“நாங்கள் ஏன் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுகிறோம்? 27 ஆண்டுகளாக குஜராத்தை ஆள்கிறோம். ம.பி., சட்டிஸ்கரில் 15 ஆண்டுகளாக ஆள்கிறோம். எங்களை மதவாத கட்சி என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு மதக்கலவரம் கூட நடக்கவில்லை. மத்திய பிரதேசத்திலும் சரி, சட்டிஸ்கரிலும் சரி ஒரு மதக்கலவரம் கூட நடக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் எங்கள் ஆட்சி அமைந்தவுடனே மதக்கலவரங்கள் நின்று விட்டன.” (அமித் ஷா, நவ 23, 2018 அன்று ஜீ நியூஸுக்கு அளித்த பேட்டியில் கூறியது)
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பசுக் குண்டர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் தொடுக்காத நாள் இல்லை. ஏதேனும் ஒரு முகாந்திரத்தை வைத்து சிறுபான்மை மக்கள் மீது அன்றாடம் இந்து வெறியர்கள் தாக்குதல் நடத்தும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இருந்த போதிலும் இப்படி ஒரு பொய்யைத் துணிந்து சொல்வதற்கு அமித் ஷா சிறிதும் தயங்கவில்லை. அதனை அப்படியே ஒளிபரப்புவதற்கும் ஜீ தொலைக்காட்சி தயங்கவில்லை.
“ஃபாக்ட் செக்கர்” என்ற இணையதளம் அமித் ஷாவின் இந்தப் பொய்யை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது.
1998 முதல் 2016 வரையில் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் அங்கே நடைபெற்ற கலவரங்களின் எண்ணிக்கை 35,568. 2014 -16 காலத்தில் மட்டும் மதவெறித் தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது நேஷனல் கிரைம் ரிகார்ட்ஸ் பீரோ (NCRB) வெளியிட்டிருக்கும் கணக்கு.
மோடி ஆட்சிக்காலத்தில் 2002-ல் நடைபெற்ற படுகொலையின் போது அரசு கணக்கின்படியே 1044 பேர் கொல்லப்பட்டனர். 223 பேர் காணாமல் போயினர். 2500 பேர் படுகாயம் அடைந்தனர். இது மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த கணக்கு. உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட மிகவும் அதிகம் என்பதே பல்வேறு அமைப்புகளின் மதிப்பீடு.
மத்திய பிரதேசத்தில் 2003 முதல் 2016 வரையிலான பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் NCRB கணக்கீட்டின்படி 32,050 மதவெறித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 2014 – 16 காலகட்டத்தில் மட்டும் 138 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
சட்டிஸ்கரில் 2003 – 2016 ஆண்டுகளில் 12,265 மதவெறி தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
உத்தர பிரதேசத்தில் 2017-ல் மட்டும் 195 மதவெறித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 44 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 542 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
இவையெல்லாம் ஆதாரப்பூர்வமான அரசாங்க புள்ளி விவரங்கள். எத்தனை ஆதாரங்கள் இருந்தாலும், இடையறாத ஊடகப் பிரச்சாரத்தின் வாயிலாக, பொய்யை மெய்யாக்கிவிட முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் கணக்கு.
பண மதிப்பழிப்பும் ஜி.எஸ்.டி.யும் சிறு தொழில்களையும் சுய தொழில்களையும் அழித்து, கோடிக்கணக்கான மக்களின் குடியைக் கெடுத்திருக்கிறதே தவிர, கருப்புப் பண முதலைகள் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கைகளால் நிகர உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதையும் பா.ஜ.க.-வினரால் மறுக்க முடியாது.
எனவே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இதற்கு ஒரு சாமர்த்தியமான பதிலைக் கண்டுபிடித்திருக்கிறார். “பணமதிப்பழிப்பை மட்டும் மோடி அறிவிக்காமல் இருந்திருந்தால், பொருளாதாரம் இன்னும் மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கும்” என்பதுதான் அவரது விளக்கம்.
படிக்க:
♦ விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? புதிய ஜனநாயகம் ஜனவரி 2019
♦ பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் ! தோழர் மருதையன்
கலவரம் தொடர்பான மேற்கண்ட புள்ளி விவரங்களையும் சங்கிகளால் மறுக்க முடியாது. “நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், இந்த மாநிலங்களில் கலவரங்கள் இன்னும் அதிகமாக நடந்திருக்கும்” என்று அவர்கள் பதில் சொல்வார்கள். அந்த பதிலை பொய் என்று நாம் ஒதுக்கிவிட முடியாது.
தொரட்டி