ஓசூருக்கு அருகில் சானமாவை அடுத்துள்ள பீர்ஜேப்பள்ளி என்கிற கிராமத்தில் கடந்த ஜனவரி-13 அன்று காலை வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் தாக்குதலில் பலத்தக் காயங்களுடன் உயிர்த்தப்பியிருக்கிறான் லோகேஷ் என்ற சிறுவன். அக்கிராம மக்கள் மேற்கண்ட துணிச்சலான நடவடிக்கையின் காரணமாக உயிர்த்தப்பிய லோகேஷ், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
இந்த சம்பவம் என்றில்லை, சமீபகாலமாக தொடர்ச்சியாக இது போன்று காட்டு யானைகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகவும், வனத்துறையின் சார்பில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியும் ஓசூர் – தர்மபுரி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள். கோரிக்கையை பரிசீலிக்கிறோம், விரைவில் ஏற்பாடு செய்கிறோம், என்று பொதுவான வாக்குறுதிகளைக்கூறி வழக்கம்போல கூட்டத்தை கலைத்தது போலீசும் வனத்துறையும்.

‘’ஒரு மாதத்திற்கு முன் நம்ம பக்கத்து ஊரை சேர்ந்த விவசாயி 55 வயதுடைய செல்வப்பா என்பவரை அவரது வீட்டிற்கே வந்து வீட்டு வாசலில் வைத்தே யானை மிதித்து கொன்றுப்போட்டு விட்டது. அந்த சம்பவம் நடந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒருமுறை யானைகள் வந்து ஒரு ஐந்து பேரை தூக்கி வீசிப்போட்டது. ரெண்டு நாளைக்கு முன்ன கூட, பக்கத்து ஊரில் வயசு பையன் ஒருத்தனை யானை மிதிச்சி மீண்டு வந்திருக்கான். இப்பவெல்லாம் தினம்தோறும் யானைகள் தொந்தரவு அதிகமாகிவிட்டது.’’ என்கிறார், சானமாவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ்.
‘’ஐந்து வருடங்களுக்கு முன் காட்டுப்பன்றி, மான்கள் மற்றும் ஓரிரு யானைகள் என்ற வகையில் வந்து தொந்தரவு செய்து எங்களது விவசாயத்தை நாசம் செய்து வந்தது. அதிலிருந்து ஓரளவிற்கு தப்பிக்க ராவும்பகலுமாக காவல் காத்துக் கொண்டோம். இப்பெல்லாம் கடந்த மூன்று நான்கு வருடங்களாக அவ்வாறு தனியே வருவதில்லை. கூட்டம் கூட்டமாகவே வருகிறது. ஊரே திரண்டு வந்து விரட்ட வேண்டியதாகிறது.
வனத்துறையினரிடம் ஆயிரம் முறை முறையிட்டும் அவர்கள் யாரும் காதில் போட்டுக் கொள்வதில்லை… ஆயிரம் முறை மனுக் கொடுத்தும் ஒரு பிரயோசனமும் இல்லை… நாங்கதான் மக்கள் எல்லாம் இளைஞர்கள் எல்லாம் திரண்டுவந்து இந்த யானைகளை விரட்டி வருகிறோம்.
சிறிய அளவில்கூட விவசாயம் செய்யமுடியல. கிணத்துல தண்ணியெல்லாம் இருந்தும் எங்களால் பயிர் செய்யமுடியல. நாங்களே சாப்பிடக்கூட விவசாயம் செய்துக்கொள்ள முடியவில்லை.‘’ என்கின்றனர், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

‘’முன்பு கடலைக்காய், பீன்ஸ், கேரட், சவ்சவ், கோசு, நெல், ராகி, சோளம், தக்காளி என பயிர்செய்துவந்த நாங்கள் இப்போது வேறுவழியின்றி கீரைவகைகளை மட்டுமே பயிர் செய்துவருகிறோம். அதையும் விட்டுவைப்பதில்லை மிதித்து துவைத்து நாசம் செய்துவிடுகிறது’’ என கண்ணீர் வடிக்கிறார், மற்றொரு விவசாயியான சங்கரப்பா.
மேலும், ‘’மக்கள் திரண்டு இதுமாதிரி போராடினால்தான் அப்போதைக்கு ஒரு இரண்டுபேரை வனத்துறையினர் என்று சொல்லி கார்டுகளை நியமிக்கிறார்கள். அந்த இருவரையும் நாங்கள்தான் பராமரிக்கவேண்டும். அவர்களிடம் ஒரு துப்பாக்கிப் போன்ற நவீன ஆயுதங்களோ எதுவும் தரப்படுவதில்லை. பாவம் அவர்களையே நாங்கதான் எங்க மக்களில் ஒருவராக பாதுகாக்கிறோம்.’’ என்கின்றனர்.
‘’கால்நடைகளை மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது வனத்துறை. விவசாயமும் பண்ணாம, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் ஓட்டிப்போகவும் முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்க முடியுமா?’’ என்று கேள்வியெழுப்புகின்றனர், இக்கிராம மக்கள்.
‘’ஊருக்குள் இருந்த நிலங்களை மூன்று ஆண்டுகளுக்கு முன் விற்றுவிட்டுதான் என் மகள்கள் நான்கு பேரை நான் கட்டிக்கொடுத்துவிட்டு, இப்ப இந்த ரோட்டோரம் ஒரு வீடு வாங்கி வந்து குடியேறியிருக்கிறேன். எல்லோரும் என்னைப்போல செய்யமுடியுமா? நிறையபேர் இந்த நிலம் – வீட்டோடவே எங்களது உயிர் போகட்டும் என்று இருக்கிறார்கள்’’ என்கிறார், விவசாயி வெங்கடேஷ்.
‘’எனக்குத் தெரிந்து இந்தப் பகுதிகளில் நிறைய கிரானைட் கம்பெனிகள் புதிது புதிதாக முளைத்திருக்கின்றன. ஆளுயரத் தடுப்புச் சுவர்களையும் எழுப்பியிருக்கின்றனர். சூழலியல் மாறுபாடுகள் ஒருபுறமிருக்க, யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும்; தொடர்ந்து வனங்களின் அடர்த்திக் குறைந்து வருவதும் பிரதான காரணங்களாக இருக்கின்றன.’’ என்கிறார், அப்பகுதியைச் சேர்ந்த தோழர் ஒருவர்.
படிக்க:
♦ உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
♦ வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !
‘’யானைகளுக்குத் தேவையான குடிநீர் குட்டைகள் உணவு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் எடுக்க வேண்டும். யானைகள் செல்லும் வகையில் இயற்கை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியைச் சுற்றி கல்சுவர், கம்பி வலை அமைக்க வேண்டும். போதுமான அனுபவமும் பயிற்சியும் பெற்ற வனக்காவலர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.’’ என்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர், அக்கிராம மக்கள்.
இயற்கையாக வாழ முடியாத போதே யானைகள் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களை நோக்கி வருகின்றன. நாட்டு மக்களையே வாழ விடாத இந்த அரசு, காட்டு யானைகளை மட்டும் வாழ வைத்துவிடுமா என்ன?
தகவல் :
புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஒசூர்.