அண்மையில் நடந்த வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி 98% இடங்களைப் பிடித்து ‘அமோக’ வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. ஹசீனாவின் வெற்றி, வங்கதேசத்தின் ஜனநாயகம் செத்துவிட்டதைக் காட்டுவதாக பத்திரிகையாளர்கள் பலர் கடுமையாக எழுதியிருந்தனர். இந்த நிலையில் பதவியை புதுப்பித்துக்கொண்ட மூன்றே நாட்களில் தேர்தல் முறைகேடு குறித்து எழுதிய பத்திரிகையாளரை கைது செய்துள்ளது ஹசீனா அரசு.
தேர்தலை ஒட்டி எதிர்க்கருத்துகள் வந்துவிடாத வகையில் இணையத்தை முடக்குவது, பேச்சுரிமையை பறிக்க கடுமையான சட்டங்களைப் போடுவது உள்ளிட்ட பல சர்வாதிகாரத்தனமான நடவடிக்கைகளில் ஷேக் ஹசீனா ஈடுபட்டதாக வங்க தேச பத்திரிகையாளர் இக்திசாத் அகமது தெரிவிக்கிறார்.
படிக்க:
♦ வங்கதேசம் – அவ்ஜித் ராயைக் கொன்ற முசுலீம் மதவெறியர்கள் !
♦ வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !
ஹசீனாவின் அடிப்படைவாதத்துக்கும் அடக்குமுறைக்கும் இந்தியாவும் இந்திய ஊடகங்களும் துணைபோவதாக அவர் குற்றம்சாட்டுகிறார். ஹசீனாவின் ‘அமோக’ வெற்றியை முதலில் வாழ்த்திய அயல்நாட்டைச் சேர்ந்த தலைவர் மோடி என்று சுட்டிக் காட்டிய அவர், இந்தியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பு பிரதிநிதிகள் வங்கதேச தேர்தல் நேர்மையாக நடந்ததாக சான்று அளித்திருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

அதுபோல, மேற்குலக நாடுகளும் வங்கதேசத்தில் நடக்கும் அடக்குமுறைகளை பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார் அகமது. 2014-ல் நடந்த தேர்தல் முறைகேடுகளை கண்டித்த போது, நடைமுறையில் மேற்குலக நாடுகள் எதையும் செய்யவில்லை. வர்த்தக நலன்களுக்காக இந்த நாடுகள் வங்க தேசத்துடன் போலி நட்பை பாராட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். 1970 மற்றும் 1980களில் வங்கதேசத்தில் இருந்த ராணுவ ஆட்சியை மேற்குலகம் ஆதரித்தது என்கிற வரலாற்றையும் அவர் நினைவு கூறுகிறார்.
“மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரத்தையும் கொண்டிராத சர்வாதிகாரத்தனத்தை பெருமைக்குரிய விருதாக கருத்தும் ஹசீனாவின் அவாமி லீக், வளர்ச்சி முன்னேற்றத்தை முன்னெடுப்பதாகவும் அடிப்படைவாத இஸ்லாமியத்தை எதிர்ப்பதாகவும் பொய்யுரைக்கிறது.
சுதந்திரம் அடைந்த 1971-ம் ஆண்டிலிருந்து மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இது அதிவேகமாக நடந்துவருகிறது. இது மாறினால்தான், உண்மையான ஜனநாயகமும் முன்னேற்றமும் கைகூடும். அப்போது மக்கள் தங்களுடைய ஆற்றலை திரும்பப் பெறலாம்.
படிக்க:
♦ அடுத்த ஆட்சி காங்கிரசா பாஜகவா என சொல்ல முடியாது ! பாபா ராம்தேவ் !
♦ இந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா ?
இளைஞர்கள், தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள், மதச் சிறுபான்மையினர் மற்றும் முற்போக்காளர்கள் அவாமி லீக்கின் பத்தாண்டு கால ஆட்சியை எதிர்த்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது இந்த அரசாங்கம் பாதுகாப்பாக இருக்கிறது. சர்வாதிகாரத்தன்மையுடன் அது மேலும் மாற்றுக்குரல்களை ஒடுக்கும்.” என தனது பத்தியில் பத்திரிகையாளர் அகமது கருத்து தெரிவித்திருந்தார்.

தேர்தல் முடிவுகள் வந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், வங்க தேச தேர்தலில் முறைகேடு நடந்தது குறித்து ‘டாக்கா ட்ரிபியூனில்’ எழுதிய ஹிதாயத் ஹொசைன் முல்லா என்ற பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களைவிட 22,419 வாக்குகள் அதிகமாக இருந்ததாக முல்லா ‘தவறான’ தகவலை சொன்னதாக இணைய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹசீனா அமலாக்கியிருக்கும் கடுமையான பத்திரிகைளுக்கு எதிரான சட்டத்தின்படி இவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது. ஹசீனா தொடர்ந்து தன்னை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை சிறையில் தள்ளி வருகிறார். தேர்தலின் போது ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டதோடு, 17 பேர் தேர்தல் வன்முறையில் உயிரையும் இழந்துள்ளனர்.
பெயரளவில் வழக்கம்போல், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகள் வங்கதேசத்தின் முறைகேடான தேர்தலை கண்டித்திருக்கின்றன. ஹசீனாவும் தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார். ஆக மொத்தத்தில் முதலாளித்துவமும் சர்வாதிகாரமும் கை கோர்த்து மக்களின் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை, சில சமயம் மக்களையும் சேர்த்து புதைத்துக்கொண்டிருக்கின்றன.
கலைமதி
செய்தி ஆதாரங்கள்: ஸ்க்ரோல் , தி கார்டியன்