ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்… தமிழக அரசே… மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக அரங்கக் கூட்டம் கடந்த டிசம்பர்- 30 அன்று மாலை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள இராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் கம்பம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தன்னுடைய வரவேற்புரையில், ”இன்று மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு புதிய முறையை கையாண்டு கொண்டிருக்கிறது. அதாவது போராடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது என்பதுதான் அது. ஏனெனில் அவர்களிடம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. எனவே, அடிப்படை தேவைகளுக்காக போராடுபவர்களை கூட தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி மக்களை பயமுறுத்துவது, தேச துரோகிகள் என தனிமைப்படுத்துவது என்று குறிப்பாக பி.ஜே.பி கும்பல் செயல்படுகிறது. எனவே முற்போக்கு, ஜனநாயக சக்திகள் தனித்தனியாக செயல்படுவதை விட்டு, ஒன்றிணைய வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்து இங்கே வருகை தந்துள்ள பேச்சாளர்களை வரவேற்கிறேன்” என பேசினார்.
இதற்கு பின் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 14 தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைமையுரையில் தோழர் மோகன் அவர்கள் ” தூத்துக்குடி மக்களின் இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தையும் அங்கே 14 பேர் மக்கள் கொல்லப்பட்டதையும் பிற மாவட்டத்தை சேர்ந்த மக்கள், வெறும் சம்பவமாக மட்டுமே பார்க்கின்றனர். தூத்துக்குடியில் தற்போது மிக தீவிர அளவில் கண்காணிப்பு செய்யப்படுகின்றது. இந்த நிலையில்தான் இந்த பசுமைதீர்ப்பாய உத்தரவு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக ஆலையை திறக்கலாம் என வந்திருக்கின்றது. இதை கேட்டு தமிழகம் போர்க்களமாக ஆகியிருக்க வேண்டாமா? இவ்வாறு மக்கள் மவுனமாக இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகவும் பிற மாவட்ட மக்களையும் போராடுவதற்கு உணர்வூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்தியாவிலேயே காஷ்மீருக்கு பிறகு அதிகமாக எண்ணிக்கையில், சுமார் 25 ஆயிரம் போராட்டங்கள் ஒரு ஆண்டுக்கு நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. மக்களுடைய பிரச்சினைக்கு பதில் சொல்லாமல், தீர்வை தேடாமல், சமூக விரோதிகள் தூண்டி விடுவதாகவும், அச்சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்து கலவரம் உருவாக்கியதால்தான் தற்காப்புக்காக போலீசு சுட்டதாகவும், மற்றபடி அந்த மக்களுக்கு ஸ்டெர்லைட்டால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்பதாகவும் பத்திரிக்கை, செய்தி தொலைக்காட்சிகள், அறிவுஜீவிகளை வைத்து பொய்பிரச்சாரம் செய்கின்றது மத்திய மாநில அரசுகள்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? இதற்கு முன்பே கூட பல கட்ட ஆய்வுகள் நடந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சுற்று சூழலை மிக மோசமாக பாதிப்படைய வைத்துள்ளதாக நிரூபித்துள்ளது. இதை ஒட்டித்தான் ஏற்கனவே 100 கோடி ரூபாயை ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அபராதம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதை கூட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், தூத்துக்குடி நகரத்திலும் பூங்காக்கள் அமைக்க செலவழித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர். மேலும், கடந்த மார்ச் மாதம் நடந்த ஆய்வில் மொத்தம் 15 இடங்களில் கந்தக அமில ரசாயனக் கழிவுகளை எந்த வித பாதுகாப்புமின்றி வெட்ட வெளியில் கொட்டி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வறிக்கையை கூட வெளியிடாமல் வைத்திருந்தார்கள்.

பல சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மூலம் பெற்றுத்தான் இந்த விசயங்கள் தெரிய வந்துள்ளது. இன்னொரு விசயம் நீங்கள் கவனித்து பார்த்தால் இது எடப்பாடியே சொல்வது போல் அவருக்கே தெரியாமல் தமிழக உள்துறை செயலர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் மூலம் இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கூட்டு சேர்ந்து செய்த திட்டமிட்ட சதி என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு கடந்த 2012 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் மரக்கானா சுரங்க தொழிலாளர்கள் நடத்திய அமைதியான உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 34 பேரை படுகொலை செய்துதான் அப்போராட்டத்தை ஒடுக்கியது. அந்த போராட்டக்குழு தலைவரின் முகத்தில் மட்டும் 14 குண்டுகள் பாய்ந்திருந்தன. அப்போது ஆங்கிலோ இந்தியன் நிறுவனம் என்கின்ற அந்த சுரங்க ஆலையில் நிர்வாக அதிகாரியாக இருந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம்தான் ஸ்டெர்லைட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக ஒரு மாத குறுகிய காலத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்த ஆங்கிலோ இந்தியன் நிறுவனத்தில் 23% பங்கை வைத்திருப்பவர் வேறு யாரும் அல்ல ஸ்டெர்லைட்டின் முதலாளி அதே அனில் அகர்வால்தான்.
படிக்க:
♦ கவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை
♦ பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா ?
’உலகத்தில் பூமிக்கடியிலிருந்து சுரங்கம் தோண்டி என்ன வளத்தை வெளிக்கொண்டு வந்தாலும் அதில் எனக்கு ஒரு பங்கு வருமாறு நான் எல்லா நாடுகளிலும் சுரங்கத்தொழிலில் முதலீடு செய்துள்ளேன்’ என்று இவன் திமிராக சொல்கிறான். இவனுடைய இந்த திமிருக்கு காரணம் நம்முடைய அமைதிதான். அதை உடைத்தெறிந்து மக்களை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அணி திரட்டுவதே இந்த அரங்க கூட்டத்தின் நோக்கம்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் குமரன், நாணல் நண்பர்கள் குழுவை சேர்ந்த தோழர் துளிர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் கனியமுதன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன், மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். (தோழர்களின் உரைகள் தனித் தனி பதிவுகளில் வெளிவரும்)
இறுதியாக மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் மருது நன்றியுரை கூறினார். இடையிடையே பாடப்பட்ட புரட்சிகர பாடல்களும், தோழர்களின் உரைகளும் கூடியிருந்தவர்களுக்கு உயிர் வாழ வேண்டுமெனில் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக இருந்தது.
தகவல் : மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்
இதையும் பாருங்க…