போகிறது? ஒன்றுமில்லை.”
”என்னுடைய பேச்சை எவ்வளவு பேர் கேட்கிறார்கள் தெரியுமா?” என்று அவளது ஏளனத்தால் மனம் புண்பட்டு, அவள் கூற்றை அமைதியான குரலில் எதிர்த்தான் அந்த முஜீக். “நான் இங்கே என்னவோ ஈஸ்ட்* மாதிரி வேலை பார்ப்பதாக சொல்லலாம். நீ அப்படி நினைக்கக் கூடாது ……….”
* ஈஸ்ட் (yeast) — உணவுப் பண்டங்களைப் புளிக்க வைக்க உதவும் பொருள். – மொ-ர்.
ஸ்திபான் வாய் பேசாது தன் மனைவியைப் பார்த்தான்; தலையைத் தொங்கவிட்டுக்கொண்டான்.
”ஒரு முஜீக் எதற்காகக் கல்யாணம் செய்து கொள்கிறான்?” என்று கேட்டாள் தத்யானா, “அவனுக்காக வேலை செய்ய ஒரு பெண் வேண்டும் என்று கூறுகிறார்கள். வேலை நல்ல வேலைதான்.”
”உனக்கு இருக்கிற வேலை காணாதா?” என்று சோர்வுடன் கேட்டான் ஸ்திபான்.
”இந்த வேலையைப் பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நாளுக்கு நாள் அரைப்பட்டினி கால் பட்டினியாய்க் கிடந்து வாழ வேண்டியதுதான் என் வேலை. தன் வயிற்றைக் கழுவ வசதி தராத இந்த உழைப்பு. பிறக்கும் குழந்தைகளைக் கவனிக்கவும் விடுவதில்லை.”
அந்தப் பெண் எழுந்து வந்து தாயின் அருகே உட்கார்ந்து மூச்சுவிடாமல் பேசினாள். எனினும் அவளது பேச்சில் தன் குறைபாடுகளையோ துக்கத்தையோ காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.
“எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை இரண்டு வயசாயிருந்தபோது தன்மீது கொதிக்கிற வெந்நீரை இழுத்துக் கொட்டிக் கொண்டு செத்தது. இன்னொன்று குறைமாதப் பிறவியாக, பிறக்கும்போதே செத்துப் பிறந்தது. எல்லாம் இந்த நாசமாய்ப் போகிற வேலையால்தான். இந்த வேலையினால் எனக்கு எதாவது மகிழ்ச்சி உண்டா? முஜீக்குகள் கல்யாணம் பண்ணுவதில் அர்த்தமே இல்லையென்றுதான் நான் சொல்வேன். எந்தவித இடைஞ்சலுமின்றி, நல் வாழ்வுக்காகத் தனிமையாக இருந்து போராடுவதை விட்டுவிட்டு, தங்கள் கைகளைத் தாங்களே கட்டிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். அவர்கள் தனியாக இருந்தால், அந்த மனிதன் மாதிரி சத்தியத்தை நாடி நேராக முன்னேறிச் செல்ல முடியும். நான் சொல்வது சரிதானே, அம்மா?”
“சரிதான்” என்றாள் தாய். “நீ சொன்னது சரிதான், கண்ணே. இல்லையென்றால் வாழ்க்கை இப்படியேதான் போய்க்கொண்டிருக்கும். மாறுதலிருக்காது………”
‘உங்களுக்குக் கணவர் இருக்கிறானா?”
“இல்லை. செத்துப்போனான், ஒரு மகன் இருக்கிறான்.”
”அவன் உங்களோடு வாழவில்லையா?”
”அவன் சிறையிலிருக்கிறான்’’ என்றாள் தாய்.
இந்த வார்த்தைகளைக் கூறியதுமே, அந்த வார்த்தைகள் அவள் மனத்தில் எழுப்பும் வழக்கமான துயர உணர்ச்சியோடு ஒரு பெருமித உணர்ச்சியும் தோன்றுவதைத் தாய் உணர்ந்தாள்.
