முசுலீம்கள் அல்லாத வெளிநாடு வாழ் சிறுபான்மையினருக்கு (இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள்) குடியுரிமை அளிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் வங்க தேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் வாழும் மத சிறுபான்மையினர் இந்தியாவில் குடியேறினால், அவர்களுக்கு உடனே குடியுரிமை கிடைக்கும். அதே வேளையில் வங்கதேசம்-பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவில் தஞ்சம் புகுந்து வாழும் ஆயிரக்கணக்கான முசுலீம்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்தபோதும் அவர்கள் சொந்த நாட்டுக்கே அனுப்பப்படுவார்கள்.
இந்தியாவில் முசுலீம்களை நீக்கம் செய்யும் பொருட்டு ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் செயல்திட்டத்தை ஆட்சியிலிருக்கும் இந்துத்துவ அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் அமல்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன.

வடகிழக்கு மாநிலங்களில் கொல்லைபுறம் வழியாக ஆட்சியமைத்திருக்கும் பாஜக, போராட்டக்காரர்களை ஒடுக்க மாநில அரசுகளை ஏவி வருகிறது. பாஜக கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை விமர்சித்த காரணத்துக்காக அசாமின் முக்கியமான அறிவுஜீவியும் கல்வியாளருமான ஹிரென் கோகைன், செயல்பாட்டாளர் அகில் கோகய், முன்னாள் பத்திரிகையாளர் மன்ஜித் மகந்தா ஆகியோர் மீது தேசவிரோத வழக்கைப் போட்டிருக்கிறது அசாம் அரசு.
கவுகாத்தியில் இதை உறுதி செய்துள்ள காவல் ஆணையர் தீபக் குமார், “ஜனவரி 8 -ம் தேதி நடந்த கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கருத்தை கூறியிருப்பதால், அதுகுறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.” என்கிறார்.
கவுகாத்தியில் உள்ள லாடாசில் காவல் நிலையம் தாமாக முன்வந்து 120(B), 121, 123 and 124(A) பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
‘அசாம் பாதுகாப்பு’ மன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பல முக்கிய நபர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக அப்போது கருப்புக் கொடி காட்டும் போராட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் செயல்பாட்டாளர்கள் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக தேசவிரோத வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதுபோல, குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் மோடி அரசின் கைப்பாவையாக அசாம் முதல்வர் செயல்படுவதை விமர்சித்தும் கார்ட்டூன் வரைந்த நிதுபர்ண ராஜ்போங்சி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(நிதுபர்ண ராஜ்போங்சியின் சில கார்ட்டூன்கள் – பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
முன்னாள் பத்திரிகையாளரான ராஜ்போங்சி, குடியுரிமை சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில், தொடர்ந்து அதை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கார்ட்டூன்களை பதிவிட்டார். இதுகுறித்து பாஜக-வின் இளைஞர் அணி, காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அசாம் முதல்வரை நிர்வாணமாக வரைந்ததாக ராஜ்போங்சி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊடகங்களிடம் பேசியிருக்கும் அவர், “அசாமிய இளைஞர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நிர்வாணப் போராட்டம் நடத்தியதை பார்த்த பின்பே இந்த கார்ட்டூனை வரைந்தேன். குடியேற்றத்தை எதிர்த்து போராடிய, அசாம் முதல்வர்தான் எங்களுக்கு இந்த வழியைக் காட்டியவர். எதிர்ப்புகள் வந்தாலும் அதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என தெரிவிக்கிறார். தற்போதைய அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சொனாவால், அசாம் கனபரிஷத் கட்சியில் இயங்கியவர். அதன்பின் பாஜக-வில் இணைந்து 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானவர். அசாமிய தேசியவாதம் பேசிய சொனாபால், தற்போது இந்துத்துவ ஊதுகுழலாக செயல்படுகிறார் என்பதே போராட்டக்காரக்களின் குற்றச்சாட்டு.

இந்துத்துவ ட்ரோல்கள் ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் காரணமாக, ‘சர்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றினால் கணக்கை முடக்கிவிடுவோம்’ என நிர்வாகம் செய்தி அனுப்பியுள்ளதாக சொல்கிறார் ராஜ்போங்சி. ஆனால், அது குறித்தெல்லாம் தனக்கு பயமில்லை என்கிறார்.
கடந்த 2017 -ம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழந்தது குறித்த மோடியை விமர்சித்து முகநூலில் கார்ட்டூன் வெளியிட்டிருந்தார். இதற்காக இந்துத்துவ வெறியர்கள் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில், போலீசு பாதுகாப்பு கேட்டிருந்தார்.
“நான் பாஜகவை மட்டும் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும், அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. எங்களுடைய போராட்டம் காங்கிரஸ் அல்லது பாஜக, இந்து அல்லது முசுலீம்களை எதிர்த்து அல்ல. அசாமிகளுக்கானது. அடுத்து எங்களுடைய நிலைமை என்னவாகும்?” என்கிற ராஜ்போங்சி, இந்த சட்டதிருத்தத்தின் மூலம் சட்டவிரோத குடியேற்றம் வேகமாக நடந்து, அசாமிய பழங்குடிகளின் கலாச்சாரமும் மொழியும் வேகமாக சீரழியும் என எச்சரிக்கிறார்.
சமூக ஊடக நிர்வாகங்கள் தன்னை முடக்கினால், தன்னுடைய கார்ட்டூனை கிராமம் கிராமமாக எடுத்து சென்று மக்களிடம் சேர்ப்பேன் என்கிறார். “இது எளிய மக்களை பாதிக்கிறது. நானும் ஒரு எளிய குடிமகன் தான்” என்கிறார் ராஜ்போங்சி.
அகண்ட பாரத கனவில், இஸ்ரேலைப் போன்ற இன அழிப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது காவி கும்பல். எளிய மக்களை போராட்டக்காரர்களாகவும், அமைதியான மண்ணில் ரத்தம் சிந்த வைக்கவும் தொடர்ந்து வேலைகளைச் செய்துவருகிறது. ‘பெரும்பான்மை’யுடன் ஆட்சியமைத்திருக்கும் அரசு என்கிற ஜனநாயக அமைப்பைக் கொண்டுதான் இவர்கள் இத்தனை அட்டூழியங்களையும் செய்துவருகிறார்கள் எனில், அத்தகைய அமைப்பு எத்தனை மோசடியானதாக இருக்கும்.
கலைமதி
செய்தி ஆதாரங்கள்:
♦ Protest against citizenship Bill: Assam academic Hiren Gohain, two others booked for sedition
♦ Assam cartoonist faces backlash for anti-Citizenship Bill cartoons