டந்த அக்டோபர் மாதம் சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மா, ரபேல் ஊழல் வழக்கை விசாரிக்கக்கூடும் என பயந்த மோடி அரசு நள்ளிரவில் அவருடைய பதவியைப் பறித்து கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனை எதிர்த்து வழக்கு தொடுத்தார் அலோக் வர்மா. உடன் அரசு சாரா நிறுவனம் ஒன்றும் வழக்கு தொடுத்தது. இந்த இரண்டு வழக்கையும் ஒன்றாக விசாரித்த உச்சநீதிமன்றம், அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி கே.எம். ஜோசப் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. வினித் நரேன் வழக்கின் 1997-ம் ஆண்டு தீர்ப்பை மேற்கோள்காட்டிய நீதிபதிகள், அரசியல் அழுத்தங்களிலிருந்து சி.பி.ஐ இயக்குனரை பாதுக்காக வேண்டும் என இந்த வழக்கின் தீர்ப்பு வலியுறுத்துகிறது என்றனர்.

டெல்லி சிறப்பு காவல் நிறுவன சட்டத்தின் படி (Delhi Special Police Establishment Act), சட்டக் குழுவை ஆலோசிக்காமல் சி.பி.ஐ இயக்குனருக்கு எதிராக எந்தவொரு இடைக்கால முடிவையும் எடுக்க முடியாது என நீதிமன்றம் தனது தீர்ப்பில் சொல்லியிருக்கிறது.

அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக நீடிக்கலாம் என்றாலும் முக்கியமான கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். சி.பி.ஐ. இயக்குனரின் நியமனம் அல்லது நீக்கத்தை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியத்தின் ஒப்புதல் இல்லாமல் செய்யமுடியாது என்கிற நிலையில், வர்மாவை தன்னிச்சையாக நீக்கியது மோடி அரசு.

டெல்லி சிறப்பு காவல் நிறுவன சட்டப்படி,  அதிகாரம் கொண்ட இந்த கமிட்டி ஒரு வார காலத்தில் மேற்கொண்டு விசாரித்து முடிவுகளை எடுக்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஜனவரி 31-ம் தேதியோடு அலோக் வர்மாவின் இரண்டாண்டு பதவி காலம் முடிய இருக்கிறது.

படிக்க:
♦ மோடி தர்பாரில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் !
♦ மோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்

மொயின் குரேஷி மீதான பண மோசடி வழக்கை விசாரித்த மோடியின் எடுபிடி, சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டை அக்டோபர் 15-ம் தேதி வழக்காக பதிவு செய்தது சி.பி.ஐ. மோடியின் ஆசி பெற்ற அஸ்தானா, வர்மா தன் மீது வேண்மென்றே குற்றச்சாட்டை சொல்வதாகக் கூறினார். அவர் மீதே லஞ்ச புகாரும் சொன்னார். இது ஊடகங்களில் சிபிஐ-க்கு எதிராக சிபிஐ எனவும் சிபிஐ-யில் இரண்டு அதிகாரிகளுக்கிடையே பனிப்போர் எனவும் திட்டமிட்டு செய்தியாக்கப்பட்டது.

அதோடு, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷன், முன்னாள் அமைச்சர்கள் அருண் சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேட்டை, சிபிஐ விசாரிக்கச் சொல்லி மனு ஒன்றை சிபிஐ இயக்குனரிடன் அளித்திருந்தனர். அந்த மனுவை வைத்து ரஃபேல் முறைகேட்டை சிபிஐ விசாரிக்க இயக்குனர் அலோக் வர்மா உத்தரவிடக்கூடும் என்பதை மோப்பம் பிடித்தது மோடி அரசு.

Alok verma and asthana cbi vs cbi
மோடியின் கைப்பாவையான அஸ்தானா (இடது) மற்றும் ரஃபேல் வழக்கு குறித்து விசாரனை நடத்தக்கூடிம் என பதவி பறிக்கப்பட்ட அலோக் வர்மா

சி.பி.ஐ இயக்குனர்களுக்கிடையேயான மோதல் என்கிற ஊடக செய்திகளைப் பயன்படுத்தி, சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவையும் சி.பி.ஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானாவையும் பதிவியிலிருந்து கட்டாய விடுப்பில் அனுப்பியது. தேர்வு குழுவின் பரிந்துரை இல்லாமல் சி.பி.ஐ இயக்குனர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டப்படி செல்லாது என அறிந்திருந்த போதும், அவசர அவசரமாக ரஃபேல் ஊழல் விசாரணையிலிருந்து தப்பிக்க மோடி அரசு இயக்குனரை நீக்கியது.

மோடியின் கைப்பாவையாக செயல்பட்டு அரசியல் காரணத்துக்காக லாலு பிரசாத் யாதவ் மீதான வழக்கை தூசி தட்டி, அவரை சிறைக்கு அனுப்பியதில் அஸ்தானா முக்கிய பங்காற்றியதாக சிபிஐ அதிகாரிகள் குற்றம்சாட்டினர். அஸ்தானாவின் செயலுக்கு பிரதிபலனாக லஞ்சப் புகாரில் விசாரணைக்கு ஆளாக இருந்த அவரைக் கட்டாய விடுப்பில் அனுப்பியதன் மூலம் காப்பாற்றியது மோடி அரசு.

அலோக் வர்மா, தனக்குள்ள 20 நாட்களில் எந்தவிதமான முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது. அஸ்தானா மீதான புகார் மீண்டும் கிடப்பில் போடப்படும். மோடி அரசுக்கு இந்தத் தீர்ப்பு பின்னடைவு என்று ஊடகங்கள் சொன்னாலும் உண்மையில் மோடி அரசு திட்டமிட்டபடியே அனைத்தும் நடக்கின்றன என்பதே தெளிவாகத் தெரிகிறது. இறுதியாக, அனைத்தும் சட்டப்படியே நிலைநிறுத்தப்பட்டு விட்டதாக காட்டப்படுகின்றன. ஆனால், மோடி வகையறா குற்றவாளிகள் மட்டும் தப்பித்துவிட்டார்கள்.


கலைமதி
செய்தி ஆதாரம்:

CBI row: Supreme Court dismisses Centre’s order to divest Alok Verma of duties

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க