”அவனைச் சிறையில் போட்டது இது இரண்டாவது தடவை. கடவுளின் சத்தியத்தை மக்களிடம் பரப்பியதுதான் அவன் சிறை சென்றதற்குக் காரணம். அவன் இளைஞன், அழகன், புத்திசாலி. அவன்தான் உங்களுக்காகப் பத்திரிகை போட வேண்டும் என்று முதன் முதல் நினைத்தவன்; மிகயீல் இவானவிச் அவனைவிட வயதில் இரண்டு மடங்கு மூத்தவன்தான். என்றாலும் மிகயீலை இந்த உண்மையான பாதையில் இழுத்துவிட்டவன் என் மகன்தான். சீக்கிரமே என் மகனுக்குத் தண்டனை கொடுத்து அவனைச் சைபீரியாவுக்கு நாடு கடத்திவிடுவார்கள். ஆனால் அவன் அங்கிருந்து தப்பியோடி, திரும்பவும் இங்கு வந்து தன் வேலையைத் தொடர்ந்து நடத்துவான்…”
அவள் பேசும்போது அவளது உள்ளத்தில் பெருமை உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி வளர்ந்தது. அவளது மனத்தில் எழுந்த வீர சொரூபத்தை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் பொங்கி வந்தன. தொண்டை அடைத்தது. அன்றைய தினத்தில் அவள் கண்ணால் கண்ட இருண்ட சம்பவத்தை — அந்த இருளின் அர்த்தமற்ற பயங்கரமும், வெட்ககரமான கொடுமையும் அவளது மூளைக்குள்ளே துடிதுடித்துக்கொண்டிருக்கும் தவிப்பை — சமனப்படுத்துவதற்கு, அவளுக்கு வேறொரு ஒளி மிகுந்த நல்ல விஷயம் தேவைப்பட்டது. எனவே அவள் அப்படிப் பேசினாள். தனது ஆரோக்கியமான ஆத்மாவின் தூண்டுதல்களுக்கெல்லாம் தன்னையுமறியாமல் பணிந்து கொடுத்து தனக்குத் தெரிந்த சகல விஷயங்களையும் அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அந்த விஷயங்களெல்லாம் ஒன்றுகலந்து புனிதமும், பிரகாசமும் நிறைந்த ஒரு பெருந் தீப ஒளியாகத் திரண்டெழுந்து, தனது அக்கினி வேகத்தால் அவள் கண்களையே குருடாக்குவது மாதிரி ஒளி வீசிப் பிரகாசித்தன.
படிக்க:
♠ ஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர் ஏழை !
♠ குழந்தை இல்லாத ஆண்களின் மனநிலை குறித்து சிந்தித்ததுண்டா ?
“அவன் மாதிரி இப்போது எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் நாளுக்கு நாள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அந்திம தினம் வரையிலும் சத்தியத்துக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடிக்கொண்டே இருப்பார்கள்………”
அவள் எச்சரிக்கையற்றுப் பேசினாள். எனினும் அவள் யாருடைய பெயரையும் வாய்விட்டுச் சொல்லிவிடவில்லை. மக்கள் சமூகத்தை பேராசையென்னும் பெருவிலங்கிலிருந்து விடுதலை பெறச் செய்வதற்காக நடைபெறும் ரகசிய நடவடிக்கைகளைப் பற்றித் தனக்குத் தெரிந்ததையெல்லாம் அவள் சொல்லித் தீர்த்தாள். தனது பிரியத்துக்குப் பாத்திரமான நபர்களைப் பற்றி வருணிக்கும்போது அவள் தான் பேசும் வார்த்தைகளில் தனது பலத்தையெல்லாம் பெய்து பேசினாள். இத்தனை காலத்துக்குப் பிறகு அவளது மனத்திலே வாழ்க்கை அனுபவங்கள் மலரத் தொடங்கிய அபரிமிதமான அன்பையெல்லாம் அந்தப் பேச்சில் சொரிந்தாள். தனது மனக்கண் முன்னால் ஒளிப் பிழம்பாய் எழுந்து தனது உணர்ச்சியால் கெளரவிக்கப்பட்டு விளங்கும் அந்த மனிதர்களைப் பற்றி நினைக்கும்போது அவளுக்கே ஆனந்தம் கரைபுரண்டு விம்மியது.
