மீப காலங்களில் புதிய பிம்பங்கள் தோன்றுவது அதிகரித்து வருகிறது. கவலை வேண்டாம், உடைபடும் பிம்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறே உள்ளன. முன்பொரு காலத்தில் (ஓராண்டுக்கு முன்பு வரை) சினிமா பார்க்கச் செல்பவர்கள் யூ-டியூப் விமர்சகர்களிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டுச் செல்வோம் என நினைத்தார்கள்.

இதை பயன்படுத்திக் கொண்டு சினிமா கார்ப்பரேட்டுகளிடம் டீலிங் பேசுவதில் இருந்து விமர்சனங்களுக்கு இடையே ஆணுறை விற்பது வரை முன்னேறினார் பிரசாந்த் என்ற பாண்டா. மற்றவர்களும் இதற்குச் சளைக்கவில்லை. விளைவு? அவர்களின் “சினிமா விமர்சன” வீடியோக்களின் மறுமொழிப் பக்கங்களில் மக்கள் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஊடக நெறியாளர்களும், விவாதங்களில் போர்த்திக் கொண்டிருந்த “நடுநிலை” ஆடைகளைக் களைந்து அம்மணமாக நிற்கத் துவங்கியுள்ளனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சனவரி 14-ம் தேதி ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் கேள்வியையும் தெரிவுகளையும் பாருங்கள்:

கேள்வி : அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால்?

தெரிவு 1 : திமுக-காங் கூட்டணி வீழும்
தெரிவு 2 : பாஜக இல்லாவிட்டால் வெல்லும்
தெரிவு 3 : கடுமையான போட்டி உருவாகும்
தெரிவு 4 : வெற்ற பெற முடியாது.

மேற்கண்ட தெரிவுகளை மேலோட்டமாக பார்த்தாலே தெரியும். இரண்டு தெரிவுகளில் அதிமுகவுடன் சேர்த்து பா.ஜகவுக்கு சொம்பு தூக்குவதாகவும் ஒன்று தனிச்சிறப்பாக அதிமுகவுக்கு சொம்பு தூக்குவதாகவும் உள்ளன. கடைசியில் உள்ள ஒரே ஒரு தெரிவு மட்டும் பொத்தாம் பொதுவாக எதிர்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த “பொத்தாம் பொதுவான” தெரிவின் கீழ் தினகரன், திமுக, நா.த.க உள்ளிட்ட கட்சிகள் வருகின்றன. ஒரு சம்பிரதாயத்திற்காக கூட குறிப்பான எதிர்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் ஒதுக்கப்படவில்லை.

கொடநாடு விவகாரம் நாற்றமடிக்கத் துவங்கியுள்ள நிலையில் நியூஸ்7, நியூஸ்18, புதிய தலைமுறை, தந்தி டிவி உள்ளிட்ட ‘நடுநிலை’ செய்திச் சேனல்கள் ஒரு வித ஆழ்ந்த மோனநிலைக்குச் சென்றுள்ளன. அச்சு ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தின் நிலை இதுவென்றால் அகில இந்திய அளவில் ஊடகங்கள் மோடி சேவகத்தில் ஒரு புதிய வெறியுடன் களமாடி வருவதை அம்பலப்படுத்துகின்றது ஸ்க்ரோல் இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரை

கடந்த இருபதாண்டு காலத்தில் நடந்த தேர்தல்களை ”லோக்நீதி – வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம்” (Lokniti-Centre for the Study of Developing Societies) என்கிற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதன் படி செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியின் மூலம் செய்திகளை அறிந்து கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் தொலைக்காட்சியே செய்திகளை அறிந்து கொள்வதற்கான முதன்மை ஆதாரம். சுமார் 46 சதவீதம் பேர் தொலைக்காட்சியின் மூலமும், 26 சதவீதம் பேர் செய்தித்தாள்களின் மூலமும் செய்திகளை அறிந்து கொள்கின்றனர். இணையத்தின் மூலம் செய்திகளை அறிந்து கொளவது இன்னமும் வளரும் நிலையில்தான் உள்ளது.

பெவ் ஆய்வு மையம் (Pew Global Attitudes) 2017-ம் ஆண்டு நடத்திய மற்றொரு ஆய்வு சுமார் 16 சதவீத இந்தியர்கள் இணையத்தின் வழியே செய்திகளை அறிந்து கொள்வதாக தெரிவிக்கின்றது. இதில் பெரும்பான்மையாக படித்த இளைஞர்களும், வசதி படைத்தவர்களும் குறிப்பாக ஆண்களுமே இருப்பதாக அந்த ஆய்வு முன்வைக்கின்றது.

லோக்நிதி அமைப்பு 306 பாராளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இதன் முடிவுகளை கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இதன்படி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 31.1 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதில் ஊடகங்களின் மூலம் செய்திகளை அறிந்து கொள்வோரில் சுமார் 39 சதவீதம் பேர் பா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ளனர். அதே வேளை ஊடக வெளிச்சத்தில் இல்லாதவர்களில் 27 சதவீதம் பேர் பா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ளனர்.

மேலும் ஊடகச் செய்திகளை அதிகம் நுகர்வோர் மத்தியில் பா.ஜ.க முன்வைத்த குஜராத் மாடல் சிறப்பாக எடுபட்டுள்ளது. இதில் குறிப்பாக இணையத்தின் வழியே செய்திகளை நுகர்ந்தவர்களிடையே பாரதிய ஜனதாவுக்கு மிக அதிக செல்வாக்கு இருந்தது தெரிய வந்துள்ளது. பாரதிய ஜனதாவின் முதன்மை ஓட்டு வங்கியான நகர்ப்புற மேட்டுக்குடியினர் மற்றும் ஆதிக்கச் சாதியினர் மிக அதிக சதவீதத்தில் செய்திகளை நுகர்பவர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஆங்கில செய்திச் சேனல்களை விட பிராந்திய செய்திச் சேனல்களுக்கு சுமார் 100 மடங்கு அதிக பார்வையாளர்கள் இருப்பதும் இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தில் இருந்த சமயத்தில் பிற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களோடு ஒப்பிடும் போது நரேந்திர மோடிக்கு நான்கில் மூன்று பங்கு அளவுக்கு கவரேஜ் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் (மோடியின் ஆட்சிக் காலத்தில்) இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. மேலும் செய்திகளின் மூலம் அரசியல் ரீதியிலான கருத்துருவாக்கம் செய்யும் போக்கும் பிற நாடுகளை விட இந்தியாவில் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்தப் புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வருவது என்ன?

மோடி என்கிற இரட்சகரை கூலிப் பிரச்சாரங்களின் மூலம் நிலைநாட்டியதோடு கடந்த ஐந்தாண்டுகளில் அவரது ஆட்சியின் அனைத்து தவறுகளுக்கும் முட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்துள்ளன ஊடகங்கள். குறிப்பாக இந்துத்துவாவின் ஆதரவுப் பிரிவினரான ’உயர்’சாதியினர், மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினரின் மூளைகளில் மேலும் மேலும் காவி நஞ்சை செலுத்தி அவர்களை வீரிய ஒட்டுரக இந்துத்துவ பைத்தியங்களாக உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு கணிசமானது. எனவேதான் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் தமிழிசை சொல்வது போல் ஒரு ”வெற்றிகரமான தோல்வி” எனும் நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது – அதன் வாக்கு சதவீதம் கணிசமாக வீழ்ச்சியடையாமல் பாதுகாத்துள்ளது.

படிக்க:
மீடியாவை மிரட்டும் மோடி !
நாட்டை விற்கும் மோடி – கழனியை அழிக்கும் ஜக்கி – பேச மறுக்கும் ஊடகம்

இந்துத்துவத்தின் அரசியல் தோல்வி என்பதை தேர்தல் அரசியலின் வரம்புக்குள் மட்டும் நின்று பரிசீலிப்பதில் இருக்கும் சிக்கலை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. பார்ப்பனிய இந்துத்துவ அரசியல் செயல்படுவதற்கும் நிலைத்து நிற்பதற்கான ஒரு செயற்களத்தை (Ecosystem) உருவாக்குவதற்கு அகில இந்திய அளவில் ஊடகங்கள் துணை புரிந்துள்ளன. அதைக் கீழிருந்து நிலைநாட்டுவதில் இந்துத்துவ கும்பல் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஈட்டியுள்ளன. இதன் மூலம் பரந்துபட்ட நடுத்தர வர்க்க மக்கள் பார்ப்பன பொதுபுத்தியின் அடிப்படையில் சிந்திக்க பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் அரசியலின் வரம்பைத் தாண்டி இந்த விச சூழலை அறிவுத்தளத்திலும் களத்திலும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு போராடி வீழ்த்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.


சாக்கியன்
ஆதாரம்: scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க