”இதே காரியம் உலகம் எங்கிலும், சகல நகரங்களிலும், சகல ஊர்களிலுமுள்ள நல்லவர்களால் ஒரே ரீதியில் நடத்தப்பெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவில்லை, அளவில்லை. நாளுக்கு நாள் இந்த இயக்கம் வளர்கிறது. நமக்கு வெற்றி கிட்டுகின்ற நிமிஷம் வரையிலும் இது வளர்ந்துகொண்டுதான் போகும்…”
அவளது குரல் நிதானமாகப் பொழிந்து வந்தது. இப்போது அவள் வார்த்தைகளுக்காகச் சிரமப்படவில்லை. அன்றைய சம்பவத்தின் ரத்தமும் புழுதியும் படிந்த கறையைத் தன் இதயத்தை விட்டுக் கழுவிப் போக்க வேண்டும் என்ற ஆசையெனும் பலத்த நூலிலே, அவளது வாய் வார்த்தைகள் வர்ணஜாலம் வீசும் பாசிமணிச் சரம் போல் வரிசை வரிசையாக வந்து விழுந்து கோத்துக்கொண்டிருந்தன. தான் சொன்ன விஷயங்களைக் கேட்டு அந்த முஜீக்குகள் இருந்த இடத்திலேயே முளை அறைந்தாற்போல் அசையாதிருப்பதை அவள் கண்டுகொண்டாள். அவர்கள் ஆடாமல் அசையாமல், அவளை இமை தட்டாமல் பார்த்தவாறே இருந்தார்கள். தனக்கு அருகிலிருந்த பெண் சிரமப்பட்டு மூச்சு வாங்குவதையும் அவளால் கேட்க முடிந்தது. இவையனைத்தும் தான் சொல்லும் விஷயத்திலும், தான் அந்த மக்களுக்கு உறதியளிக்கும் விஷயத்திலும் அவள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியது…
”கஷ்ட வாழ்க்கைக்கு ஆளானவர்கள் அனைவரும், அடக்கு முறையாலும் தேவையாலும் அலைக்கழிக்கப்பட்டு நைந்துபோன மக்கள் அனைவரும் பணக்காரர்களாலும் பணக்காரரின் கைக் கூலிகளாலும் தரையோடு தரையாய் நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் அனைவரும் – மக்களின் நலத்துக்காகப் படுமோசமான சித்திரவதைக்கு ஆளாகி சிறைக்குள்ளே கிடந்து அழிந்து கொண்டிருக்கும் அந்த மக்களோடு, ஒன்றுசேர வேண்டும். தங்களைப் பற்றிய எண்ணம் ஒரு சிறிது கூட இல்லாமல் அவர்கள் சகல மக்களுக்கும் சுபிட்சப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்கள் எந்தவித ஒளிவுமறைவுமில்லாமல், ‘இந்தப் பாதை கரடு முரடானதுதான்’ என்று கூறுகிறார்கள். இந்தப் பாதையில் வரும்படி எவரையும் அவர்கள் நிர்ப்பந்திப்பதில்லை. ஆனால், ஒரு மனிதன் அவர்களோடு போய்ச் சேர்ந்துகொண்டால் அவனே அவர்களை விட்டுப் பிரிந்து செல்லமாட்டான். ஏனெனில், அதுவே சரியான பாதையென்பதையும், அதைத் தவிர வேறு மார்க்கமே கிடையாது என்பதையும் அவன் கண்டு கொள்வான்!’’
அவனது மனத்தில் நீண்ட நாளாக இருந்துவந்த ஆசையை – அதாவது அவளே மக்களுக்கு உண்மையைப் போதிக்க வேண்டும் என்னும் அவளது விருப்பை – அன்று நிறைவேற்றிக்கொண்டபோது அவளுக்கு ஒரே ஆனந்தமாயிருந்தது.
“அம்மாதிரி மனிதர்களோடு சேர்ந்து செல்வதைப் பற்றிச் சாதாரண மக்கள் கவலைப்படவே தேவையில்லை. அந்த மனிதர்கள் அற்பசொற்ப வெற்றியோடு திருப்தியடைய மாட்டார்கள். சகல ஏமாற்றுக்களையும், சகல பேராசைகளையும், சகல தீமைகளையும் ஒழித்துக் கட்டினாலன்றி அவர்கள் தமது இயக்கத்தை நிறுத்தமாட்டார்கள். அனைத்து மக்களும் ஒன்றாகச் சேர்ந்து, ஒரே குரலில், நான்தான் அதிகாரி, நான்தான் சகல மக்களுக்கும் சமமான பொதுவான சட்டதிட்டங்களை உண்டாக்குவேன்’ என்ற கோஷத்தைக் கிளப்புகிறவரையிலும், அவர்கள் ஓய்வு கொள்ள மாட்டார்கள்!”
களைப்புணர்ச்சி தோன்றவே, அவள் பேச்சை நிறுத்திக் சுற்றுமுற்றும் பார்த்தாள். தான் பேசியது வீண் போகவில்லை என்ற அமைதியான நம்பிக்கையுணர்ச்சி அவள் உள்ளத்தில் நிரம்பி நின்றது. அந்த முஜீக்குகள் இன்னும் எதையோ எதிர்நோக்கி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். பியோத்தர் மார்பின்மீது கைகளைக் கட்டியவாறு, கண்களைச் சுருக்கி விழித்தான். அவனது உதடுகளில் ஒரு புன்னகை உருவாகி அசைந்தது. ஸ்திபான் முழங்கையொன்றை மேஜை மீது ஊன்றி, தனது உடம்பு முழுவதையுமே முன்னோக்கித் தள்ளி, இன்னும் எதையோ கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் இருந்தான். அவனது முகம் இருண்ட பக்கமாக இருந்தது. எனவே அது ஒரு பரிபூரண உருவம் பெற்றதுபோல் தெரிந்தது. அவனது மனைவி தாய்க்கு அடுத்தாற்போல் உட்கார்ந்து முழங்காலின் மீது முழங்கைகளை ஊன்றிக் குனிந்து, தரையையே கவனித்துக்கொண்டிருந்தாள்.
“இப்படித்தான் இருக்கிறது” என்று அடி மூச்சுக் குரலில் கூறிக்கொண்டே பியோத்தர் மெதுவாகப் பெஞ்சின் மீது உட்கார்ந்தான்.
ஸ்திபான் நிமிர்ந்து உட்கார்ந்து, தன் மனைவியைப் பார்த்தான். அங்குள்ளவர்கள் அனைவரையுமே அணைத்துக்கொள்ளப் போகிறவன் மாதிரி கைகளை அகல நீட்டினான்.
“இந்த மாதிரி விஷயத்தில் ஒருமுறை தலையைக் கொடுத்துவிட்டால், அப்புறம் அதற்காகவே தன் முழு ஆத்மாவையும் அர்ப்பணித்து, முழு மூச்சுடன் ஈடுபடத்தான் நேரும்……” என்று ஏதோ நினைவிலாழ்ந்தபடி கூறத்தொடங்கினான் அவன்.
”ஆமாம், உண்மைதான் திரும்பிப் பார்க்கிற வழக்கமே கூடாது” என்று வெட்கத்தோடு கூறிக்கொண்டான் பியோத்தர்.
”இந்த இயக்கம் பேரளவில் வளர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது” என்றான் ஸ்திபான்.
“உலகளவில்” என்றான் பியோத்தர்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
முந்தைய பகுதிகள்: